Monthly Archives: May 2009

பொக்கிஷம் – 2

முதலில் மதன் சொல்லியதை நம்ப முடியவில்லை. ஜெர்மனியர்கள் ஏன் நமக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்? அப்படியிருந்தால், ஜெர்மனிக்கு படிக்கச் செல்பவர்கள் தானே அதிகமாக இருக்க வேண்டும், ஏன் அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் ஆளாய்ப் பறக்கிறார்கள்?

அமெரிக்கா ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் எல்லாம் பத்து லட்சம் பதினைந்து லட்சம் என்று பணம் வசூலிப்பார்கள். பணம் மட்டும் இருந்தால் அங்கெல்லாம் எந்த பல்கலைக்கழகத்திலாவது அனுமதி பெறுவது சுலபம். நம் மக்கள் அங்கே போய் பகுதி நேர வேலை செய்து படிப்பிற்கான பணத்தை புரட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஜெர்மனி அப்படியல்ல. நாட்டின் வருமானத்தில் எண்பது சதவிகிதத்திற்கும் மேல் ஆராய்ச்சிக்கு செலவிடுபவர்கள். கல்வியை இலவசமாக வழங்குவது அவர்கள் பாரம்பரியம். அதே சமயம், அங்கே அனுமதி கிடைப்பது சற்று சிரமம். வேலை கிடைப்பது மொழியறிவின்றி மிக மிகச் சிரமம்.

இந்த அக்டோபருக்குள் ஜெர்மன் போக இயலாது. அடுத்த மார்ச்சுக்குத்தான் போக முடியும். ஆனால் மார்ச் செமஸ்டரில் மிகக் குறைந்த கல்லூரிகள் மட்டுமே அனுமதி கொடுக்கின்றன. சீக்கிரம் போக வேண்டும்.

கண் முழித்திருந்த ஒவ்வொரு நிமிடமும் இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நினைவு தெரிந்த கனவுகளிலும் அப்படியே. வேட்கை வேர் விட்டு படரத் தொடங்கியிருந்தது.

நாளை ஜெர்மன் மொழிப் பள்ளியில் பதிவு தொடங்குகிறது. காலை நேரத்திலேயே சென்று விடவேண்டும். எட்டு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். அன்றிரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்றேன். காலை நான்கு மணிக்கு கண் விழித்தேன். அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. வராது.

ஐந்து மணிக்கெல்லாம் தயாராகிவிட்டேன். ச்சே, இந்நேரத்துக்கெல்லாம் போய் நின்றால் அநாகரிகமாக இருக்கும். முன்னர் வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனை மீண்டும் புரட்டினேன். ஊரிலிருக்கும் கணிப்பொறியை அனுப்பி வைக்குமாறு சம்பத்திடம் சொல்ல வேண்டும். வைப்பதற்க்குத்தான் இடமில்லை. பார்த்துக்கொள்ளலாம்.

நீண்ட நேரத்திற்குப் பின் மணி ஆறானது. வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன். ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படும் பள்ளியின் வீதியை அடைந்தேன்.

பள்ளிக்கு வெளியே ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எட்டு மணிக்குத்தானே வரச்சொல்லியிருந்தார்கள். மணியைப் பார்த்தேன். ஆறு பத்து. இப்போதே ஏன் இவ்வளவு கூட்டம்? ஒட்டமும் நடையுமாக வாசற்கதவை அடைந்தேன். நாற்பது பேருக்கும் மேல் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். காத்திருந்தவர்களில் பலர் நான்கு மணிக்கே வந்து விட்டதாய் சொன்னார்கள். கூட்டம் அதிகம் வரும் என்று முன்னரே தெரிந்து வைத்திருக்கின்றனர்.

எனக்குத் தெரிந்திருந்தால் முந்தின இரவே வந்து நின்றிருப்பேனே? ஜெர்மன் மொழி படிக்கவே இவ்வளவு கூட்டம் என்றால் ஜெர்மனிக்கு செல்ல எத்தனை போட்டி இருக்கும்? அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது? சத்தியமாக ஊருக்குப் போக முடியாது.

ஆறரை மணிக்கு பள்ளியின் உள்ளிருந்து ஐம்பது வயதுடைய பெண் ஒருவர் வெளியே வந்தார். பள்ளியின் மேலாளராக இருக்க வேண்டும். “முப்பத்தைந்து பேரைத்தான் வகுப்பிற்கு எடுப்போம். முதல் முப்பத்தைந்து பேர் மட்டும் வாருங்கள், மற்றவர்கள் தயவு செய்து சென்று விடுங்கள். அடுத்த வகுப்பு இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கும்” என்றார்.

