Monthly Archives: January 2010

ரேனிகுண்டா

கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை தஞ்சாவூரில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். நியூ என்றொரு லோக்கல் சேனல்.

எம்.ஜி.ஆர் கார் ஓட்டிக் கொண்டு போகிறார். எந்தப் படம் என்று தெரியவில்லை. லதாவை கட்டியணைக்க எம்.ஜி.ஆர் பாய்வதைப் போல வளைவு சுளிவுகளுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கார் மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

இப்போது சிவாஜி கார் ஓட்டுவதைக் காண்பிக்கிறார்கள். எம்.ஜி.ஆராவது காரை ஓட்டினார். சிவாஜி ஸ்டீயரிங்கை மட்டும் திருப்பிக் கொண்டிருந்தார், உடம்புக்கு சோப்பு போடுவது போல. கார் நகரவில்லை. பின்னாடி மரங்களும் சில வீடுகளும் நகர்ந்து கொண்டிருந்தன. பத்து விநாடிக்குப் பின் மீண்டும் அதே மரங்கள் வீடுகள். சிவாஜி இன்னும் சோப்புப் போடுவதை நிறுத்தவில்லை. அடப்பாவிகளா,  வெட்டி ஒட்டுவதையாவ்து ஒழுங்காக செய்திருக்கலாமே என்று தோன்றியது. தவிர, சிவாஜிக்கு உண்மையிலேயே கார் ஓட்டத் தெரியுமா என்கிற சந்தேகம் பல இயக்குனர்களுக்கு இருந்ததாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதுவும் முடிந்துவிட்டது. இப்போது ரஜினி கார் ஓட்டுகிறார். பில்லா படம். காரை நீளத்தில் அளந்தால் எப்படியும் இருபது அடிக்குக் குறையாமல் இருக்கும். ரஜினிக்கு கோபம் வந்தால் வாயைத் திறந்தபடியே ஆக்ட் செய்கிறார். வாய்க்குள் ஏதாவது விழுந்தால் கூட அதே லஜ்ஜையில் இருப்பாரா என்று தெரியவில்லை. நடிகர்கள் கார் ஓட்டுவதைக் காண்பிக்கும் நிகழ்ச்சியாய் இருக்கும் என்றெண்ணினேன்.

அடுத்து கமல்ஹாசன் ஓட்டுகிறார். பக்கத்தில் ஸ்ரீப்ரியா. ஆசிய துணைக் கண்டத்திலேயே காரையும் கதாநாயகியையும் ஒரே நேரத்தில் திறம்பட ஓட்டும் வல்லமை கொண்டவர் கமல் மட்டுமே. என்ன இருந்தாலும் கன்னிப் பெண்ணாய் நினைத்து காரை ஓட்ட வேண்டும் என்னும் கருத்தை வழிமொழிந்தவராயிற்றே.

இப்போது விஜய். பொறுமை இழந்து கொண்டிருந்தேன். பின் அஜித், விக்ரம், சிம்பு மற்றும் தனுஷ். மொத்தமாய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நீடித்தது. அடுத்து வந்தது தான் ஹைலைட்.

இப்படியெல்லாம் நீங்களும் கார் ஓட்ட வேண்டுமா? வாருங்கள், கவிதா டிரைவிங் ஸ்கூல்.

பதினைந்து ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ஒரே டிரைவிங் ஸ்கூல், கவிதா டிரைவிங் ஸ்கூல்.

பெண்களுக்கு பெண்க்ளை வைத்தே கற்றுக் கொடுக்கப்படும்.

இன்றே வாருங்கள், கவிதா டிரைவிங் ஸ்கூல், புதிய பஸ் நிலையம் அருகில், தஞ்சாவூர்.

