Monthly Archives: February 2009

நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்

‘காடாளும் வம்சம் இனி நாடாளும்’, ‘நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்’ என்னும் இலச்சினைகளைக் கொண்ட சாதிக் கட்சியின் தொடக்க‌ விழா. பதினாயிர‌ம் தோரணம் கட்டி, ஆயிரமாயிரம் சதுர அடி பரப்பளவில், பல லட்ச‌ம் மக்களைக் கொண்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும்பாலானோர் முகத்தில் எதையோ சாதித்து விட்ட‌ மகிழ்ச்சி. என்னவென்று தெரியவில்லை.

இம்மாதிரி சம்பவங்க‌ள் பெரும்பாலும் திறந்தவெளி டாஸ்மாக் ஆகி விடுவதால் முன்னரே மாவட்ட அதிகாரிகளை சந்தித்து விழா நாளன்று டாஸ்மாக்கை மூடிவிடுமாறு கட்சி மேலிடம் மனு கொடுத்திருந்தது. அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஆர்வக்கோளாறினால் நடக்கும் தவறுகளுக்கு கட்சி பொறுப்பேற்க முடியாதென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தது. மனு நிலுவைக்கெல்லாம் செல்லாமல் உடனடியாக அமலுக்கு வந்தது. காந்தி ஜெயந்திக்கு பிறகு முதன் முறையாக கட்சி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதாவது, மாலை ஆறு மணி வரை. எனினும் மாவட்டமும் மாநாடும் சற்று ஸ்தம்பித்துத்தான் போனது.

மேடையின் முன் காட்டையே கண்டிராத, கணிணி முறையால் உருவாக்கப்பட்ட கடப்பாறை, கலப்பை மற்றும் இன்னபிற பொருட்கள் தங்க முலாம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. திருடு போய்விடக் கூடும் என்றெண்ணியோ எந்த நேரத்திலும் அவை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையினாலோ இரண்டு போலீஸார்கள் அவற்றை காவல் காத்துக் கொண்டிருந்தனர். மேடையின் வலப்பக்கம் திறக்கப்படவிருந்த சிலை. யாரென்று தெரியவில்லை.

விழா மேடையில் அமர்ந்திருந்த‌ தலைவர், உபதலைவர், பொருளாளர் மற்றும் பலர் பட்டு சட்டைக்கு பார்க்க‌ர் பேனாவும் பர்ஃபுயூமும் அடித்து வந்திருந்தனர். மேடையின் இடப்பக்கம் பத்து மற்றும் பதினாறு வயதை ஒத்த சிறுவர்கள். அவர்களுக்கும் அதே போன்ற உடை. பத்து வயது சிறுவன் கூட்டத்திற்கு நேரே கையைக் கூப்பியபடி அமர்ந்திருந்தார். பதினாறு வயதுக்காரர் கலரிங் முடி கலாச்சார‌த்துடன் கம்பீரமாய் வீற்றிருந்தார். ஒன்றும் புரியாமல் அருகில் இருந்த மீசைக்காரரிடம் விசாரித்ததில் அவர்களிருவரும் தலைவரின் பிள்ளைகள் என்றும் கட்சியின் மாணவர் அணித் தலைவர்கள் என்றும் சொன்னர். இருவரும் ஊட்டியில் படித்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்தபடியே கட்சிப் பணிகளை பார்த்து்க் கொள்வார்கள் என்றும் பெருமையுடன் கூறினார். நன்று நன்று.

மேடையை விட்டு மக்களுடன் ஒன்றுபட்டதில் ஒவ்வொருவர் வசனத்திலும் தீப்பொறி பறப்பது புரிந்தது.

“மாப்ள‌, பவரை காமிச்சுட்டோம்டா…”

“தாயளி ஒரு பய இனி நம்மகிட்ட வாலாட்ட முடியாது. ஏழ பாழயெல்லாம் சாதிச்சங்கம் வச்சுகிட்டு ஆட்டம் போட்டுட்டு திரிஞ்ச‌ானுகல்லே. மொத வேலையா அவனுகள அடக்கணும்.”

“வக்காளி நம்ம சொன்னத மேல்சாதி நாயுக கேக்க மாட்டேங்குது, கீழ் சாதி நாயுக மதிக்க மாட்டேங்குது. ”

“பங்காளி, விசயம் கேட்டியா? வர்ற பாராளுமன்ற எலக்சன்ல நா.க.மு.க கட்சியோட கூட்டு சேர பேச்சுவார்த்தை நடக்குதாம். அஞ்சு சீட்டு குடுப்பாங்க போலிருக்கு.”

