Monthly Archives: September 2009

ஓ ஈசா… என் ஈசா

சென்ற மாதம் ஒரு முஸ்லீம் சகதொழிலாளியுடன் பேசிக் கொண்டிருந்தேன். ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பதாகச் சொன்னார். மதநம்பிக்கைகளை என் மனம் விரும்பியதில்லை என்றாலும் ஆர்வம் உண்டு. எதற்காக அந்த நோன்பு என்று கேட்டேன். ஏழைகளின் பசியை உணர்வதற்காக என்று சொன்னார்.

சுவாரஸ்யமாய் ரம்ஜான் நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து ஆராய்ந்தேன். குடிக்கக்கூடாது, முத்தமிடக்கூடாது, வாந்தி எடுக்கக்கூடாது, மாதவிடாய் கூடாது என்று ஆயிரம் கூடாதுகள் இருந்தன. ம்ஹூம், எதிலும் உடன்பாடில்லை. நோன்பிற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் “ஏழைகளின் பசியை உணர்தல்” என்பது மிகப்பெரிய செயலல்லவா?

எளிமையையும் ஏழ்மையையும் கற்றுக்கொண்டால் பொறாமையும் அகங்காரமும் மறைந்துவிடும். ரம்ஜான் நோன்பாய் இல்லாமல் ஒரு வைராக்கியமாக நானும் மதிய உணவைத் தவிர்க்க முடிவுசெய்தேன்.

காலையும் இரவும் நல்லா வெட்டிட்டு மதியம் சாப்பிடாமல் இருப்பது பெரிய காரியமா என்று நினைத்தீர்களேயானால், ஆமாம் என்றுதான் சொல்லுவேன். முதல் நாளன்றே வயிற்றில் கடமுட சத்தம் ஆரம்பித்துவிட்டது. மாலை நான்கு மணிக்கெல்லாம் மயக்கம் வருவது போல் இருந்தது. நீராகாரம் கூட குடிக்கக்கூடாது என்றார்கள். முடியவில்லை. தலைசுற்றி விழுந்துவிடுவது போலிருந்தது. காபி குடித்தேன்.

வார இறுதி நாட்களை விடுத்து கிட்டத்தட்ட இருபத்தொரு நாட்கள் மதிய உணவைத் தவிர்த்திருக்கிறேன். தினமும் காலை ஒன்பது மணிக்கு இரண்டு இட்லி/பூரி ஒரு தோசை. மதியம் ஒரு காபி. இரவு ஒன்பது மணிக்கு இரண்டு பரோட்டா ஒரு தோசை. இடையில் வேறெதுவும் இல்லை. சென்னை உணவகங்களில் தோசை என்பது இட்லி சைசிற்கே இருக்கும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. பூரி கச்சாயம் சைசில் இருக்கும்.

இந்நாட்களில், ஏழைகளின் பசியை உணர்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் பசி என்றால் என்னவென்று கொஞ்சமாய் உணர்ந்திருக்கிறேன். முதல் ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் பின்னர் பழகிவிடும் என்றெண்ணி கஷ்டப்பட்டு இருந்துவிட்டேன். நினைத்ததைப் போலவே இரண்டாவது வாரம் பழகிவிட்டது. பசியின்மை அல்ல, பசியைத் தாங்கும் குணம். பசி அப்படியேதான் இருக்கிறது.

ஹோண்டா சிட்டியில் ரேபன் கண்ணாடியணிந்து செல்லும் கனவான்களே, நீங்கள் பசியடங்கிய பின் ஒதுக்கும் ஒரு பிட்சா துண்டின் காசில் சராசரி இந்தியனின் குடும்பம் ஒரு வாரம் சாப்பிடும். உங்களைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை, அன்னம் தண்ணீருக்கு மரியாதை கொடுங்கள் என்கிறேன். பசித்துத் தெருவில் வாழ்பவனும் உன்னைப் போன்ற ஒரு சகமனிதன் தான்.

இன்று திருப்பூர் செல்கிறேன். சனி ஞாயிறு சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். திங்கட்கிழமையுடன் ரம்ஜான் நோன்பு முடிகிறது. ஆனாலும், இன்னும் சில நாட்கள் மதிய உணவைத் தவிர்க்கலாமென்று இருக்கிறேன். டயட், டிடர்மினேஷன் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

எல்லாம் சரி, இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கறீர்களா? ஈசனுக்கு ஈத் திருவிழா என்றால் கேட்கக் குளிர்ச்சியாய் இருக்கிறதே! தவிர, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் “ஓ ஈசா… என் ஈசா…” என்னும் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். உணர்ச்சிப் பிழம்பாய் இருக்கிறது.

Advertisements

கண் பேசும் வார்த்தைகள் [குறுநாவல்]

[பகுதி 1]

திருட்டு, பிச்சை இவையிரண்டும் சமுதாயத்தின் பார்வையில் கேவலமாய் பார்க்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ திருடிக்கொண்டும் பிச்சை எடுத்துக்கொண்டும்தான் இருக்கிறான்.

நான் இப்போது நேரடியாக செய்யப்போகிறேன். அதிகம் சிந்திப்பதற்கு நேரமில்லை. சைக்கிளின் வேகத்தை மெல்ல கூட்டினேன். மீண்டும் ஒருமுறை கண்களை சுழற்றி பிரச்சனைக்குரிய சூழ்நிலை இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன். இன்னும் நூறு மீட்டர் தொலைவுதான் இருக்கும். நடுக்கத்தில் இதயம் இரட்டிப்பாய் துடித்தது. கைகளில் வியர்வைத்துளிகள் படிந்திருந்தன. மூச்சு வாங்கியது.

சைக்கிளுக்கு முன்னால் என் மனம் பயணித்துக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பது போல இருந்தது. தலையை சிலுப்பி அந்த மனசாட்சியை உதறினேன்.

இப்போது சைக்கிளின் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டேன். வலது கையை உயர்த்திக்கொண்டு கால்களால் இன்னும் வேகமாய் பெடலை அழுத்தினேன். நிலைதடுமாறி கீழே விழக்கூடாதென்று மனம் படபடத்தது.

என் பார்வை முன்னால் நடந்து கொண்டிருந்த பெண்ணின் மேலிருந்தது. அருகில் சென்றதும் அந்தப்பெண்ணின் கழுத்தில் இருந்த செயினில் விரல்களை நுழைத்தேன். சரியாக மாட்டிக்கொண்ட செயின் சைக்கிளின் வேகத்தில் அந்தப்பெண்ணின் கழுத்தில் இருந்து பிடுங்கிக்கொண்டு வந்தது. கையில் செயினுடன் ஹேண்டில்பாரை பிடித்துக்கொண்டு பெடலை வேகவேகமாய் மிதித்தேன்.

இப்போது என் மனசாட்சி மேலும் வேகமாய் போகச்சொல்லி ஆணையிட்டது. இந்த வீதியைக்கடந்து விட்டால் பிறகு பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டில் நுழைந்து தப்பி விடலாம்.

“ஐயோ, திருடன்! திருடன்!” என்று அந்தப்பெண் உரக்கக் கூச்சலிட்டாள். மாரில் அடித்துக்கொண்டு மண்ணைத்தூற்றி அடித்தாள்.

வீடுகள் அதிகம் நிறைந்த தெரு அது. சில இளைஞர்கள் சுதாரித்துக்கொண்டு என்னை துரத்த ஆரம்பித்தனர். அவர்கள் ஓடி வருவதை கண்ணாடியில் பார்த்ததும் என் இதயத்துடிப்பை உடல் முழுவதும் உணர்ந்தேன். இதோ இந்த முட்டு சந்தில் திரும்பி பின் நான்கைந்து மிதிமிதித்தால் மெயின்ரோடு வந்துவிடும்.

இப்போது எல்லோருமாய் சேர்ந்து கத்த ஆரம்பித்தார்கள். அதைக்கேட்டு என் பாதையின் முன்வீட்டில் இருந்த ஒருவன் வழியை மறித்தபடி ஓடிவந்தான்.

“முருகேசா, அவனைப்பிடி… விட்ராதே” என்று பின்னால் துரத்தியவர்கள் கூப்பாடு போட்டனர்.

நான் சைக்கிளை ஓரமாக ஓட்டி அவனைக்கடந்து செல்ல முற்பட்டேன்.  முருகேசன் இடுப்பில் இருந்து ஒரு பட்டாக்கத்தியை எடுத்து என்மீது வீசினான். கத்தி விலா ஓரமாக பட்டு சென்றது. வலி தாங்காமல் “அம்மா” என்று கத்தினேன். இருப்பினும் வண்டியின் பிடியை விடாமல் முருகேசனையும் கடந்துவிட்டேன். முட்டு சந்து வந்துவிட்டது.

திரும்பிய வேகத்தில் எதிரே லாரி வந்துகொண்டிருந்ததை கவனிக்கவில்லை. திடீரென கண்டதும் அரண்டுபோய் சைக்கிளை மாற்று திசையில் திருப்பினேன். லாரி ப்ரேக் அடித்து நின்றுவிட்டது. நான் சைக்கிளை சாக்கடைக்குள் விட்டுவிட்டேன்.

என் வலதுகால் சைக்கிள் சக்கரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது. எடுப்பதற்குள் முருகேசனும் மற்றவர்களும் என்னை சுற்றிக்கொண்டனர். பின்னால் ஓடி வந்த கூட்டம் பத்தடி தொலைவில் நின்றது.

சிக்கிக்கொண்டு விட்டேன். திருடியவன் மாட்டிக்கொண்டால் அவனை யாரும் மனிதனாக பார்ப்பதில்லை. மனிதமாய் பார்க்கப்படாத எதையும் இச்சமுதாயம் இகழ்வாகவும் இச்சைகளை போக்கிக்கொள்ளவும் தாராளமாக உபயோகித்துக்கொள்ளும்.

கால்களை விடுவிக்க போராடுகையில் மண்டையில் இடி இறங்கியதைப்போன்று உணர்ந்தேன். கையில் செயினை கெட்டியாக பிடித்தபடி “அம்மா” என்று தலையில் கைவைத்து அமர்ந்தேன். சைக்கிள் சக்கரத்தில் இருந்து யாரோ என் காலை உருவி என்னை ரோட்டில் இழுத்துப்போட்டார்கள். தார் ரோட்டின் சூடு தாங்காமல் புரண்டேன்.

பின்னந்தலையை கம்பால் அடித்திருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். ரத்தம் சொட்டு சொட்டாய் உதிர்ந்து கொண்டிருந்தது. வலி சுண்டி இழுத்தது. தலையை பிடித்தபடி பல்லை இறுக்கிக்கொண்டு ரோட்டில் கிடந்தேன். சுற்றியிருந்தவர்களில் ஒருவன் அடிவயிற்றில் ஓங்கி உதைத்தான். கண்கள் பிதுங்கிக்கொண்டு வந்தது.

மெல்ல மயக்க நிலைக்குச்சென்றேன்.

“டேய்… கண்ணத்தொறடா தாயோளி”

முகத்தில் நீர் பட்டு கண்களை மெல்ல விழித்துப்பார்த்தேன். கால்கள் மற்றும் இடுப்புப்பகுதியை நயிலான் கயிற்றால் சுற்றி மின்சாரக்கம்பத்தில் கட்டிவைத்திருந்தார்கள். தலையில் இருந்து கொட்டிய ரத்தம் முகத்தை நனைத்திருந்தது. சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். முருகேசன் மற்றும் சிலர் கையில் கத்தி கம்புடன் இருந்தார்கள்.

“எந்த ஏரியாடா?”

பேச வாயெடுத்தேன். வேண்டாம், பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று தோன்றியது.

“நீ பேசலைன்னு வையி, தாயளி உன்ன கொஞ்ச கொஞ்சமா கூறு போட்ருவோம்”, முருகேசன் என் தலைமுடியை கொத்தாய் பிடித்து கம்பத்தில் மோதினான்.

சுற்றியிருந்த பலரது முகத்தில் மிருகத்தனத்தை பார்த்தேன். கம்பு கத்தியுடன் இருந்தவர்கள் சிம்பன்ஸி வகையறா குரங்குகள். அவர்கள் தன் இச்சைகளை தீர்த்துக்கொள்ள என்னை கட்டிவைத்து குதறுகிறார்கள். சிலர் கழுதையைப்போல பின்னால் இருந்து உதைத்தார்கள். சிலர் ஓநாயைப்போல, நான் மயக்கநிலையில் இருக்கையில் மட்டும் வந்து அடித்தார்கள். மற்றவர்கள் மட்டும் பாவம், ஆட்டு மந்தைகளைப்போல வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் வலிகொண்டு கத்தி கதறுகையில் பெரும்பாலனவர்கள் இன்பமுற்றார்கள். பொறுத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கையில் ஏமாந்து போனார்கள்.

வலி தற்காலிகமானது. பொறுத்துக்கொண்டால் சில நிமிடங்கள், நாட்கள் அல்லது மாதங்கள் இருந்து பின் மறைந்து போகும். ஆனால் வலியை தாங்க முடியாமல் தோற்று விட்டால், அது ஆயுள் முழுவதும் விடாது துரத்தும். மனிதனால் எந்த சித்ரவதையை தாங்கிக்கொள்ள முடியும். சித்ரவதை முறைகள் ஒவ்வொன்றும் தோற்றுப்போவதாலேயே புதுப்புது யுக்திகளை மனிதன் கையாளுகிறான்.

பயத்தை முகத்தில் காட்டாமல் இருந்தேன். வலியை உள்ளுக்குள் வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும், குத்துக்கும் மரம் போல் நின்று கொண்டிருந்தேன். நீங்கள் ஒருவனை அடித்து அவன் அசராமல் இருந்தால், நீங்கள் தோற்றுப்போனதாய்த்தானே அர்த்தம்.

வெவ்வேறு யுக்திகளை கையாளத்தொடங்கினார்கள். மிளகாய்ப் பொடியை பின்மண்டையில் வைத்து தேய்த்தார்கள். காயத்தில் தூவினார்கள். இரத்தத்துடன் கலந்த மிளகாய்ப்பொடி, கண்களின் வழியே உடலெங்கும் வழிந்தோடியது. அடிபட்டு தோல் கிழிந்திருந்த ஒவ்வொரு இடுக்கினுள்ளும் அது குடிகொண்டது. உடல் முழுவதும் தீயில் கொழுந்துவிட்டு எரிவது போல இருந்தது. உடம்பு உதறல் எடுத்தது. உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் நின்றிருந்தேன்.

சுத்தியல் கொண்டு பற்களை கொத்தினார்கள். இரத்தம் பீறிட்டு என் சட்டையை நனைத்தது. எச்சில் வழியே ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பற்களை தரையில் துப்பினேன். நிமிர்ந்து முகத்தை தூக்கி வேறு திசையில் வைத்துக்கொண்டு நின்றேன்.

வலி ஏற்படுத்தி காயப்படுத்த முடியாததால் அடுத்த கட்டமாய் அவமானப்படுத்த ஆரம்பித்தார்கள். இரத்தம் தோய்ந்திருந்த சட்டையையும் பேண்டையும் கிழித்து சாக்கடையில் போட்டார்கள். ஜட்டியுடன் தலையை குனிந்து நின்றேன். சுற்றியிருந்த பெண்களில் சிலர் கலைந்து சென்றனர். வலியை தாங்கமுடிந்த என்னால் வெட்கத்தை தாங்கமுடியவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது.

சற்றே இளகியிருந்த நயிலான் கயிற்றை இறுக்கிக்கட்டினார்கள். கூடியிருந்த கூட்டத்தை கலைத்தார்கள். நான்கைந்து நடுத்தர வயதினர், பத்து பதினைந்து இளைஞர்கள், ஒன்றிரண்டு சிறுவர்கள் மட்டும் கூடி நின்றனர்.

முருகேசன், “இப்ப நீ உன்னைப்பத்தி ஒவ்வொன்னா சொல்றே, சரியா?” என்றபடி கத்தியை என் இடுப்பில் அழுத்தினான். சில நிமிட போராட்டத்திற்குப்பின் என்னை நிர்வாணமாய் நிற்க வைத்தார்கள். வெற்றுடம்பு கூசியது.

வைராக்கியம் வலியை தாங்கியது. இனிமேல் வைராக்கியம் உதவாது. என் கவனத்தை நான் திசை திருப்ப வேண்டும். கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

நான் என் சுசியிடம் போக வேண்டும். அவளால் மட்டுமே என்னை இக்கணத்தில் இவ்வுலகத்தில் இருந்து விடுவிக்க முடியும்.

சுசி… ஹெல்ப் மீ சுசி… ஹெல்ப் மீ பேர் த பெய்ன்.

**********

[பகுதி 2]

சுசி…

குனிந்த தலை நிமிராமல் கண்களை மட்டும் உயர்த்திப்பார்த்து, ‘சுந்தர்’ என்பாய். உன் இதழ்கள் குவிந்து பின் பரந்துவிரியும். உன்னையன்றி வேறு யாராலும் அப்படி செய்ய முடியாது.

மூன்று வருடங்களுக்கு முன்னால், நாம் கல்லூரியில் சேர்ந்திருந்த இரண்டாவது வாரம்… நீ என்னை முதன்முதலாய்க் கண்கள் உயர்த்திப் பார்த்தாய்.

அப்போது நீ கருப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாய். ஒல்லியான தேகம். அவிழ்த்து விட்டிருந்த குட்டைக் கூந்தல். பற்கள் தெரியாமல் சின்னதாய் ஒரு புன்னகை. வெட்கத்தில் சிவந்திருந்த உன் குழிக்கன்னம். சுசி, உன்னை அப்போதே ஆரத்தழுவிக்கொள்ள நினைத்தேன். பிறந்த குழந்தையை கையில் எடுத்துக்கொஞ்சும் உணர்வுடன்.

உன் ஒற்றைப்பார்வை என்னை ஒரு மாதகாலம் அலைக்கழித்தது. ஏன் அதற்குப்பின் நீ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை? அல்லது எல்லாமே என் பிரம்மையா?

