Monthly Archives: March 2014

ஜீவகாருண்யம்

தமிழில் தட்டச்ச ஆரம்பித்ததுமே ஓர் இனம்புரியாத வருத்தம். எத்தனை நாட்களாயிற்று. கூடவே இன்பம். எழுது எழுது என மனம் உந்துகிறது. தட்டச்சு என்ற வார்த்தையையே சிலநிமிடம் சிலாகிக்கிறேன். எழுத்து என் மனத்தில் இருக்கும் சோம்பலைத் தவிடுபொடியாக்குகிறது. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், அதைப்போல.

என் நெடுநாளைய பல எண்ணங்கள் தற்போது நிகழ்வுகளாய் உருமாறி வருகிறது.

பணிநிமித்தம் காரணமாய்க் கடந்த நான்கைந்து வருடங்கள் சென்னையிலும் கலிஃபோர்னியாவிலும் தனிமை வாழ்க்கை. மனைவியும் குழந்தைகளும் திருப்பூரில். கடந்த சில மாதங்களின் சரியான திட்டமிடலாலும் மிகச்சரியான செயலாக்கலாலும் கோயமுத்தூரில் இருக்கும் வேறொரு பன்னாட்டு அலுவலகத்திற்கு வெகுவிரைவில் மாற்றலாகிறேன். இது ஒரு நல்ல தொடக்கம். திருப்பூரில் இருந்து முக்கால்மணி நேரப் பேருந்து பயணத்தில் கோயமுத்தூர் டைடல் பார்க். பணி முடிந்ததும் இரவுக்குள் வீடு வந்துசேரலாம். நெடுநாளைய கனவு. எப்படியும் திருப்பூர்/கோவை சென்றுவிடுவேன் என்று கண்டிப்பாய்த் தெரிந்ததால் சென்னையில் வீடு வாங்கு எண்ணமே தோன்றியதில்லை. திருப்பூர் கோயமுத்தூர் ஜெர்மனி சென்னை கலிஃபோர்னியா என்று பயணித்து மீண்டும் திருப்பூர்/கோயமுத்தூர் வந்தடைகிறது. இதுவே நிரந்தரமானது என்று மனம் உவக்கிறது. வேளாண் மற்றும் பசுமைக்குடில் முறைகளைக் கற்க ஆர்வம் கொண்டுள்ளேன். நாற்பதுகளில் வாழ்க்கை அத்திசையில் பயணிக்க வேண்டுமென விழைகிறேன்.

இவை எல்லாவற்றையும் மீறி என்னுள் நிகழும் கடந்த ஆறு மாத மாற்றங்கள் என் முப்பது வருட வாழ்வைக் கூண்டிலேற்றிக் கேள்வியெழுப்புகிறது.

வம்சாவழிப் பழக்கமாக ஊன் உண்ணுபவனாகவும் சுயம் உந்திய முறையில் இறை மறுப்பாளனாகவும் வாழ்ந்து வருகிறேன். என் தனிப்பட்ட கருத்துக்களை பிறர்பால் தினிப்பதுமில்லை, எனக்கு ஒவ்வாத கருத்துக்களை என் அகத்திற்குள் அனுப்பவதுமில்லை. நன்கறியாத எண்ணற்ற பொதுநல விஷயங்களைப் பற்றி விவாதிப்பதுமில்லை. இருபதுகளில் இருந்த இறுமாப்பும் அவசரமும் அனுபவம் காரணமாக மெல்ல மெல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறது.

சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு தேனீக்களைப் பற்றிய ஒரு கட்டுரையை ஆனந்த விகடனில் தற்செயலாய்ப் படித்தேன். மகரந்தச்சேர்க்கையின் அறிவியலும் தேனீக்களின் வாழ்க்கை முறையும் என்னை வெகுவாகக் கவர்ந்து அதுசார்ந்த ஊடகங்களை தேடிச்சென்றேன் (முடிந்தால் More than honey ஆவணப்படத்தைக் காணவும்). அது இன்னும் இன்னும் என்று பலவகைகளில் பரிமாணித்தது. முதல் இரு வாரங்கள் Pescatarian-ஆக இருந்தேன். என் தேடல் என்னை Vegan-இல் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக Veganism கடைபிடித்து வருகிறேன்.

இறைவனோ இயற்கையோ – எல்லா படைப்பிலும் மகத்துவம் இருக்கிறது. அறிவியல் இருக்கிறது. ஆச்சர்யம் இருக்கிறது. மனிதனின் ஆறாம் அறிவென்பது அடக்கி ஆளவே முற்படுகிறதா? மாமிசத்தை விதவிதமாய்ச் சமைத்து சாப்பிடுவதிலிருந்தே அது ருசிக்காக மட்டுமேயன்றி உயிர்வாழ அல்ல என்று புலப்படவில்லையா? இந்து மதத்தில் சைவத்தின் மகத்துவம் பற்றிய உண்மைகளை நாம் உணரவில்லையா? உணர முற்படவேயில்லையா? வாரம் ஓரிரு நாட்கள் அசைவம் சாப்பிடாமல் பகவானை திருப்திப்படுத்த நினைப்பவர்கள் முழுமையாக அசைவம் விடுத்து குற்ற உணர்ச்சி அற்றிருக்கலாமே? மனிதநேயம் ஒன்றே போற்றப்படுவது முறையா? மனிதனை விட அறிவில் உயர்ந்ததொரு ஜீவராசி உலகில் தோன்றினால் அவை மனிதனை உணவாக உடையாக கேளிக்கையாக விளையாட்டாக ஆராய்ச்சியாக பயன்படுத்தினால் அது அறமா?

