அர்ஜுன்

குழந்தைக்குப் பெயர் வைக்கும் படலம் என்பது பெரும்பாலானோரை தீவிரமாய் சிந்திக்க வைக்கிறது. நெடுந்தாடி வைத்த லௌகீக பிச்சைக்காரர்களிடம் சென்று ரேண்டம் ஆர்டர் படி பெயர் வைப்பவர்களும், எண் மேதைகள் கொண்டு Vikram-ஐ Vickkrum என பெயர் மாற்ற ஆயத்தமாய் இருப்பவர்களும் இதில் அடங்க மாட்டர்.

பலர் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்/வைக்கக்கூடாது என்பதைப் சிறு வயதிலிருந்தே சிந்திக்கத் தொடங்குவார்கள். நானும் அப்படியே … பதின் பருவத்தின் தொடக்கத்தில் கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக நேசித்திருக்கிறேன். பையன் பிறந்தால் சச்சின் என்று பெயர் வைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். சச்சினையும், அதனால் சச்சின் என்கிற பெயரையும் ஒவ்வொரு இந்தியனும் இன்றுவரை மனமாற நேசித்துக்கொண்டுதான் இருக்கிறான். அப்பாவின் மறைவுக்குப் பின் பாலு என்கிற பெயர் கனவாகிப்போனது. கனவுக்குத் தினம் தினம் தீனி போட்டு அப்பெயரையும் அவ்வுள்ளத்தையும் மனமாற நேசித்தேன். கிடைக்காமல் போன காதலியின் பெயரை வைப்பதிலேயே மனிதனுக்கு நாட்டம் இருக்கும் போது, கனவாகிப் போன “பாலு” என்கிற பெயர் சிறந்ததாய் இருக்கும் என நான் எண்னியதில் வியப்பேதும் இல்லை.

அப்பா இறக்கும் வரை படிப்பும் புத்தகமும் எனக்கு பாகற்காய் வேப்பங்காய். அது என்னமோ பத்தாவது படிக்கையில் திடீரென ஞானோதயம் பிறந்து படிப்பே கதியென்று மூன்று வருடங்கள் இருந்தேன். கணக்கு வசமானது, வேதியியல் வேதமானது. படிப்பே போதையானது. நான் மேதாவி அல்ல என்பதை சர்வ நிச்சயமாய் அறிவேன். அவ்வெண்ணமே படிப்பிற்கான என் உழைப்பபிற்கு ஊன்று கோலாகவும் இருந்தது. உண்மையாகவே சொல்லுகிறேன், இயற்பியல் புத்தகத்தின் நூற்றி நாற்பத்தைந்தாம் பக்கத்தின் இரண்டாவது பத்தியில் என்ன இருக்கிறது என்று யாராவது கேட்டிருந்தால் நிச்சயம் சரியான பதிலையே சொல்லியிருப்பேன். சினிமா, பெண்கள் – இவ்விரண்டிலும் கூட ஆர்வமற்று இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் ஆச்சர்யமாகவே இருக்கிறது.

பதின் பருவம் முடியும் வரை நான் ரஜினி ரசிகன். உண்மையில் கமல்ஹாசனைத் தான் அப்போதே பிடிக்கும். “கமல் ஒரு பொம்பளைப் பொறுக்கி, அவன பிடிக்கும்னு சொல்லாதே.. சொல்லாதே.. ரஜினிதான் பிடிக்கும்னு சொல்லு” என எட்டு வயது முதலே மிரட்டி வளர்த்திருந்தாள் அக்கா. இன்று வரை நான் சினிமா பைத்தியம் என்றாலும், ஒரு கட்டத்தில் நன்றாய்ப் படிக்க ஆரம்பித்துக் கல்லூரியில் சேர்ந்திராவிட்டால், இப்போது அஜித் ரசிகர் மன்றத்தின் ஒரு பதவியில்(!) இருந்திருப்பேன் என்றே தோன்றுகிறது.

