Monthly Archives: April 2009

142 வருட பழமையான தத்துவம்

das-kapital

வேறென்ன சொல்ல?


இன்றைய தேவை
மார்க்ஸ் என்னும் மேதை.

கடை நிலை வரும் முன்
கம்யூனிசம் வரட்டும்.
Advertisements

ஸுஸ்ஸூ

இன்று மதியம் சுமார் மூன்று மணியளவில் அலுவலக கழிவறைக்குள் நுழைந்தேன். எப்போது எந்த கழிவறைக்குள் சென்றாலும் முதலில் கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியைக் கோதிக் கொள்வேன். முடித்து திரும்பி வரும் போது இன்னொரு முறை. ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும் முன்பும் கூட தலைமுடி சீவுதல் என் பழக்கம். ஏனென்று கேட்காதீர்கள், தெரியவில்லை.

நிற்க. தலைமுடியைக் கோதிக்கொண்டே எதேச்சையாக இடது பக்கம் திரும்பினேன். என் மேலாளர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். என்னை விட பதினைந்து வயதிற்கும் மேல் மூத்தவர். தொழில் நெறி சம்பந்த உறவுகளில் மட்டும் எங்களுக்குள் நல்ல தொடர்புண்டு. தனிப்பட்ட முறையில் மிகக் குறைவான பழக்கம் மட்டுமே. இரண்டிலுமே, அவரிடம் நான் கொஞ்சம் பம்முகிற வகை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இடது பக்கம் திரும்பி அவர் முதுகைப் பார்த்தவுடன் கூச்சமாக இருந்தது. அப்படியே திரும்பி ஓடிவிடலாமா என்று பார்த்தேன். ச்சே… ச்சே… அது நாகரிகமாக இருக்காது. மேலும், இதென்ன செய்யக் கூடாத காரியமா, எதற்கு கூச்சம் என்றெண்ணி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஏதோ தவறு நடக்கப் போகிறதென்று மட்டும் மனம் அடித்துக் கொண்டது.

உள்ளிருந்த நான்கு இயந்திரத்தில் இரண்டை பசை நாடாவிட்டு மூடியிருந்தார்கள். சதிகாரர்கள். அவர் பக்கத்தில் மட்டுமே இடம் காலியாக இருந்தது. அருகில் சென்று நின்று கொண்டு மிகவும் மெலிதான ஒலியெழுப்பி இறுமினேன். ஒன்றும் செய்யாமல் இருந்தால் கண்டு கொள்ளவில்லை என்று நினைத்துக் கொள்வாரோ என்கிற எண்ணம்.

அவர் திரும்பிப் பார்த்து, ‘ஹாய் ஜெகதீஷ்’ என்றார்.

ஈ காண்பித்தேன்.

‘ஹௌ ஆர் யூ’, படு சாதரணமாக கேட்டார்.

நான் தான் சங்கோஜத்தில் நெளிந்து கொண்டிருந்தேன். ‘மீ? ஓ.. ஃபைன்.. ஃபைன்’ என்றேன்.

கால்சட்டையின் இறுக்கத்தை மெதுவாக கழட்டி தயாரானேன். ஆனால், ‘அது’ வருகிற மாதிரி அறிகுறியே இல்லை.

சரியாக மூன்று விநாடிகள் கழித்து, ‘ஸோ, ஹௌ ஆர் திங்ஸ்?’ என்றார்.

நான் குழம்பிப் போய் கீழே பார்த்தபடி, “ஐ கெஸ் தே ஆர் ஃபைன்’ என்றேன். அவர் தெரியாமல் கேட்டு விட்டாரா, இல்லை நான் தவறாக குனிந்து விட்டேனா என்று புரியவில்லை.

