டெரர் கனவு

அதிகாலை சுமார் 3:30 மணி இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். கனவு. பயங்கரமான கனவு.

நான் இறந்து விடுகிறேன்.

என் பிணத்தை தூக்கிக்கொண்டு மயானத்திற்குச் செல்கிறார்கள். கனவிலும் அது அதிகாலை நேரம். ஊரே ஆளரவமின்றி இருக்கிறது. வெகுதூரத்திற்குப் பின்னால் நான் மட்டும் அழுதபடி பதற்றமாய் ஓடி வருகிறேன்.

முகம் வியர்த்து கண்களில் பயமும் நெஞ்சத்தில் நடுக்கமும் குடிகொண்டிருக்கிறது. எங்கள் வீட்டு வீதியின் கடைசிக்கு வருகிறேன்.

“யாருப்பா அது இந்நேரத்துல?” என்றொரு குரல் கேட்கிறது. உற்றுப் பார்க்கிறேன். பெரியப்பா கிட்டு.

“பெரியப்பா, நான் தான்”

“டேய்… வா வா வா, இப்பத்தான் உன் பொணத்த தூக்கிட்டு போனோம், பாத்தியா?”

“இல்லை பெரியப்பா, அத பாக்கத்தான் போய்ட்டு இருக்கேன்” பதற்றம் அதிகரித்தது.

“அடடா.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? பாடிய பொதச்சுட்டமே!”

“புதைச்சுட்டீங்களா… ” சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து கும்பிடுகிறேன். மனம் பயத்தில் இருந்து கொஞ்சமாய் விடுபட்டிருக்கிறது.

“நல்ல வேளை பெரியப்பா, புதைச்சீங்க… எரிச்சிருந்தா நான் என்ன பண்ணுவேன்… ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா” சந்தோஷத்தில் அழுகிறேன்.

“பரவால்ல விடு… சரி வா பாடிய பாக்கலாம்”

“புதைச்சிட்டதா சொன்னீங்க?”

“அட… தோண்டி பாக்கலாம் வாடா”. என்னை அழைத்துச் செல்கிறார். மனதை திடப்படுத்திக் கொள்கிறேன்.

இடுகாட்டின் முற்புதர்களுக்கு நடுவில் ஒரு இடம் மட்டும் மேடாய் இருக்கிறது. சுற்றிலும் பூக்கள் கொட்டப்பட்டிருந்தன. என் பிணமாய்த்தான் இருக்கவேண்டும். எந்நேரமும் பொங்கி வரும்படியாய் என் கண்கள் குளமாய் நின்றன.

“பெரியப்பா… இப்படி அநியாயமா செத்துப்போய்ட்டனே…” அவர் மார்பில் முகம் புதைத்து விக்கிவிக்கி அழுகிறேன்.

“விடுறா.. விடுறா.. மனுஷனாப் பொறந்தா எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான் ஆகணும். மனச தைரியமா வச்சிட்டு குழிய தோண்டு. ரொம்ப நேரம் விட்டா பாடி கண்டிஷன் கெட்டுப்போய்டும்”

பிணமேட்டின் அருகிலேயே மண்வெட்டி இருக்க, அதை எடுத்து மண்ணை கொத்திக் கொத்தி வெளியே எறிகிறேன். சிறிது நேரத்திற்குப் பின் பெரியப்பா வாங்கி தோண்டுகிறார். நான் குத்த வைத்து என் பிண உடம்பைக் காண அமர்ந்திருக்கிறேன்.

மூன்று அடி தோண்டியிருக்கும்போது கலவரமாகிறேன். “பெரியப்பா, பாடி பக்கத்துலதான் இருக்கும். மண்வெட்டில கொத்திராதீங்க” என மன்றாடுகிறேன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்டா… நாங்கதானே புதைச்சோம். புதைக்கறப்ப வரமாட்டான். லேட்டா வந்திட்டு பொணத்த காமி, பொணத்த காமின்னு நச்ச வேண்டியது” சலித்துக் கொண்டார். அவருக்கு என் வேதனை புரியவில்லை போலும்.

மேலும் ஓரடி தோண்டியபின் மண்வெட்டியை ஓரமாய் வைத்துவிட்டு கைகளால் குழி பறிக்கிறார். நான் ஆவலாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளைத்துணியால் மூடப்பட்ட சடலம் தெரிகிறது. குழிக்குள் இறங்கி நானும் பெரியப்பாவும் என் பிணத்தை வெளியே எடுக்கிறோம்.

பெரியப்பா, “துணிய விலக்கப் போறேன்… மனச தேத்திக்க” என்கிறார்.

பெருமூச்சுவிட்டபடி சரியென்று தலையாட்டுகிறேன். துணியை விலக்கியதும் அசைவற்ற என் உடலைக் கண்டு உள்ளம் பதறுகிறது. கண்கள் விரித்து என் முகம் பார்க்கிறேன்.

“வண்டியில மெதுவாப் போ… மெதுவாப் போன்னு எத்தனை வாட்டி உன்கிட்ட சொன்னேன். கேட்டியா? இப்பப் பாரு, இருபத்தஞ்சு வயசுல லாரில அடிபட்டு செத்துப் போய்ட்ட”

“எப்படி பெரியப்பா உயிர் போச்சு?”

“வண்டியில இருந்து கீழே விழுந்ததுல பின் மண்டையில நல்ல அடி. தலை ஓட்டை ஆகி மூளை வெளில தொங்குது பாரு. ஆனா பரவால்லை, கண்ணுல அடிபடல”

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறேன். பெரியப்பா என்னைக் கட்டிக்கொள்கிறார். “பரவால்ல விடுறா… என்ன இருந்தாலும் அவனவன் பொணத்த அவனே பார்க்கிற பாக்கியம் யாருக்கு வரும். நீ குடுத்து வச்சவன்டா”

அலறிப் போய்க் கண் விழித்துப் பார்க்கிறேன். மணி 4:00. அத்தனையும் மனதில் பிம்பமாய் ஓடிக்கொண்டிருக்கிறது, இப்போதும்.

***

// தம்பி பிரகாஷ் கண்ட கனவு இது

*****

4 thoughts on “டெரர் கனவு

 1. jaggybala Post author

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. முனைவர் இரா குணசீலன் அவர்களே!

  Reply
 2. Prakash

  அண்ணா,
  ந்ம் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டமான, திகிலான நிமிடங்கள் காலம் ஓடிய பின் சந்தோசமான, நகைச்சுவையான சம்பவங்களாக உரு மாற்றம் பெற்று விடுகின்றன. அந்த கனவு கண்ட இரவு நடு நிசியில் வியர்த்தெழுந்து அந்த நாள் முழுக்க அரை கிறுக்கன் போல் அலைந்தது எனக்குத்தானே தெரியும். ஆனால் த்ற்போது படிக்கும் போது சிரிக்காமல் படிக்க முடியவில்லை.

  Reply
 3. jaggybala Post author

  நீ அரை கிறுக்கன் போல் அலைந்து கொண்டிருப்பது எனக்கு நன்றாகவே தெரியும்!

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s