குடும்ப விளக்கு

மூன்று மாதங்களாகிறது, என் இணையதளத்தை நான் பார்வையிட்டு. மூன்று வாரங்களாகிறது, என் மடிக்கணிணியை இயக்கி.

“வாழ்க்கை எப்படி இருக்கிறது?” என எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நீ…..ண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் குடும்பம் சகிதமாய் வசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வேளச்சேரியின் பிரதான் சாலையில் இருந்து இருநூறு மீட்டர் உள்ளே ஒரு அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. வீட்டைகச் சுற்றிலும் பெரும்பாலும் அறிவியலாளர்கள் அல்லது பொருளாதார வல்லுநர்கள்.

இப்போதெல்லாம் சென்னையிலும் அடிக்கடி மின்வெட்டு இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டின் இடது புறம் அமைந்துள்ள ஒரு வீட்டில் மட்டும் எப்போதுமே மின்வெட்டு இருந்ததில்லை. எங்கள் வீட்டு கேட்டும் அந்த கேட்டும் எதிரெதிரே இருக்கிறது. ஒரு நாள் எங்கள் வீட்டு கேட்டின் முன் நான் காரை நிறுந்த அந்த வீட்டில் இருந்து, “சார், காரை ஓரமா நிப்பாட்டுங்க” என்றார் ஒருவர். எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. அதே, “சார், காரை கொஞ்சம் ஓரமா நிப்பாட்டிக்கறீங்களா” என்று கேட்டிருந்தால் அது மரியாதை. “முடியாது, எங்க வீட்டு கேட் முன்னாடிதான் நிறுத்தியிருக்கேன்” என்று சொல்லி மூஞ்சியைக் காட்டலாமா என ஒரு கணம் யோசித்து பிறகு வேண்டாமென முடிவெடுத்து காரை ஓரமாக நிறுத்திவிட்டேன். பின்னர் கேள்விப்பட்டேன், அந்த வீடு துணை (மற்றும் எதிர்கால) முதல்வரின் சில பல‌ வீடுகளில் ஒன்றாம். அவர் இப்போது இங்கில்லை, டிரைவர்தான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறாராம். எப்போதாவது வந்து செல்வார் என்று பேச்சு. எனவே, நான் இருக்கும் இடத்தில் பேரமைதியும் உண்டு, பேராபத்தும் உண்டு. என் முந்திரிக் கோபத்தை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும்.

புது வீட்டிற்கு டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா, etc. என ஒரு இலட்சத்திற்கும் மேல் செலவானது. அத்தனையும் மாமனார் பணம். சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. என்ன… அதில் “அப்படித்தான் அடிப்பேன்” என்கிற அன்பும் ஆதங்கமும் கலந்திருந்தது. பேசாமல் வாங்கிக் கொண்டேன். ரொம்ப மோசமாய் என்னை நானே பல முறை செருப்பால் அடித்துக் கொண்ட காலமுண்டு.

அம்மா, அக்கா, மாமா, அண்ணன், மாமனார், மாமியார், சித்தி, நண்பர்கள் என எங்களைக் குடியமர்த்த கும்பல் கும்பலாய் வந்து போனார்கள். சிலர் வார இறுதி நாட்களில் வந்து செல்கின்றனர். லீலா சமையல் பழகும் வரை யாராவது ஒரு ஆள் எப்போதும் இருக்கட்டும் என்றனர். எனக்கென்னவோ, அவர்களை விட லீலா நன்றாக சமைக்கிறாள் என்று எண்ணம்.

இரண்டு வருடங்களுக்கும் மேல் சென்னையில் இருந்தும் கேளிக்கைக்கென வெளியே செல்வது இரண்டு காரியங்கள்தாம்: சினிமா மற்றும் சாப்பாடு.  அம்மா அக்கா எல்லோரையும் சென்னையின் புறநகர் சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் சென்றேன். இணையத்தில் தேடிப் பிடித்துச் சில இடங்கள் மட்டும் சென்றோம்: சத்யம் திரையரங்கில் அவதார்-3D, வண்டலூர் விலங்குகள் சரணாலயம், அங்கிருந்து தக்ஷின்சித்ரா, முதலைகள் சரணாலயம், மற்றும் கோவளம் கடற்கரை. அதில் தக்ஷின்சித்ரா மட்டும் கட்டாயம் பார்க்க வேண்டிய தலம்.