இருபதுகளின் தொடக்கத்தில் அவ்வயதிற்கே உண்டான செருக்கும் கர்வமும் ஏமாற்றமும் கலந்து சென்றது கல்லூரி வாழ்க்கை. நான் சுயம்பு அல்ல. ஆனாலும் சுயம் என்னும் வார்த்தையின் அகண்ட விளக்கம் புரிய ஆரம்பித்திருந்தது இக்காலத்தில்தான். பெரியார் அறிமுகமானார். பின் திராவிடம், உலகியல், இஸ்லாம், ஈழம், பாலஸ்தீனம், கம்யூனிசம், etc. etc. கமல்ஹாசனை மென்மேலும் ரசிக்க ஆரம்பித்திருந்தேன். நண்பன் ப்ரமோத் ஒருமுறை என்னிடம் சொன்னான் – “கமல் மாதிரி நாமளும் நம்ம வேலையை ரசிச்சுப் பண்ணனும்டா”… மிக சாதாரணமான வரி தான், ஆனால் அதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை பரமக்குடிக்காரருக்கே நான் பரம ரசிகன். இப்போது ஸ்ரீராம், ஆதி, மதன் என பல பெயர்களை பட்டியலில் வைத்திருந்தேன்…

கல்லூரி முடித்து பின் ஜெர்மனி செல்லும் வரையில் திருமணம், குழந்தைக்கு பெயர் என எதிலும் நாட்டமில்லாமல் இருந்ததாய்த் தான் ஞாபகம்.

இருபதுகளின் தொடக்கத்தில் அடிப்படை கம்யூனிசத்தின் மீது மையம் கொள்ள ஆரம்பித்திருந்தேன். உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம் என்னும் சித்தாந்தத்தில் பெரு நம்பிக்கை கொண்டிருந்தேன். தமிழை நுண்ணிய உணர்வோடு நேசிக்க ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். இலக்கியமும் இலக்கணமும் எட்டா தூரத்தில் இருந்தாலும், உரைநடைப் புத்தகங்களும், நடைமுறைக் கூறுகளும் எனக்கான உலகைக் காட்டியது. நான் மையல் கொண்ட பெண் கூட ஒருமுறை என்னிடம் இப்படி சொன்னாள் – “உன்னால ஒரே ஒரு அட்வான்டேஜ் என்னன்னா, நான் நம்ம குழந்தைக்கு தமிழ் சொல்லிக்குடுக்க வேண்டியதில்லை.”

நிற்க… உங்களை அல்ல, எனக்கே சொல்லிக் கொள்கிறேன். இதே போக்கில் எழுதிக் கொண்டிருந்தால் சொல்ல வந்ததை விட்டு விடுவேன். அதிலும் பெண்கள், மையல் என ஆரம்பித்தால் பின் ஆடல், ஊடல், கூடல் என்று கட்டாயம் மனம் போகும். பின்நாட்களில் என் மகன் இதைப் படிக்கையில் நீ இந்தக் கட்டுரைக்கு டைட்டிலை “ஜக்கி பாலா” அப்படீனே வச்சிருக்கலாம் என்று சொன்னாலும் சொல்லக் கூடும். எனவே …..

***

2011 – மார்ச் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி அதிகாலை ரேணுகா தேவி என்னும் நல்ல டாக்டர், லீலா என்னும் அரைகுறை டாக்டருக்கு பிரசவ வலி எடுப்பதற்காக ஒரு மாத்திரையைத் தர, என் அணு சென்ற வழியே நானும் சென்று “கவலைப்படாதே அமெலி/அபிநயா/அபிராமி, everything will be okay…” என Virtual-ஆக நான் சொல்லிக்கொண்டிருக்க, நேத்துக் கூட பையன் பொறப்பான்னு பேசிட்டு இருக்கும்போது கோயில்ல மணி அடிச்சுது என்று சொல்லிக்கொண்டே என் அம்மா மகமாயியை மனதிற்குள் கூப்பிட, இது எது பற்றியும் கவலையில்லாமல் லீலாவின் அப்பா குறட்டை விட்டுத் தூங்க, ஆரம்பித்ததய்யா உயிர் வலி …

பிரசவ வார்டுக்குள் கூட்டிச் சென்றார்கள்.