“டேய், நம்ம மெஜாரிட்டி தொகுதியே அஞ்சுக்கு மேல இருக்கும்.  மொத்தமா சேத்து இருவது சீட்டாவது வாங்கணும்.”

ஏழை, நடுத்தரம், பணக்காரர், பாமரர், எம்.பி.ஏ என பலதரப்பட்ட மக்களும் வந்திருந்தனர். பாரதியும் பிடிக்கும் சாதியும் வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயம் சார்ந்த பிரச்ச‌னைகளுக்கு பத்து பேர் வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்க வேன்டும். அது சரியோ தவறோ. நியாயமோ அநியாயமோ. சாதிக் கட்சி என்பது காப்புறுதி போலாகிவிட்டது. கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் வந்திருப்பதாகக் கேள்வி. அது சரி, அவர்களுடைய சித்தந்தங்களுக்கு அளிக்கப்படும் காப்புறுதித் தொகை மிகக் குறைவாகவே இருந்திருக்கக்கூடும்.

“ஹ‌லோ… ஹ‌லோ… டெஸ்டிங்… டெஸ்டிங்…” மேடையில் ஒருவர் மைக்கை ஒலிபெருக்கியுடன் இணைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். கூடி இருந்த கூட்டம் மேடையை நோக்கி ஆர்வத்துடன் திரும்பி உற்சாகமாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். எதற்கென்று புரியவில்லை. ஒருவழியாக மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக‌ பேச ஆரம்பித்தனர். ஒவ்வொருவர் பேச்சிற்கும் கூடியிருந்த கூட்டத்திற்கு மயிர்க் கூச்செறிந்தது. இறுதியாக தலைவரைப் பேச அழைத்தனர். என்ன பேசப்போகிறார் எப்படி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆர்வம் மேலிட்டது. தலைவர் மைக்கை ஆவலுடன் வாங்கி மூக்கருகே கொண்டு சென்று “புஸ்ஸ்ஸ்” என்று சீறி ஆரம்பிக்கிறார். “நாங்க என்ன இளிச்ச‌வாயனுகளா…”

நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்!

Advertisements

வெஜிடபிள் பிரியாணியும் மெதுவடையும்

பெரும்பாலான நாட்களில் அலுவலக கேண்டீனிலேயே என் மதிய உணவை உண்பது வழக்கம். இன்று ஒரு மாறுதலுக்காக வெளியே செல்ல முடிவெடுத்து அருகிலுள்ள வேளச்சேரிக்கு பயனித்தேன். சில சமயம் “உடுப்பி கிருஷ்ணா மெஸ்” என்னும் சிற்றுண்டிக்கு சென்று உணவருந்துவது வழக்கம். சுயமாக பரிமாறிக் கொள்ளும் உணவகம் அது.

என்னிடம் சில கெட்ட பழக்கங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையான்வை ஞாபகமறதியும் சிந்தனைச் சிதறல்களும் தான். அவற்றை மாற்றிக் கொள்ள நான் முயலவில்லை என்பதே உண்மை. பெரும்பாலான சமயங்களில் அவை சுவாரஸ்யமான சம்பவங்களாகவும் சில சமயங்களில் பிரச்சச‌னைக்குரியதாகவும் அமைந்துவிடும்.

நிற்க.

சிந்தனைச் சிதறல்களின் இடையில் என் வாகனம் கிருஷ்ணா மெஸ்ஸின் முன் சென்று நின்றது. உள்ளே வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சில உணவுப் பண்டங்களும் இருந்தன. ஒரு வெஜிடபிள் பிரியாணி ஒரு மெதுவடை என்று சொல்ல அங்கிருந்தவர் ஒரு நெகிழிக் (பிளாஸ்டிக்) காகிதத்தில் அவற்றை வைத்துக் கொடுத்தார்.

