அப்பா

28-Feb-1992: வெள்ளிக்கிழமை

நான் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமை எனக்கு உற்சாகமான நாள். பள்ளியில் அன்று எங்களுக்கு P.T (விளையாட்டு) வகுப்பு உண்டு. சனி, ஞாயிறு என அடுத்த இரு நாட்கள் பள்ளி விடுமுறையும் கூட. புஷ்பா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படம் ஓடுகிறது. எப்படியும் நானும் அப்பாவும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து விடுவோம் என்கிற குஷி.

முந்தின நாள் இரவுதான் “சின்ன கவுண்டர்” திரைப்படத்தை இரண்டாம் முறையாகப் பார்த்து விட்டு வந்திருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதல் நான் சினிமா பைத்தியம். இப்போது வேண்டுமானால் “நல்ல சினிமா” பைத்தியம் என்று வைத்துக்கொள்ளலாம்!

அப்பா எல்லா எம்.ஜி.ஆர். படங்களையும் பார்த்திருக்கிறார். குறைந்தது ஐந்து முறை. அதிகபட்சமாக “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தை நூற்றைம்பது முறைக்கும் மேல் பார்த்திருக்கிறார். ஆறாவதுடன் படிப்பை நிறுத்திய அப்பா, தாத்தாவின் அச்சுப்பட்டறையில் வேலை பழக ஆரம்பித்தார். அப்பாவிற்கு ஒரு அண்ணன். தாத்தாவிற்கு பயந்து ஒரு நாள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டார். அன்றிலிருந்து அப்பாவிற்கு ஏக செல்லம்.

தினமும் காலை எம்.ஜி.ஆர். படம் பார்த்து விட்டு, வீடு வந்து சாப்பிட்டு தூங்கி எழுந்து மீண்டும் அதே படத்திற்கு பகல் காட்சியும் செல்வார். மாலை முதல் இரவு வரை எம்.ஜி.ஆர் புராணம் பேசிக்கொண்டே பட்டறையில் வேலை நடக்கும். ஒவ்வொரு நாளும் இதே தொடரும். அப்பாவின் திருமண நாளன்று பெரும்பாலான பரிசுப்பொருட்கள் எம்.ஜி.ஆர் படங்களாய்த்தான் இருந்தன. என்னை வாரமிருமுறை சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார். ஒன்று – ஏதாவதொரு புதிய படம். மற்றொன்று, எம்.ஜி.ஆர் படம். எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களுக்கு இன்றுவரை நான் பரம ரசிகன்.

என் அப்பா ஊருக்கு அப்பாவி. உற்றார் உறவினர் எவரிடம் நான் அறிமுகமானாலும்,  “பாலு பையனா நீ?” என்று மோவாயைப் பிடித்துக் கொஞ்சுவார்கள். அடிக்காத அப்பாவைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் வாய் திறந்து ஒரு வார்த்தை திட்டியது கூட கிடையாது. “படி” என்று எப்போதும் சொன்னதில்லை. எனக்கும் படிப்பு வேப்பங்காயாய்க் கசந்தது. காலாண்டு அரையாண்டு என ஒன்றில் கூட ஃபுல் பாஸ் ஆகவில்லை. ஒவ்வொரு முறை ஃபெயில் ஆகி வரும் போதும், “சரி விடு, அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம்” என்பார். முழுப்பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.

வெள்ளியன்று காலை சாப்பிட்டு முடித்ததும் அம்மா ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்தார். இருந்த இடத்திலேயே கையைக் கழுவிக்கொண்டு எழுந்தேன். அப்பா தயிர் சாதத்தைக் குழைத்து ஒரு பிடி ஊட்டி விட்டார்.

