2009 டு 2010

ஒரு உற்சாகமான உணர்வுப்பூர்வமான ஆண்டாக 2009 அமைந்திருந்தது. என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஒன்பது நிகழ்வுகள் இங்கே:

1 ) மார்ச் 8, 2009-ல் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கையும் ஆர்வமும் இல்லையென்றாலும் குடும்பமும் துணையும் அத்தியாவசியம் என்று கருதுகிறேன். பெருமைக்காகவோ வித்தியாசப்படுவதாகவோ சொல்லவில்லை, உண்மையில் அன்பை வெளிக்காட்டாத அரைவேக்காட்டுப் பயல்தான் நான்.

2 ) ஜெர்மனியில் தனிமையில் அறையெடுத்துத் தங்கியிருந்த ஒரு சமயம்.

ஒரு பார்ட்டியை முடித்து விட்டு வீடு வருகையில் மணி நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவசர அவசரமாய் வீடு முழுவதும் சில்லறை இருக்கிறதா என்று பார்க்கிறேன். பத்து யூரோ, ஐம்பது யூரோ தாள்கள் இருக்கின்றன. சில்லறை இல்லை. மனம் பதைபதைத்தது. அங்குமிங்கும் அலைகிறேன். ம்ஹூம், எங்கு தேடியும் காயின் இல்லை. கை கால்கள் நடுங்கின. ஃபக், ஃபக் என்று நூறு முறை சொல்லியிருப்பேன்.

அடுக்ககத்தின் கீழே இறங்கி ரோட்டிற்கு வந்தேன். யாராவது தென்படுகிறார்களா என்று ஆர்வத்துடன் சுற்றும் முற்றும் தேடினேன். கால் மணி நேர காத்திருக்குப் பின் ஒருவர் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை நோக்கி ஓடினேன்.

“Entschuldingen Sie, Haben Sie einen Zigaretten bitte?”

அவர் சிகரெட்டை எடுத்து நீட்டினார். அவசர அவசரமாய் உருவி பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்த பின்னரே மனம் அமைதி கொண்டது. மார்க் ட்வைன் ஒருமுறை சொன்னாராம், “Quit smoking is very easy, I have done it thousands of times”

ஆறு வருடப் பழக்கம். சாதாரணமாக நான் யாருடனும் எளிதில் பேசிப்பழகாதவன். இந்த சிகரெட் பழக்கம் மட்டும் பல நேரங்களில் பிச்சை எடுக்கவும் தானம் கொடுக்கவும் வைத்திருக்கிறது. இடையில் நிறுத்துவதற்கு முயற்சி செய்து இரண்டு நாட்கள் புகைக்காமல் இருந்திருக்கிறேன். அதைத் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் ஐந்து முதல் இருபத்தைந்து சிகரெட் வரை புகைத்திருக்கிறேன்.

எனக்கு திருமணமான அதே மார்ச் 8 ஆம் நாள் புகைப் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டேன். அதற்குண்டான மன தைரியத்தைக் கொடுத்த நண்பர்களான மதன், முருகானந்த், பாலு அண்ணா மற்றும் http://www.becomeanex.org/ ஒத்த இணையதளங்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

3 ) தற்போது நான் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனமான Calsoft Labs-ல் வேறெங்கும் இல்லாத அளவு மதிப்பும் மனநிறைவும் கிடைத்திருக்கிறது. பணம் தவிர்த்து பாலிடிக்ஸ் தவிர்த்து Work Satisfaction என்பதன் முழு ஆனந்தத்தை அடைந்திருக்கிறேன். நான்கு பேராய் ஆரம்பித்த எங்கள் குழுவில் இப்போது பதினொரு பேர்.

திறந்த மூல மென்பொருட்களின் (Open Source Softwares) மேலான நோக்கினையும் மைக்ரோசாஃப்டுக்கு எதிராய் போராடும் குணத்தையும் பன்னாட்டு நிறுவனத்திற்குள் நுழைத்து அதன் வெற்றிப் படிகளில் பயணிப்பதிலும் மனநிறைவு.

4 ) ஜெயமோகன் எழுத்துக்களின் மீதான மோகமும், கமல்ஹாசன் மீதான நன்மதிப்பும் மென்மேலும் அதிகரித்திருக்கிறது. நன்மை தீமைகளைப் பிரித்தும் வகுத்தும் அதைத் தொடர்ந்து வழிநடக்கவும் குரு அவசியம் என்று அலுவலக மேலதிகாரி ஒருமுறை சொன்னார். அவ்வகையில், ஜெயமோகனும் கமல்ஹாசனும் என் குருக்கள் என்பதில் எனக்குப் பெருமையுண்டு.

5 ) என் நெருங்கிய நண்பர்களான பாலு அண்ணா, வெங்கடேஷ், சம்பத், பிரகாஷ் போன்றோருடன் இன்னும் நெருக்கமான உணர்வுப்பூர்வமான நட்பை அடைந்திருக்கிறேன். பாலு அண்ணாவும் இவ்வருடம் திருமணம் முடித்திருக்கிறார். காதல் திருமணம்.

6 ) இவ்வலைப்பூவை பிப்ரவரி மாதம் துவங்கி சில கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிரமுடிந்தது. நான் எழுத்தாளனோ ஆய்வாளனோ அல்ல என்பதை அறிவேன், ஆனால் ஓய்வு நேரத்தை எழுத்திலும் ஆய்விலும் பயன்படுத்த வேண்டும் என்கிற மனஎழுச்சி இருக்கிறது.

