Category Archives: சுவாரஸ்யம்

டெரர் கனவு

அதிகாலை சுமார் 3:30 மணி இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். கனவு. பயங்கரமான கனவு.

நான் இறந்து விடுகிறேன்.

என் பிணத்தை தூக்கிக்கொண்டு மயானத்திற்குச் செல்கிறார்கள். கனவிலும் அது அதிகாலை நேரம். ஊரே ஆளரவமின்றி இருக்கிறது. வெகுதூரத்திற்குப் பின்னால் நான் மட்டும் அழுதபடி பதற்றமாய் ஓடி வருகிறேன்.

முகம் வியர்த்து கண்களில் பயமும் நெஞ்சத்தில் நடுக்கமும் குடிகொண்டிருக்கிறது. எங்கள் வீட்டு வீதியின் கடைசிக்கு வருகிறேன்.

“யாருப்பா அது இந்நேரத்துல?” என்றொரு குரல் கேட்கிறது. உற்றுப் பார்க்கிறேன். பெரியப்பா கிட்டு.

“பெரியப்பா, நான் தான்”

“டேய்… வா வா வா, இப்பத்தான் உன் பொணத்த தூக்கிட்டு போனோம், பாத்தியா?”

“இல்லை பெரியப்பா, அத பாக்கத்தான் போய்ட்டு இருக்கேன்” பதற்றம் அதிகரித்தது.

“அடடா.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? பாடிய பொதச்சுட்டமே!”

“புதைச்சுட்டீங்களா… ” சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து கும்பிடுகிறேன். மனம் பயத்தில் இருந்து கொஞ்சமாய் விடுபட்டிருக்கிறது.

“நல்ல வேளை பெரியப்பா, புதைச்சீங்க… எரிச்சிருந்தா நான் என்ன பண்ணுவேன்… ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா” சந்தோஷத்தில் அழுகிறேன்.

“பரவால்ல விடு… சரி வா பாடிய பாக்கலாம்”

“புதைச்சிட்டதா சொன்னீங்க?”

“அட… தோண்டி பாக்கலாம் வாடா”. என்னை அழைத்துச் செல்கிறார். மனதை திடப்படுத்திக் கொள்கிறேன்.

இடுகாட்டின் முற்புதர்களுக்கு நடுவில் ஒரு இடம் மட்டும் மேடாய் இருக்கிறது. சுற்றிலும் பூக்கள் கொட்டப்பட்டிருந்தன. என் பிணமாய்த்தான் இருக்கவேண்டும். எந்நேரமும் பொங்கி வரும்படியாய் என் கண்கள் குளமாய் நின்றன.

“பெரியப்பா… இப்படி அநியாயமா செத்துப்போய்ட்டனே…” அவர் மார்பில் முகம் புதைத்து விக்கிவிக்கி அழுகிறேன்.

“விடுறா.. விடுறா.. மனுஷனாப் பொறந்தா எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான் ஆகணும். மனச தைரியமா வச்சிட்டு குழிய தோண்டு. ரொம்ப நேரம் விட்டா பாடி கண்டிஷன் கெட்டுப்போய்டும்”

பிணமேட்டின் அருகிலேயே மண்வெட்டி இருக்க, அதை எடுத்து மண்ணை கொத்திக் கொத்தி வெளியே எறிகிறேன். சிறிது நேரத்திற்குப் பின் பெரியப்பா வாங்கி தோண்டுகிறார். நான் குத்த வைத்து என் பிண உடம்பைக் காண அமர்ந்திருக்கிறேன்.

மூன்று அடி தோண்டியிருக்கும்போது கலவரமாகிறேன். “பெரியப்பா, பாடி பக்கத்துலதான் இருக்கும். மண்வெட்டில கொத்திராதீங்க” என மன்றாடுகிறேன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்டா… நாங்கதானே புதைச்சோம். புதைக்கறப்ப வரமாட்டான். லேட்டா வந்திட்டு பொணத்த காமி, பொணத்த காமின்னு நச்ச வேண்டியது” சலித்துக் கொண்டார். அவருக்கு என் வேதனை புரியவில்லை போலும்.

மேலும் ஓரடி தோண்டியபின் மண்வெட்டியை ஓரமாய் வைத்துவிட்டு கைகளால் குழி பறிக்கிறார். நான் ஆவலாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளைத்துணியால் மூடப்பட்ட சடலம் தெரிகிறது. குழிக்குள் இறங்கி நானும் பெரியப்பாவும் என் பிணத்தை வெளியே எடுக்கிறோம்.

பெரியப்பா, “துணிய விலக்கப் போறேன்… மனச தேத்திக்க” என்கிறார்.

பெருமூச்சுவிட்டபடி சரியென்று தலையாட்டுகிறேன். துணியை விலக்கியதும் அசைவற்ற என் உடலைக் கண்டு உள்ளம் பதறுகிறது. கண்கள் விரித்து என் முகம் பார்க்கிறேன்.

“வண்டியில மெதுவாப் போ… மெதுவாப் போன்னு எத்தனை வாட்டி உன்கிட்ட சொன்னேன். கேட்டியா? இப்பப் பாரு, இருபத்தஞ்சு வயசுல லாரில அடிபட்டு செத்துப் போய்ட்ட”

“எப்படி பெரியப்பா உயிர் போச்சு?”

“வண்டியில இருந்து கீழே விழுந்ததுல பின் மண்டையில நல்ல அடி. தலை ஓட்டை ஆகி மூளை வெளில தொங்குது பாரு. ஆனா பரவால்லை, கண்ணுல அடிபடல”

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறேன். பெரியப்பா என்னைக் கட்டிக்கொள்கிறார். “பரவால்ல விடுறா… என்ன இருந்தாலும் அவனவன் பொணத்த அவனே பார்க்கிற பாக்கியம் யாருக்கு வரும். நீ குடுத்து வச்சவன்டா”

அலறிப் போய்க் கண் விழித்துப் பார்க்கிறேன். மணி 4:00. அத்தனையும் மனதில் பிம்பமாய் ஓடிக்கொண்டிருக்கிறது, இப்போதும்.

***

// தம்பி பிரகாஷ் கண்ட கனவு இது

*****

Advertisements

கல்லூரி வாசல்

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம்.

பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் வந்திருந்தேன். பெரியப்பாவிடம் சென்று காட்டினேன். அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் செந்தில்நாதனும் நானும் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். செந்தில்நாதன் காலகாலமாக வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன். அவனை விட நான் அதிக மதிப்பெண்ணா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவரும் அகமகிழ்ந்தார்.

அப்பாவின் மறைவுக்குப்பின் எங்களுக்கு எல்லாமே பெரியப்பாதான். திருப்பூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களில் ஒருவர். எந்த வகையில் அவர் பெரியப்பா ஆகிறார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. பெரியப்பாவிற்கு நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆர்வம். பள்ளியில் உயிரியல் பிரிவை எடுக்க வைத்து உயிரை எடுத்திருந்தார். அதன்மீது கொண்ட வெறுப்பின் காரணமாகக்கூடவோ என்னவோ, கணிப்பொறி அறிவியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு.

தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்பினேன். இரண்டு நாட்களுக்குப்பின் இனம்புரியாத பயம் ஏற்பட மீண்டும் ஒரு விண்ணப்பத்தை அனுப்பினேன். ஜூலை மாத செவ்வாய்க்கிழமை நாளொன்றில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. பெருமை.

நான் சில எண்ணங்களில் உறுதியாய் இருந்தேன். முதலாவதாக, என்ன ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப்தான். இரண்டாவது, விடுதியில் தங்கித்தான் படிக்க வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வது போரடித்திருந்தது. மூன்றாவது,  கோயமுத்தூரிலேயே ஒரு நல்ல கல்லூரியில் சேர வேண்டும். போரடித்தாலும் வாரம் ஒருமுறையாவது வீட்டிற்கு வந்து போக வேண்டும். நான்காவது, நிறைய சினிமா பார்க்க வேண்டும். கடைசியாக ஆனாலும் கண்டிப்பாக, கல்லூரியில் நிறைய ஃபிகர்களும் இருக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்லப்போனால், காலேஜ் என்றால் ஜாலி என்று சமூகம் எனக்கு சொல்லிக் கொடுத்திருந்தது.

நான், அக்கா, பெரியப்பா மூவரும் சென்னை செல்வதற்கான இரயில் பயணச்சீட்டை பெரியப்பா எடுத்திருந்தார். இரயில் பயணம் கனவுகளில் கரைந்தது. திங்கட்கிழமை காலை சென்னை வந்தடைந்த நாங்கள் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தோம். பல்கலைக்கழகத்திற்கு எப்போது போக வேண்டும் என்று பெரியப்பா கேட்டார். பத்தரை மணி என்று போட்டிருக்கிறது. பத்து மணிக்கு போனால் போதும் என்றேன்!

அடுத்த நாள் ஒன்பது மணியளவில் அறையை காலி செய்து ஆட்டோ பிடித்து பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தோம். பதற்றமாக இருந்தது. சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டே வந்தேன்.