சற்று நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் சேனலை மாற்ற அதுவும் லோக்கல் சேனல். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. முனுசாமிக்கும் கோவிந்தம்மாளுக்கும் பிறந்த ரிஷிதா என்னும் மூன்று வயதுக் குழந்தை பொக்கை வாயுடன் போஸ் கொடுத்தது. பிண்ணனியில் “புலி உறுமுது, புலி உறுமுது” பாடல்.

பாய்ந்து சென்று டி.வி.யை அணைத்து விட்டேன். ம்ஹும், இன்று மதியம் தனியாக இருக்க முடியாது, ஏதாவது திரைப்படத்திற்குப் போய்விடுவது என்று முடிவு செய்தேன்.

கொடுமைக்காரன், சாரி வேட்டைக்காரன் படத்தை ஏற்கனவே பார்த்தாகி விட்டது. ரேனிகுண்டா படம் நன்றாயிருப்பதாய் இணையத்தில் படித்ததால் இரண்டு மணியளவில் தியேட்டருக்குக் கிளம்பினேன். தஞ்சாவூரில் பால்கனி அறுபது ருபாய். டிக்கட்டை பார்த்தேன். முப்பத்தைந்து ருபாய் என்றிருந்தது. வெரி குட்.

டிக்கட் வாங்கிய இடத்திலேயே அதைக் கிழித்தும் கொடுத்தார்கள். “மேலே போய் லெப்ட்ல திரும்புங்க சார், படம் போட்டு பத்து நிமிஷம் ஆச்சு” என்றார்.

அரக்கப் பரக்க ஓடி தியேட்டரின் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். படம் போட்டு விட்டார்கள். திரையில் நான்கைந்து இளசுகள் அடித்துக் கொண்டிருந்தனர்.

<வெய்ட்> நீங்க தியேட்டருக்கு லேட்டா போனா… படம் பார்த்துட்டே உட்கார இடம் தேடுபவரா? நான் அப்படித்தான். என்னமோ அந்த பத்து பதினைந்து விநாடிகளைக் கூட உபயோகப்படுத்திக் கொண்டதாக ஒரு சிற்றின்பம்.</வெய்ட்>

கதவருகே நின்றுகொண்டே உட்காருவதற்கு ஏதுவான இடத்தைத் தேடினேன். ஜிவ்வென்று ஒரு வலி மண்டைக்குள் உறைக்க சடாரென வலது கையை உருவினேன். பதட்டத்தில் விரலை கதவிடுக்குள் நுழைத்திருந்தேன்.

இராஜராஜன் என்ற பெயர் கொண்ட அந்தத் திரையரங்கின் வாசல் கதவு மட்டும் பெரிய கோவிலுக்கு இணையாய் இருந்தது. என் கைகள் அந்தக் கதவிடுக்கினுள் இருப்பதை அறியாமல் வாயைப் பிளந்தபடி திரையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். மெல்ல நகர்ந்து வந்த அந்தக் கதவு விரலை நசுக்கிவிட்டது. வலியை உணர்ந்ததுமே விரலை உருவியிருக்கிறேன்.

நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை. வலி மட்டும் கொஞ்சம் இருக்கிறது. ஏதாவது ஆகியிருந்தால் அறுபது ருபாய் போச்சு… என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே குபுகுபுவென இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. சற்று நேரத்தில் விரல் முழுவதையும் நனைத்து விட்டது. போச்சு… படம் போச்சு!

வெளியே வந்து வாஷ்பேசினைத் தேடினேன். உதவியாளர் அழைத்துச் சென்றார். தண்ணீரில் நனைக்க நனைக்க இரத்தம் நிற்கவில்லை. ஒரு டம்ளருக்கும் மேல் இருக்கும். எத்தனை ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை.

அருகில் மருத்துவமனை எங்கே இருக்கிறதென்று விசாரித்துக் கொண்டு ஆட்டோவில் சென்றேன். வழியில் மனைவியை கைபேசியில் அழைத்து, “கையில் லைட்டா அடிபட்டிருக்கு. ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கேன்” என்றேன்.