P.T வகுப்பு என்பதால் பச்சை வண்ண உள்ளாடை அணிந்து அதன் மேல் வெள்ளைச் சட்டை உடுத்திவிட்டார்கள். அப்பா அம்மாவிற்கு டாடா சொல்லி பள்ளி கிளம்பியாயிற்று. வழியெங்கும் “ஆயிரத்தில் ஒருவன்” படம் பிம்பமாய் ஓடிக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தை நான் ஏற்கனவே இரண்டு முறை பார்த்துவிட்டேன். கத்திச் சண்டையை ரசிக்காத சிறுவர்கள் உண்டா?

வகுப்பறைக்குச் சென்று புத்தகப் பையை வைத்து ஒரே ஓட்டமாய் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றேன். முதல் ஒன்றரை மணி நேரம் விளையாட்டு. ஓடும் வழியில் சட்டையைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டேன்.

கால்பந்து.

பச்சை நிற டீமுக்கும் நீல நிற டீமுக்கும் போட்டி. சட்டையை மர இடுக்கினுள் நுழைத்துவிட்டு விளையாட்டில் மும்முரமானேன். எனக்கு கால்பந்து என்பது எப்போதாவது ஒரு முறை காலுக்கு வரும் பந்து, அவ்வளவுதான். நானும் என்னால் முடிந்த வரை பந்தை நோக்கி ஓடினேன்… ஓடினேன்… ஓடிக்கொண்டே இருந்தேன். ம்ஹூம், காலுக்குச் சிக்குவேனா என்று போக்குக் காட்டியது. மைதானத்தை நான்கைந்து முறை சுற்றி வந்ததுதான் மிச்சம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் பந்து ஒருமுறை கூட என் காலில் படவேயில்லை.

எவனோ ஒருவன் பந்தை வேகமாக அடிக்க அது உயர எழும்பியது. வாயைப் பிளந்தபடி வானத்தைப் பார்த்தேன். அது என்னை நோக்கி வருவது போன்ற பிரம்மை.. இல்லை இல்லை, உண்மை. பந்து என்னை நோக்கித்தான் வருகிறது. கை கால்கள் துறுதுறுவென்றன.

என் காலருகில் பந்து விழ வலது காலைத் தூக்கி ஓங்கி உதைத்தேன். உதைத்த வேகத்தில் காலில் இருந்த ரப்பர் செருப்பு வார் அறுந்து மேலே பறந்தது. பந்து காலில் படாமல், எனக்கு வெகு பின்னே சென்றுவிட்டது. மனம் தளராமல் செருப்பு வாரை மாட்டிக்கொண்டு மீண்டும் இரண்டு முறை மைதானத்தை வலம் வந்தேன்! வேஸ்ட்!!

இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கும், அதோடு P.T. முடிந்து விடும். எப்படியும் பந்து என்னிடம் வரப்போவதில்லை.

சோர்வுடன் மெல்ல நடந்தேன். நண்பன் கௌசிக் அருகில் வந்து, “டேய் ஜெகதீஸ்.. உன்னை தேடிட்டு அர்ப்புதராஜ் சார் வந்தார்” என்றான். என்னைத் தேடி “சார்” யாராவது வருகிறார்களென்றால் அது என்னை அடிப்பதற்காய் மட்டும்தான் இருக்கும் என்று திடமாக நம்புபவன் நான். கை கால்கள் உதறல் எடுத்தது.

பின்னாலிருந்து ஒரு குரல், “ஜெகதீஸ்” என்றது. திரும்பிப் பார்த்தேன். அட்டெண்டர் நாகராஜ் சார். கையைக் கட்டிக்கொண்டு அவர் முன் ஓடிச் சென்று நின்றேன்.

“சார், சொல்லுங்க சார்”

“ஹெட் மாஸ்டர் உன்னை வரச்சொன்னார். அவர் ரூமுக்கு போ” என்றார்.

“சார் நான் ஒண்ணுமே பண்ணலியே”, நா தழுதழுத்தது.

“டேய், அவர் வேற விஷயமா வரச் சொன்னார். போ” என்றார்.