“அரைமணிக்கு ஒரு முறை விட்டு விட்டு வலிக்கும்… வலி கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகும். பேபி இன்னும் 4-5 ஹவர்ஸ்ல வந்திரும். இடையில ஹஸ்பண்ட் மட்டும் டூ டைம்ஸ் போய்ப் பார்க்கலாம், ஆனா சீக்கிரம் வந்திரணும்” என்றார் டாக்டர். சரி என்று தலையாட்டி விட்டு வந்த என் அம்மா நேரே பிரசவ வார்டுக்குள் நுழைந்தார்.

“அம்மா… இப்பத்தானே டாக்டர் போகக்கூடாதுன்னு சொன்னாங்க. நான் மட்டும்தான் போகணும், அதுவும் டூ டைம்ஸ்தான்” என்றேன்.

“ம்க்கும், அவ கிடக்கறா… அவளா புள்ளை பெத்துக்கப் போறா. வலி வர்றவளுக்குத்தான் தெரியும்… வலியைக் கூடப் பொறுத்துக்கலாம், ஆனா அந்த நேரத்துல பக்கத்துல ஒரு உசிரு இல்லைன்னா உலகமே இருண்ட மாதிரி ஆயிரும்” என்றாள் அம்மா.

“அதான் நர்ஸ் இருப்பாங்களே…”

“நீ வாயை மூடிக்கிட்டு அங்க போயி அந்த டாக்டர் பொம்பளை வர்றாளான்னு பாரு போ…” என சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் பிரசவ வார்டுக்குள் நுழைந்தாள் என் அம்மா.

சில சமயங்களில் அம்மா Impossible to manage but logically correct. இந்த மாதிரி விஷயங்களில் நான் எக்கச்சக்கமாய் சொதப்பிவிடுவேன். பிரசவ வார்டுக்குள் சென்றிருந்தால் பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம் “சாரி டாக்டர், தெரியாம வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பியிருப்பேன். லீலாவின் அம்மாவும் என் ரகம் என்பதால் நாங்கள் இருவரும் வெளியே காத்திருந்தோம்.

பத்து நிமிடம் கழித்து வந்த அம்மா, “உன்னைக் கூப்பிடறா, உள்ள போ” என்றார்.

“அம்மா, டூ டைம்ஸ் தான்… ” என வாயெடுத்தவன் பின் சுதாரித்துக் கொண்டு உள்ளே சென்றேன். நர்ஸோ டாக்டரோ இல்லை. நன்று.

லீலாவின் காதருகே சென்று, “நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். பொண்ணா இருந்தா Amelie, பையனா இருந்தா… இருந்தா… அப்பறமா சொல்றேன் ”

உண்மையில் பெண்ணாய் இருக்க வேண்டும் என்றுதான் ஏழு மாதங்களும் வேண்டியிருக்கிறேன், பல பெண் பெயர்களை யோசித்தும் வைத்திருக்கிறேன். இதுவரையிலும் நல்ல மகனாக, காதலனாக, கணவனாக இருந்திருக்கவில்லை. அம்மா, காதலி, மனைவி – இவர்களின் பொறுமையும் கருணையுமே என்னைப் பொறுத்துக்கொள்ள வைத்திருக்கிறது. ஆனால் என் மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருப்பேன் என்றுமட்டும் ஆழமாக நம்பினேன். நல்லூழ் காரணமோ?

லீலாவுக்கு வலி அதிகரித்திருந்தது. அழுதாள். பின் கெஞ்சினாள். என்னால் தாங்க முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. நேரே டாக்டரிம் சென்று, “டாக்டர், அவளுக்கு சிசேரியன் பண்ணிருங்க” என்றேன்.