கல்லூரியில் எனக்கு முன் இருக்கையில் நீ. நீ மல்லிகைப்பூவிட்டு வந்த ஒவ்வொரு நாளும் நான் அரைமயக்கத்தில் தான் இருந்தேன். உன் பொறுமை எனக்கு பிடித்திருந்தது. உன் மென்மை என்னை மெல்ல மெல்ல ஆட்கொண்டது. எப்போது என்று சரியாக சொல்லத் தெரியவில்லை, ஆனால் நான் உணர ஆரம்பிக்கும் முன்னர் நீதான் என் உலகம் என்றாகியிருந்தது. உன் ஓரப்பார்வைக்காகவும் முதல் வார்த்தைக்காகவும் ஏங்கினேன். நான் முதலில் பேசக்கூடாதென நினைத்திருந்தேன். நீ என்னைப்பார்த்த அந்த முதல்பார்வை நிச்சயம் காதலால் ஆனது. நீயாய் நிச்சயம் என்னிடம் பேசுவாய்.

நான் காண்பதை நீ உணர்ந்திருந்தாய். ஒத்துழைக்கவும் இல்லை. ஒதுங்கவும் இல்லை. புதிதாய் காதல் வயப்பட்ட தமிழ்ப்பெண்ணின் குணாதிசயம் இது. காதலை சொல்லாத வரை எந்தப்பெண்ணாலும் அமைதியாய் இருக்கமுடியும். ஆண்களால் முடியாது. ஒரு மாதத்திற்கும் மேல் நீ என்னிடம் பேசவேயில்லை.

வேதியியல் சோதனைக்கூடத்தில் ஒரு நாள் போரிக் அமிலம் செய்து கொண்டிருந்தோம். என் இடப்பக்கம் நீயிருந்தாய். தனிச்சோதனை என்பதால் கூடம் ஆளரவமின்றி இருந்தது. அப்போது தான் நீ என்னிடம் முதன்முதலில் பேசினாய். மெதுவாய். மிக மெதுவாய்.

நம்ப முடியாமல் புருவம் சுருக்கி மெல்ல உன்னைப் பார்த்தேன். உன் முகம் வேறு திசையில் இருந்தது. கண்கள் மட்டும் என்னைப்பார்க்க முயற்சித்துக்கொண்டிருந்தது. மீண்டும் அதே வாக்கியத்தை சொன்னாய். நாவற்பழத்தை வாய்க்குள் வைத்து விளையாடும் கிளியைப்போல உன் இதழ்களின் வழியே நாவை சுழட்டிக்கொண்டு பேசினாய்.

என்னால் என்றும் மறக்க முடியாத அந்த முதல் வாக்கியம், “நீ தப்பு பண்ணிட்டு இருக்க சுந்தர்” என்பது.

நான் புரியாமல் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ப்யூரெட்ல ஊத்த வேண்டியத பிப்பெட்ல ஊத்தி வச்சிருக்க” என்றாய்.

ப்யூரெட்டையும் பிப்பெட்டையும் பார்த்தேன். தவறு செய்திருந்ததை எண்ணி பேரானந்தம் கொண்டேன். சுசியை என்னிடம் பேச வைத்த பிப்பெட்டே, நீயே இனி காதலின் சின்னமாய் கடவாய். இருந்தாலும் இப்போதைக்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்றெண்ணி மாற்றி ஊற்றினேன்.

அதன்பிறகு வகுப்பு முடியும் வரை ஒவ்வொரு செயலிற்குப்பின்னும் உன்னைப் பார்த்தேன். ஒரு மாதமாய் தேக்கி வைத்திருந்த பரிதவிப்பு அது. இம்முறை நீ கண்களால் பேசினாய். இதழ்களால் பார்த்தாய். மெலிதாய் புன்னகை புரிந்தாய். உன் முதல்பார்வையை மீண்டும் காண்பித்தாய். பின் நாணினாய். அகத்தின் அழகு உன் முகத்தில் தெரிந்தது. எனக்கு பறக்க வேண்டும் போலிருந்தது.

தேர்வு முடிந்து வெளியே வந்தோம். “சுசி, உனக்கு எப்படி என் பெயர் தெரியும்?” என்றேன். நான் அவளிடம் பேசிய முதல் வாக்கியம் சுயநலம் கலந்த லூசுத்தனமாய் அமைந்து விட்டது.

“உனக்கு எப்படி என் பெயர் தெரியுமோ, அப்படித்தான். இதுக்கெல்லாம் சி.ஐ.டியா வருவாங்க, அட்டெண்டன்ஸ்ல உனக்கு அப்புறம்தானே என்னோட பேர் வருது.”

“எனக்கு கெமிஸ்ட்ரின்னா கொஞ்சம் அலர்ஜி”, பல்லைக்காட்டாமல் சிரித்தேன். உண்மையில் எனக்கு புத்தகம் என்றாலே அலர்ஜி.

“அப்படியா? நேத்து மெக்கானிக்கல் லேப்ல லெக்சரர் உன்னைப் பார்த்து என்ன கொஸ்டீன் கேட்டார்?”

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அடப்பாவிகளா, எந்தப்பாவியோ இதையெல்லாம் சொல்லி வச்சுட்டானா? எதுவும் பேசாமல் நடந்தேன்.

“சொல்லு சுந்தர், என்ன கேட்டாங்க?”

“இல்ல விடு சுசி, வேண்டாம்”

“பரவாயில்ல சுந்தர், என்கிட்ட தானே சொல்றே. ப்ளீஸ், சொல்லு”

“என்கிட்ட தானே சொல்றே…” என்றால் உன்னிடம் எதுவும் சொல்லலாம் என்று அர்த்தமா? எதையும் மறைக்ககூடாது என்று அர்த்தமா?

“அது.. வந்து… த்ரீ ஃபேஸ் இண்டக்க்ஷன் மோட்டார் எப்படி ஓடும்னு கேட்டார்”

“அதுக்கு நீ என்ன சொன்ன?”

“சுசி.. வேண்டாம் சுசி”

“லேப்ல எல்லா பசங்களும் கேட்ருக்காங்க, நான் கேட்கக்கூடாதா.. சொல்லு சுந்தர்”

“அது… டுர்ர்ர்ர்ன்னு ஓடும்னு சொன்னேன்”

முதன்முறை வாய்விட்டு சிரித்தாய். சிறிய பற்கள் தெரியும் சிரிப்பு. அப்போது உன் மார்புகள் திமிறியதில் துப்பட்டா சரிந்தது. சரிசெய்து கொண்டு அடக்கமுடியாமல் மீண்டும் சிரித்தாய். இம்முறை உன் சிரிப்பில் நாணம் தெரிந்தது. கனிவான பெண்கள் கோபப்பட வேண்டிய இடத்தில் நாணப்பட்டால், அது காதலன்றி வேறென்ன?

சுசி… உன் பெயரைச்சொன்ன ஒவ்வொரு கணமும் எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதைப்போல் உணர்ந்திருக்கிறேன். உன்னை முதன்முதலில் பார்க்கையில் எனக்கு உண்டானது காதலல்ல. பரவசம். அந்தப்பரவசம் நாளடைவில் நீடித்து காதலாய் உருமாறியிருந்தது.

நாம் பழக ஆரம்பித்த நாட்களில் நமக்குள் பல வேற்றுமைகள் இருந்தன. படிப்பிலும் ஞானத்திலும் நீ மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தாய். எனக்கு இரண்டுமே வேப்பங்காய் கசப்பு. யாரையுமே பார்த்தவுடன் சட்டென பேசிப்பழகும் குணம் உனக்கு. முதல் சில சந்திப்புகளில் பேசுவதற்கு காசு கேட்பவன் நான். செக்ஸைப்பற்றிய கூட்டுவிவாதத்தில் முதல் ஆளாய் நீ பேசினாய். அதைப் பார்ப்பதற்கே வெட்கப்பட்டும் கூச்சப்பட்டும் நின்றிருந்தேன் நான்.

ஆனாலும் என்ன, ஆண் பெண் என்பதே வேற்றுமைதானே. பல சமயங்களில் வேற்றுமையே சரியான கலவை. உன் ஒவ்வொரு செயல்களும் எனக்குள் தீராக்காதலை உண்டு செய்தன. உன்னைக் கண்டு பெருமையும் பொறாமையும் அடைந்தேன். பாரதி கண்ட புதுமைப்பெண் வெட்கப்பட்டால் உன்னைப்போலவே இருப்பாள்.

நிமிர்ந்து முருகேசனின் கண்களைப் பார்த்தேன். எதிர்மறையை ரசிக்கும் பார்வை அது. மிருகங்களுக்கும் பைத்தியங்களுக்கும் மட்டுமே இருக்கும். இப்போது அவன் இரண்டுமாய் இருக்கிறான்.

முருகேசன், “உன் மனசுக்கு சிறகுகள் இருக்கிறதா? உன் மன தைரியத்தின் உச்சத்தைப் பார்க்காமல் நான் போவதில்லை” என்றான்.

முன்னால் இருந்த வீட்டின் முற்றத்தில் இருந்து பிளேடை எடுத்து வந்தான். முதலில் கீழுதட்டை இழுத்து அதன் நடுவில் கிழித்தான். பின் இரு கண்களின் அடியில். பின் நக இடுக்குகளில்.

வலியில் பற்கள் கிட்டித்துக்கொண்டன. என் கண்முன் எதுவும் தெரியவில்லை. உடல், உலகம், உணர்ச்சி எதுவும் தோன்றவில்லை. நானும் வலியும் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தோம். அழக்கூடாது என்று மனம் சொன்னது. அதையும் மீறி அழுதுகொண்டிருந்தேன்.

கூட்டத்தில் ஒருவன், “மாப்ள, செத்துரப் போறான்டா.. வா, போய் டீ குடிச்சுட்டு வருவோம்” என்றான்.

முருகேசன் என் காதருகே வந்தான். “போய்ட்டு பத்து நிமிஷத்துல வருவோம். மவனே உன்னப் பத்தி எல்லா விஷயத்தையும் சொல்ற.. உன்கிட்ட இப்ப மிச்சம் இருக்கறது உசுரு மட்டும்தான். ரொம்ப முரண்டு புடிச்சே, அதுவும் இருக்காது”

காவலுக்கு இருவரை நிறுத்திவிட்டு அவர்கள் சென்றனர். என் இடுப்பில் சாக்குத்துணியைக் கட்டியிருந்தார்கள்.

சுசி… உன் செவ்விதழ்களை சுவைத்த என் உதடுகளில் இப்போது செங்குருதி. உன்னை ஆரத்தழுவிய என் உடம்பில் இப்போது ஆறாப்புண்கள். இதோ, உன் பெயரை எனக்குள் மீண்டும் சொல்லிப்பார்க்கிறேன். சொன்னால் நம்புவாயா, இப்போதும் கூட எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன.

நீயில்லாமல் நானில்லை என்பது பொய்யுரையாய் இருக்கலாம். ஆனால் நீயில்லாமல் நான் நானாயில்லை என்பது மட்டும் உண்மை.

**********

[பகுதி 3]

ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் வராண்டாவின் தூணருகே நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

“இன்னைக்கு க்ளாஸஸ் எப்படி சுந்தர்?” என்றபடி தூணில் சாய்ந்தாய்.

“எப்பவும் போலத்தான். பயங்கர போர், லாஸ்ட் க்ளாஸல எந்திருக்கவே இல்லை.. அவ்ளோ தூக்கம்”

“அப்படியா, இப்ப எப்படி ஃப்ரெஷ்ஷா இருக்க?”

நீதான் என்று சொல்லநினைத்து பின் நிறுத்திக்கொண்டேன். “சம்ஹவ்” என்று தோள்களை உயர்த்திச் சிரித்தேன்.

“சுந்தர், உன்ன பத்தி சொல்லு” என்றாய்.

என்னைப் பற்றி சொல்கையில் அடுத்தவர்கள் முகம் பார்க்க நான் விரும்புவதில்லை. தலையை மெல்ல மறுதிசையில் திருப்பிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்.

“நான் கொஞ்சம் வித்தியாசமா வளர்ந்தேன் சுசி. அப்பா அம்மா லவ் மேரேஜ். வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதனால ரிலேஷன்ஸ் யாருமே இல்லை. எனக்கு பத்து வயசா இருக்கும்போது அப்பா அம்மா ரெண்டு பேருமே ஒரு ஏக்ஸிடண்ட்ல இறந்துட்டாங்க. அப்பக்கூட ரிலேஷன்ஸ் யாரும் வரல. அனாதையா நின்னுட்டு இருந்த என்னை அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் கருணை இல்லத்தில் சேர்த்து விட்டார். அங்கதான் நான் படிச்சது வளர்ந்தது எல்லாம்.”

இப்போது நீ தூணில் சாயாமல் என் முகம் பார்த்து நின்றிருந்தாய்.

“அப்பா அம்மா இல்லையே தவிர அந்தக் குறையே வந்ததில்ல சுசி. அங்க இருந்தவங்க எல்லாருமே ரொம்பப் பாசமா இருப்பாங்க. கடவுளும் அன்பும் தான் உலகம் சொல்லிக்குடுத்தாங்க. நல்லா படிக்க வச்சாங்க. இதோ, இப்ப காலேஜ் படிக்க வைக்கிறதுகூட அவங்கதான்.. ஆனா எனக்குத்தான் படிப்பு ஏறல. எனிவே, ஐ வாண்ட் டு செட்டில் இன் எ குட் ஜாப். தட்ஸ் இட்.”

நீ அசைவற்று நின்றதாய் உணர்ந்தேன். உன் மனதை படிக்க முடியவில்லை. அந்நேரம் உன் கண்களின் வார்த்தைகள் கூட எனக்குப் புரியவில்லை. உன்னை மிகவும் சஞ்சலப்படுத்தியதாய் உணர்ந்தேன்.

“சுசி, நான் ஒன்னு சொல்வேன்.. தப்பா நினச்சுக்க மாட்டியே?”

நீ எதுவும் பேசாமல் சரியென்பது போல் தலையை ஆட்டினாய். நான் என்ன சொல்லப்போகிறேன் என்கிற ஆவல் உன் கண்களில் தெரிந்தது.

“இல்ல வேண்டாம், கூச்சமா இருக்கு. இன்னொரு நாள் கேட்டுக்கறேன்”

“இல்ல.. பரவால்ல சுந்தர், சொல்லு” என்றாய்.

“அது… எப்படி எல்லார் முன்னாடியும் ஈசியா செக்ஸ பத்தி பேசினே?” என்றேன்.

கண்களை சுருக்கிக்கொண்டு உதட்டை பிதுக்கினாய். “இதுக்குத்தான் பில்டப் குடுத்தியா?”

“ம்ம்”

“அது சரி, நீ அத தப்பா நினைக்கிறயா?”

“ச்சே.. ச்சே… இவ்ளோ தைரியமா ஒரு பொண்ணு… அதுவும் நம்ம ஃப்ரெண்ட் பேசுதுன்னு சந்தோஷமா இருந்திச்சு.”

“நானும் கூட வித்தியாசமாத்தான் வளர்ந்தேன் சுந்தர். என்னோட அம்மா இறந்து பதிமூணு வருஷம் ஆச்சு. அப்பா திருச்சியில ஒன் ஆஃப் த மல்டிமில்லினியர். ஆனா அதற்கு அவரோட உழைப்பும் திறமையும் மட்டுமே காரணம்னு நெனச்சுட்டு இருக்கார். கம்பனியில தொழிலாளர்களை கொத்தடிமை மாதிரித்தான் வச்சிருப்பார். அவங்க பயந்து அடங்கி வேலை செய்தால்தான் அவருக்கும் தொழிலுக்கும் கௌரவம் என்பது நினைப்பது அவர் புத்தி”

உதட்டைச் சுழித்து பின் வெறுப்பாய் புன்னகைத்தாய்.

“எனக்கு ஆறு வயசா இருக்கும்போது ஒரு நாள் ஆபிஸுக்கு கூட்டிட்டுப் போனார். அன்னைக்கு சரஸ்வதி பூஜை. சில தொழிலாளர்கள் ஏதோ தப்பு செஞ்சுட்டாங்கன்னு சொல்லி பலநூறு தொழிலாளிகளுக்கு மத்தியில் அவர்கள் சட்டை பனியனை கழட்டச்சொன்னார். திரும்பி நிக்கச்சொல்லி பெல்ட்டை எடுத்தார். திரும்பினால் கொன்றுவிடுவேன் என்று எச்சரித்துவிட்டு அவர்கள் முதுகில் பெல்ட்டால் அடிக்க ஆரம்பித்தார். அரை மணி நேரத்திற்கும் மேல் இருக்கும். பின்னர் எல்லா தொழிலாளிகளையும் பார்த்து… இதான் முதுகுத்தோலை உரிக்கறது, உங்கள்ல எவன் என்ன தப்பு பண்ணினாலும் இதான் கதி என்றார்”

நான் அமைதியாய் கவனித்துக்கொண்டிருந்தேன்.

“ம்ம்.. இன்னைக்கு வரை இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு. அப்பா மேல இருக்கற வெறுப்புனாலயோ என்னவோ கூட… எனக்கு தொழிலாளர்கள் நலனில் அக்கறை வந்தது. நினைவு தெரிஞ்சப்போ அதுக்கு பல பேர் இருக்குன்னு புரிஞ்சுது. ஏங்கல்ஸ், நிக்கோலஸ் புக்காரின் இவங்கள பத்தியெல்லாம் வருஷக்கணக்கா புக்ஸ் படிச்சேன். புத்தகங்கள்தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம். இன்ஃபேக்ட் எனக்கு இது ரொம்பப் புடிச்சிருக்கு. ஐ வாண்ட் டு ஸ்டேண்ட் அவுட் ஆஃப் த க்ரௌட்.”

நான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுசி என்னும் இரண்டெழுத்து வார்த்தைக்குள் இத்தனை விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

“அய்யய்யோ, சாரி… சாரி… ரொம்ப போர் அடிசசுட்டேனா..” என்றாய்.

“நோ.. நோ… நாட் அட் ஆல்”

“அப்ப ஓ.கே. ம்ம்ம்… நீ என்ன கேட்ட? ஆ, என்னோட செக்ஸ் டாக் பத்தித்தானே. இதுவும் ஆதங்கம்தாம்பா. செக்ஸ் எஜுகேஷன் வரவிடாம நம்ம அரசியல்வாதிங்க வாதிக்கறாங்களே… அந்த ஆதங்கம். இப்பப்பாரு, நீயே செக்ஸ பத்தி ஓபனா பேச கூச்சப்படற.. அவங்க சுயநல அரசியலுக்கு நம்மல இப்படி ஆக்கிட்டாங்க”

“அய்யய்யோ, எனக்கு உன்னோட அளவுக்கு புத்தியோ பகுத்தறிவோ கிடையாதும்மா”

சிரித்தாய்.