காகிதம் சிறிதோ உணவின் அளவு மிகுதியோ, பிரியாணியும் வடையுமாக சேர்ந்து நெகிழிக் காகிதத்தை முழுமையாக‌ ஆக்கிரமித்திருந்தது. பிரியாணிக்கு தயிர் பச்ச‌டியும் மெதுவடைக்கு சாம்பாரும் இப்போது நான் ஊற்ற வேண்டும். இடம்தான் இல்லை. உணவுக் காகிதத்தை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறு கையால் சாம்பார் பாத்திரத்தில் இருந்த கரண்டியில் கொஞ்சமாக எடுக்க முயற்சித்தேன். இடப்பக்கம் இருந்தவர் இவன் எங்கே ஊற்ற‌ப்போகிற‌ான் என்கிற ஆர்வத்துடனும், வலப்பக்கம் இன்னொருவர் கீழே சிந்தினால் அறைந்துவிவேன் என்று பார்ப்பது போலவும் இருந்தது. ஏனோ தெரியவில்லை, கைகளுடன் சேர்ந்து கால்களும் நடுங்கின. மெதுவடையின் சந்திற்குள் சாம்பாரை ஊற்ற அது பெருக்கெடுத்து பிரியாணிக்குள் புகுந்தது. ஒரு மாதிரி சமாளித்தவாறு கொஞ்சமேனும் சாப்பிட்டுவிட்டு தயிர் பச்சடி ஊற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.

ஆமையின் பொறுமையுடனும் கழுகின் கவனத்துடனும் உண‌வுக் காகிதத்தை எடுத்துக் கொண்டு வெற்றிருப்பிடம் நோக்கி நடந்தேன். தனிமையை மிகவும் விரும்புபவனானதால் யாரும் இல்லாத‌ நான்கிருப்பு மேசை ஒன்றில் உணவுக் காகிதத்தை வைத்தேன். அந்த மேசையின் கால்களில் ஒன்று உயரக் குறைவு. அதை தாங்கிப் பிடிக்கவிருந்த கல்லையும் பதினாறாய் மடிக்கப்பட்டிருந்த சிறு காகித்தையும் எந்தப் புண்ணியவானோ அப்புறப்படுத்தியிருந்தார். உணவு்க் காகிதத்திலிருந்த மெதுவடை நிலை தடுமாறியது. அதை காப்பாற்றப் போய் அதனுள்ளிருந்த சாம்பாரை பிரியாணிக்கு முழுவதுமாக தாரை வார்க்க நேர்ந்தது. இடப்பற்றாக்குறையினால் சாம்பார் வேறு மேசையில் சொட்ட ஆரம்பித்திருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒரு வழியாக சிந்தியிருந்த சாம்பாரின் மேல் உணவுக் காகிதத்தை வைத்து மறைத்தேன். மேசையையும் அமுக்கிப் பிடித்து மறு பக்கம் சாயாமல் பார்த்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடித்தாயிற்று. மேசையை சுத்தம் செய்பவர் நிச்சயம் என்னை நிந்திப்பார். எனக்கும் வேறு வழியில்லை. கையைக் கழுவிவிட்டு மீண்டும் சிந்தனைச் சிதறல்களில் மூழ்கிப் போனேன். வாகனத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்து “சுவாரஸ்யம்” என்னும் வகையறாவை சேர்த்து சில பதிவுகளை சேர்க்கலாம் என்றொரு யோசனை.

நன்று, சேர்த்தாகிவிட்டது. என்ன எழுதலாம் என்று யோசிக்கையில் என் பிரதான‌ கெட்டபழக்கங்களான ஞாபகமறதியாலும் சிந்தனைச் சிதறல்களாலும் உருவான நிகழ்வுகளை எழுத முடிவு செய்தேன். சமீபத்தில் அப்படி என்ன சம்பவம் ந‌டத்தது என்று தீவிரமாக‌ சிந்திக்கையில் அதிர்ந்து போனேன்.

வெஜிடபிள் பிரியாணிக்கும் மெதுவடைக்கும் காசு கொடுக்க மறந்து விட்டேன்!

காதல் வைபோகமே

நான் கடவுள் படத்தை பார்ப்பதற்காக சத்யம் சென்றுகொன்டிருந்த போது வழியில் ஒரு கட்‍‍‍‍-அவுட். அதிர்ந்து போனேன், வண்டியை நிறுத்தி மீண்டும் ஒரு முறை படித்தேன். செய்தியே தான். கடுப்புடன் மேலும் சென்று கொண்டிருக்கையில் ஏழு இடங்களில் அதை ஒற்றிய கட்‍‍‍‍-அவுட்கள். நொந்து போய் தியேட்டருக்கு சென்றால், கர்பக்கிரகத்திற்குள் செல்லும் போது விளக்கு வைத்து வரவேற்கும் சிலைகளைப் போல அங்கேயும் வைக்கப்பட்டிருந்தது. அதன் குறுகிய‌ விவரம்:

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த பேரனும்


மு.க.முத்து அவர்களின் மூத்த பையனுமான‌


“கலையுலக வாரிசு” மு.க.மு.அறிவுநிதி


அவர்கள் பெருமாள் படத்திற்காக முதன் முதலில்


பாடிய‌ ‘காதல் வைபோகமே’ என்னும் பாடலை


கேட்டு மகிழுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஏழாம் உலகத்தில் கடவுள்