“சிசேரியன்ல நிறைய காம்பிளிகேஷன்ஸ் இருக்கு சார். பின்னால அவங்க ரொம்ப சிரமப்படுவாங்க. படிச்சவரா இருக்கீங்க, உங்க வைஃப் வேற டாக்டர்.. நீங்களே இப்படிப் பேசினா எப்படி, எல்லம் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்” என்றார்.

அம்மாவிடம் சென்றேன். “என்னால நிக்கக் கூட முடியலம்மா. ரொம்ப பாவமா இருக்கு” என்றேன்.

“நீ அடிக்கடி உள்ளே போய் ஆறுதல் சொல்லு. இந்த ஒரு குழந்தை போதும், இனிமேல் பெத்துக்க வேண்டாம்.. அப்படி, இப்படீன்னு ஏதாச்சும் சொல்லு.”

“ஆனா டாக்டர் டூ டைம்ஸ்…”

“எது?”

“ஒண்ணுமில்ல”

“ம்ம்… உங்க அக்கா பொறக்கறப்ப நான் அவனாசி ஆஸ்பத்திரியில இருக்கேன். என் கூட எங்க அம்மா, அக்கா, நாத்தனார் எல்லாரும் இருந்தாங்க…  வலி அதிகமாக அதிகமாக பொறுக்க முடியாம கத்திக்கூப்பாடு போட்டேன். வலியோட கோபமும் சேர்ந்து என்ன பண்றன்னே தெரியாம் எல்லாரையும் கண்டபடி திட்ட ஆரம்பிச்சுட்டேன்…”

“அய்யய்யோ, என்னன்னு திட்டினே?”

“அது என்னென்னமோ சொல்லித் திட்டினேன். கழுதை முண்டைகளா, இப்படி வலிக்கும்னு எவளாச்சும் சொன்னீங்களாடி.. தெரிஞ்சிருந்தா நான் குழந்தையே பெத்திருக்க மாட்டேன் அப்படி இப்படீன்னு திட்றேன். எங்க அம்மாவும் நாத்தனாரும் பொசுக்குன்னு எந்திருச்சு வெளியே போனாங்க.. கோவம் அதிகமாகி அத்தனை வலியிலையும் எந்திருச்சு போய் ஜன்னலை திறந்து திட்டினேன்…”

நான் கொஞ்சம் வெலவெலத்துப் போனேன்.

“ஆனா அப்பறமா நீ பொறந்தப்ப நாத்தனார் வந்து கேட்டா.. இப்படி வலிக்கும்னு இப்ப யாரு வந்து சொன்னாங்க உனக்கு?” என்று சிரித்தாள். என்னாலும் சிரிக்க முடிந்தது.

மறுமுறை பிரசவ வார்டுக்குள் செல்கையில் வலி உச்சத்தைத் தொட ஆரம்பித்திருந்தது. அம்மாவின் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்படியே ஒப்பித்தேன்.

“கவலைப்படாதே லீலா… இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாயிடும். நமக்கு இந்த ஒரு குழந்தையே போதும், இனிமேல் பெத்துக்க வேண்டாம்… கவலைப்படாதே” என்று தட்டுத்தடுமாறினேன். பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக, “உனக்கு யாரையாவது பயங்கரமா திட்டணும்போல இருந்தா, என்னை திட்டிக்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றேன். ம்ஹூம், இப்போது நான் சொல்லும் எதையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை….

“போய் டாக்டரை கூப்பிடு… சீக்கிரம்” என்றாள்.

“டாக்டர், டாக்டர்…” எனக் கூச்சமின்றி கூப்பாடு போட்டேன்.நர்ஸ் வந்து என்னை வலுக்கட்டாயமாய் வெளியே அனுப்ப, அம்மா “என்ன ஆச்சு, என்ன ஆச்சு” என்றாள். அதற்குள் டாக்டர் வந்து “டெலிவரி டைம் ஆயிடுச்சு, இன்னும் அரைமணியில பேபி வந்திடும்” என்றார். பின் நர்ஸிடம், “நீ போய் அஷ்வத் டாக்டருக்கு ஃபோன் பண்ணி பத்து நிமிஷத்துல வரச் சொல்லு” என்றார்.