7 ) இவ்வருடம் ஈழம் குறித்த உணர்வுகள் எழாத தமிழன் இருக்க முடியாது. தமிழீழம் கனவீழமாகிப் போனது வருத்தத்தின் உச்சம். அதன் வடு நெடுநாள் இருக்கும். தனிப்பட்ட இயலாமையும் அவமானமுமே நிம்மதியிழக்கச் செய்யும்போது ஓர் இனமே வீழ்ந்தழிந்து போய் நாடே சவக்காடானது ஆழமான வலி. சீமான், திருமா, பழ. நெடுமாறன், முத்துக்குமார் என தைரியமாய் உணர்வுகளைப் பதித்த நெஞ்சங்கள் வாழ்க.

8 ) மறுபடியும் என் திருமணத்தைப் பற்றிய தகவல். ஒரு திருமணம் எப்படி நடக்கக்கூடாதென்று நினைத்திருந்தேனோ அவ்வாறே என் திருமணம் நடந்தது.

– பெண் வீட்டாராய் விருப்பப்பட்டுக் கொடுத்தாலும் வரதட்சணைதான் என்கிற பட்சத்தில், நான் கட்டாய வரதட்சணை பெறப்பட்டேன்.

– இரண்டாயிரத்திற்கும் குறையாமல் கூட்டம், ஆர்ப்பாட்டம் என சமுதாய/சாதிப் பிரச்சனைகளை முன்நிறுத்தும் பெரும்பாலான கூத்துகள் அரங்கேறின.

– நான் வாங்கிய காருக்கு ரோஜாப்பூ மாலையிட்டு மண்டபத்தின் முன்நிறுத்தி அலங்கரித்திருந்தார்கள்.

– நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கோவிலையும் நெருப்பையும் வலம்வந்து மந்திரங்கள் ஓதி கன்னத்தில் போட்டுக்கொண்டு தாலி கட்டினேன்.

என் திருமணத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் மூன்று மட்டுமே: மனைவி லீலாவதி, அவள் குடும்பம் (அப்பா பாலசுப்ரமணியம், அம்மா பத்மா, அண்ணன் மகேஷ்) மற்றும் நான் அணிந்திருந்த பட்டுவேட்டி பட்டுசட்டை!

9 ) மன்னிக்கவும், பர்சனல் 😉

***

புதுவருட சபதம் எடுக்கலாமா என்று தீவிர யோசனைக்குப் பின் 2009-ல் எடுத்த சபதத்தையாவது இம்முறை நிறைவேற்றுவது என்றிருக்கிறேன். அதற்கு முன், சமீபத்தில் நான் சந்தித்த இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்கள்:

1 ) நடிகர் சூர்யா கவுண்டர் என்று நான் சார்ந்திருக்கும் மனிதர்கள் பலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஜோதிகா வேறு மதம் வேறு சாதி, சாதியின் அடையாளமாக சூர்யா இருக்க விரும்ப மாட்டார் என்றால்… ம்ஹும், சூர்யா கவுண்டன்.

2 ) செட்டியாரில் இருந்து கிருத்துவத்திற்கு மாறியவர்கள் முதலியாரில் இருந்து கிருத்துவத்திற்கு மாறியவர்களையோ அல்லது வேறு மதம்/சாதியில் இருந்து கிருத்துவத்துக்கு மாறியவர்களையோ திருமணம் செய்து கொள்ள மாட்டார்களாம். செட்டியாரில் இருந்து கிருத்துவத்திற்கு மாறிய வீட்டாரிடம் மட்டுமே சம்பந்தம் வைத்துக் கொள்வார்களாம்! உங்கள் கடவுள் நம்பிக்கையும் மதக்கோட்பாடுகளும் என்னைக் குழப்புகிறதய்யா!!

இப்போது புதுவருட சபதம். ரொம்ப சிம்பிள். எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஜாதியின் பெயரையும் மனதறிந்து சொல்லக்கூடாது என்பதுதான். எழுத்தில் வந்தாலும் வரும், குட்டுவதற்காக அல்லது கேலி செய்வதற்காக மட்டும்.

நன்றி 2009!

வருக 2010 🙂

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

4 thoughts on “2009 டு 2010

  1. ஓம் குமார்

    சில வருடங்களுக்கு முன்பு காத்திருந்த்து படித்த இராஜேஷ் குமார் க்ரைம் நாவல் போல் இருக்கிறது….
    உங்களது எல்லா பதிவிலும் விறு விறுப்பிற்கு குறைவே இல்லை..


    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Reply
  2. jaggybala Post author

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஓம் 🙂

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Reply
  3. Nujori Moha

    Reading your blog gave me the feeling of watching a Bala Movie. I am one of the person who is watching you closely. I never knew that you write so nicely. Keep it up. I will read your blog regularly.

    Reply
  4. Nujori Moha

    வாழ்க்கையை உங்களை போல் ரசித்து வாழனும். இது மாதிரி ரசித்து வாழ எல்லாருக்கும் எப்படி கற்று கொடுக்கறது? சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் மற்றவங்கள சந்தோஷபடுத்தி பார்க்கறது. அதை போல, நாம ரசித்து வாழ்றத பார்த்து மற்றவங்க ரசிச்சா, அதுவும் ஒரு சந்தோசம் தான். இன்று போல் என்றும் எழுதிக்கொண்டே இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    Reply

பதில்