“ஆனா ஒருநாள் கூட நீ செக்ஸியா ட்ரெஸ் பண்றதில்லையே, ஏன்?” என்றேன்.

“ஏன்… இந்த ட்ரெஸ் செக்ஸியா இல்லியா?”

“ம்ஹூம்… ”

“அப்ப எந்த ட்ரெஸ் செக்ஸியா இருக்கும்னு நீயே சொல்லு, நான் அத போட்டுட்டு வர்றேன்”

“ம்ம்… பிகினி” என்று சந்தேகமாய் பார்த்தேன்.

“என்னோட செருப்பு சைஸ் ஏழு” என்றாய். சிறிது நேரம் அமைதியாய் சிரித்துக்கொண்டே நடந்தோம்.

“சுந்தர், இப்ப நான் ஒன்னு கேட்பேன். நீ உண்மைய சொல்லணும், ஓ.கே?”

“ஓ.கே”

“உனக்கு நான் இப்ப பேசினதெல்லாம் இம்ப்ராக்டிகலா தெரியுதா? என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க, அதான் கேட்டேன்”

நான் அமைதியாக இருந்தேன். பின், “சுசி, ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா.. ” என்றேன்.

சரி என்றாய். ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு புல்வெளிக்குள் சென்று அமர்ந்தோம். சூரியன் செவ்வுருண்டையாய் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது. நம்மை சுற்றிலும் பனித்துளிகள் மொட்டுவிட்டன. மாலை நேரத்து மயக்கம் நிச்சயம் பரவசமானதுதான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடிக்கும்வரை அமைதியாய் இருந்தோம். பின் நிமிர்ந்து உன்னைப் பார்த்தேன்.

“சுசி, இன்னைக்கு காலைல இருந்து உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு தயங்கிகிட்டு இருந்தேன். கண்ணாடி முன்னாடி கூட நாலஞ்சு வாட்டி சொல்லிப் பார்த்தேன். அப்ப எனக்கு ரொம்ப நடுக்கமா இருந்துச்சு. ஆனா இப்ப ரொம்பத் தெளிவா இருக்கேன். சொல்லட்டுமா?”

சொல் என்றன உன் கண்கள்.

“மனம் நெடுக உள்ளதை குறுகிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்… நான் உன்னைக் காதலிக்கிறேன்”. சொல்லும் போது இல்லாத பயமும் எதிர்பார்ப்பும் சொல்லிமுடித்ததும் தொற்றிக் கொண்டது. தலை குனிந்திருந்தாய். நீ எதுவும் பேச வேண்டிய அவசியம் கூட இல்லை. இதோ, நிமிர்ந்து என்னைப் பார்த்தாலே போதும். உன் கண்கள் எனக்கு பதில் சொல்லிவிடும். நிமிர்ந்து பார் சுசி, நிமிர்ந்து பார்.

உன் கண்கள் நிமிர்ந்தன. உதடுகள் விரிந்தன. உன் வெட்கம் எனக்கு இறக்கைகள் கொடுத்தது. செக்ஸைப் பற்றி பேசுகையில் வெளிப்படையாகவும் காதலைச் சொல்கையில் மௌனமாகவும் இருக்கிறாய்.. சுசி, பலநூறு அழகுபாவனைகளின் வண்ணத்தொகுப்பு நீ.

உன் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. நான் தொடர்ந்தேன்.

“சுசி, உனக்கு ஒன்று தெரியுமா? நான் முதன்முதலாய் பார்த்தபோது… நீ ஒரு ஓவியமாய் கவிதையாய்த் தெரிந்தாய். நாளாக நாளாக, நீ ஓவியக் கண்காட்சியாய் கவிதைத் தொகுப்பாய்த் தெரிய ஆரம்பித்தாய். ஆனால் இன்றுதான் புரிகிறது. நீ ஓவியன். கவிஞன். உன்னால் ஆயிரமாயிரம் கண்காட்சிகளையும் தொகுப்புகளையும் படைக்க முடியும். உன்னை என் அங்கமாய் அல்ல, அண்டமாய் நினைக்கிறேன்.”

நீ அமைதியாகவே இருந்தாய். உன் மௌனத்தின் காதலன்தான் நான். ஆனாலும் உன் உணர்ச்சிகளை வார்த்தைகளாய் கேட்க வேண்டுமென்ற பரிதவிப்புடன் இருந்தேன்.

“சுசி, ப்ளீஸ் சே சம்திங். ஹவ் டு யூ ஃபீல் நவ்?”

புல்மேல் இருக்கும் பனித்துளி பொங்கி நிற்பது போல உன் கண்ணில் நீர் தொகுத்து நின்றது.

“ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ” என்றாய். கண்ணீர் உடைந்து உன் கன்னத்தில் ஒருவரிக் கோடாய் நின்றது.

“முருகேசு, இதுக்கு மேல அடிச்சா வீணா போலீஸ் கேஸ் ஆயிடும்.. வேண்டாம்” என்றார் ஒரு பெரியவர்.

முருகேசன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். “டேய், இவன தூக்கி வேன்ல போட்டுட்டு நம்ம தோட்டத்து குடோனுக்கு வந்துடுங்க” என்றான். அவன் ஆட்கள் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ஓடினார்கள்.

“முருகேசு… ஏன் இந்த விஷயத்தை பெருசு பண்றே… பேசாம போலீஸ்ல விட்ரலாம்ல” என்றார் அந்தப் பெரியவர்.

“புரியாம பேசாதீங்க மாமா.. அந்த நெக்லஸ் பதிமூணு பவுன். முழுசா ரெண்டு லட்சம். நேத்துத்தான் பெரியகடை வீதியில் வாங்கி நம்ம ஆடிட்டருக்கு குடுத்தேன். அத அடிக்கப் பாத்திருக்கான். இவன் ரொம்ப நாளா நோட்டம் விடறான்னு நினைக்கிறேன். என்ன சங்கதின்னு தெரியாம விடறதா இல்ல”

மாருதி வேன் வண்டி வந்த நின்றது. என்னை அவிழ்த்துவிட்டார்கள். இடுப்புக்கயிறு இளகியதும் ரோட்டில் முழங்காலிட்டு அமர்ந்தேன். வண்டியின் பின் இருக்கையைத் திறந்து என்னை தள்ளிவிட்டார்கள்.  முன் இருக்கைக்கும் பின் இருக்கைக்கும் நடுவில் சென்று விழுந்தேன். அவர்களும் ஏறிக் கொண்டார்கள்.

முருகேசன் டிரைவர் சீட்டருகே வந்தான். “இவன கட்டி வைங்க. சாப்பாடு மருந்து எதுவும் குடுக்க வேண்டாம். தண்ணி மட்டும் கேட்டான்னா குடுங்க. நான் பத்து மணிக்கு முனிசிபாலிடி வரைக்கும் போகணும். போய்ட்டு மதியமா வர்றேன். தப்பிக்க விட்டீங்கன்னா.. தாயளி அத்தன பேர் கையையும் வெட்டிருவேன்”

வண்டி புறப்பட்டது. இந்த உலகத்து மனிதர்களையெல்லாம் சில காலமாவது கருணை இல்லத்தில் இருக்கச் செய்யவேண்டும் என்று தோன்றியது. முருகேசனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அதுவரைக்கும் நல்லது. நான் எதுவும் பேசப்போவதில்லை.

அன்று நீ எனக்கு வலப்பக்கம் வந்தமர்ந்து தோள்களில் சாய்ந்துகொண்டாய். உன் முகத்தை உயர்த்தி கண்களைப் பார்த்தேன். “சுசி.. உன் கண்களில் காந்தம் இருப்பது உனக்குத் தெரியுமா?”

நீ கண்களை மெல்ல மூடினாய். உன் இதழ்களின் படபடப்பை என்னால் காண முடிந்தது.

என் இரு கைகளையும் உயர்த்தி உன் முகத்தை ஏந்திக்கொண்டேன். சின்னஞ்சிறு கிளியை கைகளுக்குள் வைத்துக்கொள்வதைப் போல. என் விரல்கள் உன் கன்னங்களின் மென்மையை வருடிக்கொண்டிருந்தது. மெல்ல உன் இதழ் அருகே என்னைக் கொண்டுசென்றேன்.

அருகில் செல்லச்செல்ல உன் சுவாசத்தை கன்னத்தில் உணர்ந்தேன். உன் வாசத்தை உடல்முழுவதும் உணர்ந்தேன்.

உதடுகளை உதடுகளால் மெல்ல ஒத்தி எடுத்தேன். உன் உலர்ந்த இதழ்களில் இருந்தும் என்னால் ஈரத்தை உணரமுடிந்தது. முதல் முத்தம். இதழ்களின் உரசல், இதயத்தின் உரசலா… முத்தம், நிச்சயம் காதலுக்கான அடையாளம். காதலர்களுக்கான அடையாளம்.

நீ இன்னும் கண்களைத் திறக்கவில்லை. “சுசி” என்றேன்.

“கிஸ் மீ எகைன்” என்றாய், கண்களைத் திறக்காமலேயே.

**********

[பகுதி 4]

சுசி நீட்டிய புத்தகத்தை வாங்கி அதன் தலைப்பைப் படித்தேன்: “பின் தொடரும் தொழிலாளியின் குரல்” – சுசீந்தர்

“என்ன சுசி இது?”

“ம்ம்.. ஒரு வார இதழுக்குக் கட்டுரை எழுதிட்டிருக்கேன்பா… ” என்றாய். உன் ஒவ்வொரு வாக்கியங்களின் முடிவும் என்மீதான உன் காதலை வெளிப்படுத்துகிறது.

“ஹேய்.. இவ்ளோ சீரியஸான ஆளா நீ?” புருவம் நெருக்கி உன்னைப் பார்த்தேன்.

“பின்ன.. பொழுதுபோக்குக்காக சமூகசேவை பண்ற பணக்காரின்னு என்னை நினைச்சியா?” என் முகத்தில் சந்தேகத்துக்கான கோடுகளை நீ கண்டிருக்கவேண்டும்.

“அப்படி இல்ல.. சரி, எல்லாரும் கேட்கற மாதிரி சில கேள்விகள் கேட்கட்டுமா?”

“ஓ.கே!”

“நீங்க ஒருசில பேர் சேர்ந்து நாட்டை திருத்திட முடியும்னு நினைக்கறியா?”

“மே பி. ஒருத்தனை மாத்த முடிஞ்சா கூட, அது நூறுபேருக்கு பாடமா இருக்கும். கொள்கைகள் பரவும். எங்கள மாதிரி இன்னும் சில போராளிகள் உருவாங்க. சுருக்கமா சொல்லனும்னா, நாங்க ‘ஃபயூஸ்’ மாதிரி”

“ஆனா.. புரட்சின்னு சொல்லிட்டு தீவிரவாதிகள் மாதிரி பொதுமக்களை பயமுறுத்தி பீதியடைய வைக்கறீங்கன்னு சொல்றாங்களே…”

“ச்சே.. ச்சே… முதலாளி வர்க்கம் பண்ற வன்முறையோட கம்பேர் பண்ணினா எங்களோடது ஒண்ணுமே இல்ல. அவங்க வன்முறை மீடியா என்டர்டெய்ன்மென்ட்ங்கற பேர்ல கண்ணுக்குத் தெரியாத கிருமியா வளருது. வலியில இருக்கறவன சாராயம் குடுத்து சந்தோஷப்படுத்தற மாதிரி சினிமா, இலவசம், மானாட மயிலாட,.. இப்படியெல்லாம் தற்காலிக சொகுசு வலையில சிக்க வச்சு பொதுமக்களை கருத்துக்குருடனா சிந்தனைக்குருடனா ஆக்கிட்டு வர்றாங்க.”

“நீங்க போராடறதா சொல்ற தொழிலாளிகளே உங்க பக்கம் இல்லையே…” என்றேன்.

“கூலியாட்கள் இப்பெல்லாம் மூணு வகை: தினசரிக் கூலி, மாதக் கூலி, கார்ப்பரேட் கூலி. கடைசி வகைக்கூலி ஏமாளின்னாலும் மத்தவங்கள விட பணம் அதிகமா வர்றதுனால கம்முனு இருக்கறான். மத்த ரெண்டு வகைக் கூலிகளுக்கு எலக்ஷன்ல பணம், இலவச டிவி இப்படியெல்லாம் குடுத்து அமுக்கிடறாங்க. நாங்க போராடறது ஒரு மாற்றத்துக்காக…”

இடையில் நிறுத்தி, “என்ன மாதிரி மாற்றம்?” என்றேன்.

“ஏற்றத்தாழ்வு அதிகம் இல்லாத ஒரு சமுதாயம்… அதுதான் நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றம். கொஞ்சம் யோசிச்சுப்பார், முதலாளிகளோட பிரச்சனைக்காக நாங்க மாடு மாதிரி உழைக்கிறோம். அந்தப் பிரச்சனை முடிஞ்சுதுன்னா அடுத்த பிரச்சனைக்குத்தானே முதலாளி வர்க்கம் போகுது? நாங்க உடலை வருத்தி உழைச்சது… பைத்தியக்காரத்தனமா? இந்த சமுதாயம், அரசாங்கம் எல்லாமே முதலாளியைத்தானே உயர்வா பார்க்குது? இதெல்லாம் என்ன நியாயம்?”

“அப்படின்னா.. நீங்கெல்லாம் புரட்சி பண்ணி தமிழ்நாட்டை மாத்திரலாம்னு பாக்கறீங்க? ரஷ்யாவுக்கு லெனின், க்யூபாவுக்கு காஸ்ட்ரோ மாதிரி, இல்ல?” என்று சற்று கிண்டலான தொனியிலேயே கேட்டேன்.

“ஐ டோண்ட் நோ. அட்லீஸ்ட், நாங்க ஒன்னும் பார்லயோ சினிமா தியேட்டர்லயோ பேசலியே. சமுதாய நிகழ்வுகளைப் பற்றி நிறைய படிக்கிறோம், நிறைய எழுதுகிறோம். விழிப்புணர்வு ஏற்படனும்னு உண்மையா உழைக்கிறோம்”

உன் கண்களில் கோபமோ வன்முறையோ ஏமாற்றமோ தெரியவில்லை. கருத்துக்களை முன்வைக்கும் நோக்கம் மட்டுமே தெரிந்தது. பெண்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று தெரியும். ஆனால் இப்படிப் பேசும் பெண்களும் உண்டென அன்றுதான் கண்டுகொண்டேன்.

“சுசி… உன்ன டீஸ் பண்ணினதா நினைக்க வேண்டாம், நீ பேசப்பேச உன்ன இன்னும் பேசவைக்கணும்னு தோனிச்சு”

“நோ நோ… ஐயாம் க்ளேட் யூ ஆஸ்க்ட்” என்றாய்.

“மே பி வீ ஆர் டூ சிரியஸ்.. ஷல் வீ  ஹேவ் சம் ஃபன்?

“ஷ்யூர்…” என்றாய், புன்னகை மாறாமல்.

“ம்ம்ம்… சுசீந்தர்… புனைப்பெயர் நல்லா இருக்கு, ஆனா என்னைக் கேட்காம எப்படி நீ என் பேரை யூஸ் பண்ணலாம்”

“டேய்… உன்ன கேட்காம நான் உன்னையே யூஸ் பண்ணுவேன், உன் பேரை பண்ணக்கூடாதா?”

“ஓய்.. என்ன டபுள் மீனிங்ல பேசறியா?”

“அடேங்கப்பா… கண்டுபுடுச்சிட்டியே!”

கண்களை சிமிட்டினேன். அதன் அர்த்தம் உனக்குப் புரிந்திருக்க வேண்டும். “சரி அத விடு.. இந்தக் கட்டுரையைப் படிச்சுப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு நாளைக்கு சொல்லு” என்றாய்.

சரி என்றேன். என் தலைமுடியைக் கோதிவிட்டாய். என் வலதுகையை எடுத்து உன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாய். கிளம்புகிறாய் என்று அர்த்தம். ஒரு வருடக்காதலில் உன் வார்த்தைகளை விட கண்களின் பாஷையை அதிகம் புரிந்து கொண்டிருந்தேன்.

இரண்டு அடி நடந்த நீ, திரும்பிப் பார்த்து “யூ ஆர் எ ஜென்டில்மேன் சுந்தர். எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாய். உதடுகளைக் குவித்துக் காற்றில் முத்தமிட்டாய்.

எனக்கு உன் கன்னத்தில் முத்தமிட வேண்டும் போலிருந்தது. முத்தம் அன்பின் பரிமாற்றம். அன்பைக் கூட நம்நாட்டில் பப்ளிக்காக பரிமாறிக் கொள்ளக்கூடாது. அது கலாச்சார சமுதாயச் சீரழிவு.

அன்றிரவு உன் கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன். எத்தனை முறை படித்தேன் என்று நினைவில்லை. என் சுசி அழகி என்பது எனக்குத் தெரியும். பேரழகி என்பது அன்றுதான் புரிந்தது.

ஒரு ஓலைக்குடிசை அது. உடம்பில் வெயிலின் சூட்டை உணர்ந்தேன்.  கால்கள் இரண்டும் பிணைக்கப்பட்டிருந்தன. குடிசையைத் தாங்கிக்கொண்டிருந்த மூங்கில் ஒன்றில் கைகளை பின்னிழுத்துக் கட்டியிருந்தார்கள். வாயிலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. நான் இன்னும் மயங்கவில்லை என்பது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. வெளியே முருகேசனின் ஆட்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

வாயில் பீடியுடன் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ஒருவன் உள்ளே நுழைந்தான். “தம்பி, எந்த ஊரு?”

நாக்கு வறண்டு போயிருந்தது. “தண்ணி…” என்றேன். காலையில் இருந்து இப்போதுதான் வாயைத் திறந்து பேசி இருக்கிறேன். குரல் தொண்டை இடுக்குகளில் சிக்கிக் க்ரீச்சிட்டது. அது தாகமாய்க் கூட இருக்கலாம்.

“பார்றா… துரை பேசிறாரு” என்றான்.

மீண்டும் “தண்ணி…” என்றேன்.

“இன்னும் பேசுவ கண்ணு. கொஞ்சம் கொஞ்சமா.. உன் ஜாதகம் முழுசா வெளில வரும்.”

நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். எகத்தாளமாய் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

“என்னடா முறைக்கற?” என்றான். அவன் கண்களில் காட்டுப்பூனையின் மிருகத்தனம் தெரிந்தது. “நீ இப்ப எங்க இருக்க தெரியுமா? கள்ளிமந்தை… ஈரோட்டுல இருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி ஒரு பொட்டல் காடு. பீடி வாங்கனும்னா கூட நாலு கிலோமீட்டர் போகணும். சும்மா எல்லாம் இங்க யாரையும் கூட்டிட்டு வரமாட்டாங்க. பார்த்தா பாதி உசுருதான் இருக்கு… நீ என்ன முறைக்கற?”

அவன் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது. சிறுகச்சிறுக சித்ரவதை செய்து கொல்லும் வெறி.

குடிசைக்கு வெளியே கார் கதவு படீரென சாத்தும் ஓசை கேட்டது. ஓலை இடுக்குகளில் வெளியே எட்டிப் பார்த்தேன். காரின் முன் கட்சிக்கொடி பறந்துகொண்டிருந்தது. காவி நிறத்தில்.

முருகேசன் உள்ளே வந்தான். வெள்ளை நிற சட்டையும் கறை வேட்டியும் அணிந்திருந்தான். தோளில் வர்ணத் துண்டு. எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. நேற்றும் இதே போன்ற உடையில்தான் இருந்தான்.

அருகில் இருந்தவனிடம் சென்று, “என்ன பழனி, வீட்ல எல்லாம் சவுக்கியமா?” என்றபடி கைக்கடிகாரத்தைக் கழட்டிக்கொடுத்தான். மடித்துக் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு “சவுக்கியங்க” என்றவன் பவ்யமாக அதை வாங்கி ஒரு மூட்டையின் மேல் வைத்தான்.

“எதாச்சும் பேசுனானா?”

“எமப்பயலா இருக்கானுங்கய்யா.. எதுவுமே பேசலீங்க”

“கை வச்சியா?” என்ற முருகேசன் பழனியை சந்தேகமாய்ப் பார்த்தான்.

“நான் தொடவே இல்லீங்க. ஆளுகள வேணும்னா கேளுங்க”

மெல்ல நடந்து என்னருகில் வந்தவன், மீண்டும் “எதுவுமே பேசலியா?” என்றான்.

“தண்ணி தண்ணின்னு மட்டும் பெனாத்திக்கிட்டே இருந்தானுங்க”

முருகேசன் ஆவேசமாய்க் கையை ஓங்கினான். “கழுசடைகளா.. தண்ணி கேட்டா ஒரு வாய் குடுன்னு தானே சொன்னேன். செத்தான்னா அப்புறம் பொணத்தச் சுரண்டி எங்கிருந்து வர்றன்னு கேப்பியா? போய் ஒரு டம்ளர்ல தண்ணி எடுத்துட்டு வாடா..”

பழனி வாசலை நோக்கி ஓடினான். நானும் முருகேசனும் மட்டும் நின்றிருந்தோம். “அப்புறம் தம்பி.. எதுவுமே பேசமாட்டீங்களோ?”

“இந்தா நின்னானே பழனி, ஆள கொல்றதுக்குன்னே அவன இங்க வச்சிருக்கேன். பாவம்னு பாத்தா ரொம்ப லொள்ளு பண்றியே? உண்மைய சொல்லிட்டா உசுரோட விடுவேம். இல்லைன்னா கொஞ்சம் கொஞ்சமா சாவணும். இவ்ளோதான் விஷயம், நீயே முடிவு பண்ணிக்க”

எனக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. “தண்ணி…” என்றேன். பின்னால் நின்றிருந்த பழனியிடம் டம்ளரை வாங்கி என் முகத்தின் முன் நீட்டி “குடி” என்றான். நான் தலையைக் கீழே கொண்டுபோய் டம்ளருக்குள் நாக்கை நுழைத்தேன். சரேலென்று டம்ளரை இழுத்துக்கொண்டான். சிரித்தான்.

“தம்பி… நீ இப்ப உன் பேரை சொன்னேன்னு வையி, இந்த டம்ளர்ல இருக்குற தண்ணிய உனக்குத் தர்றேன். அதோட, அரைமணி நேரம் உன்ன எதுவும் பண்ணமாட்டேன். அப்படி சொல்லலைன்னு வையி…” என்றவன் பின்னால் திரும்பிப் பார்த்து கீழேயிருந்த ஒரு இரும்புக்கம்பியை எடுத்தான்.

“தோ.. இந்த பழனி பயகிட்ட சொல்லி இந்தக்கம்பிய கண்ட எடத்துல சொருகச்சொல்லுவேன். அதுல ஒரு விஷேசம் என்னன்னா, உசுரும் போகாது.. மயக்கமும் வராது. வெறும் வலி மட்டும்தான். சும்மா சொல்லலப்பா.. போன மாசம் இப்படி பண்ணினதுல ஒருத்தன் பொண்டாட்டி பிரா கலர் எல்லாம் சொன்னான்னா பாத்துக்க…”

கம்பியை நீவிக்கொண்டிருந்தவன் வயிற்றில் அழுத்தியபடி, “உனக்குக் கல்யாணம் ஆய்டுச்சா?” என்றான்.

தண்ணீர் டம்ளரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் என் முகம் அஷ்டகோணலாய்த் தெரிந்தது. அங்கங்கே திட்டுத்திட்டாய் வீங்கியிருந்தது. உதடுகள் கிழிந்து கன்னங்கரேலென தொங்கிக் கொண்டிருந்தது. பார்க்கச் சகிக்காமல் திரும்பினேன்.

முருகேசன் புரிந்துகொண்டவனாய், “பேரு… பேரு…” என கண்களைச் சிமிட்டினான்.

“சுசீந்தர்”

**********

[பகுதி 5]

மார்ச் 5. மாலை ஐந்து மணி.

சுசியின் வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கிறேன். வீட்டின் பரப்பளவில் ஒரு சின்ன கிராமமே உருவாக்கலாம். ஆனாலும் உள்ளே செல்லும்போது சிறைக்குள் செல்லும் உணர்வுதான் மேலோங்கியிருக்கும்.

என் குலம் கோத்திரம் எதுவும் நானறியேன். நீ சோஷலிஸம் பேசும் ஐயங்கார்… வித்தியாசமான, அவசியமான கலவை.

உன் வீட்டருகே வந்ததும் கடிகாரத்தைப் பார்த்தேன். ஐந்தைக் கடந்திருந்தது. எப்போதும் நீ வீட்டிற்கு வெளியே காத்திருந்து என்னை அழைத்துச் செல்வாய். அன்று உன்னைக் காணவில்லை. தயக்கத்துடன் வாசலை நோக்கி மெல்ல நடந்தேன்.

கேட்டில் நின்றுகொண்டிருந்த வாட்ச்மேன் ஓடிவந்தார். “சார், நீங்கதானே சுந்தர்?”

“ஆமா”

“நீங்க வந்தா உள்ள வரச்சொல்லி சின்னம்மா சொன்னாங்க”

“அவங்க வரலியா?”

“இல்லைங்க”

கேட்டைத் திறந்ததும் உள்ளே சென்றேன். ஆளரவம் இல்லை. அங்கு நிலவிய அமைதி மயானத்தை நினைவுபடுத்தியது. மனம் படபடத்தது. நேரே அவள் அறைக்குச் சென்று கதவைத் தட்டி, “சுசி…” என்றழைத்தேன்.

மெல்லிய காலடி ஓசை கேட்டது. சுசியேதான். அவள் காலடி ஓசையை நான் துல்லியமாய் அறிவேன். கதவைத் திறந்து, “கம் இன்” என்றாய். உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தாய்.

சுசி, அன்று தான் உன்னை முதன்முதலில் சேலையில் பார்த்தேன். நீயே கட்டியிருக்கவேண்டும். சேலை ஒழுங்கில்லாமல் இருந்தது. ஆனால், அதுவே உன் அழகைக் கூட்டியது. நீ அணிகலன்கள் அணிந்து நான் பார்த்ததும் அன்றே. ஊதா நிறத்தில் கம்மல் வளையல்கள் அணிந்திருந்தாய். கண்ணிமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நீ என் எண்ணங்களை படித்துக்கொண்டிருந்தாய் போலும். “யூ ஆர் ஸ்டேரிங் மீ” என்றாய்.

சட்டென நினைவுக்கு வந்தவனாய், “சாரி” என்றேன்.

“நோ நோ… ஐ லைக் இட். இட் வாஸ் மேன்லி”

“ஹேப்பி பர்த்டே, மிஸ் ட்வென்டி” – கண்களைச் சிமிட்டினேன்.

“தேங்க் யூ” – நீ சட்டென என்னை அணைத்துக் கொண்டாய்.

மென்மையான அரவணைப்பு என்றாலும் எனக்குள் அது பலநூறு மாற்றங்களைக் கொடுத்தது. உன் வாசத்தை நுகர்ந்தேன். கண்கள் உள்ளிழுத்துக்கொண்டன.

கூந்தலை அவிழ்த்து விட்டு மல்லிகைப் பூ சூடியிருந்தாய். மெல்லிய நுனிப்புல் போன்ற உன் கூந்தல்முடி என் முகத்தில் பட்டது. அதில் ஈரம் இருப்பதை நான் உணர்ந்தேன். அச்சத்தில் உடம்பு லேசாக உதறியது.

என் அகஎழுச்சிகளை நீ உணர்ந்துகொண்டவளாய், “எனி ப்ராப்ளம்?” என்றாய். உன் கைகள் இன்னும் என் தோள்களை தழுவியே இருந்தன.

“நோ.. ” என்று ஆரம்பிக்க என்னை நானே அந்நியமாய் உணர்ந்தேன். “யெஸ்…” என்றேன்.

“ஐ லவ் மை ஸ்வீட் பேபி” என்று என் தலைமுடியைக் கோதிவிட்டாய். உன் அங்கங்கள் என் கிளர்ச்சியைத் தூண்டிக்கொண்டிருந்தன.

மெல்ல மெல்ல என்னை நான் இழந்துகொண்டிருந்தேன். சுசி, நீ வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறாயோ என்று தோன்றியது.

இப்போது நீ என் முகம் பார்த்து நின்றிருந்தாய். உன் உதடுகளும் என் உதடுகளும் எட்டு மில்லிமீட்டர் இடைவெளியில் இருந்தன. நான் முன்னே சென்றேனா நீ முன்னே வந்தாயா என்று தெரியவில்லை. இதழ்களின் இடைவெளி பூஜ்யமானது. அதை நான் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்ததை அப்போதுதான் அறிந்தேன்.

அச்சத்தில் விலகினேன். “சுசி, ஐயாம் சாரி. ஐ திங்க் ஐ ஷுட் கோ நௌ”

“இட்ஸ் ஓ.கே… இட்ஸ் ஓ.கே… ஐ ஜஸ்ட் ஃபெல்ட் லைக் கிஸ்ஸிங் யூ”

அங்கு நடப்பது கனவு போலிருந்தது. கனவு முடிந்துவிடக் கூடாதென்ற மனநிலையில் இருந்தேன். மெல்ல நடந்து அறையின் வராண்டாவிற்குச் சென்று ஜன்னல் திரையை விலக்கினேன். வானத்தை கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. எனக்கு உன் கூந்தல் ஞாபகத்திற்கு வந்தது. மீண்டும் உன்னை நுகரவேண்டும் போலிருந்தது. எண்ணத்தை திசை திருப்ப முயற்சித்தேன்.

“சுசி, கேக் கட் பண்ணலாமா”

“ஷ்யூர்” – கிஃப்ட் பேக்கை பிரித்து உள்ளிருந்த ஸ்ட்ராபெர்ரி கேக்கை வெளியில் எடுத்தாய். எனக்கு உன் இதழ்கள் ஞாபகத்திற்கு வந்தன. ச்சே… என்ன இது, என் மனம் ஏன் கண்டபடி அலைகிறது?

“சுந்தர், உனக்குத் தெரியுமா… இன்றுதான் ரோசா லக்ஸம்பர்குக்கும் பிறந்தநாள்”

“ஓ…”

“ஷி இஸ் எ லெஜன்ட். ஷி இஸ் மை இன்ஸ்பிரேஷன்.”

“யாரு அவங்க?”

“ம்ம்… கூகிள் இட்”. எழுந்து சென்று திரைகளை மூடி லைட் சுவிட்ச்சை அணைத்தாய். அச்சம் அதிகமானது. “சுசி, ரொம்ப இருட்டா இருக்கு. லைட்ஸ் இருக்கட்டுமே”

“மெழுகுவர்த்தி ஏத்தினா சரியாயிடும்பா…” உன் குரல் இருட்டில் கலந்திருந்தது.

“யாராவது வந்துட்டாங்கன்னா?” என்றேன். அந்தக் கேள்வியில் உள்ளர்த்தங்கள் இருந்ததை நான் அறிவேன்.

“யாரும் வரமாட்டாங்க. அப்பா பெங்களூர் போயிருக்கார். இருந்தாக்கூட என்னோட ரூமுக்கு வரமாட்டார். ரூம்ல ஏசி இல்ல.”

நான் கேக் அருகே சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். எழுந்தால் மனம் அலைபாயும்.

திடீரென, “ஐ வாண்ட் எம்.எஸ்.வி. நௌ” என்றாய். கட்டில் அருகே சென்று ம்யூசிக் சிஸ்டத்தில் சி.டியை நுழைத்தாய். வால்யூம் சன்னமாய் காதுகளை வருடிச் செல்லும் அளவில் மட்டும் இருந்தது.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும் …

இசையை ஹம்மிங் செய்து கொண்டே என்னருகே வந்தாய். இருவரும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியாய் கேக்கினுள் சொருகினோம். கடைசி மெழுகுவர்த்தியை நான் செர்ரிப்பழத்தின் அருகே வைத்தேன்.

நீ மெழுகுவர்த்திகளைப் பற்றவைத்ததும் அவ்வெளிச்சத்தில் உன் முகம் பிரகாசமாய்த் தெரிந்தது. வெண்ணிறமான வட்ட முகம். என்னைப் பார்த்துச் சிரித்தாய்.

சுசி, என் மனதை உன்னால் உணரமுடியும். நீ அவ்வளவு கவனமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆனால், இக்கணம் எனக்குள் என்ன தோன்றுகிறது என்பதை நீ அறிவாயா?

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காண வேண்டும் …

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
நானாக வேண்டும் …

உன் மூச்சுக்காற்று இசையுடன் கலந்தது போலிருந்தது. மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாய். உன் கண்கள் விரிந்து கன்னங்கள் மெல்ல உப்பின.

கேக்கை வெட்டியதும் முதல் துண்டை எனக்குத் தந்தாய். நான் வாங்கி அதை உனக்கு ஊட்டினேன். அந்நேரம் உன் கண்கள் என்னை விழுங்குவதைப் போல உணர்ந்தேன். என் இத்தனை நேர உணர்ச்சிகளையும் உன் ஒற்றைப் பார்வை காண்பித்தது. சுசி, என்னிடமிருந்து உன் மனதையும் மறைக்க முடியாது.

பாதி கேக்கை வாயில் வைத்தபடி என்னருகே வந்தாய். என் பாகத்தை நான் உண்ண ஆரம்பித்தேன். கேக் முடிந்திருந்தது. ஆனாலும் நாம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம்.

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும் …

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
பசியாற வேண்டும் …

என்னைக் கீழே தள்ளி என் மார்புப் பகுதியை முத்தமிட்டாய். இவ்வளவு அபாயகரமாய் என்றைக்கும் நீ சென்றதில்லை.

“இந்த ட்ரெஸ் செக்ஸியா இருக்கா…” என்றாய். உன் முந்தானை அவிழ்ந்து என் சட்டை மேல் படர்ந்திருந்தது.

எதுவும் பேசாமல் உன்னை இறுகக் கட்டிக்கொண்டேன். உன் அக எழுச்சிகளை எனக்குள் திணிப்பவனைப் போல, உன்னையே எனக்குள் அடக்கிக்கொள்ள முயல்பவனைப் போல பற்றிக்கொண்டேன். உன்னைத் தூக்கிக் கொண்டு இன்னொரு உலகத்திற்கு ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது.

என் காதருகே வந்து, “நௌ ஐ ஃபீல் லைக் டூயிங் இட்” என்று கிசுகிசுத்தாய்.

மென்மை மென்மை என்றது உன் கழுத்து. உன் முகத்திலும் கன்னங்களிலும் கழுத்திலும் வெறி கொண்டவனைப் போல மாறி மாறி முத்தமிட்டேன்.

முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம்.

தலைமுடியைப் பின்னிழுத்து முகம் பார்த்தாய். “டேய்… நான் எங்கேயும் ஓடிப் போகமாட்டேன்… மெதுவா…”

சுசி, அந்நேரம் நான் தலையாட்டும் பொம்மை போலவே இருந்தேன். நீயே என்னை வழிநடத்திச் சென்றாய். உன் மற்ற செயல்களைப் போலவே இதையும் ரசித்தேன். உன் விரல்பிடித்து நடக்கும் சிறுகுழந்தை ஆனேன். பின் நீயும் குழந்தையாய் ஆனாய். என்விரல் பிடித்து நடந்தாய். ஓருடல் ஓருயிராய் உருத்தரித்தோம். வெட்கத்தில் ஒருவருக்கொருவர் ஆடையாய் மாறினோம்.

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே …

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை …

நாம் ஒன்றாய்க் கலக்கையில் நம் கண்கள் பரிபாஷை பேசிக் கொண்டன. அவை என்ன பேசிக்கொண்டன என்பதை இன்றுவரை நாமறியோம்.

என் கண்களில் பயத்துடன் கலந்த கண்ணீர் குடிகொண்டிருந்தது. “சுசி…” என்றேன்.

“ஷ்ஷ்ஷ்… எதுவும் பேசாத. நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” நீ ஏதோ ஆங்கிலப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாய்.

நான் அமைதியாய் படுத்திருந்தேன்.

“ஆர் யூ ஹேப்பி?” என்றாய்.

எனக்கு சொல்லத் தெரியவில்லை. எழுந்துசென்று உன்னை கட்டிக்கொண்டேன்.

என் தோள்களை இறுகப் பற்றினாய். “யூ நோ வாட், யூ ஆர் கோயிங் டு ஸ்டே வித் மீ டுநைட். வீ  ஆர் கோயிங் டு மேக் லவ் எகைன்…”

“வாட்?”