“என்ன ஆச்சுங்க.. எப்படி ஆச்சுங்க… ஏன் அந்த படத்துக்கு போனீங்க…” என்று நிறுத்தாமல் கேள்வி மேல் கேள்வி. இரத்தம் சொட்டும் விரலை கவனிப்பது முக்கியமா இவளுக்கு பதில் சொல்வது முக்கியமா என்று சற்றே குழம்பிப்போனேன். அன்பின் நச்சு தாங்காமல் ஒரு கட்டத்தில் கத்தி விட்டேன். “அடியேய்.. நான் மறுபடி கூப்பிடறேன்” தொடர்பை துண்டித்துவிட்டேன். இரண்டு நிமிட பயணத்தில் நான்கு முறை சிணுங்கியது கைபேசி. அத்தனையும் அன்புத்தொல்லை SMS.

வினோதகன் மருத்துவமனை. துணி சுற்றிய விரலுடன் அங்குமிங்கும் நடந்து ஒரிரு நிமிடங்களுக்குப் பின் சிகிச்சைப் பிரிவில் வந்து நின்றேன்.

“டாக்டர் சாப்பிட போயிருக்கார். கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க” உட்காரச்சொல்லி நர்ஸ் ஆணையிட்டார்.

பத்து நிமிடத்திற்கும் மேல் யாரும் வரவில்லை. செல்ஃபோன் சிணுங்கியது. SMS.

கைப்புண்ணை நானே பாவமாகப் பார்த்தேன். விரலைகச் சுற்றியிருந்த துணி இரத்தம் தோய்ந்து ஈரமாயிருந்தது. நர்சைப் பார்த்தேன். திரும்பி வந்தவர், “துணியைக் கழட்டுங்க, பார்க்கலாம்” என்றார். துணியை கழட்டிக் காட்டினேன்.

விரலை பார்த்துக்கொண்டே, “எப்படி ஆச்சு?” என்றார்.

“அது.. சினிமா தியேட்டர் கதவுல விரல் மாட்டிக்கிச்சு”. ச்சே, படமும் போச்சு, அறுபது ருபாய் பணமும் போச்சு.

“சினிமா தியேட்டர்…” அவர் குரலில் கோபம் கிண்டல் தொணித்தது. “கூட்டத்துல சிக்கி விரலை நசுக்கிட்டீங்க?”

“இல்லை இல்லை… அது நல்ல படம், கூட்டமே இல்லை. நான்தான் லேட்டா போய் கதவிடுக்குல தெரியாம விரலை வச்சுட்டேன்”

அவர் நம்பியதைப் போல தெரியவில்லை. FIR ஃபைல் பண்ணச் சொல்வாரோ? பேசாமல் பொண்டாட்டியிடமே கைய கொடுத்திருக்கலாமோ?

“வெய்ட் பண்ணுங்க, டாக்டர் இப்ப வந்திடுவார்”

மறுபடியும் துணியைச் சுற்றிக் கொண்டேன். செல்ஃபோன் சிணுங்கியது. SMS. வலியை மீறி டென்ஷன் தலைக்கேறியது. மனைவியை அழைத்தேன். “நான் ஹாஸ்பிடல்லதான் இருக்கேன். டாக்டர் இப்ப வந்திடுவார். நான் அப்புறமா கூப்பிடறேன், ஃபோனை வை” டொக்கென்று தொடர்பை துண்டித்துவிட்டேன்.

பத்தாவது விநாடி செல்ஃபோன் மீண்டும் சிணுங்கியது. SMS கண்டுபிடித்தவனை மனதிற்குள் கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினேன். வலி கோபத்தை அதிகரித்திருந்தது. இப்போது டாக்டரை திட்டினேன்.

மேலும் பத்து நிமிட காத்திருக்குப் பின் டாக்டர் வந்தார். கையை உற்றுப் பார்த்தார். “ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு பைட் போட்டுக்கலாம்”

“சரிங்க டாக்டர்”. பைட் என்றால் என்னவாயிருக்கும்?!