“என்ன க்ரூப் எடுக்கப் போற‌?” என்றார்.

அவரிடம் பம்முவதில் நான் பி.ஹெச்.டி. பட்டம் வாங்கியிருதேன். “ங்” என்ற எழுத்தில்லாமல் பெரும்பாலான வாக்கியங்கள் முற்றுப் பெறாது.

“கம்ப்யூட்டர் சயின்ஸ்ங்…”

“எந்த காலேஜ்?”

“அது அங்க போய்த்தான் பாக்கனுங்…”

“டைம் இருக்குமா?”

“இருக்குங்”

கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் ஆட்டோ நுழையும்போது மணி பத்து. அன்றுதான் முதன்முதலாக ஒரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைகிறேன். அட்மிஷனை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது. மாணவர்களும் பெற்றோர்களுமாய் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருந்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தோம்.

சற்றுத்தள்ளி ஒரு பெரிய திரை ஒன்றை மக்கள் கூட்டம் உற்று நோக்கிக்கொண்டிருந்தது. பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு நான் மட்டும் கூட்டத்தின் அருகில் சென்றேன். திரையைக் கண்டதும் அதிர்ந்து போனேன். எந்தெந்த கல்லூரியில் எத்தனை இடங்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நேரடியாகக் காண்பித்துக் கொண்டிருந்தனர். நேரத்திலேயே வந்து இதையெல்லாம் பார்த்திருக்க வேண்டுமோ என்றெண்ணி மனம் பதைபதைத்தது.

அருகில் நின்றிருந்த ஒரு மாணவரிடம், “உங்களை எத்தனை மணிக்கு வரச்சொல்லி இருக்காங்க?” என்றேன்.

“அடுத்த வாரம் வியாழக்கிழமை” என்றார்.

அய்யய்யோ!

“ஏன் இப்பவே வந்திருக்கீங்க?” என்று சற்று கோபத்துடனேயே கேட்டேன்.

“இப்பவே நோட் பண்ணி வச்சாதாங்க நெக்ஸ்ட் வீக் கோர்ஸ் செலக்ட் பண்ண முடியும்” என்றான்.

இவன் அதிகப்பிரசிங்கத்தினம் கொண்டவனாய் இருப்பான் என்றெண்ணி மேலும் சிலரிடம் விசாரித்தேன்.

நாளை மறுநாள்.

சனிக்கிழமை.

அடுத்த வாரம்.

அடுத்த மாதம்.

ஒருவருக்குக் கூட அன்றில்லை. அவர்கள் அதிகப்பிரசங்கி அல்லர். நான்தான் முட்டாளாய்த் தெரிந்தேன்.

பரபரப்புடன் கூட்டத்தை விட்டு வெளியே வந்து பெரியப்பாவிடம் ஒன்றும் சொல்லாமல் அவரை அழைத்துக் கொண்டு அட்மிஷன் கட்டிடத்தை விசாரித்துக் கொண்டு நோக்கி ஓட்டமும் நடையுமாய் சென்றேன். கட்டிடத்தின் வெளியே நின்றிருந்த காவலாளியிடம் அழைப்புக் காகிதத்தைக் காண்பித்தேன்.

அவர், “சீக்கிரம் போங்க சார், டென் தேர்ட்டி க்ரூப் எல்லோரும் ஏற்கனவே உள்ளே போய்ட்டாங்க” என்றார்.

உள்ளே சென்ற எங்களை முதல்மாடியின் ஒரு அறையில் வரிசையில் நிற்க வைத்தார்கள். அங்கேயும் திரை இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் என் பெயரை ஒலிபெருக்கியில் உச்சரித்தார்கள். நானும் பெரியப்பாவும் அழைப்பு வந்த திசையை நோக்கி நடந்தோம். மேலாளர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்று அவரது கணிப்பொறித்திரையின் முன் அமருமாறு சொன்னார்.

அவ்வளவு அருகாமையில் அதற்கு முன் கணிப்பொறியை நான் பார்த்ததில்லை. ஆர்வமும் பயமும் ஒருசேர திரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“எதுக்கு ரெண்டு அப்ளிகேஷன் அனுப்பி இருக்கீங்க?” என்றார்.

“இல்ல… ஒரு சேஃப்டிக்கு” என்றேன்.

சிரித்துக்கொண்டே, “சொல்லுங்க தம்பி, எந்த காலேஜ், எந்த க்ரூப் வேண்டும்?” என்றார்.

“இனிமேல்தாங்க பார்க்கணும்” என்றேன்.

“விளையாடறீங்களா? ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு நிமிஷம்தான் டைம். சீக்கிரம் சொல்லுங்க தம்பி” என்றார்.

பெரியப்பாவிற்கு கோபம் வந்துவிட்டது. “யாருய்யா விளையாடறது? இது வாழ்க்கைப் பிரச்சனை. மெதுவாத்தான் பார்த்து முடிவு செய்வோம்” என்றார்.

“அது இல்லைங்க சார். முன்னாடியே காலேஜ், கோர்ஸ் எல்லாம் செலக்ட் செய்யத்தான் எல்லா இடத்துலயும் ஸ்க்ரீன்ஸ் வச்சிருக்கோம். உங்களுக்கு பின்னாடி எவ்வளவு பேர் வெய்ட் பண்றாங்கன்னு பாருங்க”

“அதெல்லாம் முடியாது. நாங்க மெதுவாத்தான் செலக்ட் பண்ணுவோம்”

எனக்கு இதயம் வேகமாக துடித்தது. பிரச்சனை முற்றுவதற்குள் இங்கிருந்து சீக்கிரம் சென்றுவிட வேண்டும்.

“கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃப்ரீ சீட்ஸ் எந்தெந்த காலேஜ்ல இருக்குங்க? கோயமுத்தூர் பக்கத்துல!” என்றேன்.

மேலாளர் வினவுக்கேற்ப சல்லடையிட்டு திரையில் காண்பித்தார். பெயர்பெற்ற எந்த கல்லூரியிலும் கணிப்பொறி அறிவியல் பிரிவு படிப்பில் இடமில்லை. மற்ற பாடக்கோப்புகளில் எனக்கு நாட்டமில்லை. சில நிமிட மேற்பார்வைக்குப்பின் மூன்று கல்லூரிகள் மட்டும் மனதில் நின்றிருந்தது.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, VLB ஜானகி அம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, RVS பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி கருமத்தம்பட்டியில் இருக்கிறது. வீட்டிலிருந்து முப்பது கிலோமீட்டர்தான். விடுதியில் சேர விடமாட்டார்கள். அது வேண்டாம்.

“VLB ஜானகி அம்மாள் காலேஜ் எங்க இருக்குங்க?” என்றேன்.

அக்கல்லூரியின் விவரங்களை திரையில் காண்பித்தார். முக்கிய விவரங்கள் கிடைத்தன.

கோயமுத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் பதினைந்தாவது கிலோமீட்டரில் கல்லூரி அமைந்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இந்த வருடம்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“பெரியப்பா, இந்த காலேஜ் எடுத்துக்கறேன்” என்றேன்.

“நல்லா பார்த்து யோசிச்சு முடிவு சொல்லு, ஒன்னும் அவசரமில்லை” என்றார்.

மேலாளர் குறுக்கிட்டு, “சார், பக்கத்து சீட்ல நாலு ஸ்டூடண்ட்ஸ் வந்து செலக்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. சீக்கிரம் சொல்லுங்க சார்” என்று கெஞ்சியபடி கேட்டார்.

பெரியப்பா திரும்பி அவரை முறைக்க, நான் “இல்லைங்க, இந்த காலேஜ்தான். ஷ்யூர்” என்றேன்.

பெரியப்பா திரும்பி என்னைப் பார்க்க, நான் பேரானந்தம் கொண்டவனைப்போல முகத்தை வைத்துக்கொண்டேன். இப்போது அவருக்கும் மகிழ்ச்சி.

இப்படியாக, என் நான்கு வருட தலைவிதி VLB ஜானகி அம்மாள் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறி தொழில்நுட்பப் படிப்பில் தொடங்கியது.

இலவசப் பயணம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு தாமதாய் வந்துகொண்டிருந்தேன். அதென்னமோ, இரவு பத்து மணிக்கு படுத்தாலும் மூன்று மணிக்கு படுத்தாலும், காலை எட்டரை மணிக்குத்தான் என்னால் எழ முடிகிறது.

கிண்டியில் இருந்து வேளச்சேரிக்கு பிரியும் சந்தி்ன் சாலை ஓரத்தில் ஒருவர் என்னை நோக்கி உயிரே போய்விடுவது போல் இரண்டு கைகளையும் ஆட்டி அழைத்தார். கையில் மஞ்சள் பையுடன் முழுக்க மொட்டை அடித்து பட்டை இட்டிருந்தார். ஆஜானுபாகுவான உடல்வாகு. உயர் சாதி ரௌடி என்று நினைக்கிறேன்.