அவர் முடிக்கும் தறுவாய்க்கு வந்து விட்டார். எனக்குத்தான் வருகிற மாதிரியே தெரியவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தேன். ம்ஹும். பேசாமல் திரும்பி ஓடிப் போயிருக்கலாமோ? சரி பரவாயில்லை, இன்னும் சற்று நேரத்தில் அவர் போய்த்தானே ஆக வேண்டும் என்றெண்ணி சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவரோ வேலையை முடித்து விட்டு எனக்காக‌ காத்திருக்க ஆரம்பித்து விட்டார். நொந்து போய்விட்டேன்.

‘ஹௌ இஸ் பிஸ்னஸ் இன் திருப்பூர் ஜெகதீஷ்? ஐ ஹெர்ட் தட் இட் இஸ் ஏஸ் வொர்ஸ்ட் ஏஸ் ஐ.டி.’ என்றார்.

எனக்கு நன்றாக வியர்த்து விட்டது. ‘யா.. தட்ஸ் ட்ரூ’ என்றேன்.

இன்னும் ஒரு சொட்டு கூட வந்த பாடில்லை. என் பாழாய்ப்போன புத்திக்கு அப்போது தான் உரைத்தது. நான் வந்தது சிறுநீர் கழிக்க அல்ல, அதை விட பெரிய சமாச்சாரத்திற்கு! கண்ணாடியின் வலது பக்கம் திரும்புவதற்கு பதில் மறந்து போய் இடது பக்கம் திரும்பிவிட்டேன்.

இப்போது எல்லாம் முடிந்து விட்டது போல பாவ்லா காட்டவும் முடியாது. நான் நின்று கொண்டிருந்தது ஒரு தானியங்கி இயந்திரத்தின் முன்பு. கொஞ்சமாவது ‘முடித்து’ விட்டு நகர்ந்தால் தான் அது நீரிட்டு சுத்தப்படுத்தும்.

இதற்கு ஒரே வழிதான். அவர் செல்லும் வரை எங்கும் நகர்வதில்லை என்று முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் ஆகி விட்டது. பெரிய சமாச்சாரம் வேறு காத்துக் கொண்டிருந்தது. எங்கும் அசையாமல், எதுவும் நடக்காமல் நின்று கொண்டிருந்தேன். இப்போது அவர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன்.

சற்று நேரத்தில் அவரே, ‘ஹேய், ஆர் யூ ஓ.கே?’ என்றார்.

நான், ‘யா.. யா.. வுட் யூ ப்ளீஸ் கேரி ஆன். ஐ வில் ஜாய்ன் யூ லேட்டர்’ என்றேன்.

‘ஷ்யூர்’ என்றபடி வெளியே சென்று விட்டார்.

கதவு மூடும் ஒலி கேட்ட மறு விநாடி பாய்ந்து போய் வேறொரு அறைக்குள் சென்று தாழிட்டேன். வந்த வேலை பத்து நிமிடத்தில் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்தேன். கண்ணாடியில் முகம் கழுவி, பின் துடைத்து தலை முடி சீவினேன். மேல் சட்டையை கால் சட்டைக்குள் திணித்து ஒழுங்கு படுத்தி விட்டு வெளிக்கதவின் திருகாணிக் கைப்பிடியை இழுத்துத் திறந்தேன்.

‘ஷல் வீ  கோ நௌ …’ என்று மேலாளர் என்னைப் பார்த்து பொறுமையாகக் கேட்டபடி நின்றிருந்தார்!

முன்னொரு காலத்திலே ஆலமர வீதியிலே

எனக்கு ஒன்பது வயதிருக்கையில் நடந்த சம்பவம் இது.

