Category Archives: அரசியல்

நான் சொல்வதெல்லாம் உண்மை

“உன் வயசென்ன தம்பி?”

பதினொன்னு.

“எந்த க்ளாஸ் படிக்கிற?”

ஆறாவது.

“உனக்கு எதாச்சும் பிரச்சனையா?”

அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.

“இத பாருப்பா, உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் எங்ககிட்ட சொல்லலாம். அத சரி செய்யத்தான் நாங்க இருக்கோம். அப்படி நீ சொல்லலைன்னா அது உன் வாழ்க்கையையே சீரழிச்சுடும், புரியுதா?”

பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லீங்க.

“அப்புறம் ஏன் அப்படிப் பண்ணினே?”

தெரியாம பண்ணிட்டேங்க. இனிமேல் பண்ண மாட்டேன்.

“ம்ம்… போலீஸ்னா ரொம்ப பயமா?”

இல்லீங்க.

“ஜெயில்னா என்னான்னு தெரியுமா?”

“சொல்லு தம்பி, ஜெயில்னா என்னான்னு தெரியுமா?”

தெரியுங்க.

“என்ன?”

தப்பு பண்ணினவங்களுக்கு எல்லாம் அங்கதான் தண்டனை கொடுப்பாங்க.

“யாரு தண்டனை கொடுப்பா?”

போலீஸ்.

“என்ன மாதிரி தண்டனை கொடுப்பாங்க?”

தெரியலை.

“நல்லா யோசிச்சுப் பாரு, கேள்விப்பட்டிருப்ப இல்லியா”

ரூமுக்குள்ள அடைச்சு வச்சு குச்சியால அடிப்பாங்க.

“அப்புறம்?”

நகத்தை எல்லாம் புடுங்கி டெய்லியும் வெயில்ல நிக்க வைப்பாங்க.

“வேற?”

பயங்கரமா அடிப்பாங்க.

“நீ ஜெயிலுக்குப் போகணுமா?”

ம்ஹூம்.

“நீ பண்ணினது மத்த விஷயம் மாதிரி சின்னது இல்லை. நீ ஏன் அப்படி செஞ்சேன்னு சொல்லித்தான் ஆகணும். சொல்லாட்டி ஜெயிலுக்குத்தான் போகணும்”

தினேஷ் அண்ணன்தானுங்க அதெல்லாம் முடியாதுன்னு பெட் கட்டினார், அதான் செஞ்சேனுங்க.

“தினேஷ் யாரு, உன்னோட ஸ்கூல்ல படிக்கிறவனா?”

பக்கத்து வீட்டுல இருக்கிற அண்ணன்.

“அவர் என்ன பண்றார்?”

தெரியல. அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவேன். அவரும் அவரோட ஃப்ரெண்ட் மட்டும்தான் இருப்பார்.

“நீ எதுக்கு அவர் வீட்டுக்குப் போவே?”

நிறைய புக்ஸ் வச்சிருப்பார். படிக்கிறதுக்காகப் போவேன்.

“என்ன மாதிரி புக்ஸ் எல்லாம் படிப்ப?”

காமிக்ஸ் புக்ஸ், சிறுவர் மலர் புக்ஸ்.

“அது மட்டும்தானா?”

ம்ம்.

“நான் முதல்லயே சொல்லியிருக்கேன். நாம் பேச அரம்பிக்கும்போது சத்தியம் பண்ணினே இல்லையா?”

ம்ம்.

“அது என்ன புக்னு தெரியுமா?”

பகவத் கீதை.

“என்னன்னு சத்தியம் செஞ்சே?”

நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை-னு சொன்னேன்.

“ம்ம்.. உண்மைய சொன்னா உனக்கு உதவி பண்ணுவோம். இல்லைன்னா ஜெயிலுக்குத்தான் போகணும். இப்ப சொல்லு, அந்த வீட்ல என்ன இருந்தது, உனக்கு என்ன நடந்தது?”

நான் எதுவுமே பண்ணலைங்க. தினேஷ் அண்ணன்தான் அசிங்கமான புக்ஸை எல்லாம் குடுத்து படிக்கச் சொன்னார். நான் மாட்டேன்னுதான் சொன்னேன், அவர்தான் ஆம்பளைன்னா இதெல்லாம் படிக்கணும்னு சொன்னார். அதனாலதாங்க படிச்சேன்.

“கடைசியா போனப்ப என்ன நடந்தது?”