“… அன்ட் எகைன்”

“நோ!”

“… அன்ட் எகைன்”

“…”

“பட் ஒன்லி ஆஃப்டர் த டின்னர்” – எழுந்து சென்றாய்.

இரண்டு மெழுகுவர்த்திகள் மட்டும் உயிரைப் பிடித்து எரிந்து கொண்டிருந்தன. சுசி… பரவசத்தில் லயித்திருந்த அன்றிரவில் அடுத்த நாள் வரவிருக்கும் பூகம்பத்தை நாம் அறிந்திருக்கவில்லை.

**********

[பகுதி 6]

அடுத்த நாள் நீ கல்லூரிக்கு வரவில்லை.

சுசி, உன ஆங்காரம் என் நினைவலைகளில் வந்து வந்து போனது. உன்னுடன் கலந்திருந்த ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணி எண்ணி களிக்கிறேன். உன்னை ஆரத்தழுவும் பொருளாய் என்னை பாவிக்கிறேன்.

என்னை நானே வித்தியாசமாய் உணர்ந்தேன்! சுசி, உன்னை கடவுள் போலல்லவா என் மனதில் வைத்திருந்தேன். என் மனதிற்குள் எப்போது காமம் குடிகொண்டது? என் கற்பனாலோகத்தில் உன்னை உயரத் தூக்கி வைத்துக்கொண்டேனா? என்னை இவ்வுலகத்திற்குக் கொண்டுவந்தவள் நீதானா? பரம்பொருளாய் நினைத்திருந்த உன்னை யுகப்பொருளாய், என் பொருளாய் உணர்த்தியவள் நீதானா? காமம் மனிதனை மிருகமாக்கும் என்று சொல்வார்களே, ஆனால் அதுவே என்னை மனிதனாக்கி இருக்கிறது. நடைமுறை மனிதனாய்.

நீ கல்லூரிக்கு வராதது எனக்கு அச்சம் கலந்த பரிதவிப்பை உண்டு செய்தது. மதியம் சாப்பிடப் பிடிக்காமல் புல்வெளியில் அமர்ந்திருந்தேன். என்னை நோக்கி ஷ்வேதா வந்துகொண்டிருந்தாள். கல்லூரித் தோழி. அட்டெண்டன்ஸில் சுசிக்கு அடுத்த ஆள்.

சுசி எங்கள் காதலை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறாள். காதலை மறைத்து வைப்பது போலி வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சுசியின் தைரியம் எப்போதுமே ஆச்சர்யமூட்டும்.

“சுந்தர், நீ இங்க இருக்கியா? உன்ன கேண்டீன்ல தேடிட்டு இருந்தேன்”, சற்று பரபரப்புடனே தென்பட்டாள்.

“சொல்லு ஷ்வேதா”

“சுசி மெசேஜ் அனுப்பி இருக்கிறா. இந்தா…” என்று மொபைல் ஃபோனை நீட்டினாள்.

Sundar, wait for my evening call. Love – Sushi.

“இந்த மெசெஜ் எப்ப வந்தது?”

“ஒன் அவர் முன்னாடி. நீயே மொபைல வச்சிரு. நான் ஈவ்னிங் வாங்கிக்கறேன்”

“இல்ல பரவால்ல, உன்கிட்டயே இருக்கட்டும். கால் வந்தா நான் வாங்கிக்கறேன்”

“நோ.. நோ.. சுசி கிட்ட மொபைல் ஃபோன் இல்ல. முக்கியமான விஷயமா இருக்கும்னு தோணுது. இதுவரைக்கும் யாருக்குமே அவ மெசெஜ் பண்ணதில்ல”

செல்போனை வாங்கிக்கொண்டேன். மதியத்திற்குப் பின் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. மெசேஜையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் விதவிதமாய் எண்ணங்கள் ஓடின. முதன்முறையாய் நாம் சேர்வதைப் பற்றிய சாத்தியக்கூறு பயமும் தொற்றிக்கொண்டது. நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துபார்க்க முயல்கிறேன்.

உன் சோஷலிஸ தத்துவங்கள் உனக்குள்ளேயே மாண்டுவிடுமா? உன்னை சராசரிப் பெண்ணாக்கிவிடுவார்களா?

இல்லை… உன் மூளை புத்தகங்களால் பதப்பட்டு சிந்தனைகளால் உருவப்பட்டு அனுபவங்களால் செதுக்கப்பட்டு நிற்கிறது. போராட்ட குணம் உனக்குள் திளைத்திருக்கிறது. முடியும் வரை போராடுபவர் சிலர். இருக்கும் வரை போராடுபவர் சிலர். நீ இரண்டாம் வகை. சுசி, உன்னை நானறிவேன். பெண்ணாகவும் போராளியாகவும்.

பயத்தையும் மீறி எனக்கு பெருமையாய் இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தென். மணி நான்கு. ஐந்து மணிக்கெல்லாம் வகுப்புகள் முடிந்துவிடும். மெசேஜை மீண்டும் படித்தேன். மீண்டும். மீண்டும். மீண்டும்.

நாலரை மணிக்கு செல்ஃபோன் மணி அடித்தது. கைகள் நடுங்கியது. பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன். எதுவும் பேசாமல் காதிலேயே வைத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுனையில் ஒன்றும் பேசவில்லை. நான் என் மொத்த பிரக்ஞையையும் செவியில் கொண்டுவந்தேன். உலர்ந்த உதடுகள் ஒட்டிப்பிரியும் ஓசை கேட்டது. அது சுசி என்பதை நான் அறிந்திருந்தேன்.

“சுசி” – குரல் தாழ்த்தி அழைத்தேன்.

“ஒன் செகண்ட்… ஒன் செகண்ட்…”. உன் குரலில் பதற்றம் தெரிந்தது. நீ எது சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும். நீ பேசும்வரை காத்திருந்தேன், பொறுமையின்றி.

பத்து விநாடிகளுக்குப் பின் பேசினாய். “யெஸ்… ”

“சுசி, எனி ப்ராப்ளம்… என்னாச்சுடா?”

” நம்ம விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு”

“அய்யய்யோ…”

“டேய், டோன்ட் ஓவர் ரியாக்ட். நத்திங் அன்எக்ஸ்பெக்டட். இது நடக்கும்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். எப்ப நடக்கும்னுதான் காத்துக்கிட்டிருந்தோம்.”

“இப்ப நீ ஓ.கே தானெ?”

“யா யா … அப்பா பெங்ளூர்ல இருந்து வந்திட்டு இருக்கார். அதுவரைக்கும் ஐயாம் கைன்ட் ஆஃப் ஹவுஸ் அரெஸ்ட்”

“இப்ப என்ன பண்றது சுசி?”

“ஏன்டா… எல்லாத்தையும் நானேதான் சொல்லணுமா?”

“…”

“ஓ.கே. அப்பா வர்றதுக்குள்ள நான் எப்படியோ உன்னோட ஹாஸ்டலுக்கு வந்திர்றேன். யூ பேக் அப் யுவர் திங்ஸ். நாம கிளம்பறோம்”

“வாட்…?”

“வீ ஹேவ் டு மூவ். வேற வழியில்லை”

“ரொம்ப அவசரப்படறோம் சுசி.. இன்னும் காலேஜ் கூட முடிக்கல. எனக்கு வேலையில்ல. எங்க போய் என்ன பண்ண முடியும்னு சொல்லு”

“டேய், லவ் பண்ணப்ப இதெல்லாம் யோசிச்சியா? மாடப்புறா, மயிலிறகு அப்படீன்னு கனவு கண்டுட்டே இருந்தா போதாது, திஸ் இஸ் ரியாலிட்டி.”

“எனக்கு பயமா இருக்கு சுசி… ”

“டேய் ஸ்வீட்ஹார்ட்… என்னை கூட்டிட்டுப் போ, வாழ்க்கை குடு, குடும்பம் நடத்தி காப்பாத்து, என்னை சந்தோஷமா வச்சிக்க … இப்படி எதுவுமே நான் கேட்கல.. கேட்கவும் மாட்டேன். இவ்ளோ நாள் நீ பார்ட்-டைம் ஜாப் பண்ணி உன்னால வாழமுடிஞ்சுதுல்ல.. அதே மாதிரி, வேற ஊருக்குப் போய் பண்ணுவோம். என்னோட ஏட்டிடியூடுக்கு உலகத்துல எங்க போனாலும் எனக்கு வேலை இருக்கும்.”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு சரியா படல சுசி”

“முட்டாள்தனமா பேசாத. இங்கிருந்தா கொன்னுடுவாங்க. நீ உலகத்துல இருந்ததுக்கான அடையாளத்தையே அழிச்சுருவாங்க. ஐ டோண்ட் வான்ட் டு லூஸ் யூ”

அமைதியாய் நின்றிருந்தேன்.

“ஐ லவ் யூ டியர்.. ஐ லவ் யூ ஸோ மச்” என்றாய். உன்னையே செல்ஃபோனாய் பாவித்து இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன்.

“எத்தன மணிக்கு இங்க வர்ற?”

“ஏழு மணிக்கு வந்திர்றேன். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் எல்லாம் ஆளுக இருப்பாங்க. டேக்ஸி புடிச்சு கரூர் வரைக்கும் போயிடலாம். அங்கிருந்து வேற எங்கயாவது…”

“நீ வரவேண்டாம் சுசி, டைம் ஆகும். பிரச்சனை அதிமாகும். நான் ஆறு மணிக்கெல்லாம் டேக்ஸி புடிச்சுட்டு உங்க வீட்டுக்கு அடுத்த வீதியில் வெயிட் பண்றேன்.”

“ம்ம்..”

“இந்த செல்ஃபோன் எங்கிட்டதான் இருக்கும். ஏதாச்சும்னா கால் பண்ணு”

“ம்ம்..”

“அப்ப வச்சிரட்டுமா?”

“ம்ம்..”

உன் குரல் தழுதழுத்ததைப் போல தோன்றியது. அழுகையா, வசைபாடுகிறாயா, மிரட்டலா என்று புரியவில்லை. “ஏதாவது சொல்லனுமா சுசி” என்றேன்.

“டு யூ ஸ்டில் திங்க் அபவுட் எஸ்டர்டே நைட்?” என்றாய்.

“ஐ வில் நெவர் ஃபர்கெட் எஸ்டர்டே நைட்”

குடிசைக்கு வெளியே பழனியின் சிரிப்புச் சத்தம் கேட்டது.

கட்டிப்போட்டிருந்த மரத்தை கைகளால் தடவினேன். காலருகே மரத்தில் அடிக்கப்பட்டிருந்த ஒரு வலஞ்சுழி ஆணி தென்பட்டது. மெல்ல கீழிறங்கி மயக்கம் வந்து படுத்திருப்பதைப் போல கிடந்தேன். கைகள் ஆணியை அசைத்து அசைத்து இலகுவாக்கிக் கொண்டிருந்தன.

ஐந்து நிமிடத்தில் ஆணி கையோடு வந்துவிட்டது. அதன் முனை கூர்மையானதாய் இல்லை. ஆனால் ஒன்றரை அடி நீளத்தில் இருந்தது. கை கட்டுகளில் ஆணியை நுழைத்து அறுக்க ஆரம்பித்தேன். முகத்தில் வியர்வை உருவாகி இரத்தத்துடன் கலந்து கீழே சொட்டியது. சில நிமிட போராட்டங்களில் கட்டு அவிழ்ந்தது.

அங்கேயே காத்திருந்தேன். கயிறை கைகளில் ஒப்புக்கு சுற்றிக்கொண்டு மரத்தின் பின்னால் வைத்துக்கொண்டேன். கயிறின் நுனி இடது உள்ளங்கையில் இருந்தது. வலது உள்ளங்கையில் ஆணி.

குடிசையை நோக்கி முருகேசன் வந்துகொண்டிருந்தான்.

**********

[பகுதி 7]

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் எண்ணற்ற தத்துவங்களை உள்ளடக்கியது. அவை யாவும் கூற முனையும் கருத்து ஒன்றே. பிற மனிதனையும் உயிரினங்களையும் நேசிக்கச் சொல்லும் “மனித நேயம்” என்பதே அது.

மரணத்திற்குப் பின் மனிதன் சொர்கத்திற்குச் செல்வானா, நரகத்திற்குச் செல்வானா என்பதை இரண்டு கேள்விகளைக் கொண்டு கடவுள் தீர்மானிப்பதாக எகிப்து நாட்டு மக்களிடையே ஒரு நம்பிக்கையுண்டு.

முதல் கேள்வி, “நீ பூமியில் மகிழ்ச்சியாக இருந்தாயா?”

இரண்டாவது கேள்வி முக்கியம். “உன்னால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா?”

நாம் எந்த விஷயத்துக்காக மரணத்தைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறோமோ, அந்த விஷயம்தான் நம் வாழ்க்கையின் அர்த்தம். வாழ்க்கை என்பதும் ஒரு பயணம்தான். எப்போது என்ன நிகழும் என்று உணரமுடியா பயணம்.

இப்போது நான் சென்றுகொண்டிருப்பது அப்படிப்பட்ட பயணம்தான். நடுக்கடல் வெளிநீர் போல் அமைதியாய் நின்றிருந்த வாழ்க்கையில் சமீப நாட்களாய் பேரலை வீசுகிறது. பேருந்து சன்னல் வழியே இரவுக்காற்றின் குளிரை அனுபவித்தபடி பயணிக்கிறேன். வேறு ஊர் தேடி. வேறு வாழ்க்கை தேடி.

நானும், சுசியும். நேற்று முதல் அவள் என் உயிர்த்தோழி மட்டுமல்ல. உடல்தோழியும் கூடத்தான். ஒரே நாளில் எத்தனை நிகழ்வுகள்!

என் தோள்களில் முகம் சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் உறக்கம் எனக்கு உற்சாகத்தைத் தருகிறது. விழித்திருக்கையில் அவளைக் கண்டு நான் பயப்படுகிறேன். இதில் மறைப்பதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றுமில்லை. சுசி அசாதாரணமானவள். பலசமயங்களில் அவள் அழகும் ஆளுமையும் என்னை அச்சமூட்டுகிறது. ஆச்சரியம் கலந்த அச்சம்.

எனக்கு பயணம் முழுக்க என்னென்னமோ நினைவுகள். உன் அப்பா ஆட்களுடன் துரத்தி வருவது போல… தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நாமிருவரும் நடு ரோட்டில் நின்று கொண்டிருப்பதைப் போல… வேலை கிடைக்காமல் பட்டினி கிடப்பதைப் போல… நீ என்னை விட்டுச் சென்று விடுவது போல… என்றெல்லாம் பலவிதமாய் கற்பனை செய்தேன்.

வண்டி ஈரோடு பேருந்து நிலையத்தில் நிற்கையில் மணி பத்தரை. நீ இன்னும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாய். உன்னால் எப்படி தூங்க முடிகிறது என்று வியக்கிறேன். என்னைப் போலன்றி நீ நிம்மதியாய் இருக்கிறாயோ?

“சுசி, ஈரோடு பஸ் ஸ்டேண்ட் வந்துருச்சு”

நீ தூக்கம் கலைந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு புன்னகைக்கிறாய். உன் நுண்ணிய மெல்லுணர்வுகளக் கூட என்னால் அக்கணம் புரிந்துகொள்ள முடியவில்லை.

பெட்டிகளை எடுத்துக்கொண்டு கீழிறங்கினோம். உன் குட்டைக்கூந்தலை கைகளால் அள்ளி ஒழுங்குபடுத்தினாய். “உன்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு?”

“பத்தாயிரம்”

“என்கிட்டயும் அவ்ளோதான் இருக்கும். சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டியா?”

“ம்ம்..”

“ஷ்வேதாவோட ஃபோன்?”

“குடுத்திட்டேன்”

“நல்லவேளை.. இல்லாட்டி ட்ரேஸ் பண்ணி அப்பா ஆளுக வந்திருப்பாங்க. ஈரோடு வர்றத நீ யார்கிட்டயாவது சொன்னியா?”

“சுசி… நம்ம ஈரோடு வர்றது இப்பதான் எனக்கே தெரியும்”

“சரி வா சாப்பிடலாம்” – எதிரில் இருந்த சரவணபவனுக்குள் நுழைந்தோம். சாப்பிட்டு முடிக்கும் வரை நான் எதுவும் பேசவில்லை.

“நீ போய் ஒரு டாடா இண்டிகா டேக்ஸி புடிச்சுட்டு வா. நான் வெளியே வந்து நிற்கிறேன்”

சரியென்று தலையாட்டி வெளியே சென்றேன். டேக்ஸி அழைத்து வந்த சில நிமிடங்களில் நீ வந்தாய். டிரைவர், “எங்க சார் போகணும்” என்றார். நான் சுசியைப் பார்த்தேன்.

“ஹோட்டல் ட்ரைவ் இன்” என்றாய். உன் முகம் பொலிவுடன் இருந்தது. நான் படபடப்பு குறையாமல் இருந்தேன். ஃப்ரெஷ்னர் காகிதம் தந்தாய். நான் முகம் துடைத்தும் வியர்த்தேன்.

ஹோட்டல் வந்ததும் முன் இறங்கி வேகமாய் நடந்தாய். நட்சத்திர விடுதியாய் இருக்க வேண்டும். இரண்டடி நடந்ததும் அலங்காரத்தின் பிரமிப்பில் லயித்திருந்தேன். உன் பார்வை என்னை பின்னிழுத்துச் சென்றது. ரிஷப்சன் வந்தடைந்ததும் அங்கிருந்தவர்களிடம் புன்முறுவித்தாய். “யெஸ் மேடம்” என்றனர். அவர்கள் பேசிய முதல் ஆங்கில வாக்கியம்.

“ஹாய்.. மை நேம் இஸ் திவ்யா. ஹி இஸ் மை ஹஸ்பண்ட். வீ ஆர் கமிங் ஃப்ரம் பெங்களுர்”

“ரிசர்வேஷன் பண்ணி இருக்கீங்களா?”

“நோ.. இட் வாஸ் ஏன் அன்எக்ஸ்பக்டட் ஜர்னி”

“என்ன விஷயமா வந்திருக்கீங்க”

“ஐயாம் எ ஜர்னலிஸ்ட், சி.என்.என்.”

“ஒன் மினிட் மேடம்”. அவர்கள் பேசிய இரண்டாவது ஆங்கில வாக்கியம்.