கடந்த மூன்று வாரங்களாய் நான், லீலா மற்றும் மகேஷ் மட்டுமே. மகேஷ், லீலாவின் அண்ணன். படிக்கும் போதும் பேசும் போதும் லீலா ஒரு அவசரக் குடுக்கை. “அடையார் ஆனந்த பவன்” என்பதை “அய்யார் ஆனந்த பவன்” என்றுதான் சொல்லுவாள். அவ்வாறே “பிரியாணி” என்பது “பிய்யானி”‍ ஆகவும், “ஏர்டெல்” என்பது “ஏடல்” ஆகவும், “திருநெல்வேலி” என்பது “தின்னவேலி” ஆகவும் மரூஉ ஆனது. அத்துடன் அவளே ஒரு நாள், “டேய், நீ நெனைக்கிற மாதிரி இல்லைடா. நான் கொஞ்சம் தான் லூசு” என என்னிடம் சுய சான்றிதழ் கொடுத்திருக்கிறாள். உண்மையில், நான் மையல் கொண்ட எல்லா பெண்களுமே கொஞ்சமேனும் லூசாய்த்தான் இருந்தார்கள். எல்லோருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு, அனைவருமே பயங்கரமாய் படிப்பார்கள். கன்னா பின்னாவென்று மார்க் வாங்குவார்கள். எப்போதும் நம்பர் ஒன்.

நிற்க.

சென்ற வாரம் சான்றிதழ் பெறுவதற்காக லீலாவும் மகேஷும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தார்கள். திரும்பி வருகையில் தாம்பரம் இரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்திருக்கிறார்கள். வழியில் “Suburban Traffic Police” என்று ஒரு இடத்தில் பலகை இருந்திருக்கிறது. அதை வழக்கம் போல டாப் கியரில் “Subramani Traffic Police” என படித்துக் கொண்டு , “பரவாயில்லையே… இங்க நிக்கற‌ போலீஸ் பேரெல்லாம் போர்டில் எழுதி வச்சிருக்காங்க” என்று நினைத்து கொண்டதுடன் நிற்காமல், சுப்ரமணி அருகில் நிற்கிறாரா என சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறாள். யாரையும் காணாததால், மீண்டும் ஒரு முறை போர்டைப் பார்த்துப் பின் தனக்குள் சிரித்துக் கொண்டாளாம்.

இப்படித்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு ஸ்பெய்னுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. நான், மகேஷ், லீலா – மூவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். போட்டி நடுவே ஒரு ஸ்பெய்ன் வீரருக்கு சப்ஸ்டிடியூட் வர, “ஏங்க அவன் போறான்?” என்றாள். “ஏய்.. என்னடி மேட்ச் பார்க்கிறே? கமெண்டரில சொன்னாங்க இல்ல.. அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்துச்சாம். அதான் போறான்” என்றேன். “அப்படியெல்லாம் போலாமா?” என்றாள் முட்டைக் கண்ணை அகல விரித்து.

போட்டியின் முதல் பாதி முடிந்ததும், நான் தூங்கச் செல்ல திடீரென ஒரு சந்தேகம் வந்து அவளை அழைத்தேன். “லீலா… மகேஷ் ஃபுட்பால் மேட்ச் பார்த்துட்டு இருக்கான். நீ போய் யாரு ஃபீல்டிங்‍னு கேட்டுட்டு வர்றியா?” என்றேன். நல்லவளைப் போல‌ மண்டையை இரண்டு முறை ஆட்டி விட்டு மகேஷைக் கேட்கச் சென்றாள். நான் அடக்க முடியாமல் சிரித்ததைப் பார்த்து நிறைய நேரம் யோசித்து பின், “டேய்… ஃபுட்பால்ல ஃபீல்டிங் இல்லைனு எனக்குத் தெரிஞ்சு போச்சு” என்ற உண்மையைக் கண்டறிந்து அடிக்க வந்தாள். பெண்களின் பொய்க் கோபம் எப்போதுமே பேரழகு.