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்டது பாலாவின் நான் கடவுள். நாவல் முழுக்க முழுக்க‌ ஊனமுற்ற பிச்சைக்காரர்களை (உருப்படிகளை) மையமாக கொண்டது. அதற்குள் கடவுளை கொண்டு வந்ததாலோ என்னவோ நாவலின் தாக்கததை திரைப்படம் ஏற்படுத்தவில்லை. இது அந்நாவலை படித்தவர்களுக்கு புரிந்திருக்கும், படிக்க முனைபவர்களுக்கு புரியும். எனினும் பாத்திர படைப்புகளிலும் நேர்த்தியான காட்சி அமைப்புகளாலும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவது உண்மை.

கதை புதிது. களம் புதிது. பண்டமாற்று முறையை போல உருப்படிகளை மாற்றிக்கொள்வதும், பிச்சையெடுக்க வகுப்புகள் எடுப்பதுமாக மனித மனத்தின் அதிர்வுகளையும், ருத்ரன் ரௌத்ரனாக மாறி வேட்டையாடும் பொழுது உக்கிரமத்தையும் பதிவு செய்கிறது. பிச்சைக்காரர்களின் வாழ்முறை நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது ரசிக்கத்தக்கது. நயன்தாராவாக வேடமிட்டு ஆடும்போது எம்.ஜி.ஆர் தாடையை தடவியபடி உதட்டை பிதுக்கி தலையை வெட்டென ஆட்டுவ‌தும், சிவாஜி உடம்பை லேசாக‌ குலுக்கிய‌படி கண்களை மட்டும் மேலே நோக்கி ரசிப்பதுமாக ஜெயமோகனின் நகைச்சுவை வசனங்கள் திரையில் பிரதிபலிக்கின்றன. இன்னும் அவைகளை பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பது நேர விரயம், அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

இப்படத்தை பிடிக்காதவர்களுக்கு ஒன்று அகோரிகளின் செயல்பாடுகளோ அல்லது ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் உருவ‌ அருவருப்போ மட்டுமே பிடிக்காமல் (அல்லது தாங்கமுடியாமல்) போயிருக்கும். படைப்பை அல்ல. பாலா ஒரு படைப்பாளி, அவ்வளவே. ஆன்மிகவாதியோ, அகோரியோ அல்ல. நரமாமிசம் உண்ணும் அகோரிகளின் செயல்களிலும், உருப்படிகளின் வாழ்விலும் இதை விட உக்கிரமும் உண்மையும் இருக்கும். மறுக்க முடியாது. படம் முடிந்த பிறகும் நம் கண்முன் வியாபித்திருப்பது நாகரிக உலகத்தின் மற்றுமொரு மனசாட்சி. அருவருப்புடன் கண்களை மூடிக்கொள்வ‌தால் மட்டும் இது மாறிவிடாது.

ராஜாவுக்கும் பூஜாவுக்கும் விருதுகள் காத்திருக்கின்றன. மற்றபடி, அரைமணி நேரமே வரும் ருத்ரனுக்காக‌ ஆர்யாவை மூன்று வருடங்கள் தனியுடமை ஆக்கி கொண்டது நியாயமாக படவில்லை. பாலாவின் மற்ற படங்களை ஒத்த‌ நாயகர்கள், முடிவு என இப்படமும் இருப்பது ஒருவித ஏமாற்றம்.

ஒரு ஆராய்ச்சித் தேடலின் அடிநாதத்தை உள்ளடக்கிய சினிமாவை இவ்வளவு சிறப்பாகவும் தைரியமாகவும் செய்பவர்கள் மிகச்சிலரே. பொழுது போக்கு படங்களுக்கு மத்தியில் நான் கடவுள் ஒரு பழுதுபோக்கும் படம்.

என் மன வானில் …

எனது எண்ண நிகழ்வுகளின் தொகுப்பாகவும் காலவாகனமாகவும் இத்தளத்தை உபயோகிக்க முற்படுகிறேன். இதுவரைக்கும் என் எண்ணங்களை தொகுப்பாக அமைத்ததில்லை. எனவே உரைநடையும், நடைமுறையும், குறை இலக்கியமும் கலந்த கலவையாகவுமே இருக்கக்கூடும்.

ஒரு முழுச்சோம்பேறியாகிய என்னால் இயல்கிற சுறுசுறுப்பு போக போகத்தான் எனக்கே தெரியும்!