மூன்று மாதமா? வாய்ப்பே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும்.

முப்பத்தைந்து பேர் அனுமதிக்கப்பட்டு மற்றவர்களுடன் வாய்ச்சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் பலர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். வெறுமையுடன் வீற்றிருந்தேன். ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிலர் திரும்பிச் சென்றனர். சிலர் அங்கேயே காத்துக் கொண்டிருந்தனர்.

ஏழரை மணியளவில் என் வயதை ஒத்த ஒருவன் வந்தான். பின்னாளில் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவனாய் ஆகப்போகிறவன் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

“ஹாய்”

“ஹாய்”

“அட்மிஷன் முடிஞ்சுருச்சுங்களா”

“ஆமாங்க. நிறைய பேர் நாலு மணிக்கே வந்து நின்னுருக்காங்க. நான் ஆறு மணிக்குத்தான் வந்தேன்”

“ஷிட்”

“உங்களுக்கும் தெரியாதுங்களா?”

“தெரியுங்க. போன தடவையே வந்தேன், இப்படித்தான் சொன்னாங்க. இன்னைக்காவது சீக்கிரம் வரலாம்னு பார்த்தா தூங்கிட்டேன்”.

தூங்கிட்டேன் என்பதை யாரோ செய்த தவறைப் போல் சொன்னான். எனக்கு ஓங்கி பளாரென்று அறைய வேண்டும் போலிருந்தது.

“உங்க பேர் என்ன?”

“சங்கர் கணேஷ். உங்க பேர்?”

“ஜெகதீஷ்”

“இப்ப என்னங்க பண்றது?”

“தெரியலங்க. வெய்ட் பண்ணி பார்ப்போம்”

கூட்டத்தில் சலசலப்பு கேட்டது. முன்னர் வந்த அதே பெண்மணி வெளியே வந்தார். தெளிவான ஆங்கிலத்தில் பேசினார். “எல்லோரும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு வகுப்பிற்கு முப்பது பேர் தான் இருக்கமுடியும். நாங்கள் இப்போதே முப்பத்தைந்து பேரை எடுத்து விட்டோம். இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் பெயரை வேண்டுமானால் பதிவு செய்யுங்கள். அடுத்த முறை இடம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்தனர். இதற்குள், உள்ளேயிருந்து ஒரு பெண் வெளியே வந்து மேலாளர் காதில் ஏதோ சொன்னார்.

மேலாளர் எங்களை நோக்கி, “உங்களில் யார் முன்னர் வந்தது என்று தெரியுமா? இன்னும் ஒரேயொரு இடம் காலியாக உள்ளது” என்றார்.

“மேடம் மேடம் மேடம்” என்று வரிசையாக ஏழெட்டு மேடம்கள் போட்டேன். அவர் திரும்பிப் பார்த்தார். அதற்குள் கூடியிருந்த கூட்டம் முண்டியடித்தது. தான் செய்தது பிழையென்று அவர் நினைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் என்று உள்ளே சென்றவர் வெளியே வந்து மன்னிக்கவும், முன்னர் சொன்னது தவறு, அனைத்து இடங்களும் முடிந்து விட்டது என்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஒவ்வொருவராக வெளியேறினர்.

சங்கர் என்னைப் பார்த்து, “வெய்ட் பண்ணி பாக்கலாங்க, கெஞ்சிக் கூத்தாடியாவது  இந்த மேடம்கிட்ட அட்மிஷன் வாங்கிரலாம்” என்றான்.

எனக்கும் அதுதான் சரியென பட்டது. ஆனால், இவனே நமக்கு போட்டியாக இருந்துவிட்டால் என்ன செய்வதென்றும் தோன்றியது. அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நானும் சங்கரும் வெளியே வந்து டீ குடித்து விட்டு மீண்டும் உள்ளே வந்து மர நிழலில் அமர்ந்தோம். எப்படியும் மேலாளர் இந்த வழியாக வருவார். பேசி அனுமதி வாங்கிவிட வேண்டும் என்று எண்ணம். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஏமாந்து விட்டோமோ என்பது போல பார்த்துக் கொண்டிருந்தோம்.