குழப்பத்துடனும் சற்று பயத்துடனும் ஓரக்கண்ணால் பார்த்தபடியே வண்டியை வேகத்தைக் குறைத்தேன். வேகம் குறைந்ததும் வண்டியின் முன் வந்து வழிமறித்து நின்றார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வந்து விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும் என்றவர் வண்டியின் பின் இருப்பில் அமர்ந்து விட்டார்.

ஷேர் ஆட்டோ மாதிரி இதை ஷேர் பைக் என்று நினைத்துக் கொண்டாரா?

“இறங்குய்யா” என்று கத்திவிடலாமா?

ஆள் வேறு அடியாள் மாதிரி இருக்கிறாரே! ஒருவேளை ஏதாவது அவசர வேலையாய் இருக்குமோ?

அவர் உட்கார்ந்ததும் வண்டியின் பின்புறம் அரையடி இறங்கியது. எங்கே போனதென்றுதான் தெரியவில்லை. அவர் தன் வலது கையை எடுத்து என் தோள் பட்டையின் மீது போட்டுக் கொண்டு போகலாம் என்றார்.

ஒரு வேளை அப்படியிருக்குமோ என்று யோசித்தேன். இருக்கலாம் என்று மனம் நம்பியதால் என் தோள் பட்டையை லேசாக ஆட்டி அவர் கையை இறக்கினேன். அவர் மீண்டும் கையை என் தோள்பட்டை மீது போட்டுக் கொண்டு இறுக்கமாக அழுத்தினார்.

வேறு வழியில்லை என்றெண்ணி வண்டியை மெல்ல நகர்த்தினேன். குறைந்தது நூற்றியிருபது கிலோ இருந்திருப்பார். குவார்ட்டர் அடித்த குரங்கைப் போல் என் வண்டி வடக்கும் தெற்குமாக தள்ளாடியது. ஹேண்டில்பாரை ஸ்டெடி செய்வதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன்.

“ம்ம்.. ம்ம்.. மெதுவா” என்று அதட்டினார்.

“டேய் குண்டா, இறங்குடா கீழ” என்று சொல்லத் தோன்றியது. இருந்தாலும், அவர் சைஸிற்கு மரியாதை கொடுத்து அமைதியாக வந்தேன்.

“ஓரமா.. ஓரமா போ. லெஃப்டலயே போ, ரைட்ல எல்லாம் ஏறிட்டு வருவானுக” என்றார்.

அமைதி.

“இன்னும் நல்லா லெஃப்ட்ல வா” என்றவர் தோள்பட்டையை நன்றாக அழுத்தினார். வண்டி இடதுபுறம் நகர்த்தப்பட்டது.

இருநூறு மீட்டர் தொலைவு சென்றிருந்தபோது, வலது பக்கம் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இடதுபுறம் இண்டிகேட்டரை போட்டுக் கொண்டு மெதுவாக திரும்பியது.

நான் வண்டியை வேகத்தை இன்னும் தளர்த்தி காருக்கு வழி கொடுத்து பின் வலதுபுறமாய் சென்றேன்.

மெதுவாக நிறுத்த முற்பட்டுக் கொண்டிருந்த அந்த காரை முந்திச் செல்கையில் பின்னாலிருந்தவர் ஓட்டுனரை பார்த்து கையை நீட்டி, “போறான் பாரு பன்னாடை. லெஃப்ட்ல நிக்கப்போறவன் முதல்லயே ஸ்லோ பண்ண மாட்டான். எல்லாம் அவனவன் இஷ்டத்துக்கு வண்டி ஓட்றானுக” என்றார்.

கார் ஓட்டுனர் எங்களை முறைத்தது கண்ணாடியில் தெரிந்தது. அய்யய்யோ, வேகமாக வந்து சண்டை போடுவானா? தெரியாத்தனமா இவனை ஏத்திட்டு சீரழியறனே!

நல்லவேளையாக ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டார். பின்னாலிருந்தவர் என்னிடம் ஏன் இந்தியாவில் போக்குவரத்து சரியில்லையென்று கொச்சையாக கட்டுரை பேசிக் கொண்டுவந்தார். அவ்வப்போது தோள்பட்டையை அழுத்தினார்.

“மெதுவா… மெதுவா… ” என்றும் “லெஃப்ட்… லெஃப்ட்…” என்றும் கிலோமீட்டருக்கு மூன்று முறை கூவினார்.

“இதற்கும் மேல் லெஃப்டில் போனால் வண்டி சுவறில் மோதிவிடும்” என்று சொல்ல நினைத்து பின் நிறுத்திக் கொண்டேன்.

ஒருவழியாக விஜயநகர் பேருந்து நிறுத்தம் வந்தது. வண்டியை நிறுத்தி திரும்பி அவரை பார்த்தேன். அவர் இறங்கியதும் காணாமல் போயிருந்த வண்டியின் அரையடி மீண்டும் வந்துவிட்டது.

எங்களுக்கு வலதுபுறம் இருசக்கர ஓட்டுனர் ஒருவர் அருகில் வந்திருந்த காரின் மீது மோதிவிடுவதைப் போல் வந்து சுதாரித்துக் கொண்டார்.

“ம்ம்.. ம்ம்.. பாரு, பாரு. நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்கடா” என்றவர் பேசிக்கொண்டே போனார். இருசக்கர ஓட்டுனர் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்விட்டார்.

இப்போது அவர் என்னை பார்த்தார். மரியாதை நிமித்தமாக சிரிக்கலாமா என்று யோசித்து பின் வேண்டாமென்று  முடிவு செய்தேன். “நன்றி” என்றொரு வார்த்தையை அவர் உதிர்த்துவிட்டால் அங்கிருந்து பறந்து விடவேண்டும்.

ஆனால் அவர் பார்த்த பார்வை, “என்னடா பாக்கறே? நாந்தான் பஸ்ஸுக்கு நிக்கறேன், நீ ஏன் லூசு மாதிரி இங்கேயே நிக்கறே?” என்பது போலிருந்தது.

எரிச்சலாகிப் போய் வேகமாக வண்டியை திருப்பி மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டு அலுவலகம் வந்தடைந்தேன்.

பொக்கிஷம் – 6

ஒருவழியாய் வங்கிக்கடன் வாங்கி விசாவும் வாங்கிவிட்டேன். என் நண்பனின் நண்பன் ப்ரசன்னா மேக்டிபர்கில் படித்துக்கொண்டிருந்தான். அவனுடன் தொலைபேசியில் பேசி நான் வருவதை ஒருவாறு உறுதி செய்தேன்.

2003 மார்ச் 31ம் தேதி.

சென்னை டு ஃப்ராங்ஃபர்ட், எமிரேட்ஸ் விமானத்தில் பயணம். பனிமூட்டங்களுக்கு நடுவில் விமானம் பயணித்துக் கொண்டிருந்தது. மீராவின், “அந்த நாளும் வந்திடாதோ?” பாடல் நினைவிற்கு வந்தது. துபாயில் மூன்று மணி நேரம் இடைநிலை விசா வாங்கி விமான நிலையத்தை சுற்றிப் பார்த்தேன்.

பிரமாண்டத்தின் மீதான என் முதல் பார்வை அது. நாகரிகத்தின் மற்றுமொரு பரிமாணமாய் காட்சியளித்தது. என் போன்ற சாமானியர்களும் நுழையத் துடிக்கும் இன்னொரு உலகம். நான் நுழைந்துவிட்டேன். எனில் மற்றவர்கள் எவ்விதத்தில் தாழ்ந்து போயினர்?

விஞ்ஞானமும் நாகரிக வளர்ச்சியும் எல்லா மனிதனையும் சமமாக வழி நடத்தும் கருவியாகத்தானே இருக்கமுடியும்? அது ஏன் சாத்தியமாகவில்லை? மனிதன் குகையில் வாழ்ந்த காலம் தொட்டு சோதனைக்குழாயில் மனிதன் வாழும் காலம் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் குறையவில்லையே. சமயங்களும் வேதங்களும் அறிவுஜீவிகளும் ஆயிரமாயிரம் காரணம் சொன்னாலும் இந்நியதி இப்படியேதானே இருந்து கொண்டிருக்கிறது?

அட… எனக்கு ஏன் திடீரென என்னென்னவோ தோன்றுகிறது? என் ஜெர்மன் கனவுகள் நிஜமாகிப்போகும் தறுவாயில் மனம் சமூகத்தின் சாடலை ஏன் எதிர்கொள்கிறது?

நான் நலமாகத்தான் இருக்கிறேனா?

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?

மனம் ஏன் சஞ்சலமடைந்துள்ளது?

இது ஏக்கம். எனக்கு கிடைத்தது ஏன் எங்களூர் சுப்பனுக்கும் குப்பனுக்கும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம். நாகரிக மக்களைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக உழைப்பவன் அவன். அவர்களுக்குத் தேவை சமநியதி. அது காந்திய வழியில் வந்தாலும் சரி, சேகுவேராவின் வழியில் வந்தாலும் சரி.