பணம் பாதாளம் வரை பாயும், பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். நம் நாட்டில் ஆங்கிலம் அதலபாதாளம் வரை பாயும், பதினொன்றும் செய்யும். ஆங்கிலம் தெரியாதவர்களிடமோ நன்கு தெரிந்தவர்களிடமோ இவ்வித்தை எடுபடாது.

மனிதர்களைப் படிக்கும் குணத்தில், பேச்சில், எழுத்தில்.. என சகலமுமாய் உன்னிடம் வாய்த்திருக்கிறது.

“இந்த ஃபார்ம் ஃபில் பண்ணுங்க மேடம்” – அறைக்கதவின் சாவியை அருகில் வைத்தார்கள். ஒரு நாள் வாடகையை கவனித்தேன். நாலாயிரம்.

களைப்பில் அன்றிரவு மெய்மறந்து தூங்கினேன். எழும்போது நீ தயாராய் நின்றுகொண்டிருந்தாய்.

“டைம் என்ன சுசி?”

“ஏழு”

“எதுக்கு இந்நேரத்துல ரெடியாகி நிக்கறே?”

“நீயும் கிளம்பு, ஒன்பது மணிக்கு அங்க இருக்கணும்”

“எங்க?”

“மேரேஜ் ரெஜிஸ்டர் ஆபிஸ்”

மத்தளம் கொட்டவில்லை. வரிசங்கம் நின்றூதவில்லை.  முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தலுமில்லை. பையில் இருந்து தாலியை எடுத்தேன். கை பரபரத்தது. சுசி சிரம் தாழ்ந்து நின்று அன்றே நான் பார்த்தேன். வெட்கமா? சூழ்நிலையா? பரவசமா? சொல்லத் தெரியவில்லை. அந்நிலையிலேயே அவளும் இருந்திருக்க வேண்டும்.

தாலியை சுசியின் கழுத்து வழியே எடுத்துப் பின் சென்றேன்.  கூந்தலுக்குள் கைகளை நுழைத்து முடிச்சுகளிட்டேன்.

முதல் முடிச்சு… சுசி, இனி அதிகாரப்பூர்வமாய், சட்டப்பூர்வமாய் நீ என்னவள்.

இரண்டாம் முடிச்சு… ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். சுசி, உன் வெற்றிக்குப் பின்னால் நான் நிச்சயம் இருப்பேன்.

மூன்றாம் முடிச்சு… சுசி, என் அகத்தில் குடிகொண்டிருப்பவள் நீ. அதில் நீயே ஜீவன், நீயே ஆத்மா.

தாலி கட்டிமுடித்ததும் உன்னை ஆரத்தழுவும் எண்ணம் ஆட்கொண்டது. திருமணம் முடிந்ததும் முத்தமிடச் சொல்லுமாமே கிறித்தவ மதம், உணர்வுகளை மதிக்கும் அவ்வெண்ணத்திற்கு தலை வணங்குகிறேன்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். பதிவாளர் வெற்றிலை துப்பும் கோப்பையைத் தேடிக்கொண்டிருந்தார். சாட்சிக் கையெழுத்திட வந்தவர் வாங்கிய இருநூறு ருபாய்க்கு மட்டும் அளவாய் கைதட்டினார். மற்றவர்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் ஓரக்கண்ணால் பார்த்தார்கள்.

“சார், வீடு ஏதாவது வாடகைக்கு கிடைக்குமா?” பதிவாளரைப் பார்த்துக் கேட்டேன்.

“யோவ் பரமசிவம், உன் டிபார்ட்மெண்ட்” – என்னைப் பார்த்து பதிவாளர் சிரித்தார்.

“என்ன தம்பி பாக்கறீங்க, இங்க கல்யாணம் பண்ண வர்ற எல்லாரும் ஒரு ப்ராசஸ் வச்சிருப்பீங்க போல. முதல்ல சாட்சிக் கையெழுத்துக்கு ஆள், அப்புறம் வாடகைக்கு வீடு, அப்புறம் வேலை…” கெக்கெக்கே என்று கரைப்பற்கள் தெரிய சிரித்தார்.

“கவலைப்படாதீங்க, எல்லாத்துக்கும் ஆள் வச்சிருக்கோம். போய் சந்தோஷமா இருங்க”

நாட்கள் நகர நகர மீண்டும் அமைதியாய் மாறியது நம் வாழ்க்கை. தெளிந்த நீரில் மலர்கள் மிதந்து செல்வதைப் போன்றதொரு பரிசுத்தமான அன்பு நிறைந்த வாழ்க்கை.

சுசி, காதலையும் காமத்தையும் இணைக்கும் மையப்புள்ளியில் மட்டும் என்னை ஆண்மகனாய் உணர்ந்தேன். மற்ற நேரங்களில் உன் துதிபாடவும் உனக்கு உபகாரம் செய்யும் சேவகனாகவும் இருக்கவே ஆசைப்படுகிறேன். உன் மீதான என் காதல் சிறு புள்ளியில் ஆரம்பித்து அண்ட சராசரமாய் வளர்ந்து கொண்டே போகிறது.

“டேய், வேலை எப்படி இருக்கு?”

“ம்ம்.. பரவால்ல”

“நீ அங்க என்ன பண்ற”

“நகைக்கடையில என்ன வேலை, பாதி நேரம் சும்மா தான் இருக்கேன்… ”

“யூ நோ, சம்திங் இஸ் லேட் ஃபார் மீ”

நான் என்னவென்று யோசித்தும் புலப்படவில்லை. “என்ன லேட்?”

“பீரியட்ஸ்”

பெரும்பாலான ஆண்களுக்கு இதைப் பற்றியே எண்ணமே அச்சமூட்டும்.

சிறிது நேர அமைதிக்குப் பின் பேசினேன். “எப்படி?”

“எப்படீன்னா…? போன மாசமே ஆகியிருக்க வேண்டியது. இன்னும் ஆகலையே”

“நல்லா தெரியுமா?”

“ஏண்டா… நீ லூசா? ஆகியிருந்தா எனக்குத் தெரியாதா?”

“இல்ல, போன மாசமே ஆகியிருக்க வேண்டியதுன்னு சொன்னியே.. அது நல்லா தெரியுமான்னு கேட்டேன்”

“ம்ம்…”

“நாளைக்கு டாக்டர்கிட்ட போலாமா?”

“ம்ம்… ஒரு நிமிஷம் இரு. ஏன் லேட்டாகியிருக்கும்னு உனக்கு புரிஞ்சுதா?”

“எதாச்சும் கண்டத சாப்பிட்டு இருப்ப…”

உன் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “என்ன?” – நானும் சிரித்தேன்.

“மார்ச் 5 ஞாபகம் இருக்கா?”

“யெஸ்”

“நீ அன்னைக்கு பண்ணதாலதான் இது தள்ளிப் போயிருக்கும்னு நினைக்கிறேன்”

அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

“ஐ திங்க் ஐயாம் ப்ரக்னன்ட்!”

**********

[பகுதி 8]

மரத்தின் பின் கைகள் கோர்த்து விரல்களுக்கிடையில் ஆணியை இறுகப் பற்றிக்கொண்டேன். முருகேசன் வந்ததும் தாக்க வேண்டும். மூர்கத்தனமாய். மிருகத்தனமாய்.

சுசி, உன்னை மீண்டும் பார்ப்பேனா? ஒருமுறை. ஒரே முறை பார்த்தால் போதும். அதற்கு மேல் கேட்கமாட்டேன். பேராசைக்காரன் அல்ல நான்.

சக நிகழ்வுகளின் கோர்வைதான் வாழ்க்கை. நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தொடர்புடையவை. இது உலக நியதி.

காலை 9:38 மணி:

நான்கு வழிச்சாலை ஒன்றின் போக்குவரத்துச் சைகை விளக்கின் சிவப்பு வண்ணத்திற்குக் கட்டுப்பட்டு ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. கார் அமைதியாய் இருந்தது, அதன் உள்ளிருந்தவர் ஆத்திரத்துடனேயே இருந்தார்.

அவர் ஒரு டாக்டர். எப்போதும் 9 மணிக்கெல்லாம் இந்த நால்வழிச் சாலையை கடந்து விடுவார். இன்று நேரமாகிவிட்டதால் அதன் பரபரப்பில் இருந்தார். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விடும் அவர் இன்று எட்டு மணிக்குத்தான் எழுந்தார். அதனாலேயே புறப்பட தாமதமாகியிருந்தது.

இரவெல்லாம் தூக்கமின்றி இருந்தமையாலேயே அவர் எழ தாமதமாகியிருந்தது. தூக்கம் வராமல் எரிச்சலாய் என்றுமில்லாமல் அளவுக்கு அதிகமாய் குடித்தார். யாருடனும் பேசாமல் தன்னந்தனியே புலம்பியபடி இரவு முழுக்க குடித்துக்கொண்டே இருந்தார். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட சிலமுறை தோன்றியது. எப்போது தூங்கினார் என்று அவருக்கே நினைவில்லை.

எந்நேரமும் தொட்டதற்கெல்லாம் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் மனைவியை அவரால் சமாளிக்க முடியவில்லை. சில நாட்களாக இந்த சந்தேக குணம் அதிகமாகி இவர் நிம்மதியின்றி இருக்கிறார். இன்றும் கூட தன்னுடன் வேலை செய்யும் சக மருத்துவருடன் இணைத்து கண்டபடி பேச கோபத்தின் உச்சத்திற்கு சென்றவர் ஓங்கி அறைந்துவிட்டார். அவர் மனைவி கைப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு பிறந்த வீடு சென்றுவிட்டார்.

அந்த சக மருத்துவரின் பெயர் சாந்தி.

அதே காலை 9:38 மணி:

அதே நான்கு வழிச்சாலையின் வலது புறம் இருக்கும் நடைபாதையைக் கடந்து கொண்டிருந்த அந்த இளம் பெண்ணிற்கு இருபது வயது இருக்கலாம். எதிரில் இருந்த சிகை அலங்காரக் கடையில் இருந்து இப்போதுதான் வெளியே வந்தாள். முகத்தில் கோபமும் ஏமாற்றமும் குடிகொண்டிருந்தது.

ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்த அவள் நண்பண் வராததே அவள் கோபத்திற்குக் காரணம். கைபேசியில் அழைத்தும் அவன் எடுக்கவில்லை. வேண்டுமென்றே தன்னை நிராகரிக்கிரானோ என்ற பயம் ஏற்பட்டது அவளுக்கு.

அந்த நண்பணின் அக்காவிற்கு திடீரென ஒரு நல்ல வரன் அமைய அப்பா அவனை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அவன் அவசரத்தில் கைபேசி படுக்கையறையிலேயே மறந்து வைத்துவிட்டுச் செல்ல நிசப்தப்பட்டிருந்த அது தலையணைக்குள் சிணுங்கிக் கொண்டிருந்தது.

புது மாப்பிள்ளையைப் பற்றிய கனவுகளில் மூழ்கியிருந்தாள் சாந்தி.

அதே காலை 9:38 மணி:

அதே நான்கு வழிச்சாலையின் வலது புறம் இருக்கும் நடைபாதையை எதிர் திசையில் இருந்து கடந்து கொண்டிருக்கும் சுசியின் முகம் பிரகாசமாய் ஒளிவிட்டது.

சுசி என்னும் மலரின் கருவறைக்குள் ஒரு இள மொட்டு துளிர் விட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் மகிமையே தாய்மை உணர்வில்தானே ஆரம்பிக்கிறது.

அதே காலை 9:39 மணி:

நடைபாதையில் வந்து கொண்டிருந்த இளம் பெண் சுசியைக் கடந்து போக, அவள் வாடிய முகத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டு சுசி செல்ல, பச்சை விளக்கு எரிந்த மறுவினாடி டாக்டர் காரை வேகமாய்த் திருப்ப, கார் சுசியின் மீது வேகமாய் மோத…. தூக்கி எறியப்பட்ட சுசியின் நெற்றிப்பொட்டில் இரத்தம் கொட்டியது.

இரண்டு வினாடிகள் மட்டுமே நினைவிருந்தது. அலைவரிசையாய் எண்ணங்கள் உருண்டோடின. பலநூறு எண்ணங்களை ஒரே சமயத்தில் கொண்டு வர மனித மனத்தால் மட்டுமே முடிகிறது.

முருகேசன் வாசலில் வந்து நின்றான்.

“அரை மணி நேரம் முடிஞ்சுது தம்பி… வேலை மயிரு இல்லைன்னா நாளெல்லாம் உங்கூடவே இருக்கலாம். ஆனா இருக்குதே! முனிசிபால்டி வரைக்கும் போகணும். படபடன்னு உன்ன பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லு பாக்கலாம்.”

இப்போது தாக்கினால் சுதாரித்து விடுவான். இன்னும் கொஞ்சம் அருகில் வரவேண்டும்.

“ம்ம்… அப்ப பேச மாட்ட! இனி நமக்கு பொறுமையில்லை….  உன் கதைய முடிச்சு செங்கல் சூளையில எரிச்சுட வேண்டியதுதான்” – அவன் வெளியே செல்ல எத்தனிக்க பேச ஆரம்பித்தேன்.

“நீங்க நகை வாங்கினது எனக்குத் தெரியும். வாங்கிட்டு போகும் போது வண்டி பின்னாடியே வந்து உங்க அட்ரஸ பாத்துக்கிட்டேன்” தொண்டை அடைத்தது, செறுமினேன்.

இரண்டடி முன்னால் வந்த முருகேசன் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

போதாது, இன்னும் இரண்டடி முன்னே வரவேண்டும். உதடுகளைக் கடித்து இரத்தத்தைத் தரையில் உமிழ்ந்தேன். “உங்க வீட்டுல வேலை செய்றவன்தான் எல்லாத்துக்கும் உதவி செஞ்சான்.”

“யாரு… யாரு..?” – முன்னால் வந்தமர்ந்தான். கைக்கெட்டும் தூரத்தில் அவன் முகம் இருந்தது. இதுதான் சமயம்.

ஆத்திரமும் ஆவேசமும் ஒன்றாய்க் கலந்து கையிலிருந்த ஆணியால் முகத்தை அறைந்தேன். வலஞ்சுழி ஆணி என்பது உச்சி முதல் பாதம் வரை சுருள் சுருளாய் படர்ந்திருக்கும். அவன் கன்னத்தை கிழித்துச்சென்ற ஆணி கைநழுவிக் கீழே விழுந்தது. குபுகுபுவென இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

இன்னும் இரண்டொரு வினாடியில் அவனை நிலைகுலையச் செய்யவேண்டும். வெறிகொண்ட என் கண்ணில் இரும்புக்கம்பி தென்பட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுத்து முருகேசன் பின் மண்டையில் அடித்தேன். மயங்கிவிழும் முன் கூச்சலிட்டான். வெளியில் நின்றிருந்த அவன் ஆட்கள் ஏழெட்டு பேரும் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். மரண ஆயுதங்களுடன்.

குற்றுயிராய் இருந்தேன் என்பதுதான் உண்மை. உணர்ச்சிவசப்பட்ட சில சந்தர்ப்பங்களில் நம் மனம் எதையும் எதிர்கொள்ளத் துணிகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் மரணம் கூட ஒருவித களிப்பான வெற்றிதான்.

அவர்களை எதிர்நோக்கி நின்றிருந்தேன். முதலில் வந்தவன் வலது கையில் கூரான கத்தி இருந்தது. என்னை நோக்கி கையை காற்றில் வீசியபடி ஓடி வந்தான். எனக்குள் உடல் சதை ரணம் மறந்த உணர்ச்சி அந்நேரம் குடிகொண்டிருந்தது. என் இடது கையை மேலே நீட்டி அவன் வீசிய கத்தியை உள்வாங்கினேன். வலது கையில் இருந்த கம்பியை அவன் வயிற்றில் சொருகினேன். நிலைகுலைந்தவன் சன்னமாய் முனகிக்கொண்டே சரிந்தான். கம்பியை அவன் வயிற்றில் இருந்து உருவ அதன் விளிம்பில் உடல்துண்டுகள் ஒட்டி இருந்தன.

என் முகம் சலனமற்று இருந்தது. அதிதீவிர மனநோய்க்கு ஆட்பட்டவன் போல் காட்சியளித்தேன்.

இப்போது அரிவாளுடன் ஒருவனும் கத்தியுடன் ஒருவனுமாய் இரண்டு பேர் ஒரே சமயம்  தாக்க வந்து கொண்டிருந்தார்கள். வலது கையில் கம்பியும் இடது கையில் கத்தியுமாய் நின்றிருந்தேன். இரு ஆயுதங்களின் முனையிலும் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. கீழே விழுந்தவனைத் தாண்டி வந்தவன் என்னை நோக்கி வானில் அரிவாளை உயர்த்தினான். ஒரு வினாடி அமைதியுற்றிருந்தாலும் என் கழுத்து துண்டாகியிருக்கும். சுதாரித்து அரிவாளின் முன் கம்பியைக் குறுக்கிலிட்டு முன்நகர்ந்தேன். எதிரில் வந்த மற்றவனின் மார்பில் இடது கையில் இருந்த கத்தியை சொருகி, அரிவாள் வைத்திருந்தவன் வயிற்றை வலது கையில் இருந்த கம்பியால் கிழித்தேன்.

வெட்டுப்பட்டவன் என் சட்டையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் கீழே சரிந்தான். பின்னால் துரத்தி வந்தவர்கள் மெல்ல பின் வாங்கினார்கள். முருகேசன் கத்த, எல்லோரும் கூட்டமாய்த் தாக்க வந்தார்கள். அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள நேர்ந்தது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. வாழும் ஒவ்வொரு மணித்துளியும் வரம்தான். எதிரிகளை அடிக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிதான்.

உச்சி முதல் பாதம் வரை இரத்தமாய், அரை நிர்வாணமாய், உணர்ச்சிக் கொந்தளிப்பாய் உருவுற்றிருந்த எனக்கு அவர்கள் அனைவரும் பூவுலகின் பாரமாய்த் தெரிந்தார்கள். அவர்களின் ஆயுதம் என்னைத் தாக்கியபோதெல்லாம் வெறி கொண்டு மீண்டும் மீண்டும் பலம் கொண்டவனாய்த் தாக்கினேன். என் கையிலிருந்த ஆயுதம் எதிரிகளின் உடலைத் தாக்கிய ஒவ்வொரு கணமும் பரவசமானேன். அவர்கள் வீழும் போது எழுச்சி கொண்டேன்.