மணி பனிரெண்டை நெருங்கியதும் மேலாளர் வெளியே வந்தார். முகம் மலர்ந்து அவரைப் பார்த்தோம். எங்களைப் பார்த்து திடுக்கிட்டவராய், “நீங்கள் இன்னும் போகவில்லையா? தயவு செய்து சென்றுவிடுங்கள்” என்றார்.

“மேடம், கோயமுத்தூரில் இருந்து ஜெர்மன் மொழி படிப்பதற்கென்றே வந்திருக்கிறேன். என்னால் திரும்பிப் போக முடியாது. எப்படியாவது அனுமதி கொடுங்கள் மேடம்” என்றேன்.

“புரியுதுப்பா. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு காரில் ஏறினார். வண்டி கிளம்பியது. நானும் சங்கரும் காரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5
Part – 6

*****

Advertisements

பொக்கிஷம் – 1

பனிரெண்டு வருடங்கள் ஆண்கள் மட்டுமே பயின்ற பள்ளியில் இருந்து முதன்முறை ஆண்-பெண் பயிலும் பொறியியற் கல்லூரிக்குள் நுழைகையில்  பெரிதும் தடுமாறிப்போனேன். கேரளாவிற்கு அருகில் கல்லூரி இருந்தமையால் நிறைய கேரளப் பெண்களும் இருந்தனர். வாழ்வில் இதை விட இன்பம் இருக்கவே முடியாதென்றிருந்த தருணம் அது. இருப்பினும் கல்லூரி முதலாமாண்டில் முத்திப்போன பழமாகவே இருந்தேன். இரண்டாமாண்டில் தான் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து உலகத்தை ‘தெரிந்து’ கொள்ள ஆரம்பித்தேன்! மூன்றாமாண்டு நான்காமாண்டில் வாழ்க்கையே முடிந்து விடுவது போல வாழ ஆரம்பித்திருந்தேன். கல்லூரி வாழ்க்கை முடிக்கையில் ஏப்ரல் 2002.

என் வாழ்க்கையின் இருண்ட காலம் என்பது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நான் முழித்திருந்த காலம் தான். சில மாதங்களுக்கு முன்னரே செப்டம்பர் 11 சம்பவம் முடிந்திருந்ததால் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பென உணர்ந்துகொண்டேன். வீட்டில் ஒரு மாதத்திற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை. மேலும் சில பிரச்சனைகளுக்குப் பிறகு நான் ஜெர்மன் சென்று மேலே படிப்பது என்று முடிவெடுத்திருந்தேன். அதற்கு ஜெர்மன் மொழி படிப்பது நல்லது என்று சென்னைக்குக் கிளம்பினேன். அதற்குள்ளாகவே அந்த “மேலும் சில பிரச்சனைகள்” என்னை முழுவதுமாக வாட்டி வதைத்திருந்தது. சென்னைக்கு வந்து நானும் என் நண்பனும் அவன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். அவனுக்கு எல் அண்ட் டி-யில் வேலை கிடைத்திருந்தது. அவன் தினமும் காலை வேலைக்குப் போய்விட எனக்கு அவன் உறவினர் வீட்டில் இருந்தது மிகவும் சங்கோஜமாயிருந்தது.

ஜெர்மன் மொழி கற்றுத்தரும் பள்ளி நுங்கம்பாக்கத்தில் இருந்தது. அங்கே சென்று அடுத்த வகுப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று விசாரித்தேன். இன்னும் இருபது நாட்களுக்குப் பிறகே அடுத்த வகுப்பிற்கு ஆளெடுக்கப்படும் என்று சொல்லியிருந்தார்கள். ஊருக்கு செல்ல மனமில்லை. ஒரு சில நாட்களுக்கு மேல், சும்மா என்பது வார்த்தையல்ல. வலி.

ஜெர்மன் கனவு வேர்விட்டிருந்தது. எந்த அளவு ஜெர்மன் மொழி படிக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லதென்று என் நண்பன் மதன் சொல்லியிருந்தான். ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஜெர்மனிக்குப் போகும் வரை ஜெர்மன் மொழி படிக்கப்போகிறேன்.