ஃப்ராங்ஃபர்ட் விமானம் கிளம்ப ஆயத்தமாகும் செய்தி வந்தது. உள்ளே சென்று அமர்ந்துகொண்டேன். இன்னும் ஏழு மணி நேரத்தில் ஜெர்மனி. அரபுவகை உணவை உண்டதாக ஞாபகம்.

திடீரென மனம் படபடத்தது. ப்ரசன்னா விமான நிலையம் வந்திருப்பானா? தொலைபேசியில் அவனைக் கொஞ்சம் குழப்பிவிட்டிருந்தது போன்று உணர்ந்தேன். அவன் வராவிட்டால் என்ன செய்வது? ஃப்ராங்ஃபர்ட்டில் இருந்து மேக்டிபர்க் ஐந்நூறு கிலோமீட்டர் ஆயிற்றே?

சரி விடு, குழம்பிக்கொள்வதால் தீர்வேதுமில்லை. இப்போதைக்கு பயணத்தை ரசிப்போம். மீதி பிரச்சனையை இறங்கியதும் பார்த்துக் கொள்ளலாம்.

ஜன்னலின் வழியே ஜெர்மன் நிலப்பரப்பை ரசித்துக் கொண்டிருந்தேன்.  சரியான நேரத்தில் ஃப்ராங்ஃபர்ட் வந்தடைந்தது. கீழே இறங்கி பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு தட்டுத்தடுமாறி வெளியே வந்துகொண்டிருந்தேன். அங்கே நான் கண்ட ஒரு காட்சி, இதற்கு முன் பார்த்திராதது. சமூகச்சீரழிவாக எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் எம்மக்கள் இப்படி நடந்திருந்தால் நிச்சயம் மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்திருப்பார்கள். அக்காட்சியையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஆணும் பெண்ணும் இதழோடு இதழ் கவ்வி கண்களை மூடி மெய்மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் இரு கைகளும் அவன் கழுத்தை சுற்றியிருந்தது. ஆணின் கைகளோ அவளின் இடையை இடைவிடாது படர்ந்து கொண்டிருந்தது.

அதிர்ச்சியாகிப் போய் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தவிர ஒருவரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்தே இது அவர்கள் கலாச்சாரம் என்று விளங்கத்தொடங்கியது. மனதில் பயம் கலந்த கிளர்ச்சி உண்டானது.

சுதாரித்து வெளியே வந்து இந்தியர்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தேன். ஒருவரும் இல்லை. அரை மணி நேரம் காத்திருந்ததும் பயம் அதிகமானது. மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கு மேல் என்ன செய்வது? ஹோட்டலில் போய் தங்கலாமா? அய்யய்யோ, எக்கச்சக்கமா செலவாகுமே! நம்மை ஏமாற்றி இருக்கிற யூரோக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வது? பேசாமல் இங்கேயே தூங்கி விடலாமா? நம்மூரைப்போல் இங்கேயும் மக்கள் விமான நிலையம், நடைபாதையில் எல்லாம் படுப்பார்களா?

நல்லவேளையாக ப்ரசன்னாவின் கைபேசி எண் இருந்தது. ஒரு யூரோ நாணயத்தை பொது தொலைபேசி ஒன்றில் இட்டு ப்ரசன்னாவின் கைபேசிக்கு அழைத்தேன். அழைப்புமணி அடித்து முடித்தும் யாரும் எடுக்காததால் தொடர்பு துண்டிக்கப்பட்டது. உள்ளே போன நாணயம் வெளியே வரவேயில்லை.

அழாத குறையாக நின்று கொண்டிருந்தேன். அரைகுறை ஜெர்மன் மொழியறிவைக் கொண்டு தொலைபேசி அட்டை வாங்கிக்கொண்டால் சிக்கனமானது என்று தெரிந்துகொண்டேன். பத்து யூரோ தாளை கொடுத்து அட்டையை வாங்கிக் கொண்டேன். அதில் ஐம்பது நிமிடம் வரை ஜெர்மனிக்குள் பேசிக்கொள்ளலாம் என்றிருந்தது. கொஞ்சம் பரவாயில்லை.

இரண்டு நிமிட இடைவேளையில் ப்ரசன்னாவை அழைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு அங்கு வேறு யாரையும் தெரியாது. நான்காவது முறை எதிர்முனையில் இருந்து குரல் வந்தது.

“ஹலோ?”

“ஹலோ… ஹலோ… ப்ரசன்னா, நான் ஜெகதீஷ்டா. உன்கிட்ட போன வாரம் ஃபோன்ல பேசினேனே”

“ஓ, யெஸ். சொல்றா. எப்ப ஜெர்மனிக்கு வர்றே?”

அதிர்ந்து போய்விட்டேன். “டேய், நான் ஃப்ராங்ஃபர்ட்ல தான்டா இருக்கேன். இப்பதான் வந்தேன்”

“நீ அடுத்த வாரம் தானே வர்றேன்னு சொன்னே?”

அவன் இருப்பது ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில். இப்போதே மணி  பத்து. பயத்தில் உளறினேன்.

“ப்ரசன்னா, நான் உன்ன குழப்பிட்டேன்னு நினக்கிறேன். எனக்கு இங்க யாரையும் தெரியாதுடா”

ப்ரசன்னாவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் “ஆபத்பாண்டவன்”.

“டேய்… நீ பயப்படாதே. எப்படியாவது உன்ன இங்க பத்திரமா கூட்டிட்டு வந்திர்றேன்”

“சரி” என்றேன்.

மறுபடியும் “நீ பயப்படாம இரு” என்றவன், அருகில் இருந்தவர்களிடம், “ஃப்ராங்ஃபர்ட்டில் நம்ம பசங்க இருக்காங்களான்னு பாரு. நாயுடுவுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அவனுக்கு ஃபோன் பண்ணு” என்றான்.

திரும்பவும் என்னிடம், “ஜெகதீஷ், நீ கரெக்டா பத்து நிமிஷம் கழிச்சு இதே நம்பருக்கு ஃபோன் பண்ணு. ஐ வில் அரேஞ்ச் திங்ஸ் பை தட் டைம். நீ ஒண்ணும் வொரி பண்ணிக்காத. நம்ம பசங்க அங்க இருப்பாங்க, பாத்துக்கலாம்” என்றான்.

சரியென்று விட்டு எதிரில் இருந்த காபிக்கடைக்கு சென்றேன். “Einen Kaffee, bitte” என்று சொல்லி பத்து யூரோ தாளைக் கொடுத்தேன். கடைக்காரர் மீதி ஆறு யூரோதான் கொடுத்தார். இனிமேல் காபியே குடிக்கக்கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன்.

சரியாக பத்து நிமிடம் கழித்து மீண்டும் ப்ரசன்னாவை அழைத்தேன். முதல் அழைப்பு மணியிலேயே எடுத்தான்.

“ஜெகதீஷ், நீ ஏர்போர்ட்டுக்கு கீழே மெக்டொனால்ட்ஸ் முன்னாடி வந்து நில்லு. இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு தெலுங்குப் பையன் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்குவான். இன்னைக்கு நைட் மட்டும் அவனோட ஸ்டே பண்ணிடு. மார்னிங் அவனே உன்ன மேக்டிபர்குக்கு ட்ரெய்ன் புடிச்சு அனுப்பிருவான். அப்புறம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.

சரியென்று விட்டு கீழே இறங்கி மெக்டொனால்ட்ஸ் அருகில் சென்று நின்றுகொண்டேன். கொகொ கோலா மூன்று யூரோ என்று போட்டிருந்தது. இந்த ஊரில் சமாளிக்க முடியுமா? ப்ரசன்னாவிடம் பகுதிநேர வேலைக்கு உதவி கேட்க வேண்டும்.

மெக்டிபர்கில் அப்பல்ல நாயுடு என்பவரின் நண்பர் என்னை வந்து அழைத்துக் கொண்டு சென்றார். போகும்வழியில் தொலைபேசி நிலையம் ஒன்றில் நிற்கச்சொல்லி விட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார். அங்கே ஒரு கருப்பழகியுடன் சிரித்துச் சிரித்து பேசினார். கண்ணாடிக்கு வெளியில் இருந்து பார்க்கையில் குழைந்து கொண்டிருப்பது போல தெரிந்தது. நாமும் இப்படி எல்லாம் செய்ய வேண்டுமோ என்றெண்ணினேன். அன்றிரவு அவருடன் உண்டு உறங்கினேன்.

அடுத்த நாள் அவரே என்னை மெக்டிபர்க் வழியாக பெர்லின் செல்லும் இரயிலில் ஏற்றிவிட்டார். கட்டணம் அறுபது யூரோ. மூவாயிரம் ரூபாய். வேலைக்கு செல்வதற்குள் வங்கிக்கடன் முடிந்துவிடும் போலிருக்கிறதே!

மேக்டிபர்கில் இரண்டு பேர் என்னை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்.

“ஹாய், நான்தான் ஜெகதீஷ். நீங்க ப்ரசன்னாவா?”