“இந்த இஞ்செக்ஷன் வாங்கிட்டு வாங்க, பின்னாடி மருந்துக்கடை இருக்கு”

சீட்டை வாங்கிக்கொண்டு மருந்துக்கடைக்குச் சென்றேன். அங்கே ஏழெட்டு பேர் க்யூவில் நின்றிருந்தார்கள். டாஸ்மாக்கும் மருந்துக்கடைக்கும் கூட்டம் குறைவிருப்பதில்லை. என் முறை வந்ததும் சீட்டை நீட்டினேன். வாங்கிப் படித்தவர் என்னிடமே திருப்பி நீட்டினார். குழப்பமாய் அவரைப் பார்த்தேன். அவரோ மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்கச் சென்றுவிட்டார்.

புரியாமல், “ஹலோ சார், ஏன் திருப்பி கொடுத்துட்டீங்க” என்றேன் அப்பாவியாய்.

கையை ஆட்டி இல்லையென்பதைப் போல் சைகை காண்பித்தார். இந்த ***** வாயைத் தொறந்து சொன்னா குறைஞ்சு போய்டுவானா.

மருந்துக்கடைக்கும் டாஸ்மாக்கிற்கும் மேலும் ஒரு ஒற்றுமை தோன்றியது. இரண்டிலுமே நீங்கள் கேட்ட சரக்கு எளிதில் கிடைக்காது.

சீட்டைத் தூர எறிந்துவிட்டு வேறு மருத்துவமனை நோக்கி நடந்தேன். செல்ஃபோன் சிணுங்கியது. இம்முறை எடுத்துப் படித்தேன். “I am coming, pls-nga”

தூரத்தில் வேறொரு மருத்துவமனை தெரிந்தது. உள்ளே நுழைந்து சில விநாடி காத்திருக்குப் பின் டாக்டரை சந்தித்தேன். அதே கேள்வியை கேட்டார், “எப்படி ஆச்சு?”

“அது… வீட்டு கதவிடுக்குல விரல் சிக்கி… இப்படி ஆயிடுச்சு” என்றேன். நகம் அருகே விரல் வெட்டுப்பட்டு இரத்தம் இன்னும் வந்து கொண்டிருந்தது.

கூர்ந்து கவனித்த டாக்டர், “ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு பைட் போட்டுக்கலாம்” என்றார். MVC architecture is one of the best design paradigm for Web development என்று சொன்னால் இந்த டாக்டருக்குப் புரியுமா?

டாக்டர் என் கையை இழுத்து விரலைப் பிடித்து டெட்டால் ஊற்றி கழுவினார். அவரை கழுவில் ஏற்ற வேண்டும் போலிருந்தது. பிளேடு, கத்திரி, ஊசி என்று நர்ஸ் எடுத்து வர முகத்தைத் திருப்பிக்கொண்டேன். என்னமோ செய்யப் போகிறார்கள். எப்படியும் வலி பின்னியெடுக்கப் போகிறது என்று மனம் ஆழமாய் நம்பியது. சில விநாடி காத்திருக்குப் பின் சுளீர் சுளீர் என்று இரண்டு முறை வலி சுண்டியிழுத்தது. ஃபக் ஃபக் என்று அழுத்தம் திருத்தமாய் வாய்விட்டுக் கத்தினேன். தமிழில் சொல்லியிருந்தால் செருப்பால் அடித்திருப்பார். அந்த டாக்டர் ஒரு பெண்!

“முடிஞ்சுது, முடிஞ்சுது” கையை திருப்பிக் கொடுத்தார். விரலைப் பார்த்தேன். ஸ்டேப்ளர் பின் போன்று வெட்டுக்காயத்தின் முன்னும் பின்னும் இணைத்து மாட்டியிருந்தார்கள். இதுதான் பைட்டாய் இருக்க வேண்டும்.