அஷ்வத் டாக்டர் குழந்தைகள் நிபுணர். மருத்துவத் துறையில் சிறந்திருந்தாலும் மற்ற விஷயங்களில் எனக்கு அவரை அறவே பிடிக்காது. ஆனால், என் அறம் பேணும் நேரமா அது?

லீலாவின் அம்மவிடம் சென்றேன். “நீங்க லீலாவை பார்த்தீங்களா..” என்றேன்.

“போனேனுங்க.. அவ அழுகறதையும் கத்தறதையும் பார்த்தா பயமா இருந்துதுங்க. அதான் உங்க அம்மாகிட்ட போய் நீங்களே பார்த்துக்குங்க அக்கா அப்படீனுட்டு வந்துட்டனுங்க” என்றார். என் அம்மாவின் அம்மாவாய் இவர் இருந்திருந்தால் அக்கா பிறக்கையில் ஆஸ்பத்திரியை விட்டே ஓடியிருப்பார்.

கைபேசியை எடுக்க அறைக்குச் சென்றேன். உள்ளே லீலாவின் அப்பா இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தார். மக துடிச்சிகிட்டு இருக்கா.. மனுஷன் இந்தத் தூக்கம் போடறாரே. பேசாம ரூமை வெளியே பூட்டிட்டுப் போயிடலா என யோசித்துக் கொண்டிருக்கையில் என் நினைப்பை உணர்ந்தவராக சடாரென்று எழுந்தார்.

“வாங்க மாப்ளே, நைட தூங்கலீங்களா… அதான் நல்லா தூங்கிட்டேன் போல இருக்கு. டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அது… இன்னும் கொஞ்ச நேரத்தில டெலிவரி ஆயிடும்னு சொல்லி இருக்காங்க”

அரை மணிக்குப்பின் பிரசவ வார்டிலிருந்து வந்த டாக்டர் நேரே என்னிடம் வந்தார். “நார்மல் டெலிவரிங்க.. குழந்தையை அஷ்வத் டாக்டர் கொண்டு வருவார்” என்றார்.

இன்முகத்துடன் “தேங்க் யூ” என்றேன். மனம் “இதுதானா டாக்டர் உங்க நார்மல்… “ என்று கேட்கத் தூண்டியது.

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு பிரசவ வார்டின் இரண்டு கதவுகளில் ஒன்றை பாதிமட்டும் திறக்க அஷ்வத் டாக்டர் குழந்தையை உள்ளங்கையில் தாங்கிக் கொண்டு என்னிடம் வந்தார்.

“கங்கிராஜுலேஷன்ஸ், உங்களுக்குப் பையன் பொறந்திருக்கு” என உள்ளங்கையை என்முன் நீட்டினார். ஆண் பெண் பேதம் அக்கணம் தெரியவில்லை. என் எல்லா அணுக்களும் இரத்த நாளங்களுக்குள் பரவசத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.

அதன்பின், ஃபோன் அழைப்புகள். வாழ்த்துக்கள். விசாரிப்புகள் …

முதலில் அழைத்தது பாலு அண்ணாவை. அவருக்கும் எனக்குமான உறவைச் சுருக்கமாய் சொல்வதென்றால் – என் உயிர்த்தோழன்.

“அண்ணா… சீக்கிரமாய் ஒரு பெண்ணைப் பெத்துக் கொடுங்க.. எத்தனை நாள்தான் என் பையன் சிங்கிளாகவே இருப்பான்” என்றேன்.

“டேய்.. இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலைடா” என்றார்.

பிறகு மாமா, சம்பத், அண்ணா, நண்பர்கள், உற்றார் உறவினர்கள். கைபேசியில் பேசிக்கொண்டிருந்த என் அம்மாவை நான் தன்மையுடன் பார்க்க, “எனக்கு அப்பவே தெரியும், பையன் பொறப்பான்னு சொல்லும்போதெல்லாம் மாகாளியாத்தா கோயில்ல மணி அடிக்கும்” என்று புளகாங்கிதம் அடைய, எனக்குக் கருணை போய் கோபம் பீறிட்டது.