எனக்கு நம்பிக்கையில்லை. டி.சி. கொடுத்து அனுப்பி விடுவார்களா? நான் எதுவுமே செய்யவில்லையே! உள்ளம் பதற ஹெட் மாஸ்டர் “ஜோசப் ஃபெலிக்ஸ்” அறையை நோக்கிச் சென்றேன். வெளியே நின்றுகொண்டு, “சார்?” என்றேன்.

நிமிர்ந்து பார்த்தவர், “நீதான் ஜெகதீசா?” என்றார்.

வேகமாக தலையை ஆட்டினேன். எந்நேரமும் அழக்கூடிய சூழ்நிலையில் இருந்தேன்.

“உள்ளே வா”, கையை நீட்டி அழைத்தார். அவர் முன் சென்று நின்றேன்.

“இவரை உனக்குத் தெரியுமா?” எனக்குப் பின்னால் கையைக் காண்பித்தார்.

பின்னால் திரும்பிப் பார்த்தேன். தங்கராசு மாமா நின்றிருந்தார். எங்கள் வீட்டிற்குப் பின்னால்தான் அவரின் வீடு. அவரிடம் நான் அதிகமாகப் பேசியதில்லை.

தெரியும் என்பது போல் தலையை ஆட்டினேன். நான் ஏதோ பெரும்பிழை செய்து அதைப் போட்டுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று என் மனம் உறுதியாக நம்பியது.

“யார் இது?” என்றார்.

“பக்கத்து வீட்டுல குடியிருக்கிற அண்ணன்” என்றேன்.

“அண்ணனா? இவர் மாமான்னு சொன்னார்?”

“சாரி சார்… சாரி சார்… மாமாதான்” என்றேன்.

“இவர் பேரென்ன?”

“தங்கராசு”

“சரி. இவர் உன்னை கூட்டிப் போக வந்திருக்கார். இவர் கூட நீ கிளம்பு”

“சார், புக்ஸ் எல்லாம் க்ளாஸ்ல இருக்கு”

“அதெல்லாம் பரவாயில்ல, நீ கிளம்பு”

மறு பேச்சு பேசாமல் தலையாட்டி விட்டு மாமாவை நோக்கிச் சென்றேன். இனி பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டார்களோ என்று என் மனம் அடித்துக்கொண்டது. தங்கராசு மாமா, “வா போகலாம்” என்றார். அவர் முகம் வாடியிருந்தது.

இரு சக்கர வாகனத்தில் ஏறிப் பயணித்தோம். பழகாதவர்களிடம் நான் அதிகம் பேசுவதில்லை. பயம். கூச்சம். வெட்கம். அன்று எனக்கு என்னவோ போலிருந்தது. “மாமா, நம்ம எங்க போறோம்?” என்றேன். அவர் பதில் சொல்லவில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டேன். மௌனம்.

வண்டி அரசு மருத்துவமனைக்குள் சென்றது. மரத்தடியின் நிழலில் வண்டியை நிறுத்தினார். கீழிறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய மரங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் மக்கள் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கராசு மாமா என் தோள்களைப் பற்றிக்கொண்டு, “போகலாம்” என்றார்.

அவர் பிடிக்குள் அடக்கமாய் முன் நடந்தேன். தூரத்து மரநிழல் ஒன்றில் கூட்டம் அதிகமாயிருந்தது. அவர்களை நோக்கிச் சென்றோம். அருகில் செல்லச் செல்ல அங்கிருந்த முகங்கள் ஒவ்வொன்றும் பரிச்சயமானதாய்த் தோன்றியது. என்னைக் கண்டவர்கள் எல்லாம் கூக்குரலிட்டனர்.

அந்த கூச்சல் கும்பலுக்கு நடுவே மாமா என்னை அழைத்துச் சென்றார். எல்லோரும் வழி கொடுத்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் நடுவே ஏழெட்டுப் பேர் அமர்ந்து ஓவென்று அழுதுகொண்டிருந்தனர். அதில் தலைவிரிகோலமாய் பைத்தியம் பிடித்ததைப் போல கதறிக்கொண்டிருந்தார் என் அம்மா. என்னைப் பார்த்ததும் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்.