ஆயுதங்கள் மோதிக்கொள்ளும்போது விநோதமாய் சத்தம் எழும்பியது. கோபம் கொண்ட எந்தவொரு மனிதனும் தன் மொழி மறந்து ஆயுதத்தின் சத்தமாகவே மாறிவிடுகிறான். இரை தேடிப் பறந்துகொண்டிருந்த காக்கை குருவிகள் கூட கூச்சலைக் கண்டு பயந்து கிளையிடுக்குகளில் ஒளிந்தன. தன் சந்ததியினரை எச்சரிக்கையுடன் வேடிக்கை பார்க்குமாறு கூக்குரலிட்டு அழைத்தன.

எல்லாம் முடிந்தும் சூழ்நிலை உணர சில மணித்துளிகள் ஆனது. என்னைச் சுற்றி ஏழு பேர் இரத்தக்காயங்களுடன் கீழே கிடந்தனர். இரண்டு பேர் வேறுதிசை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

பஞ்சபூதங்களும் அந்நேரம் செந்நிறமாய் ஒளிவிட்டன. நான் நிற்கும் பொட்டல் காட்டின் நிலம் செம்மண். என்னைச் சுற்றிலும் நீராய் ஓடும் இரத்தம் சிவப்பு. மாலை நேர ஆகாயத்தின் நிறம் இளஞ்சிவப்பு. சித்திரை மாதத்தின் அனலில் வீசிய காற்று செங்காற்று. தூரத்துச் செங்கல்சூளையில் ஒளிவிடும் நெருப்பு சிவப்பு.

என் கையிலிருந்த கம்பியிலும் அவ்வண்ணமே நிறந்திருந்தது. அதில் சில மனிதச்சதைகளும் ஒட்டியிருந்தன.

புரட்சி என்பது இப்படித்தான் இருக்குமா? சூழ்நிலையையும் வரைமுறைகளையும் தகிக்க வைக்கிற சக்தி அதற்குண்டா? சுசி, உன் சிவப்புக் கனவை நான் நிஜத்தில் காண்கிறேன்!

அதிகம் நேரமில்லை. சீக்கிரம் போயாக வேண்டும. முருகேசனின் வண்டியை நோக்கி ஓடினேன். முன் இருக்கையில் சாவி இருந்தது. சாவியை துவாரத்தில் நுழைத்து விசையை அழுத்தினேன். சன்னமாய் முனகிய அந்த ஜெர்மானிய கார் காற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டது.

**********

[பகுதி 9]

மருத்துவமனைக்கு அருகில் ஓடி வருகையில் வெகுவாய் மூச்சிறைத்தது. நுழைவாயில் கண்ணாடி வழியே உள்ளே எட்டிப் பார்த்தேன். எனை அன்றி அனைத்தும் சலனமற்று இருந்தது. நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்தபடி வரவேற்பரைக்கு மெல்ல நடந்தேன்.

“ரெண்டு மணி நேரம் முன்னாடி ஏக்ஸிடண்ட் ஆகி ஒரு பொண்ணு அட்மிட் ஆனாங்க…”

“அவங்க பேர் என்ன சார்?”

“சுசி”

“ஒன் மினிட்” அந்தப் பெண் கணிணியிடம் பேசத் துவங்கினாள்.

ஓவென்று கதறி ஆர்பாட்டம் செய்ய வேண்டும் போலிருந்தது.

“சார், அவுட் பேஷண்ட் செக்ஷனுக்குப் போய் கேளுங்க”

“அவங்க எப்படி இருக்காங்க?”

“நீங்க அங்கதான் சார் கேக்கணும்”

பொறுமை இல்லை. “மேடம்…”

“சாரி சார், எனக்கு தெரியாது. நீங்க அங்கேதான் கேட்கணும்”

இனம் புரியாத கோபங்களும் உணர்ச்சிகளும் பொங்கிக்கொண்டு வந்தன. வெளிக்காட்ட விரும்பாமல் அமைதியாக இருந்தேன். “அவுட் பேஷண்ட் செக்ஷன் எங்க இருக்கு?”

“இப்படியே ரைட்ல போனீங்கன்னா தெரியும். போர்டு வச்சிருப்பாங்க”

இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. வலதுபுறம் திரும்பினேன். ஒரு பிரளயம் நடந்தேறிய உணர்வு ஏன் இவர்களுக்கில்லை? தினமும் உயிர்களை காப்பாற்றியும் பறித்தும் தரும் மனிதக் கடவுள்கள் நிறைந்ததல்லவா மருத்துவமனை? கடவுள் என்பதாலோ என்னவோ இவர்களும் உணர்ச்சியின்றி நடக்கிறார்களா?

அவுட் பேஷண்ட் செக்ஷனில் கண்ணாடி அறைக்குள் ஒரு பெண் கைபேசியில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

“ஏங்க.. ரெண்டு மணி நேரம் முன்னாடி சுசின்னு ஒரு பொண்ணு ஏக்ஸிடண்ட் ஆகி அட்மிட் ஆனாங்க”

அந்தப் பெண் கைபேசியைக் கீழே இறக்கி,  “நீங்க யார்?” என்றார்.

“சுசியோட ஹஸ்பண்ட்”

“ஒரு நிமிஷம் சார்” கணிப்பொறியிடம் உரையாடத் துவங்கினாள். பின் அச்சடிக்கும் இயந்திரத்தில் இருந்த காகிதத் தாள்களை உருவி என்னிடம் நீட்டினாள்.

“சார், நீங்க ஒரு லட்சத்தி பதினெட்டாயிரத்து நானூறு ருபாய் பில் கட்டணும்”

கண்ணாடியை உடைத்து அவள் குரல்வளையைப் பற்ற நினைத்தேன்.

கண்களை கைகளால் மூடி, “அவங்க எப்படி இருக்காங்கன்னு சொல்லுங்க ப்ளீஸ்”

ஒரு கணம் வருத்தப்பட்டவராய் முகம் இறுகியது. “சாரி சார்.. டாக்டர்ஸ் எவ்வளவோ முயற்சி செஞ்சும் காப்பாத்த முடியல. இப்ப ஒரு அரைமணி நேரம் முன்னாடி வரைக்கும் நினைவு இருந்தது. அவங்க சொல்லித்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணி வரவழைச்சோம்”

முன்னரே அதை எதிர்பார்த்திருந்ததைப் போல அமைதியாய் வெளியே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். தெரிந்த மனிதர்களிடம் பேச வேண்டும் போலிருந்தது. சுசியிடம் பேச வேண்டும் போலிருந்தது. ஏன் செத்துப் போனாய் என்று கேட்க வேண்டும். இனி நான் என்ன செய்ய என்று கேட்க வேண்டும். கேட்பதற்குக் கேள்விகள் பல இருக்கின்றன. இல்லை எனக்கு நானே பேசிக்கொள்ளலாம். இயற்கையுடன் பேசலாம். சமுதாயத்துடன் பெசலாம்.

பொறுமையாய் பேசலாம். இனி ஆயுசுக்கும் அதைத்தானே செய்து கொண்டிருக்கப் போகிறேன்.

“சார்…” – கண்ணாடி அறைக்குள்ளிருந்து அந்தப் பெண் மீண்டும் அழைத்தாள். முகம் திருப்பிப் பார்த்தேன். அட.. இந்தப் பெண்ணிடம் இருந்து கூட பேசத் துவங்கலாம்.

“உங்க பில்” கண்ணாடியின் கீழிருந்த துவாரத்தின் வழியே நீட்டினாள்.

“நான் சுசியைப் பார்க்கணும்”

“நீங்க பில் கட்டினாத்தான் உள்ள விடுவாங்க சார்”

“என்கிட்ட பணம் இல்லை. நான் இப்போ சுசியை பார்க்கணும்”

“அது முடியாது சார்”

ஏமாற்றத்தின் வார்த்தைகளுக்குப் பின்னால் போடப்படும் “சார்” என்ற வார்த்தையில் எரிச்சலின் உச்சத்தில் நாற்காலியை கண்ணாடியின் மீது விட்டெறிந்தேன். அதன் பின் நடந்த களேபரத்தில் மருத்துவமனையில் இருந்து தூக்கி எறிந்தனர்.

ஜெர்மானிய கார் அந்த மருத்துவமனையை சென்றடைகையில் இரவு மணி ஏழு. இரத்தம் தோய்ந்த இடங்களை துணியால் துடைத்தபடி மருத்துவமனைக்குள் சென்றேன். வரவேற்பரையில் அதே பெண் நின்றுகொண்டிருந்தார்.

“சுசின்னு ஒரு பொண்ணு, ரெண்டு நாள் முன்னாடி விபத்தில் அடிபட்டு இந்த ஹாஸ்பிடல்ல இறந்து போனாங்க. இன்னைக்கு காலைல வந்து பணம் கொடுத்திடறேன்னு சொல்லியிருந்தேன். வர முடியல.”

“என்ன சார் இப்படி சொல்றீங்க? ரெண்டு நாளா பாடிய வச்சிருந்ததே பெரிய விஷயம். காலைல கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்டு இப்ப வர்றீங்க? உங்களை டெலிபோன் பண்ணியும் புடிக்க முடியல. உங்க வீட்டுக்குப் போய்ப் பார்த்தோம், அங்கேயும் இல்லை.”

மனம் பதைபதைத்தது. “சுசிய என்ன பண்ணீங்க?”

“எவ்வளவு நேரம் சார் பொறுமையா இருக்க முடியும், ஒரு மணி நேரத்துக்கு முன்னாலதான் போலீஸ் வந்து பாடிய எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க.”

நடைபிணங்கள் வாழும் உலகம் இது. “எந்த போலீஸ் ஸ்டேஷன்?”

“அவங்க இந்நேரம் காணாப்பொணம்னு ரிப்போர்ட் எழுதி எரிச்சிருப்பாங்க. மின்மயானத்துக்குப் போய் பாருங்க. அதுக்கு முன்னால, இங்க பணத்தை கட்டுங்க சார்” அந்தப்பெண் உணர்ச்சிகள் மழுங்கியோ அற்றோ பேசிக்கொண்டிருந்தாள்.

என் முழுபிரக்ஞையும் ஆத்திரமாய் கண்களில் கொப்பளித்தது. “பணமா? கொதிச்சுப் போயிருக்கேன். உங்க அத்தனை பேரையும் வெட்டிப்போட்டுட்டு ஜெயிலுக்குப் போற மன நிலையில் இருக்கிறேன். மின்மயானத்துக்கு எப்படிப் போகணும்னு மரியாதையா சொல்லிடு”

மென்உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்காதவர்கள் உள்ளூர பயந்தவர்களாகவே இருக்கிறார்கள். ரௌத்திரத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை விட மனிதாபிமானத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் குறைவே.

மின்மயானம் பூட்டியிருந்தது. பாதி முகத்தை துணியால் மூடிக்கொண்டு வாட்ச்மேனிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“ஏங்க, இன்னைக்கு இருபது வயசுப் பொண்ணு… சுசின்னு பேரு. இங்க கொண்டு வந்தாங்களா?”

“நீங்க யாரு தம்பி?”

“இல்ல… போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னாங்க”

“அங்கிருந்துதான் வர்றீங்களா… ஆமாங்க, அஞ்சு அஞ்சரை மணியிருக்கும். போலீஸ்காரங்க பாடிய எடுத்துட்டு வந்து இங்கதான் வந்து காரியம் பண்ணிட்டு சாம்பலை வாங்கிட்டுப் போய்ட்டாங்க. பேரு சுசின்னு தான் சொன்னாங்க. ஏக்ஸிடன்ட் கேஸு”

இனி நான் எங்கே செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? போலீஸ் ஸ்டேஷன் சென்று சாம்பலை வாங்கி அழவேண்டுமா? இந்த மயானத்திற்குள் நுழைந்து மின்-மரணத்தை எதிர்கொள்ள வேண்டுமா?

“சின்ன பொண்ணு தம்பி, என்ன வாழ்க்கையோ என்னவோ போங்க ….” அவர் பேசப் பேச நான் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தேன். காரின் முன் சீட்டில் அமர்ந்து கண்ணாடியைப் பார்த்தேன்.

மிக நீண்ட பாலைவனத்தின் நிலப்பரப்பைப் போல மனமும், பாலைவனத்தில் வெம்மை கொண்டு புழுதியடிப்பதைப் போல குமுறலும் என் கண்களில் குடிகொண்டிருந்தது. கண்களின் வழியே மனதை அடைய முடியும் போல.

பயம், அவமானம், தோல்வி.. மூன்றும் ஆக்ரோஷத்தின் படிக்கற்கள். தெளிவு கொண்டவனாய் வண்டியை உயிர்ப்பித்து வந்த திசை நோக்கிப் பயணிக்கிறேன். வழியில் ஒரு கடையில் கூர்கத்தி, செதில்கத்தி, நீள்கத்தி என ஏழெட்டு கத்திகளை வாங்கிக்கொண்டேன். அருகில் இருந்த மருந்துக்கடையில் காயம் ஆற சில கழும்புகள் வாங்கிக்கொண்டேன். கூடவே கொஞ்சமாய் குளோரோஃபார்மும்.

காரில் அமர்ந்து அவைகளை உடைகளுக்குள் சொருகிக்கொண்டேன். அவனிடம் துப்பாக்கி இருக்கும். சென்றதும் சுதாரித்து அதை அபகரிக்க வேண்டும். இரவு உணவை ரோட்டோரக் கடையில் சாப்பிட்டு விட்டு மணி பார்த்தேன். பதினொன்று.

காரில் ஏறிப் பயணிக்க ஆரம்பித்தேன். மதம் கொண்ட யானையின் மனநிலை எப்படி இருக்குமென்று இப்போது என்னால் ஊகிக்க முடிகிறது. அந்த வீட்டின் முன் சென்று இரண்டு மணி நேரம் நோட்டம் பார்க்கிறேன். அவனைத் தவிர வேறு யாருமில்லை. இதுதான் சரியான தருணம்.

வீட்டிற்குள் நுழையும் முன் வீதியை ஒருமுறை பார்க்கிறேன். காலை என் இரத்தத்தைக் குடித்த இந்த வீதி இரவு முழுவதும் எனக்குக் காவல் புரியப் போகிறது.

காரின் பின் சீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த சாவிக்கொத்தில் ஒவ்வொன்றாய்ப் பொருத்திப் பார்க்கிறேன். நான்காவது சாவி கச்சிதமாய்ப் பொருந்தியது. முருகேசன் வீட்டுச் சாவி அவன் வீட்டுக் கதவைத் திறக்காமலா போய்விடும்?

குறட்டை சத்தம் படுக்கை அறையைக் காட்டிக்கொடுத்தது. கதவருகே சாய்ந்து கொண்டு அவன் உறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது.

ஆம், இவனிடமிருந்து பேச ஆரம்பிப்பதுதான் சரியாக இருக்கும். முன்நோக்கி நடந்தேன்.

**********

[பகுதி 10]

நள்ளிரவைக் கடந்திருந்தது.

முருகேசனைக் கட்டியிருந்த நாற்காலியின் விளிம்பிகள் இரண்டையும் கட்டிலுடன் பிணைத்துக் கட்டினேன். நானே நினைத்தாலும் கட்டுக்களை அவிழ்க்க பத்து நிமிடங்களாவது ஆகும். முருகேசனுக்கு நினைவு திரும்ப இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதுவரை என்ன செயவது?

அவன் வாயில் பிளாஸ்திரியைக் ஒட்டி விட்டு ஒவ்வொரு அறையாய்ச் சென்றேன். மொத்தம் ஏழு அறைகள். வீட்டினுள் நுழைந்ததும் ஹால், இடதுபுறம் சமையலறை மற்றும் உணவருந்தும் அறை. வலதுபுறம் எதிர் எதிரே இரண்டு படுக்கை அறைகள். மாடியில் பெரிய ஹால் மற்றும் ஒரு படுக்கை அறை. வீடு முழுவதும் சலவைக்கல் தோய்த்த தரை, தேக்கு மரத்திலான கதவு மற்றும் ஜன்னல்கள்.

ஒவ்வொரு அறையின் நீள அகலங்களை கணக்கிட்டுப் பார்த்ததில் மாடிக்குச் செல்லும் படிக்குக் கீழே ஒரு சின்ன அறை இருப்பது தெரிந்தது. அதன் சாவித்துவாரத்தில் கையை வைக்க கதவு மெல்ல உள்நகர்ந்தது. குனிந்துதான் செல்ல முடியும். தலையை உள்ளே நுழைத்து எட்டிப் பார்த்தேன். பழைய சாமான்கள், சில புகைப்படங்கள், சாமி படங்கள் தென்பட்டன. இங்கே புதையல் வைத்திருக்கும் அளவிற்கு இவன் அறிவாளியாய் இருக்க முடியாது.

முருகேசன் பணக்காரன். ஆனால் மூடன். நிச்சயம் இவ்வீட்டில் ஏதாவது தட்டுப்படும். என் மனம் ஆறும்படி ஏதாவது வேண்டும். இவன் ஆணிவேரை அசைக்கும் ஒரு சின்ன துரும்பாவது வேண்டும். வீடு முழுக்கத் தேடினேன். பணம், நகை, பத்திரம், வாக்குமூலம், தடயம்… சில மணி நேர தேடலுக்குப் பின் இவை அத்தனையுமே கிடைத்தன. எண்ணங்கள் பரபரவென்று ஓடியது.

முருகேசன் அறைக்குள் சென்று அவனைப் பார்த்தேன். நீ எழும் போது உன் பணம் அழும்.

வயிற்றை என்னவோ செய்வது போலிருந்தது. குளியலறைக்குள் சென்று உமிழ்ந்தேன். எச்சில் முழுவது இரத்தம். மூக்கிலும் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

அதிகாலை மூன்று மணி.

முருகேசனின் சன்னமாய் முனகியபடி கண்விழித்தான். இறுகக் கட்டியிருந்ததில் கை கால்களில் இரத்த ஓட்டம் குறைந்து வலி சுண்டியிழுத்தது. அவனைச் சுற்றிலும் காகிதங்களும் துணிகளும் கிடந்தன. அவசர அவசரமாய்க் கட்டிலைப் பார்த்தான். அதில் படுக்கை இல்லாததைக் கண்டதும் முகம் சுருங்கியது. அறை சல்லடையாய் சலிக்கப்பட்டிருந்தது.