எங்களுக்கு தெரிந்த பழைய பேப்பர் கடைக்காரர் ஒருவர் காலி பாட்டில்களைக் கொண்டு போய் கொடுத்தால் அதன் தகுதிக்கேற்ப நாலணா, எட்டணா என்று காசு கொடுப்பார். எட்டணாவிற்கு ஸ்பெசல் பால் ஐஸ் வாங்கி சாப்பிடலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, என் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டிலும் அருகிலுள்ள வீடுகளிலும் சில காலி பாட்டில்களை சேகரித்துக் கொண்டோம். பால் ஐஸ் கனவுகளுடன் நான், என் நண்பன் சாமிநாதன், முத்து அண்ணா மூன்று பேரும் பழைய பேப்பர் கடையை நோக்கி சென்றோம். கடைக்கு எங்கள் வீதியைக் கடந்து அரை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

வழியில் மிகப் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அம்மரத்திற்குப் பின்னால் ஏழெட்டு வீடுகள் இருந்தன. மரத்தின் அருகில் வந்ததும் சாமிநாதனைப் பார்த்தேன். “டேய் சாமி, எத்தனை பாட்டில் இருக்குது?”

“பதி்னெட்டு பாட்டில் டா”, சாமிநாதன் ஆர்வத்துடன் சொன்னான்

“பாட்டிலுக்கு பத்து காசுன்னு போட்டாக்கூட ஒர்ருவா எம்பது காசு ஆச்சு. ஐஸ் வாங்கிட்டு மிச்சக் காசுக்கு தேன் மிட்டாய் வாங்கிக்கலாம்”.

அவனிடமிருந்த பையைத் திறந்து பார்த்து பாட்டில்கள் உடையாமல் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசி விட்டு பயணத்தை தொடர்ந்தோம். தெருவின் முனைக்குச் சென்று ஐஸ் கடையை பார்த்தபடியே கடந்து சென்றோம். ஆவலுடன் அடுத்த கடையான பழைய பேப்பர் கடையை பார்க்க, அது பூட்டியிருந்தது!

சற்று நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். “இப்ப என்ன பண்றது?” என்றேன்.

சாமிநாதன் தான் யோசனை சொன்னான். “டேய், பிஷப் ஸ்கூல் பக்கத்துல ஒரு பேப்பர் கடை இருக்கு, அங்க போய் பாக்கலாமா?”

“அங்க பாட்டில் வாங்கிட்டு காசு தருவானா?”

“தெரியல. போய் பார்ப்போம்”.

மேலும் அரை கிலோமீட்டர் நடந்து அந்த கடையை அடைந்தோம். கடை திறந்திருந்தது. நான் தான் “அண்ணா” என்றேன். பீடி குடித்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தவர் திரும்பி என்ன என்பது போல எங்களை பார்த்தார். “பாட்டில் இருக்குதுங்னா. வாங்கிட்டு காசு குடுப்பீங்களா” என்றேன். புருவம் நெருக்கி பார்வையை விலக்கிக் கொண்டு இல்லை என்பது போல கையை அசைத்தார். பெரும்பாலான கடைக்காரர்கள் சைகையால் மட்டுமே பேசுகிறார்கள்.

“நீங்களா பார்த்து ஏதாவது குடுங்கண்ணா”, என்றேன். தேன் மிட்டாய் போனால் போகிறது. ஐஸ் மட்டுமாவது கிடைக்குமா என்று பார்ப்போம்.

கீழே இறங்கி வந்து பையை வாங்கி உள்ளே பார்த்தவர், “நாப்பது காசு தரலாம்” என்றார்.

“ஒரு பாட்டிலுக்குங்களா” ஆவலுடன் அவரைப் பார்த்தேன்.

திரும்பி என்னை முறைத்தார். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, “மொத்தமா சேர்த்து” என்றார்.

ஒரு ஐஸ் கூட வாங்க முடியாது. நான் முத்து அண்ணாவை பார்க்க அவர் “போகலாம்” என்றார். திரும்பி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம். வரும் போது இரண்டு கைகளிலும் பிடித்தபடி இடுப்பிற்கு மேல் பத்திரமாக இருந்த பை இப்போது கனமாக தெரிந்தது. ஆலமர வீதியருகில் வந்ததும் சாமிநாதன் ஓடிப்போய் பேப்பர் கடை திறந்திருந்ததா என்று பார்த்தான். ம்ஹும்.