“அம்மா, இன்னொரு வாட்டி பையன் பொறந்திருக்கான்னு பெருமை பேசிட்டிருந்தே, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்”

“ஆ ஆ… சரி சரி”

இடையில் அக்கா அழைத்து, “தம்பி, மாப்பிள்ளையோட சொந்தக்காரங்களுக்கும் சொல்லிடு” என்றாள்.

“அதான் நீயே சொல்லியிருப்பியே, அப்பறம் என்ன?”

“இருந்தாலும் நீ கூப்பிடலீனா நல்லா இருக்காதுல்ல. ப்ளீஸ் தம்பி” என்றாள். என் பொறுமையை சோதித்துக் கொள்ள இன்னொரு சந்தர்ப்பம். அவர்களில் ஒருவரைக் கூப்பிட்டேன்.

“ஹலோ, நான் ஜெகதீஷ் பேசறங்க… ”

“சொல்லு ஜெகதீசு, ஹாஸ்பிடல்லயா இருக்கே”

“ஆமாங்க. லீலாவுக்கு பையன் பொறந்திருக்கானுங்க…”

“ஜெயந்தி இப்பதான் கூப்பிட்டு சொன்னாப்டி.. நாங்க சாயந்திரம் கிளம்பி கோவை மெடிக்கலுக்கு வந்திர்றோம்”

“சரிங்க… வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க, அண்ணனையும் கூட்டிட்டு வந்திருங்க…”

“கண்டிப்பா வந்தர்றோம் ஜெகதீசு… சரி வச்சிருட்டுமா… ”

சரி என்றவன், “ஏங்க ஒரு நிமிஷம்” என்று சொல்ல எதிர்ப்பக்கம் அழைப்பைத் துண்டிக்காமல் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவது அப்பட்டமாய்க் கேட்டது.

“ஏனுங்க.. இப்பத்தான ஜெயந்தி கூப்பிட்டா, அதுக்குள்ள பாருங்க. ஜெகதீசும் கூப்பிட்டாச்சு.. பையன் பொறந்தா பாருங்க எத்தனை பேரு கூப்பிட்டு கூப்பிட்டு சொல்றாங்கன்னு…”

“அப்படி எல்லாம் இருக்காதுடி.. ஜெகதீஸ் அப்படி எல்லாம் நினைக்க மாட்டான்” என்றார் அவர் கணவர்.

” ம்ம்ம்… இதுவே புள்ளையா இருந்திருந்தா கண்டிப்பா கூப்பிட்டு இருக்க மாட்டாங்க”

“நீ முதல்ல லைன கட் பண்ணியான்னு செக் பண்ணு, அதுல லைட் எரியறா மாதிரி இருக்கு.”

இரண்டாவ்து நொடியில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோபமும் ஆத்திரமும் பரிதாபமும் ஒருசேர வந்தது. Hell with you என்று நினைத்துக் கொண்டேன். நான் அமைதியாக இருப்பேன். இல்லை ஆத்திரமாய்த் திரிவேன். அனுசரனை எனக்கு அவ்வளவு பழக்கமல்ல. “சரி விடு, இந்த அழைப்பே என் பொறுமையை சோதிக்கத்தானே என்றெண்ணி அமைதியானேன்.

***

பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று மொத்த குடும்பமே கொஞ்சம் குழம்பிப் போய் இருந்தது. நான் உள்பட. திரும்பவும் சச்சின், கமல், …. என சிந்தனைகள். இம்முறை deadline-உடன்.

லீலாவைக் கூப்பிட்டு, “இத பாரு. பேரு நீங்களே ஃபில்டர் பண்ணி குடுங்க. அதுல ஒண்ண நான் செலக்ட் பண்றேன். ஆனா மூணு கண்டிஷன். முதல் கண்டிஷன் – சாமி பேரா இருக்கக் கூடாது. ரெண்டாவது – அந்தப் பேர்ல ஒரு அர்த்தம்/ரிதம் இருக்கணும், மூணாவது – தமிழ்ப் பேரா இருக்கணும்.”