புதுசா ஒரு புக் வந்திருக்கு படிடான்னு கொடுத்தார். நான் பாத்துகிட்டு இருக்கும்போதே பக்கத்துல வந்து உக்காந்துட்டு தப்பு தப்பா நடந்துகிட்டார். நான் எந்திருச்சு போக எவ்வளவோ முயற்சி செஞ்சேன். அவர்தான் இதெல்லாம் இல்லைன்னா உன்னைய எவனுமே ஆம்பளையா மதிக்க மாட்டான். சின்ன பையனாவேதான் இருப்பேன்னு சொன்னார்.

“நீ கடைசியா படிச்ச புக் இதானே?”

நானா படிக்கலீங்க. அவர் சொல்லித்தான் படிச்சேன்.

“இந்த புக் படிச்சுட்டு அதுல வர்ற மாதிரி ஸ்கூல் பொண்ணுகிட்ட நடந்துகிட்ட, இல்லியா? அந்த பொண்ணு எந்த க்ளாஸ் படிக்குது?”

நாலாவது.

“நீ அப்படி பண்ணும்போது அந்தப் பொண்ணு சத்தம் போடலியா?”

வாயை அமுக்கி புடிச்சுக்கிட்டேன். அந்த புக்ல அந்த மாதிரிதான் போட்டிருந்தது.

“சரி நீ போகலாம்”

***

பதினொரு வயது சிறுவன் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதில் சிறுமியின் உடலெங்கும் இரத்தக்காயங்கள் ஏற்பட்டதுடன் பெண்ணுறுப்பில் அறுவை சிகிச்சை பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

இது ஒரு விபத்தல்ல. நோய். அறியாமையால் உருவான நோய். செக்ஸ் கல்வி பனிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை போலவும் பதின்பருவத்தினருக்கு முறையான உறவு, ஒழுக்கம், பழக்கவழக்கம் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன. அது முட்டுச்சந்தில் வைத்து விற்கப்படுகிற செக்ஸ் புக் இல்லையென்பதை நாம் எப்போது உணர்வோம்?

மதம் பிடித்துப்போன அரசியலவாதிகளுக்கு பயந்துகொண்டும் பழமைவாதிகளின் பிடிகளுக்குள் மாட்டிக்கொண்டும் செக்ஸ் கல்வி மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.

***

Advertisements

நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்

‘காடாளும் வம்சம் இனி நாடாளும்’, ‘நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்’ என்னும் இலச்சினைகளைக் கொண்ட சாதிக் கட்சியின் தொடக்க‌ விழா. பதினாயிர‌ம் தோரணம் கட்டி, ஆயிரமாயிரம் சதுர அடி பரப்பளவில், பல லட்ச‌ம் மக்களைக் கொண்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும்பாலானோர் முகத்தில் எதையோ சாதித்து விட்ட‌ மகிழ்ச்சி. என்னவென்று தெரியவில்லை.

இம்மாதிரி சம்பவங்க‌ள் பெரும்பாலும் திறந்தவெளி டாஸ்மாக் ஆகி விடுவதால் முன்னரே மாவட்ட அதிகாரிகளை சந்தித்து விழா நாளன்று டாஸ்மாக்கை மூடிவிடுமாறு கட்சி மேலிடம் மனு கொடுத்திருந்தது. அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஆர்வக்கோளாறினால் நடக்கும் தவறுகளுக்கு கட்சி பொறுப்பேற்க முடியாதென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தது. மனு நிலுவைக்கெல்லாம் செல்லாமல் உடனடியாக அமலுக்கு வந்தது. காந்தி ஜெயந்திக்கு பிறகு முதன் முறையாக கட்சி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதாவது, மாலை ஆறு மணி வரை. எனினும் மாவட்டமும் மாநாடும் சற்று ஸ்தம்பித்துத்தான் போனது.

மேடையின் முன் காட்டையே கண்டிராத, கணிணி முறையால் உருவாக்கப்பட்ட கடப்பாறை, கலப்பை மற்றும் இன்னபிற பொருட்கள் தங்க முலாம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. திருடு போய்விடக் கூடும் என்றெண்ணியோ எந்த நேரத்திலும் அவை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையினாலோ இரண்டு போலீஸார்கள் அவற்றை காவல் காத்துக் கொண்டிருந்தனர். மேடையின் வலப்பக்கம் திறக்கப்படவிருந்த சிலை. யாரென்று தெரியவில்லை.