ஆலமரம் வரை ஆளுக்கொரு திசையை பார்த்தபடி நடந்தோம். மரத்தை நெருங்கியவுடன் சாமிநாதன் கீழே இருந்த ஒரு கல்லை எடுத்து வி்ழுதொன்றின் மீது வீசினான். வெறுப்பை எதன் மீதாவது காண்பிக்கும் வரை அது நம்மை அரித்துக் கொண்டே இருக்கும் போல. நான் உற்சாகமாகி பையை கீழே வைத்து விட்டு இன்னொரு கல்லை எடுத்து வீசினேன். அது கிளையில் பட்டு ஒலி எழுப்பியது. மூவரும் கற்களை எடுத்து வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்று மாறி மாறி எறிய ஆரம்பித்தோம். கற்கள் தட்டுப்பாடாகிப் போனதும் முத்து அண்ணா பையை நோக்கி ஓடினார்.

பையினுள் இருந்து ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பெருமிதத்துடன் எங்களை பார்த்தார். நானும் சாமிநாதனும் முத்து அண்ணாவை பார்த்தபடியே நின்றிருந்தோம். வெறி கொண்டெழுந்த அவர், “நமக்கு ஐஸ் வாங்கிக் கொடுக்காத இந்த பாட்டில் உயிரோடவே இருக்கக் கூடாதுடா” என்றபடி பாட்டிலை தூக்கி வீச அது அடிமரத்தில் பட்டு வகை வகையாய் ஒலி எழுப்பி சுக்கல் சுக்கலாய் சிதறித் தெறித்தது. சாமிநாதன் “ஓ… ஓ…” என்று மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தான். ஓடிப்போய் தன் பங்குக்கு இரண்டு பாட்டில்களை எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு கையிலும் ஒரு பாட்டில் என்றபடி இரண்டு கைகளையும் காற்றில் வீச ஆரம்பித்தான். “ஏய்ய்ய்ய்…. ” என்று சத்தம் போட்டுக் கொண்டே ஒரே நேரத்தில் இரண்டையும் ஆலமரத்தை நோக்கி வீசினான். ஒன்று அடிமரத்தின் மீது விழுந்து சிதற மற்றொன்று மரத்தின் பின்னால் இருந்த கம்பி வேலி ஒன்றின் மீது பட்டுத் தெறித்தது.

ஒருவழியாக, பதினெட்டு பாட்டில்களும் ஆலமரத்தின் அடியில் ஐக்கியமாயின. மரத்தை சுற்றிலும் வண்ணமயமாய் கண்ணாடித் துகள்கள் மின்னியது. ஐஸ் சாப்பிட்டிருந்தால் கூட இவ்வளவு ஆனந்தம் அடைந்திருக்க வாய்ப்பில்லை. வெட்டி முறித்த மகிழ்ச்சியுடன் வெறும் பையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். நூறு மீட்டர் தொலைவில் கும்பல் ஒன்று எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தனர். நான் பின்னால் திரும்பி யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். ஒருவரும் இல்லை. கும்பல் நெருங்கி வர வர அனைவரும் நாற்பது முதல் ஐம்பது வரையிலான பெண்கள் என்று தெரிந்தது.

நான் முத்து அண்ணாவின் பின்னால் சென்று நின்று கொண்டு, “அண்ணா” என்றேன். அவர், “பயப்படாதே. நான் இருக்கேன்” என்றார்.

குண்டர் படை பக்கத்தில் வந்தவுடன் ஒருவருக்கொருவர் பார்த்தபடியே அரை வட்ட கோணத்தில் பிரிந்தனர். சற்று குழம்பிய நாங்கள், சுதாரித்து ஓடுவதற்குள் சுற்றி வளைத்து விட்டார்கள். கிட்டத்தட்ட பதினைந்து பெண்கள். ஐவருக்கு ஒருவர் என்று எங்களை பிடித்துக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “மாட்டினாங்களாடா, இத்தனை நாளா எங்க வீட்டு மேல கல்லெறிஞ்சது நீங்கதானே” என்றார்.