ஓ.கே. என்றுவிட்டு சில பெயர்கள் கண்டிஷனுடனும், பல பெயர்கள் முன்னுக்குப் பிறனாகவும்  சொன்னார்கள். கதிர், கதிர்மதியன், மதிர்கதியன், அமுதன், கதிர்வாணன், பரத், க்ரிஷ், ப்ரனேஷ், blah blah blah… ஜெயமோகன் சொன்னதைப் போல டணால், டுமீல் – இந்த ரெண்டு மட்டும்தான் இல்லை. ம்ஹும், அவர்கள் சொன்ன எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.

“பேருக்கு அர்த்தமெல்லாம் கேட்காதடா.. எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கே ஃபர்ஸ்ட் என் பேரு பிடிக்கலை. லீலாவதின்னா ரொம்ப பழைய பேரா இருக்கு. எதுக்குப்பா அப்படி வச்சீங்கன்னு எங்கப்பா கிட்ட ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருப்பேன்.. பையனுக்காவது நல்ல பேரா வைக்கனும்ல. எனக்கு A-ல வர்ற பேருதான் பிடிக்கும்”

“ஏன் A-ல வர்ற பேரு பிடிக்கும்?”

“அதெல்லாம் தெரியாது, ஆனா பிடிக்கும்”

இது அறியாமையா இல்லை சொல்லாமையா? சத்தியமாய்ப் புரியவில்லை. ஆனால் நான் கண்ட பெரும்பாலான பெண்கள் இவ்வகையறாக்களே.

இளமாறன், பிரபாகரன், திலீபன் – இந்தப் பெயர்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சமாதானம் சொல்லி சம்மதிக்க வைத்திருக்கமுடியும். அப்படிச் செய்ய விரும்பவில்லை.

இடையில் பலப்பல அட்வைசுகள்.

“ராம்நகர்-ல நமக்குத் தெரிஞ்ச ஒரு Numerlogist இருக்காரு. மூவாயிரம் குடுத்தா போதும், சூப்பர் சமஸ்கிருதப் பேரா சொல்லிடுவார்”…

“தூய தமிழ்லயே பேரு வைங்க.. ஏன்னா எப்படியும் வரப்போற எலக்ஷன்ல கலைஞர் தான் ஜெயிக்கப்போறாரு… தமிழ்-ல பேரு வைக்கறவங்களுக்கு சலுகைகள் குடுத்தாலும் குடுப்பாரு. காலேஜ் போறப்ப இதுமாதிரி ஏதாவது உதவும். “அடப்பாவி, என் பையன் காலேஜ் போற வரைக்குமா கலைஞர் இருக்கப்போறாரு?”

லீலா ஒரு கட்டத்தில் டென்ஷனாகி,  “போடா, என்னால இதுக்கு மேல முடியாது. நீயே செலக்ட் பண்ணு” என்றாள்.

குழப்பக்கூடு இப்போது என்னைத் தொற்றிக்கொள்ள திரும்பவும் இணைய வேட்டைகள். தீவிர சிந்தனைகள். தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்கிற பேரார்வமும் இருந்தது. ஃபிடல் (காஸ்ட்ரோ), (ஷேக்) அப்துல்லா – இவ்விரு தலைவர்களும் அவர்ளின் பெயர்களும் என்னைக் கவர்ந்திருந்தன.

“ஃபிடல் இளமாறன் – பேரு எப்படி” என்றேன் கர்வத்துடன். பதிலே இல்லை. என்றால், பிடிக்கவில்லை.

“இதுவும் பிடிக்கலையா? சரி விடு… எப்ப பேரு வைக்கறீங்க, புதன்கிழமையா? எனக்கு செவ்வாய்க்கிழமை கூப்பிடு. ஒரே ஒரு பெயர் சொல்லுவேன். அது தான் ஃபனல். உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் சரி, பிடிக்கலைன்னாலும் சரி.. ஓ.கே-வா” என்றேன்.