நுங்கம்பாக்கத்தில் தனியறை தேட ஆரம்பித்தேன். தினம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் கால்நடையாக சுற்றியலைந்தேன். எனக்கு அப்போது திருவெல்லிக்கேணியைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. மாதம் ஆயிரத்திற்குள் தனியறை கிடைப்பதென்பது நுங்கம்பாக்கத்தில் சாத்தியமில்லாதது போலிருந்தது. மே மாத வெயிலில் தனியறை ஒன்றைத் தேடி எரிச்சலாகிப் போனேன். சில சமயம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்குத் திரும்பிப் போய்விடலாம் என்றும் தோன்றியது. இதற்குள் நான் தங்கியிருந்த நண்பனின் வீட்டிற்கு வேறு ஒரு உறவினர் சென்னை வந்து தங்க நேர்ந்தது. இரண்டு நாளில் வேறு வீடு பார்த்துச் சென்று விடுவதாகச் சொல்லி விட்டு மீண்டும் நுங்கம்பாக்கம் வந்தடைந்தேன்.

இம்முறை ஒரு தனியறை கிடைத்தது. சென்னையில் மாதம் எண்ணூறு ருபாய்க்குத் தனியறை எப்படியிருக்கும் என்று சென்னை வாசிகளுக்குப் புரியும். அறைக்குள் நானும் கட்டிலும் மட்டுமே இருக்க முடியும். கட்டிலும் கூட இந்தப் பக்கம் கதவையும் அந்தப் பக்கம் சுவரையும் இடித்துக் கொண்டிருந்தது. அன்றிரவே நண்பன் வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் வந்துவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்து நான் தனியாகத தங்கிய முதல் இரவு அது. பெருந்துயரமாக இதை நான் கூறவில்லை. ஆனால் எனக்கு சற்றும் பழக்கமில்லாதது. தனியறை கிடைத்ததே பெரிய விஷயம் என்றெண்ணி ஜெர்மன் மொழிச் சேர்க்கைக்கு ஆளெடுக்கும் தினத்தை எதிர்பார்த்திருந்தேன். இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. தினமும் நாலரை மணி நேரம் வகுப்பு என சொல்லியிருந்தார்கள். நல்லது, சும்மா அவஸ்தை இருக்காது.

அன்றிரவு தூக்கம் வரவில்லை. மறு நாள் ஏதாவது புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும். கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பதினொன்று. அதிகப்படியான மனத்துயரத்திற்கு ஆளாகியிருந்தேன். ஏனென்று என்னாலேயே சரியாக சொல்லமுடியவில்லை. எப்படியாவது இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பது போலிருந்தது. எழுந்து வெளியே போய் ஜெர்மன் மொழி கற்றுத்தரும் பள்ளி வரை நடந்து சென்றேன். அறையிலிருந்து பள்ளி ஒரு கிலோமீட்டர் தான் இருக்கும், பிரச்சனையில்லை. அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திரும்பி வரும்போது ஒரு ஆட்டோக்காரர், “வண்டி வேணுமா சார்?” என்றார். “ஆமாம், ஜெர்மனி வரைக்கும் போகணும்” என்று நினைத்துக் கொண்டேன்.

அறைக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரண்டு. தூக்கம் வருவதாயில்லை. மதியம் அடித்திருந்த வெயிலைச் சாந்தப்படுத்த வெளியே லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கட்டிலின் முனையில் கையூன்றி எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சாலையில் நிறைய பழக்கடைகள் இருந்திருக்க வேண்டும். மழைத்துளியில் அழுகிய பழங்கள் கலந்து விட்டிருந்தன. சென்னையை எனக்குப் பிடிக்கவில்லை.

தூக்கம் வருவது போலிருந்தது. படுத்துப் போர்த்திக்கொண்டேன். வெளியே இடி இடித்துக் கொண்டிருந்தது. சற்று கண்ணயர்ந்து தூங்கியிருக்க வேண்டும். முனகல் சத்தம் லேசாகக் கேட்டு கண்விழித்தேன். இப்போது அந்த சத்தம் நன்றாகக் கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.

மழைச் சாலையின் ஓரத்தில் ஒரு பெண் கிழிந்த ஆடைகளுடன் முனகிக் கொண்டிருந்தது மின்னல் ஒளியில் தெரிந்தது. தலைவிரி கோலமாய் இருந்தாள். பைத்தியம் போல தெரியவில்லை. எந்தப் பைத்தியமும் மழையில் அழுகாது. கைகளை சாலையில் ஊன்றியிருந்தாள். பின்னாலிருந்து ஒரு கை அவளது கலைந்த தலைமுடியைப் பற்றியிழுத்தது. அவள் கணவனாக இருக்க வேண்டும். கணவனுக்கும் மட்டுமே அந்த உரிமையை நம் மனைவிகள் கொடுத்திருக்கின்றனர். நான் தூக்கம் கலைந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்னடி, திருட்டு முண்டே? எங்கே ஓடறே” என்றபடியே கொத்தாக தலைமுடியை பிடித்திழுத்துக் கொண்டு நடந்தான். வழியில் கொட்டியிருந்த முடியை மழைத்துளி அடித்துச் சென்றது.