“நாங்க ப்ரசன்னாவோட ஃப்ரெண்ட்ஸ். என் பெயர் சோலைராஜ். இவன் பெயர் வேணு. ப்ரசன்னாவிற்கு யுனிவர்சிட்டில சின்ன வேலை இருக்குன்னு எங்களை அனுப்பினான். நாம போறதுக்குள்ள அவன் வந்துருவான்”

ஒரு தெருத்தொடர் உந்து வண்டியை பிடித்து யுனிவர்சிட்டி வழியாக விடுதியை சென்றடைந்தோம். அங்கிருந்த தென்னிந்திய மக்களுடன் ஒரு அறையில் பேசிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில், “வாடா ப்ரசன்னா. உன் ஃப்ரெண்ட் வந்துட்டான்” என்று வெளியில் யாரோ சொல்வது கேட்டது. அறையின் வாயிலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருந்த சாவியை கையில் சுழற்றியபடி வேகமாக உள்ளே நுழைந்தான் ப்ரசன்னா. கருப்பு வண்ண மேலங்கி. ஒல்லியான உடம்பு. அலட்சியமும் அக்கறையும் கலந்த பார்வை. வசீகரிக்கும் புன்னகை. முதல் பார்வையிலேயே அவனைப் பிடித்திருந்தது. பின்னாளில் நான் நவரச உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய ஒரே ஆண்மகன் அவன்.

என்னைப் பார்த்து சிரித்தபடி, “வந்துட்டியாடா? வெல்கம் டு ஜெர்மனி. வெல்கம் டு மேக்டிபர்க்” என்று கைகுலுக்கினான்.

அந்த வார்த்தையின் உண்மை என்னை பரவசப்படுத்தியது. இதற்காகத்தானே காத்துக்கிடந்தேன். கனவுகளும் எண்ணங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து நின்ற தருணம் அது. ப்ரசன்னா என்னும் நண்பன் வாயிலாக முழுமை பெற்றிருந்தது.

[முற்றும்]

*****

# அதே வருடம் அக்டோபர் மாதம் சங்கர், மதன், மோகன் என்று என்னுடன் பழகிய அனைவரும் ஜெர்மன் வந்துவிட்டனர்.

# சங்கர் இப்போது ஜெர்மனியிலும், மதன் சுவிட்சர்லாந்திலும், மோகன் நெதர்லாந்திலும், ப்ரசன்னா பெல்ஜியத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

# இரண்டு வருடம் படிப்பு, இரண்டு வருடம் வேலை என்று ஜெர்மன் வாசத்தை முடித்துக் கொண்டு தனிப்பட்ட காரணம் கருதி 2007-ல்  தமிழ்நாடு திரும்பிவிட்டேன். இன்றும், ஜெர்மனியின் மீதான என் காதலை, தீராத மோகம் என்றே சொல்லுவேன்.

*****

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5
Part – 6

பொக்கிஷம் – 5

“ஹாய், ஐ யாம் ப்ரவீன்”

“ஹாய், நான் ஜெகதீஷ். இது சங்கர்”

“நீங்க எந்த யுனிவர்சிட்டிக்கு போறீங்க?”

“இப்பதாங்க அப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்கோம். அக்டோபர்ல தான் போவோம்னு நினைக்கிறேன்”

“ஓ காட். எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அட்மிஷன் கிடைச்சுருச்சு. விசா கூட வாங்கப்போறேன். சும்மா ஜெர்மன் ஒரு லெவல் படிச்சுக்கலாம்னு வந்தேன்”

எங்களுக்கு நெருப்பில்லாமல் புகைந்தது.

“ஜெர்மன் மொழியறிவெல்லாம் தேவையே இல்லைங்க”

நான் குறுக்கிட்டு, “நீங்க எப்பவுமே பீட்டர் இங்லேண்ட் ஷர்ட்தான் போடுவீங்களா”, என்றேன். ப்ரவீனுக்கு புரியவில்லை.

சங்கர் என்னைப் பார்த்து, “மச்சி, எங்கேயோ போகணும்னு சொன்னே இல்ல?”

“ஆமான்டா, மறந்துட்டேன் பார்த்தியா” என்றேன். “சாரிங்க ப்ரவீன், நாம் இன்னொரு நாள் டீடெய்லா பேசலாமே”

“ஓ.கே., நோ ப்ராப்ளம்”

சில நாட்கள் கழித்து எதேச்சையாய் அறைக்கு அழைக்கப்போய் ப்ரவீன் உண்மையிலேயே வந்திருந்தான். ப்ரவீனும் சங்கரும் அறைக்குள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. முன்னெச்சரிக்கை மணி அடித்தது. தயாராக சில பொய்களை உருவாக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அவர்கள் பேச்சில் கலந்துகொண்டேன். சிறிது நேர விவாதத்திற்குப்பின் ப்ரவீன் விஷயத்திற்கு வந்தான்.

“நெக்ஸ்ட் வீக் ஜெர்மன் கிளம்பறேன். நாளைக்கு ஷாப்பிங் பண்ணனும். ஜெகதீஷ், நீங்க ஃப்ரீயா இருந்தா ஈவ்னிங் வாங்களேன், நாம ரெண்டு பேரும் கொஞ்சமா ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சுரலாம்”

“அடடா. இன்னைக்கு மதன் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டனே. சாரிங்க”. பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்.

ப்ரவீன் திரும்பி அதே கேள்வியை சங்கரிடம் கேட்டான். சாதாரணமாக, சரளமாக பொய் சொல்லக்கூடியவன் தான் சங்கர். ஆனால், அன்றைக்கு தடுமாறி சரியென்று விட்டான். சரியென்றதுமே நான் அவனைப் பார்த்து துக்கப்பார்வையை உதிர்த்தேன்.

ப்ரவீன் சென்றதும், “உனக்கு பெரிய மனசு சங்கர்” என்றேன்.

“ஃப்ரீயா விடு மச்சி. உளறிட்டேன்.”

மாலை ஐந்து மணிக்கெல்லாம் ப்ரவீன் வந்துவிட அவனும் சங்கரும் ஷாப்பிங் செய்ய கிளம்பினார்கள். அறையில் நானும் மற்றவர்களும் என்ன நடந்துகொண்டிருக்குமென பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். சங்கர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். பிடிக்கவில்லையென்றால், “நீ பெரிய புடுங்கியா இருந்தா அத உன்னோட வச்சுக்க. என்னோட இருக்குறப்ப மூடிட்டு இரு. இல்லைனா நான் போறேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு வந்துவிடுபவன். அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

இரவு ஒன்பது மணியளவில் அறைக்கு வந்தான். வெறுப்புடன் செருப்பைக் கழட்டி வீசி கட்டிலில் சாய்ந்தான். நான் அவனையே புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது. அவன் எதுவும் பேசாமல் மின்விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னடா, ஷாப்பிங் பண்ணீங்களா?” லேசான கிண்டலுடன் ஆரம்பித்தேன்.

பத்து விநாடிகள் அமைதியாக இருந்தவன் என்னை நோக்கி திரும்பினான்.

“மச்சி… மூணு மணி நேரம்… ஸ்பென்சர் ப்ளாசாவில் உள்ள எல்லா கடைக்கும் உள்ளே போய்… அவன் நாளைக்கு என்னென்ன வாங்கப்போகிறாங்கிறத எனக்கு காமிச்சான்டா”

எங்களுடன் சேர்ந்து அவனும் சிரித்தான்.

மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பொய்கள், ஏக்கம், வெறி என்று உணர்ச்சிகளின் கலவையாய் வாழ்ந்த காலகட்டம். நாட்கள் நகர்ந்து 2003 பிறந்தது. ஜெர்மன் மொழியின் அடுத்தடுத்த தளத்திற்குப் போய்க்கொண்டிருந்தோம். ஜெர்மனிற்கு போகத்தான் வாய்ப்பு வரவில்லை.

மேக்டிபர்க், டூயிஸ்பர்க், ப்ரேமன், ம்யூனிக் என்று நான்கு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தேன். மார்ச் அனுமதி பெறுவது சிரமம். அக்டோபருக்குத்தான் போக முடியும். இன்னும் பத்து மாதங்கள்!

ஜெர்மன் மொழி வகுப்பில் ஒருநாள் “Wenn ich fahre nach Deutschland wurde…” என்றொரு வரியினை பாடலாக பாடி “நான் ஜெர்மனிக்கு சென்றால், அப்போது…” என்னும் பொருளுடன் ஒவ்வொருவராக சில வாக்கியங்களை பேசச்சொன்னார்கள். என்ன சொன்னோம் என்று நினைவில்லை. அப்போதைக்கு அது அவசியமும் இல்லை. “நான் ஜெர்மனிக்கு சென்றால்” என்பது மட்டுமே குறிக்கோள். அதை மேற்கோள் காட்டி வாக்கியங்கள் எதற்கு?

எங்களின் தேசிய கீதமாகிப்போனது அந்தப் பாடல். “Wenn ich fahre nach Deutschland wurde.. Wenn, ach wenn? Dann, ach dann!” என்பதாக எங்களுக்குள் வாசித்துச் சிரித்துக்கொள்வோம்.