“இன்னும் ஒரு வாரம் முடிஞ்சு இத பிரிச்சுடுங்க. இங்கே தான் வரணும்னு இல்லை. எங்கே வேணாலும் பிரிச்சுக்கலாம்”

“ஓ.கே. டாக்டர்”

நூறு ருபாய் ஃபீஸ், நானூறு ருபாய் மருந்து வாங்கி வெளியே வந்தேன். மனைவி நின்றிருந்தாள். இப்போது அவளைப் பார்த்து அகம் மகிழ்ந்து போகிறது. இருவரும் தங்கியிருந்த விடுதியறைக்கு வந்து சேர்ந்தோம். மனதிற்குள் மீண்டும் தோன்றியது. ச்சே, படம் போச்சே.

—–

ஒரு வாரம் முடிந்து விட்டது. மேலோட்டமாய் இருந்த ஸ்டேப்ளர் பின் இப்போது நன்றாக சதைக்குள் சென்று விட்டது. பிரிப்பதை நினைத்தால் லேசாக வயிறைக் கலக்குகிறது.

பாழாய்ப்போன “ஃபக்” வார்த்தை வேறு ஒரு பழக்கமாகவே தொற்றிக் கொண்டுவிட்டது. ஒரு நாள் அதற்கும் சேர்த்து இன்னொரு பைட் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

BTW, ரேனிகுண்டா படம் நன்றாயிருப்பதாய் நல்ல சினிமா ரசிகர்கள் சொல்லிக் கேள்விப்பட்டேன். சீக்கிரம் பார்க்க வேண்டும்.

*****

Advertisements

டெரர் கனவு

அதிகாலை சுமார் 3:30 மணி இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். கனவு. பயங்கரமான கனவு.

நான் இறந்து விடுகிறேன்.

என் பிணத்தை தூக்கிக்கொண்டு மயானத்திற்குச் செல்கிறார்கள். கனவிலும் அது அதிகாலை நேரம். ஊரே ஆளரவமின்றி இருக்கிறது. வெகுதூரத்திற்குப் பின்னால் நான் மட்டும் அழுதபடி பதற்றமாய் ஓடி வருகிறேன்.

முகம் வியர்த்து கண்களில் பயமும் நெஞ்சத்தில் நடுக்கமும் குடிகொண்டிருக்கிறது. எங்கள் வீட்டு வீதியின் கடைசிக்கு வருகிறேன்.

“யாருப்பா அது இந்நேரத்துல?” என்றொரு குரல் கேட்கிறது. உற்றுப் பார்க்கிறேன். பெரியப்பா கிட்டு.

“பெரியப்பா, நான் தான்”

“டேய்… வா வா வா, இப்பத்தான் உன் பொணத்த தூக்கிட்டு போனோம், பாத்தியா?”

“இல்லை பெரியப்பா, அத பாக்கத்தான் போய்ட்டு இருக்கேன்” பதற்றம் அதிகரித்தது.

“அடடா.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? பாடிய பொதச்சுட்டமே!”

“புதைச்சுட்டீங்களா… ” சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து கும்பிடுகிறேன். மனம் பயத்தில் இருந்து கொஞ்சமாய் விடுபட்டிருக்கிறது.

“நல்ல வேளை பெரியப்பா, புதைச்சீங்க… எரிச்சிருந்தா நான் என்ன பண்ணுவேன்… ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா” சந்தோஷத்தில் அழுகிறேன்.

“பரவால்ல விடு… சரி வா பாடிய பாக்கலாம்”

“புதைச்சிட்டதா சொன்னீங்க?”

“அட… தோண்டி பாக்கலாம் வாடா”. என்னை அழைத்துச் செல்கிறார். மனதை திடப்படுத்திக் கொள்கிறேன்.