அவர்கள் சொன்னது புரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. துவம்சம் செய்ய போகிறார்கள். நான் மட்டும், “அக்கா.. அது நாங்க இல்லீங்க அக்கா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தேன். முத்து அண்ணாவும் சாமிநாதனும் அமைதியாக இருந்தனர்.

நான் திரும்பி முத்து அண்ணாவை பார்க்க அவர் கண்களை சுருக்கி ஏதோ சைகை செய்தார். நான் பயத்தில் நடுங்க ஆரம்பித்து நெடு நேரம் ஆகியிருந்தமையால் ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் சைகை செய்தவர் மிகு உணர்ச்சி கொண்டு சாமிநாதனை பார்த்து அதே சைகை செய்தார். அவன் உடனே புரிந்து கொண்டவனைப் போல இரு கைகளையும் வேகமாக உதறினான். அவனை பிடித்திருந்த பெண்களின் கைகள் விடுபட இரண்டு கால் பாய்ச்சலில் பறந்து விட்டான். மற்ற பெண்கள் “புடி.. புடி அவன” என்று சத்தம் செய்து கொண்டே எங்களை இறுக்கிப் பிடித்தனர். முத்து அண்ணா தன் வலது கையை தூக்கி ஒரு பெண்ணின் மணிக்கட்டைக் கடிதது விட்டார். அந்த பெண் ‘ஓ’வென்று சத்தம் போட முத்து அண்ணாவை பிடித்திருந்த மற்ற பெண்கள் பிடிகளை விட்டு விட்டனர். முத்து அண்ணாவும் என் கண் முன்னர் பாய்ந்து போய் விட்டார். மொத்த குண்டர் படையும் என்னை நோக்கி வந்தது.

கல்லெறிந்தவர்கள் மீதிருந்த எரிச்சல், சாமிநாதன் முத்து அண்ணா இருவரும் தப்பித்துப் போன கோபம் என எல்லாவற்றையும் என் மீது காண்பிக்க ஆயத்தமாயினர். இடுப்புடன் இடுப்பு ஒட்டி பதினைந்து பேரும் என்னைச் சுற்றி நின்றனர். ஆளுக்கு ஒன்றென இரண்டு பெண்கள் என் கையை திருகி என் முதுகையே சொறிய வைத்தார்கள். எப்பாடு பட்டாவது கைகளை விடுவிக்க முயன்றேன். தப்பித்து போக அல்ல. மன்றாடிக் கேட்க.

இயல்பாகவே கூட்டம், பெண்கள் என்றால் பயந்த சுபாவம் உடையவன் நான். அதுவரை சாதுவாய் அழுது கொண்டிருந்தவன் வீறு கொண்டு அழ ஆரம்பித்தேன். தலையையும் கால்களையும் பலம் கொண்ட மட்டும் ஆட்ட மற்றுமிரு பெண்களும் சேர்ந்து என்னை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டனர். அந்தரத்தில் ஆகாயத்தை பார்த்தவாறு மல்லாக்க படுக்க வைத்தனர். “ஆ…”, “ஆஆ ….., “அஅம்ம்மாஆஆ…” என வகை வகையாய் கூப்பாடு போட்டேன்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு சத்தத்தைப் பாரு. அக்கா, தூக்கிட்டு வீட்டுக்குள்ள வாக்கா”, என்று கீழிருந்து ஒரு குரல் எழும்பியது.

