Monthly Archives: July 2009

கல்லூரி வாசல்

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம்.

பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் வந்திருந்தேன். பெரியப்பாவிடம் சென்று காட்டினேன். அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் செந்தில்நாதனும் நானும் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். செந்தில்நாதன் காலகாலமாக வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன். அவனை விட நான் அதிக மதிப்பெண்ணா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவரும் அகமகிழ்ந்தார்.

அப்பாவின் மறைவுக்குப்பின் எங்களுக்கு எல்லாமே பெரியப்பாதான். திருப்பூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களில் ஒருவர். எந்த வகையில் அவர் பெரியப்பா ஆகிறார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. பெரியப்பாவிற்கு நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆர்வம். பள்ளியில் உயிரியல் பிரிவை எடுக்க வைத்து உயிரை எடுத்திருந்தார். அதன்மீது கொண்ட வெறுப்பின் காரணமாகக்கூடவோ என்னவோ, கணிப்பொறி அறிவியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு.

தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்பினேன். இரண்டு நாட்களுக்குப்பின் இனம்புரியாத பயம் ஏற்பட மீண்டும் ஒரு விண்ணப்பத்தை அனுப்பினேன். ஜூலை மாத செவ்வாய்க்கிழமை நாளொன்றில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. பெருமை.

நான் சில எண்ணங்களில் உறுதியாய் இருந்தேன். முதலாவதாக, என்ன ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப்தான். இரண்டாவது, விடுதியில் தங்கித்தான் படிக்க வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வது போரடித்திருந்தது. மூன்றாவது,  கோயமுத்தூரிலேயே ஒரு நல்ல கல்லூரியில் சேர வேண்டும். போரடித்தாலும் வாரம் ஒருமுறையாவது வீட்டிற்கு வந்து போக வேண்டும். நான்காவது, நிறைய சினிமா பார்க்க வேண்டும். கடைசியாக ஆனாலும் கண்டிப்பாக, கல்லூரியில் நிறைய ஃபிகர்களும் இருக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்லப்போனால், காலேஜ் என்றால் ஜாலி என்று சமூகம் எனக்கு சொல்லிக் கொடுத்திருந்தது.

நான், அக்கா, பெரியப்பா மூவரும் சென்னை செல்வதற்கான இரயில் பயணச்சீட்டை பெரியப்பா எடுத்திருந்தார். இரயில் பயணம் கனவுகளில் கரைந்தது. திங்கட்கிழமை காலை சென்னை வந்தடைந்த நாங்கள் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தோம். பல்கலைக்கழகத்திற்கு எப்போது போக வேண்டும் என்று பெரியப்பா கேட்டார். பத்தரை மணி என்று போட்டிருக்கிறது. பத்து மணிக்கு போனால் போதும் என்றேன்!

அடுத்த நாள் ஒன்பது மணியளவில் அறையை காலி செய்து ஆட்டோ பிடித்து பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தோம். பதற்றமாக இருந்தது. சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டே வந்தேன்.

“என்ன க்ரூப் எடுக்கப் போற‌?” என்றார்.

அவரிடம் பம்முவதில் நான் பி.ஹெச்.டி. பட்டம் வாங்கியிருதேன். “ங்” என்ற எழுத்தில்லாமல் பெரும்பாலான வாக்கியங்கள் முற்றுப் பெறாது.

“கம்ப்யூட்டர் சயின்ஸ்ங்…”

“எந்த காலேஜ்?”

“அது அங்க போய்த்தான் பாக்கனுங்…”

“டைம் இருக்குமா?”

“இருக்குங்”

கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் ஆட்டோ நுழையும்போது மணி பத்து. அன்றுதான் முதன்முதலாக ஒரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைகிறேன். அட்மிஷனை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது. மாணவர்களும் பெற்றோர்களுமாய் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருந்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தோம்.

சற்றுத்தள்ளி ஒரு பெரிய திரை ஒன்றை மக்கள் கூட்டம் உற்று நோக்கிக்கொண்டிருந்தது. பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு நான் மட்டும் கூட்டத்தின் அருகில் சென்றேன். திரையைக் கண்டதும் அதிர்ந்து போனேன். எந்தெந்த கல்லூரியில் எத்தனை இடங்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நேரடியாகக் காண்பித்துக் கொண்டிருந்தனர். நேரத்திலேயே வந்து இதையெல்லாம் பார்த்திருக்க வேண்டுமோ என்றெண்ணி மனம் பதைபதைத்தது.

அருகில் நின்றிருந்த ஒரு மாணவரிடம், “உங்களை எத்தனை மணிக்கு வரச்சொல்லி இருக்காங்க?” என்றேன்.

“அடுத்த வாரம் வியாழக்கிழமை” என்றார்.

அய்யய்யோ!

“ஏன் இப்பவே வந்திருக்கீங்க?” என்று சற்று கோபத்துடனேயே கேட்டேன்.

“இப்பவே நோட் பண்ணி வச்சாதாங்க நெக்ஸ்ட் வீக் கோர்ஸ் செலக்ட் பண்ண முடியும்” என்றான்.

இவன் அதிகப்பிரசிங்கத்தினம் கொண்டவனாய் இருப்பான் என்றெண்ணி மேலும் சிலரிடம் விசாரித்தேன்.

நாளை மறுநாள்.

சனிக்கிழமை.

அடுத்த வாரம்.

அடுத்த மாதம்.

ஒருவருக்குக் கூட அன்றில்லை. அவர்கள் அதிகப்பிரசங்கி அல்லர். நான்தான் முட்டாளாய்த் தெரிந்தேன்.