இடுகாட்டின் முற்புதர்களுக்கு நடுவில் ஒரு இடம் மட்டும் மேடாய் இருக்கிறது. சுற்றிலும் பூக்கள் கொட்டப்பட்டிருந்தன. என் பிணமாய்த்தான் இருக்கவேண்டும். எந்நேரமும் பொங்கி வரும்படியாய் என் கண்கள் குளமாய் நின்றன.

“பெரியப்பா… இப்படி அநியாயமா செத்துப்போய்ட்டனே…” அவர் மார்பில் முகம் புதைத்து விக்கிவிக்கி அழுகிறேன்.

“விடுறா.. விடுறா.. மனுஷனாப் பொறந்தா எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான் ஆகணும். மனச தைரியமா வச்சிட்டு குழிய தோண்டு. ரொம்ப நேரம் விட்டா பாடி கண்டிஷன் கெட்டுப்போய்டும்”

பிணமேட்டின் அருகிலேயே மண்வெட்டி இருக்க, அதை எடுத்து மண்ணை கொத்திக் கொத்தி வெளியே எறிகிறேன். சிறிது நேரத்திற்குப் பின் பெரியப்பா வாங்கி தோண்டுகிறார். நான் குத்த வைத்து என் பிண உடம்பைக் காண அமர்ந்திருக்கிறேன்.

மூன்று அடி தோண்டியிருக்கும்போது கலவரமாகிறேன். “பெரியப்பா, பாடி பக்கத்துலதான் இருக்கும். மண்வெட்டில கொத்திராதீங்க” என மன்றாடுகிறேன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்டா… நாங்கதானே புதைச்சோம். புதைக்கறப்ப வரமாட்டான். லேட்டா வந்திட்டு பொணத்த காமி, பொணத்த காமின்னு நச்ச வேண்டியது” சலித்துக் கொண்டார். அவருக்கு என் வேதனை புரியவில்லை போலும்.

மேலும் ஓரடி தோண்டியபின் மண்வெட்டியை ஓரமாய் வைத்துவிட்டு கைகளால் குழி பறிக்கிறார். நான் ஆவலாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளைத்துணியால் மூடப்பட்ட சடலம் தெரிகிறது. குழிக்குள் இறங்கி நானும் பெரியப்பாவும் என் பிணத்தை வெளியே எடுக்கிறோம்.

பெரியப்பா, “துணிய விலக்கப் போறேன்… மனச தேத்திக்க” என்கிறார்.

பெருமூச்சுவிட்டபடி சரியென்று தலையாட்டுகிறேன். துணியை விலக்கியதும் அசைவற்ற என் உடலைக் கண்டு உள்ளம் பதறுகிறது. கண்கள் விரித்து என் முகம் பார்க்கிறேன்.

“வண்டியில மெதுவாப் போ… மெதுவாப் போன்னு எத்தனை வாட்டி உன்கிட்ட சொன்னேன். கேட்டியா? இப்பப் பாரு, இருபத்தஞ்சு வயசுல லாரில அடிபட்டு செத்துப் போய்ட்ட”

“எப்படி பெரியப்பா உயிர் போச்சு?”

“வண்டியில இருந்து கீழே விழுந்ததுல பின் மண்டையில நல்ல அடி. தலை ஓட்டை ஆகி மூளை வெளில தொங்குது பாரு. ஆனா பரவால்லை, கண்ணுல அடிபடல”

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறேன். பெரியப்பா என்னைக் கட்டிக்கொள்கிறார். “பரவால்ல விடுறா… என்ன இருந்தாலும் அவனவன் பொணத்த அவனே பார்க்கிற பாக்கியம் யாருக்கு வரும். நீ குடுத்து வச்சவன்டா”

அலறிப் போய்க் கண் விழித்துப் பார்க்கிறேன். மணி 4:00. அத்தனையும் மனதில் பிம்பமாய் ஓடிக்கொண்டிருக்கிறது, இப்போதும்.

***

// தம்பி பிரகாஷ் கண்ட கனவு இது

*****