பள்ளியில் “Ich möchte … (I would like to …)” என்று வாக்கியம் அமைக்கச்சொன்னால் “Ich möchte pause machen (I would like to have break!)” என்றும் ஒன்றுக்குப் போகலாம் என்பதை “Eins gehen? (Shall we go for one?)” என்றும் “கொத்தால்சாவடி Damen (lady), bitte (please) கோயம்பேடு Kommen (Come)” என்றும் மதனின் நகைச்சுவை கலாட்டாக்களில் சுவாரசியம் மெருகேறியது.

பொங்கல் விடுமுறை நாட்களில் திருப்பூரில் தங்கியிருந்தேன். அடுத்த வகுப்பு துவங்க இரண்டு வாரங்கள் இருந்தது. திருப்பூரில் இருக்கும் எல்லா நாட்களிலும் பத்து மணியிலிருந்து வெளியே அமர்ந்திருப்பது வழக்கமாகிப்போனது. தபால்காரர் வரும்வரை.

அவ்வாறு காத்திருந்த ஜனவரி மாத இறுதி நாளொன்றில் கடிதம் ஒன்று வந்திருந்தது. கடிதத்தின் மேற்பரப்பில் “University of Magdeburg, Germany” என்றிருந்தது. பயமும் பதட்டமும் எதிர்பார்ப்புமாய் கடிதத்தின் மடிப்புகளை கவனமாக அவிழ்த்தேன். அதன் தமிழாக்கம்:

“அன்புள்ள ஜெகதீசன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு,

நீங்கள் முதுகலை கணிப்பொறியறிவியல் மேற்படிப்பிற்காக அனுப்பியிருந்த விண்ணப்பம் கிடைத்திருந்தது. விண்ணப்பத்தை பார்வையிட்ட பின் உங்களை M.Sc. Computer Visualistics படிப்பிற்காக தேர்வு செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

படிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.”

மேலும் இருந்த மூன்று பத்திகளை படிக்க பொறுமையில்லை. இரண்டு கைகளையும் முழுவதுமாக உயர்த்தி தலையை தூக்கி கண்களை மூடிக்கொண்டேன். டெண்டுல்கர் சதமடித்ததும் மட்டையை உயர்த்திப் பிடித்து வானத்தை பார்த்திருப்பது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளலாம். பலம் கொண்ட மட்டும் சத்தமாக கத்தினேன். அந்த சத்தம் என் காதுகளில் வழிந்தோடி பரவசத்தை மேலும் உண்டு செய்தது.

சிறிது நேரம் கழித்து கண்களை திறந்து குனிந்து பார்க்கையில் என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அரக்க பரக்க ஓடி வந்திருந்தனர். என் அம்மா உட்பட. விவரத்தை சுருக்கமாக சொல்லி மன்னிப்பு கேட்டுக்கொண்டு வீட்டினுள் ஓடிவிட்டேன்.

உள்ளே சென்றவன் என்னையுமறியாமல் பூஜையறைக்கு சென்றேன்.  எனக்கு நினைவு தெரிந்து நானாக விரும்பி பூஜையறைக்கு சென்றதில்லை. நான் நாத்திகனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆத்திகனல்ல என்பது நிச்சயமாக தெரியும். அன்றைக்கு உள்ளே சென்றவன் அறையின் கீழ் மாலையிட்டிருந்த படத்தை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

பாலகிருஷ்ணன். என் அப்பா.

நான் பத்து வயதாயிருக்கும்போது சாலை விபத்தில் உயிரிழந்தவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். அன்பும் பொறுமையும் அவரிடமிருந்து எவரும் கற்றுக்கொள்ளலாம். பொருளீட்டவும் தெரியாதவர். அவர் இறந்தபின் கிடைத்த வைப்புத்தொகைப் பணத்திலும் அரசாங்க நிதியுதவியிலுமே நாங்கள் சொந்த வீடு கட்டி அக்காவின் திருமணத்தையும் முடித்திருந்தோம். இன்னும் ஐந்தாறு வருடங்கள் இருந்து இறந்திருந்தால், அவர் காட்டிய அன்பில், பிரிவின் துயரம் தாளாமல் பித்துப் பிடித்து சுற்றியிருப்பேன்.

இக்கணம் அவர் இருந்திருக்க வேண்டும். நான் அடைந்திருந்த பரவசத்தைப் பார்த்திருக்க வேண்டும். அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

I miss you Papa. I miss you so much.

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5
Part – 6

***

பொக்கிஷம் – 4

வகுப்புகள் துவங்க நான்கு நாட்கள் இருந்தன. இரண்டாம் நாள் ஒரு தபால் ஊழியர் அறைக்கதவை தட்டினார். சம்பத் ஊரிலிருந்து அனுப்பியிருந்த என் கணிப்பொறி வந்திருந்தது.

“நீங்கள்தான் ஜெகதீஷா சார்?”

“ஆமாம்”

“உங்களுக்கு திருப்பூரிலிருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது.”

கீழே இருந்த பார்சலலை பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து, “இதில் என்ன இருக்கிறது?” என்று சந்தேகமாய் கேட்டார்.

“கம்ப்யூட்டர்”

“இதை உங்களுக்கு அனுப்பியது யார்?” என்றார்.

சம்பத், நண்பன் என்று நீட்டாமல் சுருக்கமாக ஒரு பொய்யை சொல்லிவிடலாமென்று, “என் தம்பி” என்றேன். அரை நாழிகையில் உதிர்த்துவிட்ட அவசரப் பொய் அது.

அவர் மீண்டும் ஒருமுறை அட்டவணையை பார்த்துவிட்டு, “இதில் அப்துல் என்று போட்டிருக்கிறது. தம்பி என்கிறீர்கள்?” என்றார்.

அப்துல் சம்பத்தின் அலுவலக சகா. அப்துலை விட்டு சம்பத் இந்த பார்சலை அனுப்பியிருக்க வேண்டும். பொய்க்குதிரையைப் பறக்கவிட்டு வாயில் வந்ததை சொல்ல ஆரம்பித்தேன்.

“ஆமாம். என் தம்பிதான் அப்துல்!”

“உங்க பேரு ஜெகதீஷ். உங்க தம்பி பேரு அப்துல். எப்படி சார்?” சந்தேகத்திற்கு பதில் ஆர்வமாய் கேட்டார்.

“அது… வந்து… அம்மா முஸ்லீம். அப்பா இந்து. அதான்” என்றேன்.

அவர் ஏற இறங்கப் பார்த்தார். ஏதும் பேசாமல் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பார்சலை தந்தார்.

எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நான் சொன்ன பொய் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று மனம் எண்ணியிருக்க வேண்டும்.

அடுத்த நாள் என் கல்லூரி நண்பன் கணபதியை தற்செயலாய் சந்தித்தேன். அவனுடன் அன்றைய பொழுது கழிந்தது. கல்லூரி நண்பர்கள் ஒவ்வொருவராய் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாய் சொன்னான். திருவல்லிக்கேணியைப் பற்றியும் சொன்னான். சீக்கிரம் நண்பர்களுடன் அங்கு செல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

மதனும் ஜெர்மன் மொழிப்பள்ளியில் சேர்ந்து விட, கணபதி, மதன், சங்கர் என்று தனிமையிலிருந்து மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்தேன்.

முதல் நாள் வகுப்பு தொடங்கியது. எப்போதும் போலவே பேனா பேப்பர் எதுவும் கொண்டு வரவில்லை. சங்கரிடம் ஓசி கேட்டேன். அவனும் ஏதும் கொண்டு வந்திருக்கவில்லை. “வாங்கினால் தொலைந்து விடும், அதனால் எதையும் வாங்குவதேயில்லை” என்றான். இதிலும் என்னைப் போல் ஒருவன். இருவரும் ஓசி வாங்கிக் கொண்டோம்.

வகுப்பில் இருந்தவர்களை எண்ணினேன். மொத்தம் முப்பத்தி மூன்று பேர். படீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒருவர் வந்தார். படபடவென பேச ஆரம்பித்தார்.

“Entschuldigen Sie, Guten Morgen! Damen und Herrn, Mein name ist Sundararajan” பேசிக்கொண்டே போக ஐந்தாறு நிமிடங்கள் கழித்துத்தான் அவர் ஆசிரியர் என்றே புரிந்தது.

மொழியை ஜெர்மன் வாயிலாகவே கற்றுத்தந்தார்கள். கேட்பதற்கு மிகையாய் இருந்தாலும், அதுவே சாலச்சிறந்ததென்று சில நாட்களில் உணர்ந்துகொண்டோம். ஜெர்மனை ஆங்கிலம் வாயிலாக கற்றிருந்தால் ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலத்தில் கற்பனை செய்துகொண்டிருப்போம். அறிவியல், கணிதம் போலல்ல மொழியென்பது.