அத்தனை சத்தத்திலும் அந்த வாக்கியம் தெளிவாக கேட்டுத் தொலைத்தது. இதயத்துடிப்பின் கனத்தை உடம்பு முழுவதும் உணர்ந்தேன். அது வரை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் குபுகுபுவென வழிய ஆரம்பித்தது. அவர்கள் எதற்கும் மசியவில்லை. நான் தான் குற்றவாளி என்பதில் மிகத் தீவிரமாய் இருந்தனர். ஓட்டு வீடொன்றிற்குள் என்னை நுழைத்து ஒவ்வொருவராய் உள்ளே வந்தனர். ஒரு தூணிற்கு அருகில் நிற்க வைத்து சுற்றி நின்று கொண்டார்கள். அழுது வழிந்திருந்த என் கண்ணீர் முகத்தை முழுவதுமாக நனைத்து, கழுத்தின் கீழ் இறங்கி சட்டையெல்லாம் கூட ஈரமாகி விட்டிருந்தது. சிறிது நேரத்தில் அழுது புலம்பி ஓய்ந்து போனேன். விம்மல் மட்டுமே வந்து கொண்டிருந்தது. விம்மலுக்கு இடையில் “அக்கா.. அக்கா” என்று மட்டும் புலம்பிக் கொண்டிருந்தேன். அதற்கு மேல் பேச நா எழவில்லை. பயம் என்னை முழுமையாய் ஆட்கொண்டிருந்தது.

“இப்ப சொல்லுடா, தினமும் வீட்டு மேல கல்லெறியறது நீயும் உங்கூட்டாளிகளும் தானே?”

“இல்லீ..ங்கக்கா… இன்னைக்குத்தான்… பாட்டில வீசினோம்…. அதுவும்… மரத்து மேலதானுங்க்கா…”

“சும்மா புளுகாதடா … வீடு எங்க? ஓடக்காடு தானே”

“இல்லீங்க்கா… அடுத்த வீதியிலதான் இருக்கு”. அச்சுப்பட்டரைக்காரர் பேரன் என்று சொல்லியிருந்தால் ஊரில் எல்லோருக்கும் தெரியும். அந்த யோசனை எல்லாம் வரவில்லை.

கும்பலில் ஒருவர், “இவன் நெசத்த சொல்ல மாட்டான்டி. தூணுல கட்டிப் போட்டு நாலு சாத்து சாத்துனாத்தான் சொல்லுவான்” என்றார்.

சும்மா பயமுறுத்துகிறார்கள், சீக்கிரம் விட்டு விடுவார்கள் என்று உள் மனம் ஒரு ஓரத்தில் நினைத்துக் கொண்டிருந்தது. உண்மையிலேயே ஒரு பெண் கயிறை எடுத்து வர கதி கலங்கிப் போய்விட்டேன். இனிமேலும் அழுது பயனில்லை என்று என் மனம் நினைத்ததுபோலும். அது வரை ஓய்ந்திருந்த வீரம் பொத்துக் கொண்டு வர அழுகைக்கு பதில் கதற ஆரம்பித்தேன். அவர்களிடம் பிடிபடுவதற்கு சற்று முன்னரே ஒன்றுக்கு இருந்துவிட்டமையால் தப்பித்திருந்தேன். அவர்கள் எதற்கும் மசியாமல் தூணில் நிற்க வைத்து, கைகளை பின்னுக்கு இழுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் இணைத்தவாறு கட்டி விட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அழுதேன்.

“அக்காக்களே, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆள் நானில்லை. நான் பிஷப் பள்ளியில் நாலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றேன். தினமும் இந்த வழியாகத்தான் பள்ளிக்கு செல்வேன். இதற்கு முன் எந்தக் கல்லையும் ஐந்தடிக்கு மேல் வீசியதில்லை. இங்கிருக்கும் ஆலமரத்தில் இன்று தான் முதன் முறையாக கற்களை எறிந்து விளையாடினோம். நான் அடுத்த வீதியில் வசிக்கும் அச்சுப்பட்டரைக்காரரின் பேரன், கருணாம்பாள் மகன், ஜெகதீசன். சந்தேகம் இருந்தால் எங்கள் வீட்டிற்கு சென்று பாருங்கள்.”