நானெல்லாம் சும்மாவே படு சோம்பேறி. இவள் இப்படியிருந்தால் வீணாய்ப் போய்விடுவேன், இப்போதே எழுபத்தைந்தைத் தாண்டி விட்டது என் எடை. “ஒரு டாக்டரை வீணாக்கிடாதடா…” என்று மனம் அடிக்கடி ரிமைண்டர் கொடுக்கிறது. ஒன்றிரண்டு மாதங்களில் அவளை படிப்புக்கோ பணிக்கோ அடித்துத் துரத்த வேண்டும், அது வரை அவள் நகர்வது போல தெரியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் பாரதிதாசனின் “குடும்ப விளக்கு” படித்திருக்கிறேன். பயங்கர போராக இருந்தது. இப்படியெல்லாம் ஒரு பெண் இருக்க முடியுமா என்று சிரித்துக்கொண்டேன். முடியும் போல் தான் இருக்கிறது.

இதையெல்லாம் வைத்து குடும்ப விளக்கா என்று அனுமானிக்காதீர்கள். உண்மையில், அன்பும் அறனும் உடைத்தவள் அவள். கைபேசியில் என்னிடம் ஐந்து நிமிடத்திற்கும் குறைவாகத் தான் பேசுவாள், அதற்கு மேல் பேசினால் கடித்து விடுகிறேன். என் அம்மாவிடம் குறைந்தது அரை மணி நேரம் பேசுவாள். இதைவிட ஓர் ஆணுக்கு என்ன வேண்டும்? மேலும்….. வேண்டாம், எழுத ஆரம்பித்தால் ஒன்று உங்களுக்கு வெறுப்பேறும் அல்லது ஓவரா வழியறான் என்று நினைக்கக் கூடும். இருந்தாலும், இந்தக் கடைசி பத்தியை எழுத அனுமதித்த இந்த பாழாய்ப் போன மனசு வாயைத் திறந்து அன்பாகப் பேச மட்டும் அனுமதி மறுக்கிறது.

Advertisements

6 thoughts on “குடும்ப விளக்கு

 1. அன்புசிவம்

  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  //இந்த பாழாய்ப் போன மனசு வாயைத் திறந்து அன்பாகப் பேச மட்டும் அனுமதி மறுக்கிறது.//

  அன்பாகப் பேசுவதில் அப்படி என்ன பெரிய கஷ்டம், ஒரு சிறு புன்னகையுடன் எப்போதும் இருக்கப் பழகிக் கொண்டால் அன்பாகப் பேசுவதில் சிரமம் ஏதும் இருக்கப்போவதில்லை என்பது எனது கருத்து. மேலும் “fixing the problem and not people” என்கிற மனநிலை கொள்வதும் நன்று.

  Reply
 2. ஜெகதீசன்

  நாம் வளர்ந்த சூழல், சமுதாயப் பார்வை என்றெல்லாம் நிறைய காரணங்கள் சொன்னாலும் முதலில் வந்து நிற்பது ஈகோ என்றுதான் நினைக்கிறேன். அதெப்படி, வாயைத் திறந்து பாராட்டுவது என்றொரு கூச்சம் கலந்த திமிர். நிச்சயம் தப்பு தான். மாற முயற்சிக்கிறேன்.

  சிவா, உங்கள் சேவை சிறப்பானது, வாழ்த்துக்கள்.

  Reply
 3. Madhan

  அன்புள்ள ஜெகதீசன்,
  உங்கள் எழுத்து நடை சரளமாக இருக்கிறது, சுவாரசியாமான கட்டுரை. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல் என அழகான நடை.
  வாழ்த்துக்கள்

  Reply
 4. Arasu

  Hi Jagadeesh,

  Just stumbled across your blog and certainly love the way you detail the situations and emotions. Coincidentally,I did my engineering (Mech) in the same college in 2000 and now in Tirupur…Hope to visit and read your blogs

  Arasu

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s