விழா மேடையில் அமர்ந்திருந்த‌ தலைவர், உபதலைவர், பொருளாளர் மற்றும் பலர் பட்டு சட்டைக்கு பார்க்க‌ர் பேனாவும் பர்ஃபுயூமும் அடித்து வந்திருந்தனர். மேடையின் இடப்பக்கம் பத்து மற்றும் பதினாறு வயதை ஒத்த சிறுவர்கள். அவர்களுக்கும் அதே போன்ற உடை. பத்து வயது சிறுவன் கூட்டத்திற்கு நேரே கையைக் கூப்பியபடி அமர்ந்திருந்தார். பதினாறு வயதுக்காரர் கலரிங் முடி கலாச்சார‌த்துடன் கம்பீரமாய் வீற்றிருந்தார். ஒன்றும் புரியாமல் அருகில் இருந்த மீசைக்காரரிடம் விசாரித்ததில் அவர்களிருவரும் தலைவரின் பிள்ளைகள் என்றும் கட்சியின் மாணவர் அணித் தலைவர்கள் என்றும் சொன்னர். இருவரும் ஊட்டியில் படித்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்தபடியே கட்சிப் பணிகளை பார்த்து்க் கொள்வார்கள் என்றும் பெருமையுடன் கூறினார். நன்று நன்று.

மேடையை விட்டு மக்களுடன் ஒன்றுபட்டதில் ஒவ்வொருவர் வசனத்திலும் தீப்பொறி பறப்பது புரிந்தது.

“மாப்ள‌, பவரை காமிச்சுட்டோம்டா…”

“தாயளி ஒரு பய இனி நம்மகிட்ட வாலாட்ட முடியாது. ஏழ பாழயெல்லாம் சாதிச்சங்கம் வச்சுகிட்டு ஆட்டம் போட்டுட்டு திரிஞ்ச‌ானுகல்லே. மொத வேலையா அவனுகள அடக்கணும்.”

“வக்காளி நம்ம சொன்னத மேல்சாதி நாயுக கேக்க மாட்டேங்குது, கீழ் சாதி நாயுக மதிக்க மாட்டேங்குது. ”

“பங்காளி, விசயம் கேட்டியா? வர்ற பாராளுமன்ற எலக்சன்ல நா.க.மு.க கட்சியோட கூட்டு சேர பேச்சுவார்த்தை நடக்குதாம். அஞ்சு சீட்டு குடுப்பாங்க போலிருக்கு.”

“டேய், நம்ம மெஜாரிட்டி தொகுதியே அஞ்சுக்கு மேல இருக்கும்.  மொத்தமா சேத்து இருவது சீட்டாவது வாங்கணும்.”

ஏழை, நடுத்தரம், பணக்காரர், பாமரர், எம்.பி.ஏ என பலதரப்பட்ட மக்களும் வந்திருந்தனர். பாரதியும் பிடிக்கும் சாதியும் வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயம் சார்ந்த பிரச்ச‌னைகளுக்கு பத்து பேர் வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்க வேன்டும். அது சரியோ தவறோ. நியாயமோ அநியாயமோ. சாதிக் கட்சி என்பது காப்புறுதி போலாகிவிட்டது. கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் வந்திருப்பதாகக் கேள்வி. அது சரி, அவர்களுடைய சித்தந்தங்களுக்கு அளிக்கப்படும் காப்புறுதித் தொகை மிகக் குறைவாகவே இருந்திருக்கக்கூடும்.

“ஹ‌லோ… ஹ‌லோ… டெஸ்டிங்… டெஸ்டிங்…” மேடையில் ஒருவர் மைக்கை ஒலிபெருக்கியுடன் இணைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். கூடி இருந்த கூட்டம் மேடையை நோக்கி ஆர்வத்துடன் திரும்பி உற்சாகமாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். எதற்கென்று புரியவில்லை. ஒருவழியாக மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக‌ பேச ஆரம்பித்தனர். ஒவ்வொருவர் பேச்சிற்கும் கூடியிருந்த கூட்டத்திற்கு மயிர்க் கூச்செறிந்தது. இறுதியாக தலைவரைப் பேச அழைத்தனர். என்ன பேசப்போகிறார் எப்படி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆர்வம் மேலிட்டது. தலைவர் மைக்கை ஆவலுடன் வாங்கி மூக்கருகே கொண்டு சென்று “புஸ்ஸ்ஸ்” என்று சீறி ஆரம்பிக்கிறார். “நாங்க என்ன இளிச்ச‌வாயனுகளா…”

நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்!