Veganism அல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. மாபெரும் தலைவர்கள் தலைசிறந்த மனிதர்கள் என நான் போற்றும் பலரும் non-vegans அல்லது non-vegetarian ஆகவே இருக்கிறார்கள். ஜெயமோகன் உள்பட. ஆக, இது வெறும் மனம் சார்ந்த தேடல் மட்டும்தானா? இக்கேள்விகள் முன்னரே முளைக்காமல் இல்லை. ஆனால் அறியாமை (agnostic) மட்டுமே என் பதிலாய் இருந்திக்கிறது. ஆனால் உணர்ந்த பின் அது எவ்வாறு அறியாமையாகவே இருக்கும்? மிகக்குறைந்தபட்ச அறிவாக உயிர்க்கொலை ஒத்த நோக்குடையவர்களிடம் மட்டுமே ஆரோக்கியமான விவாதம் மேற்கொள்ள முடியும். அன்றேல் அது முதிர்ச்சியற்ற விவாதமாக – கொசுக்களை கொள்ள மாட்டீர்களா, உங்களை தாக்க வரும் மிருகத்தை என்ன செய்வீர்கள் என்றே தொடரும். ஒருவரியில் சொல்வதானால் என்னையோ என் குடும்பத்தையோ காயப்படுத்த வரும் எந்தவொரு உயிரினத்தையும் நான் ஜீவகாருண்யம் கொண்டு பார்ப்பதில்லை. அது தற்காப்பு. எந்தவொரு உயிரினத்திற்கும் பொதுவானது.

இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு சராசரி குடிமகனுக்கும் Veganism என்பது ஒரு மிகப்பெரிய சவால். அதுவும் வாரம் ஐந்து நாட்கள் கடையில் உணவருந்தும் என்னைப் போன்றவனுக்கு. என் மனைவி மற்றும் குடும்பம் இதை ஏற்றுக்கொண்டு விட்டனர். என் வழியைப் பின்பற்றுமாறு எவரிடமும் சொன்னதுமில்லை எதிர்பார்ப்பதுமில்லை. பலமுறை கேலிக்கு உள்ளான போதும் கூட. கேலி ஒரு பொருட்டல்ல. ஆனால் யோசித்துப் பார்க்கும் போது நான் போற்றும் சித்தாந்தம் மிகச்சரியானது என்றும் எல்லா மனிதர்களும் இதைப் பற்றிய குறைந்தபட்ச அறிவையாவது பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் கேள்விகள் நியாயமானவை. விவாதத்திற்குரியவை. எந்தொரு சித்தாந்தத்தைப் பின்தொடர்பவருக்கும் இவ்வாறே தோன்றும். ஆனால் Veganism பற்றி எங்கு எதைப் படித்தாலும் அது ஒரு வழிப்பாதையாக மட்டுமே இருக்கிறது. பிறர் சீண்டாத அல்லது சீண்ட விருப்பப்படாத ஒரு மார்க்கமாக தனித்தே நிற்கிறது.

மதம், அரசியல், மனிதநேயம் மற்றும் ஆன்மிகம் தாண்டி உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான மற்றும் ஒழுக்கப்பூர்வமான சித்தாந்தங்கள் மனிதனால் பெரிதாகப் போற்றப்படவில்லை என்றே தோன்றுகிறது. வள்ளலார் மற்றும் காந்தி போன்றோரின் உந்துதலால் மட்டுமே அச்சிந்தாந்தங்கள் சற்றேனும் ஒட்டிப்பிழைத்துக் கொண்டிருக்கிறது. வள்ளலாரைப் பற்றி விக்கிபீடியாவில் படிக்கும் போதே அவர் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலிடுகிறது. வருங்காலம் பற்றிக் கருத்துக்கூற முடியாது. எதுவும் நடக்கலாம். ஆனால் நான் இப்போது மனநிறைவுடன் இருக்கிறேன். என்னால் குறைந்த பட்சம் Pescatarian-ஆக இருக்க முடியும்.

ஜீவகாருண்யம் போற்றுக.

யோகா பயிலவும் ஜாகிங் பழகவும் ஆரம்பித்திருக்கிறேன். இரண்டையும் ரசித்துச் செய்யமுடிகிறது என்பது கூடுதல் நற்செய்தி.

Advertisements