இவ்வளவுதான். இதை சொல்ல வேண்டும் என்று தான் ஒரு மணி நேரமாய் முயற்சி செய்தேன். அழுகையும் கதறலும் பயமும் வெட்கமும் பிடுங்கித்திங்க ஒரு வரி கூட எழவில்லை. விம்மிக் கொண்டே இருந்தேன். கண்கள் சிவந்து நா வறண்டு போனது. பின்னங்கைகள் வலி எடுக்க ஆரம்பித்தன.

குண்டர் படை ஊர்க்கதை பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். என்னைப் பற்றி என்ன முடிவுக்கு வந்தார்களென்றே தெரியவில்லை. இப்படியே விட்டுவிடுவார்களா, வேறு எங்காவது அடைத்து வைப்பார்களா என்றெண்ணி மனம் பதைபதைத்தது. வெகு நேரம் கழித்து இன்னொரு அக்கா வந்தார். பார்த்தவுடன் தெரிந்து விட்டது. இவர் குண்டர் படையை சேர்ந்தவர் அல்ல. இருபதில் இருந்து இருபத்தைந்து வயதிருக்கும்.

என்னைப் பார்த்து, “நீ கருணாம்பக்கா பையன் தானே?” என்றார். நான் ஆமாம் என்பதைப் போல தலையசைத்தேன். என்னைத் தெரிந்த யாரோ வந்திருக்கிறார் என்றதும் சற்று தெம்பு வந்து மீண்டும் அழலானேன்.

அந்த அக்கா குண்டர் படையை உள்ளே அழைத்து ஏதோ பேசினார். வெளியே வரும்போது ஒவ்வொருவர் முகத்திலும் அசடு வழிந்தது. “ஹீ…” என்று ஒரு பெண்மணி பல்லைக் காட்ட, பல்லைக் காட்டியதை நினைத்து பயந்து போய் முகம் இறுக, அதை நான் பார்க்கப் போய் மீண்டும் பல்லைக் காட்டினார். கைகள் அவிழ்த்து விடப்பட்டன.

“காபி சாப்பிடறியப்பா”, என்னை தூணில் கட்டிப் போட்ட பெண் கரிசனத்துடன் கேட்டார். நான் வேண்டாம் என்பது போல தலையசைத்தேன்.

“சாரி தம்பி, தப்பு நடந்து போச்சு. நானே உன்னை வீட்டுல கொண்டு வந்து விடறேன்”, என்றார்.

“வேண்டாங்க்கா … நானே போய்க்கறேன்”, என்றேன். எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. சும்மா சொல்லி விட்டு வேறெங்காவது கொண்டு போய் கட்டிப் போட்டு விட்டால் என்ன செய்வது.

“தம்பி, வீட்ல சொல்லிறாதீங்க…”, என்றார்.

“சரீங்கக்கா.. நான் போய்ட்டு வர்றேன்”. அங்கிருந்து கிளம்புவதில் மட்டுமே குறியாய் இருந்தேன்.

“தம்பி, கோவமா இருந்தா சொல்லிருங்க. ஆம்பளைங்க வந்தப்புறமா உங்க வீட்டுக்கே வந்து மன்னிப்பு கேட்டுக்கறோம்”

“இல்லீங்க்கா…” என்றேன். முன்னர் பயத்தில் கோபம் வரவில்லை. இப்போது மகிழ்ச்சியினால் வரவில்லை.

வாசலை விட்டு வெளியே வந்து ஆலமர வீதிக்கு வந்ததும் தான் நம்பிக்கை பிறந்தது. மகிழ்ச்சியில் வெகு வேகமாய் ஓட ஆரம்பித்தேன். அவ்வப்போது திரும்பிப் பார்த்து யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். ஆலமர வீதி முடிவுற்று எங்கள் வீதியின் முனையில் திரும்பியவன் சட்டென நின்றேன்.

அங்கே சாமிநாதனும், முத்து அண்ணாவும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரமாய் நான் வருவேன் என்று ஆலமர வீதியையே பார்த்துக் கொண்டிருந்தார்களாம்!