“ஓ.கே.” என்றாள்.

பாலு அண்ணாவிடம் பேசினேன். “அவங்களுக்கு என்ன பேரு பிடிச்சிருக்கோ அதையே வைடா” என்றார். அதானே என்று தோன்றியது. என் ஃபிலாசபியை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும்… அவர்களுக்கும் பிடிக்கவேண்டும், எனக்கும் பிடிக்க வேண்டும்.. அன்பிற்காக கொள்கைகளைத் தளர்த்துவது தவறாய்ப் படவில்லை.

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் போது இந்திய அணியின் வண்ணம் கொண்ட டீ-ஷர்ட்டை ஒரு சிறுவன் அணிந்திருந்தான். சச்சின் டெண்டுல்கரின் மகன்… பெயர் அர்ஜுன்.

அட, அர்ஜுன்.. இந்தப் பெயரின் Phoenetic எவ்வளவு நன்றாயிருக்கிறது. மகாபாரதக் கதையில் நம்பிக்கை இல்லையென்றால் என்ன, அர்ஜுனன் கதாபாத்திரம் நுண்ணிய உணர்வுகளுடையனாகவும் மதிநுட்பம் மிக்கவனாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 24 ஜேக், தஸ்தாவோஸ்கியின் மிஷ்கின், ஜூனெட்டின் அமெலி, லுக் பெசனின் மத்தில்டா எல்லாமே கதாபாத்திரங்கள் தானே. இதையெல்லாம் தாண்டி என் குடும்பத்திற்கு இந்தப்பெயர் நிச்சயம் பிடிக்கும். தவிர, A-வில் வேறு ஆரம்பிக்கிறது.

அப்பெயரே முடிவானது. பெயர் சூட்டும் நாளன்று அர்ஜுனை எங்களூர் மாகாளியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்த அர்ச்சகர் என்னைக் கைபேசியில் அழைக்க, கலிஃபோர்னியாவில் இருந்து நான் “அர்ஜுன்… அர்ஜுன்… அர்ஜுன்…” என மூன்று முறை ஒலிக்க திருநாமப் படலம் செவ்வனே முடிவுற்றது.

நான் தமிழுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், வட நாட்டுக் கடவுளின் சூட்டியதாகவும் என் நெருங்கிய நண்பர்கள் சிலர் கோபப்பட்டனர். எனக்கும் தமிழ்ப் பற்று உண்டு. அதைப் பெயரில் பறைசாற்றுவது மிக அவசியம் என்று நினைக்கவில்லை. நான் எந்தவொரு கருத்தியலுக்கும் முழுமையான சார்பாளன் அல்ல. அப்படி இருக்கவும் விரும்பவில்லை. நான் குருவாக மதிக்கும் ஜெயமோகனின் கருத்துக்களைக் கூட என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அதனாலேயே கொடி பிடிக்காத கம்யூனிஸ்ட், கருப்புச் சட்டை அணியாத நாத்திகன் என்றிருக்கிறேன். I am agnostic towards all unknowns in the world …

பார்த்தீர்களா, மீண்டும் என் புராணம் பாட ஆரம்பிக்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு டி.ஆர். குடியிருக்கிறார் போல.

அர்ஜுனுக்கு நான்கு மாதங்களாகிறது. இரண்டு மாதமாய் இருக்கும் போது அமெரிக்கா வந்து விட்டேன். இன்னும் ஒரு மாதம் கழித்தே இந்தியா செல்ல முடியும்.

[முற்றும்]

6 thoughts on “அர்ஜுன்

  1. semmalraja

    படிக்க ஆரம்பிக்கும்போதே ஒரு வித உணர்வு மென்மேலும் படிக்க தூண்டுகிறது.. நான் உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்பதில் ஐயமில்லை என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்..

    Reply

பதில்