அவள் வலி தாங்காமல் கதறினாள். முழங்கால் சாலையில் சிராய்ந்து ரத்தம் வந்தது.

“காசு கேட்டா, என்ன தேவிடியாப் பையன்னா சொன்னே? நீ குடுக்கலைன்னா, எனக்கு கிடைக்காதா? வீட்டுக்குள்ள போய்ப் பாருடி, இரண்டு ஃபுல்லு வாங்கி வச்சிருக்கேன்”

“ஐயோ.. ஐயோ…” என்று அவள் கதறினாள். தெரு வெறிச்சோடிக் கிடந்தது.

சாலையில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து அவளை ஒரு கடை வாசலின் முன் போட்டான். கடை இரும்பு ஷட்டர் போட்டு மூடியிருந்தது. அவள் கழுத்துப் பகுதியைப் பிடித்து மேலே எழுப்பினான். அவள் சத்தம் போட முடியாமல் அவன் பிடிக்குள் அடங்கியவாறு மேலெழுந்தாள். கழுத்தைப் பிடித்தபடியே அவள் தலையை ஷட்டரின் மேல் மீண்டும் மீண்டும் அடித்தான். இடியைத் தாண்டி அந்த சத்தம் என் காதில் விழுந்தது. இந்த ஊரில் மனிதர்களே இல்லையா?

அவன் கையைத் தட்டி விட்டு தெருவில் ஓடினாள். “கொலைகாரப் பாவி. என் வாழ்க்கை இப்படி சீரழிஞ்சு போச்சே” என்றாள். வழியில் இருமுறை தவறி விழுந்தாள். அவனும் துரத்திக் கொண்டே சென்றான். நூறு மீட்டர் தொலைவில் அவர்கள் தூரத்துப் புள்ளியாய் போய்க்கொண்டிருந்தார்கள். இதற்கு முன் சினிமாவில் மட்டுமே இத்தகைய காட்சியைக் கண்டிருக்கிறேன். ஜெர்மனியிலும் இப்படித்தான் இருக்குமா என்று நினைத்துக் கொண்டேன். எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை. எழுந்திருந்த போது சாலை வழக்கமான மும்முரத்தில் இருந்தது.

சீக்கிரம் ஜெர்மன் பள்ளியில் நண்பர்கள் தேடிக்கொள்ள வேண்டும்.

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5
Part – 6

*****

பள்ளிக்கட்டு கள்ளுக்கடைக்கு

எங்களூர் கோயிந்தசாமியின் (கற்பனை) வாரச்சுழற்சி இது!