அறைக்குள் எட்டிப் பார்த்தேன். “அடடே, முழிச்சுட்டியா முருகேசு. ஆமா, இந்தப் பதினைஞ்சு லட்சம் எப்படி வந்தது?”

அவன் பேசிய கெட்டவார்த்தைகளை வாயிலிருந்த பிளாஸ்திரி அவன் வாய்க்குள்ளேயே திரும்பவும் செலுத்தியது.

“ஓ… பேசணுமா? பேசலாம் பேசலாம். அதுக்குத்தானே வந்திருக்கேன்”

அவன் முனகல் நிற்கவில்லை. மெல்ல நடந்து அவன் அருகே சென்றேன். நாற்காலியைத் தள்ள அவன் கைகால்கள் போராடிக் கொண்டிருந்தது. மண்டியிட்டு அமர்ந்தேன். அவன் முகமும் என் முகமும் நேருக்கு நேர் இருந்தது. அவன் கண்கள் பயத்தைக் காட்டிக்கொடுத்தது. பயத்தை மறைக்க மட்டுமே தைரியம் தேவைப்படுகிறதோ? முதுகில் இருந்த துப்பாக்கியை எடுத்து முருகேசன் வாயிலிருந்த பிளாஸ்திரியில் வைத்தேன்.

“ஷ்ஷ்… சத்தம் போடாம இரு முருகேசு, இப்ப நான் பிளாஸ்திரியைக் கழட்டப் போறேன். வாய்க்குள்ள துப்பாக்கி குண்டு போய் பின் மண்டை வழியா அது தெறிச்சு உன் வீட்டு சுவத்தையெல்லாம் இரத்தக்கரை செய்யணும்கிற ஆசை இருந்துச்சுன்னா.. சத்தம் போடு, இல்லைன்னா.. அமைதியா ரெண்டு பேரும் பேசலாம். சரியா?”

கொஞ்சம் கொஞ்சமாய் முனகல் குறைந்து அமைதியானான். இன்னொரு நாற்காலியை இழுத்து அவனுக்கு முன்னால் அமர்ந்துகொண்டேன்.

துப்பாக்கியை மீண்டும் முதுகில் வைத்துக்கொண்டு முருகேசன் வாய்க்கட்டை அவிழ்த்தேன். “இந்த பதினைஞ்சு லட்சம் எப்படி வந்தது?” பணக்கட்டுகளைக் காண்பித்து மீண்டும் கேட்டேன்.

“நான் சம்பாதிச்ச பணம் அது. யாரையும் ஏமாத்தல. உன்ன மாதிரி திருடவும் இல்ல. அத எடுக்கத்தானே வந்தே? எடுத்துட்டுப் போ”

“அது சரி. இந்தப் பணம் எப்படி வந்ததுன்னு சொல்லு… தெரிஞ்சுக்குவோம்”

“என்னோட வியாபாரம் ரியல் எஸ்டேட். அதுல சம்பாதிச்ச பணம்”

“ம்ம்… ரியல் எஸ்டேட்… எவ்ளோ பர்சன்ட் கமிஷன்?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு? எதுக்காக இங்க வந்தியோ அதை எடுத்துட்டுப் போ”

“அதுக்காகத்தான் கேட்கிறேன். எவ்வளவு பர்சன்ட் கமிஷன்?”

“பதினைஞ்சு பர்சன்ட்”

“இந்த மாதிரி மாசத்துல எத்தன இடம் கைமாத்தி விடுவே?”

“ஒண்ணோ இரண்டோ”

“என்னா முருகேசு? பீரோக்குள்ள இருநூறு முந்நூறு பத்திரம் கொடேஷன் எல்லாம் இருக்குது.”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு? எவ்ளோ பணம் வேணுமோ எடுத்துட்டுப் போ”

“பணத்தை எடுத்துட்டுப் போகத்தான் வந்திருக்கேன். ஆனா அத விட முக்கியம், நான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நீ சரியான பதில் சொல்லணும்”

“உனக்கு என்ன வேணும்?”

“இப்போதைக்கு பதில்… இந்த ஒரு மாசத்துல உன்னோட கலெக்ஷன் எவ்வளவு?”

“இருபது இருபத்தைந்து லட்சம் இருக்கும்”

“இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் நடுவுல இருக்குற பணத்துல நூறு குடும்பம் பிழைக்குமே. இத்தனை பணத்தை வச்சு என்ன பண்றே? கார், பங்களா, எஸ்டேட்… எல்லாம் ஒன்னுக்கு பத்தா வாங்கிப் போட்டு அப்பப்ப மட்டும் அனுபவிக்க வேண்டியது, இல்ல? தெரியாமத்தான் கேட்கிறேன், அப்படியும் பத்தாம இன்னும் பணம் பணம்னு ஏண்டா திரியறீங்க?”

“இதோ பார்… என்னோட சொத்துக்களை நான் அனுபவிக்க யாருக்கும் நியாயப்படுத்த வேண்டியதில்லை. இது ஜனநாயக நாடு. அதெல்லாம் என்னோட சொந்த சம்பாத்தியத்தில வாங்கினது”

“ஜனநாயகமா? அதெல்லாம் வெறும் அரசியல்வாதியின் வார்த்தை. இப்ப நாம இருப்பது முதலாளித்துவ சர்வாதிகார சமுதாயம். இங்க மரியாதையும் அங்கீகாரமும் வருமானத்தின் விகிதாச்சார முறையில் பங்குபோடப்படுது. உன்கிட்ட இருக்கிற சொத்துக்கள் எல்லாம் நீ திருடியது முருகேசு”

“நான் வெறும் வியாபாரி. எப்போ எந்த மாதிரி தொழில் செய்யனும்னு தெரிஞ்ச வியாபாரி. அப்படி சம்பாதிச்சதுதான் இதெல்லாம். தவிர, இது பொதுவான விஷயம். யார் வேண்டுமானாலும் இந்த மாதிரி தொழில் தொடங்கலாம். சம்பாதிக்கலாம். இது அவங்க திறமை சம்பந்தப்பட்டது”

“தனுஷ்கோடியில நிறைய மக்கள் தினமும் பதினாலு மணி நேரம் உழைக்கிறாங்க. அவங்க மாத வருமானம் ஆயிரத்தி ஐநூறு ருபாய்.  அவங்களுக்கும் தொழில் செய்யும் திறமையோ சம்பாதிக்கும் திறமையோ இருக்குமோ என்னமோ. ஆனா அவங்களுக்கு சொந்தமா வீடு கிடையாது. வாடகை வீடு கூட கிடையாது. கடற்கரை மணல்ல கூரை போட்டு உள்ள குடும்பமே வாழ்றாங்க”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. நான் தனுஷ்கோடியில பிறக்கலையே”

“ஆனா நீ நினைச்சா அவங்க வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். அவங்களை படிக்க வைக்க முடியும். தொழில் வச்சுக் கொடுக்க முடியும். இல்லை அரசியலுக்கு வரவழைக்கலாம். விவசாயம் செய்யச் சொல்லலாம். கடனுதவி பண்ணலாம்”

“இதெல்லாம் தீர்வில்லை. புரட்சிகரமா பேசறது வேற, நடைமுறை வேற. இப்படி எல்லா ஊருக்கும் செஞ்சா நாடு பொருளாதார சிக்கலில்தான் போய் முடியும்”

“அவங்க ஏழையாவே இருப்பதுதான் உங்களுக்கு சௌகரியம். அவங்களையும் அவங்க உழைப்பில் உருவாகிற பொருட்களையும் குறைஞ்ச விலைக்கு வாங்கணும், அதானே? இது ஒரு அடிப்படைக் கோட்பாடுதானே. கீழ்தட்டு மக்களின் உயிரைத் தவிர மற்ற எல்லாத்தையும் உறிஞ்சு எடுத்துட்டா எதிர்வினையையே மறந்து போவார்கள்”

“நானும்தான் அனாதை ஆசிரமத்திற்கு உதவி செய்றேன். கோவில் பொதுசொத்துன்னு வந்தா நிறைய உதவிகள செய்றேன். கார்கில் போர் வந்தப்ப கூட பத்தாயிரம் ருபாய் அனுப்பிச்சேன் தெரியுமா?”

“அதெல்லாம் வேற. சமுதாயத்தை அழவிட்டு பின்பு அதன் கண்ணீரை துடைப்பது போல. சரி அத விடு, இந்த பதினைஞ்சு லட்சத்துல உன்னோட உழைப்பு என்ன?”

“அதான் சொன்னேனே, ரியல் எஸ்டேட்”

“நீ ஒரு இடத்தை வாங்கி அத இன்னொருத்தருக்கு கொடுக்கிறாய். இது உழைப்பு இல்ல. உழைப்புன்னா பணம் பொருளா மாறி அந்தப் பொருள் திரும்பவும் பணமா மாறணும். பணம் பணமா மட்டுமே மாறினா அது தொழில் இல்லை”

“அரசாங்கமே இத லீகல்னு சொல்லுது. உனக்கு தப்புன்னு தோணினா அது உலகத்துக்கே தப்பாயிடுமா? சும்மா வெளில இருந்து பார்க்கிறவங்களுக்கு அப்படித்தான் தெரியும். உள்ள வந்து பாரு, ஒருத்தனிடம் பணம் வாங்கறது, பத்திரம் பதிவு செய்றது எவ்வளவு கஷ்டம்னு அனுபவிக்கிறவனுக்குத்தான் புரியும்”

“ம்ஹும்.. உனக்குப் புரியல. இப்போ, ஒரு இடத்துல இருந்து பணத்தையோ பொருளையோ வாங்கி அத அப்படியே இன்னொரு பக்கம் குடுக்கற. இதுக்கு நடுவுல உன்னால அந்தப் பொருள் ஏதாவது மாற்றமோ அர்த்தமோ ஆயிருக்கா? இல்லையே! இப்படி உடல் உழைப்பும் இல்லாம ஆக்கப்பூர்வமாகவும் இல்லாம மாசம் இருபது லட்சம் சம்பாதிக்கற ஒரு தனி மனுஷன் இருக்குற அதே நாட்டுலதான் மண்ணை களிமண்ணாக்கி, களிமண்ணை பானையாக்கி, அதுக்கு வர்ணம் கொடுத்து பிழைக்கிற ஒரு குடும்பத்தோட மாத வருமானம் இரண்டாயிரம்தானே! இருபது லட்சம் எங்கே, இரண்டாயிரம் எங்கே? அவனோட உழைப்பு எங்கே, உன்னோட உழைப்பு எங்கே? குற்ற உணர்ச்சியா இல்லை?”

“சில தொழிலில் பணம் அதிகமா இருக்கும், ரிஸ்க்கும் அதிகமா இருக்கும். சில தொழிலில் பணம் குறைவா இருக்கும். ரிஸ்க்கும் குறைவு. ஒவ்வொரு மனுஷனும் தனக்காகத்தான் சம்பாதிக்கிறான். நானும் அப்படித்தான். இப்ப உனக்கு என்ன வேணும்?”

அவனை நோக்கிச் சென்றேன். “பேசினது போதும், இல்லையா? ஃபைன்… சுவிட்சர்லாந்துக்கு ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு?” சில வங்கித்தாள்களை அவன் முகத்தில் விட்டெறிந்தேன்.

“கார்கிலுக்கு பத்தாயிரம் கொடுத்த பெரிய மனுஷா… நீ உழைச்ச உழைப்பு இன்னைக்கு இரண்டு மில்லியன் டாலரா ஸ்விஸ் பேங்க்ல இருக்கு. அந்த வங்கியின் வெப்சைட், உன்னோட யூசர்நேம் ரெண்டும் இந்த லேப்டாப்ல தெரியுதா.. இப்ப உன்னோட பாஸ்வேர்ட டைப் பண்ணு, எனக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துக்கறேன்”

அவன் கண்கள் அகல விரிந்து உடம்பு நடுங்கியது. “டேய்… உனக்கு எத்தனை லட்சம் வேணும்.. நான் தர்றேன், ஒரேயடியா அத்தனை பணத்தையும் எடுக்காதடா. என் பாட்டன் முப்பாட்டன் சம்பாதிச்ச பணமெல்லாம் அதுல பரம்பரை சொத்தா இருக்குது”

முருகேசன் வாய்க்குள் துப்பாக்கியை திணித்தேன். “டேய்… நீ எப்படிப்பட்டவனோ எனக்கு முழுசாத் தெரியாது. ஆனா நான் இப்ப பைத்தியம் பிடிச்ச மனநிலையிலதான் சத்தியமா இருக்கேன். துப்பாக்கிய மேல தூக்கி வைக்காம ஏன் ஓரமா வச்சிருக்கேன் தெரியுமா? மேல வச்சு சுட்டா குரூரம் புடிச்ச உன் மூளை தெரிச்சு சீக்கிரமா செத்துப்போயிருவ. இப்படி வச்சு சுட்டா வாய் கிழிஞ்சு வலது காதுக்கு பக்கத்துல இருந்து குண்டு வெளிய வரும். அப்பவும் பாஸ்வேர்ட் வரலைன்னா இடது பக்கமா சுடுவேன். இடது பக்கமா சதை பொத்துக்கிட்டு வரும். அதுக்கு அப்புறமாவும் சொல்லலைன்னா, எதுவும் பண்ண மாட்டேன். விட்டுட்டு போயிடுவேன். நீ சாகக்கூடாது, ஆயுசுக்கும் அந்த வேதனையோட இருக்கணும்.”

அசைவற்றிருந்தான். மனிதனுக்கு மட்டுமே உண்டான அசட்டுத் துணிச்சல் அது. கண்கள், முகம், உடம்பு, மூளை என அத்தனையும் வரவிருக்கும் அபாயத்தைச் சொன்னாலும் அகம் என்னும் மனம் கொண்டவர்கள் அதன் வீரியத்தை மட்டுமே நம்புவார்கள்.

துப்பாக்கியின் விசையை இழுத்துவிட ஒரு கணம் எத்தனித்து பின் வெளியே எடுத்தேன். தன் ஆங்காரம் வென்றதாய் நினைத்து முருகேசன் புன்னகைத்தான்.

வெறியை அடக்க அவசர அவசரமாய் என் மூளை யோசித்தது. கட்டிலில் இருந்த தலையணையை எடுத்துக்கொண்டு அவன் முன் வந்தேன். பிளாஸ்திரியால் வாயை மீண்டும் மூடினேன். தலையணையை அவன் தொடை மீது வைத்து துப்பாக்கியை அதன் மேல் வைத்து அவன் கண்களைப் பார்த்தேன். சுடப்போகிறேன். அப்போது அவன் முகம் எப்படி விகாரமாக மாறும் என்கிற குரூரமான ஆர்வம் மேலிட்டது. துப்பாக்கியின் விசையை இழுத்ததும், தோட்டா தலையணைக்குள் நுழைந்து சன்னமாய் ஒலி எழுப்பியது.

முருகேசன் தொடையிலும் கண்களிலும் ஒரே சமயம் நீர் பொங்கியது. தொடையில் குருதிநீர். கண்களில் கண்ணீர். வலி தாங்க முடியாமல் தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டினான். முனகல் சத்தம் மெல்ல அதிகரிக்க வாயில் இருந்த பிளாஸ்திரியைக் கழற்றி துப்பாக்கியை வாய்க்குள் திணித்தேன். துப்பாக்கியை பற்களால் கவ்விக்கொண்டு மீண்டும் அழலானான். மறு கையால் தலையணையை வெளியே எடுத்ததும் இரத்தம் பீறிட்டு மேலெழும்பியது. சிவப்பு. சிவப்பு.

தலையணையை திருப்பி மறு தொடையில் வைத்து துப்பாக்கியை அதன் மேல் அழுத்தினேன். “நீ முரண்டு புடிக்கறதுல அர்த்தம் இல்லை. ஏதாவது ஒரு விதத்துல எனக்கு நியாயம் வேணும். நீ  பாஸ்வேர்ட் சொல்லிட்டா எனக்கு வேண்டிய அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவேன். உன்னை எதுவும் செய்யமாட்டேன். இல்லைனா, கண் முன்னால தெரியற உடனடித் தீர்வு உன்னை கொல்றது மட்டும்தான்”

முருகேசன் முகத்தில் சொட்டுச்சொட்டாய் வியர்வை துளிர்த்தது. பாஸ்வேர்டை அழுத்தினான். அவன் வங்கிக் கணக்கின் கட்டுப்பாடகத்திற்குச் சென்றது. மடிக்கணிணியை இழுத்துக் கொண்டேன்.

“ஹலோ… டாக்டர் இருக்காருங்களா?”

“…”

“ஆமாங்க, இது ரியல் எஸ்டேட் முருகேசு சாரோட போன் தான். அவரு வீட்டுக்கு ஒரு சின்ன வேலையா வந்தேன். வந்த இடத்துல சின்ன பிரச்சனையாகி துப்பாக்கில சுட்டுட்டேன்”

“…”

“நானா? நான் யாருன்னு சொல்லிட்டு இருந்தா அவர காப்பாத்த முடியாதுன்னு நினைக்கிறேன். நீங்க ஒண்ணு பண்ணுங்க, சீக்கிரமா ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பி வைங்க. அவருக்கு நினைவு வந்த பின்னாடி என்னை பத்தி விலாவாரியா சொல்லுவார்”

“…”

“ஆமாமா.. அதே வீடுதான்”

“…”

“இல்லை இல்லை, நான் வந்த வேலை முடிஞ்சுது, கிளம்பிட்டேன்”

டொக்.

“எல்லாம் முடிஞ்சுது முருகேசு. கவலைப்படாதே, நாளைக்கு உன்னோட பேரு பிபிசி சேனல்ல வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. என்னா மேட்டர்னு கேக்கறியா? நல்ல விஷயம்தான், காலைல தெரிஞ்சுக்குவே. ஆனா ஃபுல் க்ரெடிட் சத்தியமா உனக்குத்தான் வரும்.”

துப்பாக்கியையும் ஜெர்மானிய கார் சாவியையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். அடிவானத்தில் வீற்றிருந்த இளஞ்சூரியன் பொங்கி வந்து என்னை அரவணைத்துக் கொண்டது. ஆதவனின் செவ்வடிவம் வெட்கத்தால் நாணும் சுசியின் முகத்தை ஒத்திருந்தது.

[முற்றும்]