பரபரப்புடன் கூட்டத்தை விட்டு வெளியே வந்து பெரியப்பாவிடம் ஒன்றும் சொல்லாமல் அவரை அழைத்துக் கொண்டு அட்மிஷன் கட்டிடத்தை விசாரித்துக் கொண்டு நோக்கி ஓட்டமும் நடையுமாய் சென்றேன். கட்டிடத்தின் வெளியே நின்றிருந்த காவலாளியிடம் அழைப்புக் காகிதத்தைக் காண்பித்தேன்.

அவர், “சீக்கிரம் போங்க சார், டென் தேர்ட்டி க்ரூப் எல்லோரும் ஏற்கனவே உள்ளே போய்ட்டாங்க” என்றார்.

உள்ளே சென்ற எங்களை முதல்மாடியின் ஒரு அறையில் வரிசையில் நிற்க வைத்தார்கள். அங்கேயும் திரை இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் என் பெயரை ஒலிபெருக்கியில் உச்சரித்தார்கள். நானும் பெரியப்பாவும் அழைப்பு வந்த திசையை நோக்கி நடந்தோம். மேலாளர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்று அவரது கணிப்பொறித்திரையின் முன் அமருமாறு சொன்னார்.

அவ்வளவு அருகாமையில் அதற்கு முன் கணிப்பொறியை நான் பார்த்ததில்லை. ஆர்வமும் பயமும் ஒருசேர திரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“எதுக்கு ரெண்டு அப்ளிகேஷன் அனுப்பி இருக்கீங்க?” என்றார்.

“இல்ல… ஒரு சேஃப்டிக்கு” என்றேன்.

சிரித்துக்கொண்டே, “சொல்லுங்க தம்பி, எந்த காலேஜ், எந்த க்ரூப் வேண்டும்?” என்றார்.

“இனிமேல்தாங்க பார்க்கணும்” என்றேன்.

“விளையாடறீங்களா? ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு நிமிஷம்தான் டைம். சீக்கிரம் சொல்லுங்க தம்பி” என்றார்.

பெரியப்பாவிற்கு கோபம் வந்துவிட்டது. “யாருய்யா விளையாடறது? இது வாழ்க்கைப் பிரச்சனை. மெதுவாத்தான் பார்த்து முடிவு செய்வோம்” என்றார்.

“அது இல்லைங்க சார். முன்னாடியே காலேஜ், கோர்ஸ் எல்லாம் செலக்ட் செய்யத்தான் எல்லா இடத்துலயும் ஸ்க்ரீன்ஸ் வச்சிருக்கோம். உங்களுக்கு பின்னாடி எவ்வளவு பேர் வெய்ட் பண்றாங்கன்னு பாருங்க”

“அதெல்லாம் முடியாது. நாங்க மெதுவாத்தான் செலக்ட் பண்ணுவோம்”

எனக்கு இதயம் வேகமாக துடித்தது. பிரச்சனை முற்றுவதற்குள் இங்கிருந்து சீக்கிரம் சென்றுவிட வேண்டும்.

“கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃப்ரீ சீட்ஸ் எந்தெந்த காலேஜ்ல இருக்குங்க? கோயமுத்தூர் பக்கத்துல!” என்றேன்.

மேலாளர் வினவுக்கேற்ப சல்லடையிட்டு திரையில் காண்பித்தார். பெயர்பெற்ற எந்த கல்லூரியிலும் கணிப்பொறி அறிவியல் பிரிவு படிப்பில் இடமில்லை. மற்ற பாடக்கோப்புகளில் எனக்கு நாட்டமில்லை. சில நிமிட மேற்பார்வைக்குப்பின் மூன்று கல்லூரிகள் மட்டும் மனதில் நின்றிருந்தது.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, VLB ஜானகி அம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, RVS பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி கருமத்தம்பட்டியில் இருக்கிறது. வீட்டிலிருந்து முப்பது கிலோமீட்டர்தான். விடுதியில் சேர விடமாட்டார்கள். அது வேண்டாம்.

“VLB ஜானகி அம்மாள் காலேஜ் எங்க இருக்குங்க?” என்றேன்.

அக்கல்லூரியின் விவரங்களை திரையில் காண்பித்தார். முக்கிய விவரங்கள் கிடைத்தன.

கோயமுத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் பதினைந்தாவது கிலோமீட்டரில் கல்லூரி அமைந்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இந்த வருடம்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“பெரியப்பா, இந்த காலேஜ் எடுத்துக்கறேன்” என்றேன்.

“நல்லா பார்த்து யோசிச்சு முடிவு சொல்லு, ஒன்னும் அவசரமில்லை” என்றார்.

மேலாளர் குறுக்கிட்டு, “சார், பக்கத்து சீட்ல நாலு ஸ்டூடண்ட்ஸ் வந்து செலக்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. சீக்கிரம் சொல்லுங்க சார்” என்று கெஞ்சியபடி கேட்டார்.

பெரியப்பா திரும்பி அவரை முறைக்க, நான் “இல்லைங்க, இந்த காலேஜ்தான். ஷ்யூர்” என்றேன்.

பெரியப்பா திரும்பி என்னைப் பார்க்க, நான் பேரானந்தம் கொண்டவனைப்போல முகத்தை வைத்துக்கொண்டேன். இப்போது அவருக்கும் மகிழ்ச்சி.

இப்படியாக, என் நான்கு வருட தலைவிதி VLB ஜானகி அம்மாள் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறி தொழில்நுட்பப் படிப்பில் தொடங்கியது.

Advertisements