வருத்தம், பயம் என இரண்டும் என்னுள் திளைத்திருந்தது. மெல்ல மெல்ல மனம் நிலவரத்தை உணர ஆரம்பித்திருந்தது. கண்களில் வழிந்தோடிய கண்ணீரில் பச்சை நிற உள்ளாடை ஈரமானது.

“அப்பா… அப்பா எங்கே?” என்றேன்.

“பையன் அப்பாவைக் கேக்கறானே… நான் எங்க போவேன்?” என்று அம்மா கதறியழ முழுவதும் புரிந்தது. அலுவலகம் வரும் வழியில் சாலை விபத்துக்கு உள்ளாகி அக்கணமே இறந்து விட்டார்.

***

ஓரிரு மாதங்கள் கண்ணீரிலேயே கறைந்தன. பின் பெரியப்பா, தாத்தா இருவரும் குடும்பத்தைத் தாங்கி நின்றார்கள்.

மூன்றாம் மாதம் நடந்த பள்ளித் தேர்வில் முதன்முறையாய் எல்லா பாடங்களிலும் தேறினேன். பின் பத்தாவது பொதுத் தேர்வில் வகுப்பில் நான்காவதாகவும், பனிரெண்டாவது பொதுத் தேர்வில் பள்ளியில் நான்காவதாகவும் வந்தேன்.

அப்பாவின் வைப்பு நிதியில் சொந்த வீடு கட்டி, அக்கா திருமணம் முடித்து, நான் படிப்பை முடித்து என இப்போது மனநிறைவுடன் செல்கிறது எங்கள் வாழ்க்கை. அறியா வயதில் அப்பா காட்டிய அன்பு மட்டும் அவர் நினைவுகளைத் தூறலாய் தாங்கிக்கொண்டே இருக்கிறது.

இன்றுடன் பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. என் மனைவி கேட்டாள், “மாமா இறந்த தினத்தில் அவரைப் பற்றி ஒரு நிமிஷமாவது நினைப்பீங்களா?”

உண்மையில் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடமாவது நினைக்கிறேன். அப்பா – ஒவ்வொருவருக்கும் முதல் ஆசான். முதல் ஹீரோ. முதல் தலைவன்.

Advertisements

5 thoughts on “அப்பா

 1. charles

  நான் ரொம்ப சென்சிடீவ் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்,, ஆனாலும் இதை படிக்கும்போது என் கண்களில் தாரைத் தாரையாய் ,,, ஒரு குடும்பத்தில் அப்பா என்கிற ஆணின் முக்கியத்துவம் என்ன
  நான் முழுமையாய் அறிந்தவன்

  Reply
 2. Narasimhan

  You made me to give a deep thought on my DAD….
  I missed him in the same 28 Feb…..but in 2005

  -Narasimhan

  Reply
 3. குந்தவை

  நானும் எங்கம்மா, அப்பாவை நினைக்காத நாட்களே கிடையாது. அவர்கள் தந்த அன்பும், அரவணைப்பும் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.

  Reply
 4. Anbusivam

  Jaggy,

  Visiting your blog after a while. Reading this post, every thing on that tragic evening came in front of my eyes. I could very well remember, I came back from school to see our compound filled with people. Unnikrishnan anna was standing there at the entrance, he told me the news. It was really shocking to know that Periyappa is no more. My grandma asked to go to your house and meet you. I came in there, was dump stuck, didn’t know what to say, couldn’t look at your eyes directly. 18years went past now.

  //அறியா வயதில் அப்பா காட்டிய அன்பு மட்டும் அவர் நினைவுகளைத் தூறலாய் தாங்கிக்கொண்டே இருக்கிறது.//

  Memories of our loved ones will remain for ever….!!!

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s