ஞாயிறு, மாலை 7 மணி

குருசாமி: பள்ளிக்கட்டு
கோயிந்தசாமி: சபரிமலைக்கு

குருசாமி: சபரிமலைக்கு
கோயிந்தசாமி: பள்ளிக்கட்டு

குருசாமி: யாரோட கட்டு
கோயிந்தசாமி: சாமியோட கட்டு

குருசாமி: ஸ்வா…மியே
கோயிந்தசாமி: ஐயப்போ

குருசாமி: ஐயப்போ
கோயிந்தசாமி: ஸ்வாமியே

குருசாமி: பகவானே
கோயிந்தசாமி: பகவதியே

குருசாமி: பகவான் சரணம்
கோயிந்தசாமி: பகவதி சரணம்

குருசாமி: தேவன் சரணம்
கோயிந்தசாமி: தேவி சரணம்

குருசாமி: ஸ்வாமியே
கோயிந்தசாமி: ஐயப்போ

குருசாமி: ஐயப்போ
கோயிந்தசாமி: ஸ்வாமியே

குருசாமி: பள்ளிக்கட்டு
கோயிந்தசாமி: சபரிமலைக்கு

குருசாமி: சபரிமலைக்கு
கோயிந்தசாமி: பள்ளிக்கட்டு

……
……

திங்கள், மாலை 7 மணி

கோயிந்தசாமி: டேய் கருப்பா
கருப்பன்: சொல்லுங்க சாமி

கோயிந்தசாமி: மாட்ட கட்டுனியா?
கருப்பன்: கட்டீட்டனுங்க

கோயிந்தசாமி: தண்ணி காட்டுனியா?
கருப்பன்: காட்டியாச்சுங்க சாமி

கோயிந்தசாமி: விதை நெல்லு எங்கே?
கருப்பன்: காட்டுல இருக்குதுங்க

கோயிந்தசாமி: நீ என்ன புடுங்கறியா?
கருப்பன்:  …

கோயிந்தசாமி: மயிராண்டி, போடா காட்டுக்கு
கருப்பன்: சரிங்க

கோயிந்தசாமி: டேய் நில்லு
கருப்பன்: …

கோயிந்தசாமி: எங்கடா உங்க அப்பன்?
கருப்பன்: வீட்ல இருப்பாருங்க

கோயிந்தசாமி: செப்டிக் டேங்க் கழுவணும்
கருப்பன்: அவருக்கு உடம்பு முடியலீங்க

கோயிந்தசாமி: வரச்சொல்றா
கருப்பன்: உண்மையிலேயே முடியலீங்க

கோயிந்தசாமி: பொழக்க வந்த நாயி
கருப்பன்: …

கோயிந்தசாமி: எதுத்துப் பேசற?
கருப்பன்: …

புதன், மாலை 8 மணி

கோயிந்தசாமி: கறி எங்கடீ?
மனைவி: இருங்க, கொண்டு வர்றேன்

கோயிந்தசாமி: எத்தன நேரம்?
மனைவி: (முனகுகிறார்)

கோயிந்தசாமி: என்னடி முனுமுனுக்கறே?
மனைவி: தினமும் குடிக்கறீங்களேன்னேன்

கோயிந்தசாமி: உங்கப்பன் வீட்டு சொத்தா குறையுது?
மனைவி: வீட்ட இழுக்காதீங்க

கோயிந்தசாமி: பதிலுக்கு பதில் பேசறியா?
மனைவி: உங்க குடும்பத்தை நான் அப்படி பேசவா?

கோயிந்தசாமி: மூதேவி, அடக்கி வாசி
மனைவி: இப்ப நான் என்ன சொல்லிட்டேன்

கோயிந்தசாமி: சத்தமா பேசாத
மனைவி: ஐயோ… ஐயோ…

கோயிந்தசாமி: வாய மூடு… வாய மூடு…
மனைவி: எதுக்கு? நான் என்ன கேனச் சிறுக்கியா?

கோயிந்தசாமி: உனக்கு கையிலதான்டி பேசணும்
மனைவி: …

வெள்ளி, மாலை 6 மணி

கோயிந்தசாமி: எங்க மாப்ளே?
கந்தசாமி: கடைக்குதான்

கோயிந்தசாமி: அது தெரியுது, எந்தக் கடைக்கு?
கந்தசாமி: நம்ம கடைக்குதான்

கோயிந்தசாமி: ஏன், தோட்டத்துல கள்ளு போடல?
கந்தசாமி: கள்ளா?

கோயிந்தசாமி: விஷயம் தெரியாதா?
கந்தசாமி: …

கோயிந்தசாமி: நம்ம சாதிக்கட்சி தீர்மானப்பா
கந்தசாமி: கள்ளு வைக்கச்சொல்லியா?

கோயிந்தசாமி: ஆமா, நான் வச்சாச்சில்ல
கந்தசாமி: …

கோயிந்தசாமி: இனி எந்த நாய் கடைக்கும் போக வேண்டியதில்ல
கந்தசாமி: கவர்மென்ட் பிரச்சனையில்ல?

கோயிந்தசாமி: கலைஞர் சொல்லிட்டாப்ல
கந்தசாமி: என்னன்னு?

கோயிந்தசாமி: கள்ளுக்கு கடையுமில்லை. தடையுமில்லைனு
கந்தசாமி: சரியாப் போச்சு

கோயிந்தசாமி: தினம் நம்ம தோட்டத்திலேயே கச்சேரிதான்
கந்தசாமி: அடுத்த வாரமே வச்சிர்றேன்

கோயிந்தசாமி: இன்னைக்கு நம்ம தோட்டத்துல அடிக்கறது
கந்தசாமி: சரக்கெல்லாம் எப்படி?

கோயிந்தசாமி: ஃபர்ஸ்ட் குவாலிட்டி
கந்தசாமி: அப்படி போடு

ஞாயிறு, மாலை 8 மணி

கோயிந்தசாமி: பள்ளிக்கட்டு
கந்தசாமி: சபரிமலைக்கு

கோயிந்தசாமி: சபரிமலைக்கு
கந்தசாமி: பள்ளிக்கட்டு

…..
…..