அவர்கள் கற்றுத்தந்த விதம் மிக நேர்த்தியானது. தமிழ் மொழியின் மீது நான் காதல் கொள்ள ஜெர்மன் ஆசிரியர்களும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

நாளுக்கு நாள் நண்பர்களும் ஜெர்மன் மொழியும் ஜெர்மன் கனவும் வளர்ந்து கொண்டே சென்றது. இரண்டு மாதத்தில் நானும் கணபதியும் திருவல்லிக்கேணி சோஃபியா மேன்ஷனில் அறை எடுத்துக்கொண்டோம். கணபதி தீவிரமாய் வேலை தேடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதமே சங்கர் அவன் நண்பனுடன் பக்கத்து அறைக்கு குடிவந்தான். அன்றிலிருந்து வாழ்க்கை கனவுகளாலும் முயற்சிகளாலும் பயணித்தது.

Deutsch ist ein Maskulin Sprache. Deutschland ist das einzige Vaterland in der Welt.

ஜெர்மனியில் என்ன வேலை கிடைக்கும்? சாஃப்ட்வேர் வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டமோ?

Die, Der und Das sind drei verschiedene Artikeln auf Deutsch. Die ist Feminin, der ist Maskulin und das ist Neutrum.

எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும். அங்கே பேப்பர் போடும் வேலை எல்லாம் இருக்குமா?

Jeden objekt hat ein Artikeln. zum Beispiel, Buch ist das Buch; Zug ist der Zug; Küche ist die Küche.

யுனிவர்சிட்டி லிஸ்ட் எடுத்து ஒவ்வொரு கோர்ஸுக்கும் சீக்கிரம் அப்ளை செய்ய வேண்டும். அடுத்த வாரம் டோஃபல் இருக்கிறது. அதற்கும் தயார் செய்யவேண்டும்.

என்னால் முழுமையாக ஜெர்மன் மொழியில் சோபிக்கமுடியவில்லை என்பதும் உண்மை. நானும் சங்கரும் ஆசிரியரைப் பார்த்த நேரத்தை விட அறையினுள்ளிருந்த ஜெர்மன் வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நேரமே அதிகம்.

முதல் நிலை ஒன்றரை மாதத்தில் முடிந்து இரண்டாவது நிலை ஆரம்பித்தார்கள். நான், மதன், சங்கர் என எல்லோரும் ஒரே வகுப்பு. பெரும்பாலான மாலை வேளைகளில் மெரினாவிற்கு சென்று விடுவோம். கடற்கரை காற்றும் கடல் அலை சத்தமும் பரந்துவிரிந்த நீலமும் கனவுக்கு வித்திடுபவை. அவ்வப்போது மேலே விமானம் பறக்கும். விமானத்தைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.

சங்கர் ஒரு நாள், “ஏன் மாப்ளே, இப்டியே நூல் புடிச்சாப்ல நீந்திகிட்டு ராமேஸ்வரம் வழியா போய் சவுதி அரேபியா, எகிப்து, க்ரீஸ், ஸ்பெய்ன் அப்டீனு ஜெர்மன் போக முடியாதா?” சீரியஸாகவே கேட்டான். தேடும் பொருளுக்கு ஈடாய் அதை நாடி மேற்கொள்ளும் தேடலிலும் இன்பம் இருக்கத்தான் செய்கிறது.

அந்நாட்களில் சங்கரிடம் விநோதமான நகைச்சுவை உணர்வுண்டு. அப்படி ஒரு சம்பவம்:

“சங்கர், ஜெராக்ஸ் எடுக்கவா போறே?”

“ஆமா மச்சி”

“எனக்கும் ரெண்டு ஜெராக்ஸ் எடுக்கணும், எடுத்துட்டு வர்றியா?”

“சாரி மச்சி, முடியாது”

“டேய், காசு தர்றேன்டா”

“காசு ப்ராப்ளம் இல்ல மச்சி”

“பின்ன?”

“எடுத்துட்டு வர முடியாதுன்னா முடியாது”

“டேய், நான் உனக்கு எத்தனை முறை இந்த மாதிரி உதவி செய்திருப்பேன்”

“நீ இளிச்ச்வாயன். அதுக்கு நான் பண்றது?”

“டேய், ரொம்பப் பண்ணாதடா. இந்தா பேப்பர், ரெண்டு காப்பி எடுத்துட்டு வா”

“ஒரு வாட்டி சொன்னா உனக்கு புரியாதா? எடுக்க முடியாதுன்னா முடியாதுதான்”

“டேய் பன்னாடை, பரதேசி, ################. வக்காளி எனக்கும் ஒரு டைம் வரும், அப்ப வச்சுக்கறேன். கபோதி, கஸ்மாலம், #########”

குறைந்தது இருபது கெட்டவார்த்தைகள் பேசியிருப்பேன். நான் முடிக்கும் வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். முடித்ததும், “இப்டி டீசண்டா சொல்லியிருந்தா முதல்லயே கேட்டிருப்பேன்ல. குடு பேப்பரை” என்று வாங்கிக்கொண்டு சென்றார்ன்.

மற்றொரு நாள் அவன் நச்சரிப்பு தாங்க முடியாமல், “ஏன்டா சங்கர் இப்படி படுத்தற? உன்னை எப்படித்தான் நாலு வருஷம் காலேஜ்ல சமாளிச்சாங்களோ” என்றேன். அவன் சிரித்துக்கொண்டே, “மச்சி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? காலேஜ்ல எல்லோரும் என்னை சனியன், சனியன்னு தான் கூப்பிடுவாங்க” பெருமையுடன் கூறினான்!

ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றாய் கணக்கெடுத்து விண்ணப்பித்தோம். அந்நாட்களில் ரெகமெண்டேஷன் லெட்டர், சர்டிஃபிகேட்ஸ் என கணக்கிலடங்காமல் தவறுகள் செய்திருந்தேன். பின்னாட்களில் நான் மிகவும் வேதனைப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று. தவறுகளை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் வாய்த்தால் என் வாழ்க்கையின் இரண்டாவது பெரும்பிழையாய் இதைத் திருத்திக்கொள்ள விழைவேன்.

அப்போது, முதன்மையானது என்னவென்று கேட்கிறீர்களா? எல்லாம் வல்ல காதல் தான்! என் காதலை சரியான பாதையில் இட்டுச்செல்ல என்னால் இயலவில்லை என்பது உண்மை. இருப்பினும், அதைப்பற்றி விரிவாக எழுத சந்தர்ப்பமும் விருப்பமும் இல்லை.

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5

பொக்கிஷம் – 3

கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்தோம். அதை ஏற்றுக் கொள்ள மட்டும் மனம் ஒப்பவில்லை. மேலும் அரை மணி நேரம் நின்று விட்டு சாப்பிடுவதற்கு வெளியே வந்தோம்.

“சங்கீதா மெஸ் போலாங்களா, பக்கத்துலதான் இருக்கு” என்றேன்.

சங்கர், “மூணு மாசத்துல ரெண்டு லெவெல் படிச்சுரலாங்க” என்றான்.

“சரி விடுங்க பார்ப்போம். நீங்க எங்க தங்கியிருக்கீங்க?”

“வேளச்சேரி. ஃப்ரெண்ட்ஸோட இருக்கேன். நீங்க?”

“நான் இங்கதான், பக்கத்துல. தனியாத்தான் இருக்கேன். நீங்க யூ.ஜி. என்ன பண்ணீங்க?”

“எலெக்ட்ரானிக்ஸ் இஞ்சினீரிங் முடிச்சேன், திருச்சி அங்காளம்மன் காலேஜ்ல”

மறுபடியும் போட்டிக்கு வர்றானே பாவி.

“முதல்ல யூ.எஸ் போலாம்னுதாங்க பார்த்தேன்”

அப்புறம் ஏண்டா இங்க வந்தே?

“ஜி.ஆர்.ஈ., டோஃபல் எல்லாம் கூட எழுதினேன்”

ஆஹா, நான் இனிமேல் தானே எழுதணும்!

“டோஃபல் பரவால்ல. நல்ல ஸ்கோர்”

அய்யய்யோ!!

“ஜி.ஆர்.ஈ தான் புட்டுகிச்சு”

அப்பாடா.

சாப்பிட மனமில்லாமல் ஜூஸ் மட்டும் குடித்து விட்டு வெளியே வந்தோம். என் அழைப்பை ஏற்று அறைக்கு வந்தான். கட்டிலில் அமர்ந்துகொண்டோம். ஜெர்மன் பல்கலைக்கழகங்களைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவன் கல்லூரி நண்பன் அடுத்த மாதம் ஜெர்மன் செல்லவிருப்பதாய் சொன்னான்.

“எப்படியாவது சீக்கிரம் போயிரணுங்க”

என்னைப் போல் ஒருவன்.

“எக்கச்சக்க யுனிவர்ஸிட்டீஸ் இருக்கு. எல்லாத்தையும் இன்டர்நெட்ல சேர்ச் பண்ணி அப்ளை பண்ணனும்”

அவன் சீனியர் ப்ரேமன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருப்பதாய் சொன்னான். என் நண்பனின் நண்பன் ப்ரசன்னா மேக்டிபர்க் கல்லூரியில் கணிப்பொறியறிவியல் படிப்பதாய் சொன்னேன். மேக்டிபர்கில் முதுகலை கணிப்பொறியறிவியல் படிப்பு இல்லையென்று சொன்னான். அதுபற்றி இணையத்தில் தேடிப்பார்ப்பதென பேசிக்கொண்டோம். சங்கர் நிறைய பல்கலைக்கழகங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தான். அந்நியோனியமாய் பேசினான்.

இன்னுமொருமுறை மட்டும் ஜெர்மன் மொழிப்பள்ளிக்கு சென்று முயற்சிக்கலாமென்று முடிவு செய்து அறையை விட்டு வெளியே வந்து நடந்தோம். பள்ளியருகில் வந்ததும் வாட்ச்மேன் எங்களை முறைத்தார். அவருக்கு எதிர்ப்பக்கமாய் இருந்த வெற்று சுவரை ஆர்வமாய் பார்த்தபடியே உள்ளே சென்றோம். ஒவ்வொரு அடியின் போது அவர் கூப்பிடுவார் என்று திகிலுடன் இருந்தேன். கூப்பிடவில்லை. முதல் வெற்றி!

உள்ளே மேலாளரின் கார் நின்று கொண்டிருந்தது. காத்திருப்பது வீண், அவர் அறைக்குள் சென்று ஒருமுறை பேசி விடுவதென முடிவெடுத்தோம். அதிகபட்சம் கண்டபடி திட்டுவார், அதையும் மீறினால் வாட்ச்மேனைக் கொண்டு வெளியே போக சொல்வார். இரண்டிற்கும் ஆயத்தமாய் அறைக்கதவை தட்டினோம்.

“மேடம்”

“கம் இன்”. அவர் குரலே தான்.

உள்ளே நுழைந்து அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டோம். கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர் எங்களை பார்த்தவுடன் தலையை ஆட்டியபடி தன் கண்ணாடியை கழற்றி மேசை மீது வைத்தார். எங்களை நோக்கி மெதுவாக புன்முறுவித்தார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம். “மேடம், ஜெர்மன் மொழி படிப்பதற்காகவே கோயமுத்தூரிலிருந்து……” மீண்டும் அதே பல்லவி.

மேலாளர் சிலசமயம் வடநாட்டவரைப் போலவும் சிலசமயம் தமிழர் போலவும் தோன்றினார். சரியாக யூகிக்கமுடியவில்லை. ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தோம்.

“வேர் டூ யூ கம் ஃப்ரம்?” சங்கரை பார்த்து ஆங்கிலத்தில் கேட்டார்.

“உடுமலைப்பேட்டை பக்கத்துல சின்னாளப்பட்டி மேடம்”

விவாதம் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது.

“உங்கள் நிலைமையும் ஆர்வமும் புரிகிறது. ஆனால், எங்களுக்கென்று ஒரு சட்டம் இருக்கிறது. நாங்கள் இவ்வளவு பேரைத்தான் எடுக்க வேண்டும், அதற்கு மேல் ஆளெடுக்க அனுமதியில்லை. நீங்கள் வேண்டுமானால் உங்கள் பெயரை எழுதிவிட்டு செல்லுங்கள். அடுத்த வகுப்பின் போது உங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி நிச்சயம் எடுத்துக்கொள்ளுகிறேன்”

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமம் ஊசலாடிக்கொண்டிருப்பதாய் தோன்றியது. இதற்கு மேல் அவரை தொந்தரவு செய்ய எங்களுக்கு மனமில்லை.

“மேடம், எங்களுக்கும் உங்கள் நிலைமை புரிகிறது. இதற்கு மேல் உங்களை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை. நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம். ஜெர்மன் செல்லவேண்டுமென்பது எங்கள் விருப்பம், லட்சியம், கனவு மட்டுமல்ல. அதுதான் எங்கள் வாழ்வின் அடுத்த நிலை. அந்த நிலைக்காக நாங்கள் எடுத்து வைக்கும் முதற்படி ஜெர்மன் மொழிக்கல்வி. மொழியின் ஒரு பகுதியை மட்டும் கற்றுக்கொண்டு நாங்கள் நின்றுவிடப்போவதில்லை. ஜெர்மன் செல்லும் வரை இங்கே படித்துக்கொண்டுதானிருப்போம். இதில் எவ்வித மாற்றமுமில்லை. இதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். நீங்கள் நினைத்தால் எங்களுக்கு அவ்வழிகாட்டுதலை அமைக்க முடியும். நாங்கள் நாளை காலை மீண்டும் வருகிறோம். நீங்கள் யோசித்து முடிவு சொல்லுங்கள். அந்த முடிவு என்னவாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்”

இப்படியேதான் பேசினானா என்று நினைவில்லை. ஆனால் என் எண்ணம் அதுவே. தட்டுத்தடுமாறி சொன்னதும் அதுவே. அவருக்கு எப்படி புரிந்திருக்கும் என்று என்னால் இன்று வரை கணிக்க முடியவில்லை.

“நாளை வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கேட்பது என் வரைமுறைக்கு அப்பாற்பட்டது. நீங்கள் செல்லலாம்” என்றார்.

சங்கர், “நாங்கள் நாளைக்கு வரட்டுமா மேடம்” என்றான்.

“அது உங்கள் இஷ்டம். ஆனால் உபயோகமில்லை” என்றார்.

இருவரும் பள்ளியை விட்டு வெளியே வந்தோம். அடுத்த நாள் வருவதா வேண்டாமா என்று தெரியவில்லை. ஏதும் முடிவெடுக்காமல் சங்கர் வேளச்சேரிக்கும் நான் என் அறைக்கும் சென்றோம். அன்றிரவும் தூக்கம் வரவில்லை. மனம் பாரமாக இருப்பதன் அர்த்தம் அன்று முழுமையாய்ப் புரிந்தது. விடியற்காலை தூங்கியிருக்கவேண்டும். சட்டென்று நினைவு வந்ததும் கடிகாரத்தை பார்த்தேன். மணி ஏழு.

ஜெர்மன் முருங்கை மரமென்றால் நான் வேதாளமாகவே இருந்துவிட்டுப் போகிறேன். அவசர அவசரமாய் தயாராகி ஏழரைக்கெல்லாம் பள்ளியின் வாசலை அடைந்தேன்.

“ஜெகதீஷ்” என்றொரு குரல். சங்கர் கணேஷ்.

மனம் பாதி மகிழ்வும் பாதி பயமும் கொண்டது. மகிழ்ச்சி துணை கிடைத்ததால். பயம் போட்டியாகிவிடுவானோ என்கிற காரணத்தால். நாம் ஒன்றை விரும்பினால் அதை அடைய மனம் செல்லும் பாதைகளில்தான் எத்தனை விதமான எண்ணங்கள். ஒருகனம் கடவுளாகவும் மறுகணம் சாத்தானாகவும் மாற மனிதமனத்தால் மட்டுமே முடிகிறது.

சங்கரை பார்த்துச் சிரித்தேன். இருவரும் மேலாளரின் அறையை அடைந்தோம். அவர் இன்னும் வரவில்லை. அறைமுன்னிருந்த ஜெர்மன் நாட்டின் வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடுமென்றே மனம் சொல்லியது.

எட்டு மணிக்கு மேலாளர் வந்தார். காரில் இருந்து இறங்கியதும் நாங்கள் எழுந்து நின்றோம். எங்களை பார்த்து புன்சிரிப்புடன் அறையினுள் சென்றார். அதற்கென்ன அர்த்தம் என்று எங்களுக்கு புரியவில்லை. உள்ளே போவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் அவர் அறையைப் பார்த்தோம். “உள்ளே வாருங்கள்” என்றார். விடுவிடுவென உள்ளே சென்றோம். உள்ளே அவருக்கு வலது பக்கத்தில் தட்டச்சுப்பணி புரியும் பெண்ணும் வலது புரம் ஜெர்மன் கற்றுத்தரப்படும் ஆசிரியரும் அமர்ந்திருந்தனர்.

மேலாளர் அவர் மேசையின் மீதிருந்த இனிப்புப் பொட்டலத்தை பிரித்து அதை எங்களை நோக்கி நீட்டினார்.

“மேடம், நாங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா?”

“அதற்காகத்தான் இந்த இனிப்பு. இருவரும் எடுத்துக் கொள்ளுங்கள்”

பாய்ந்து எடுத்துக்கொண்டோம். மகிழ்ச்சியில்ஆளுக்கு இருபத்திமூன்று நன்றி சொன்னோம். எனக்கு அங்கிருந்து வெளியே வந்து ஆடவேண்டும் போலிருந்தது.

“உங்களுக்கு தமிழ் தெரியுமா” என்று கேட்டார்.

“தெரியும் மேடம்”, முதன்முறையாய் தமிழில் பேசினோம்.

“விடாக்கொண்டன், கொடாக்கொண்டன் என்று தமிழில் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் பார்க்கிறேன்”

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5