கம்யூனிஸமும் கந்தசஷ்டி கவசமும்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீதியில் எருமைச்சாணியும் ஆட்டுப்புழுக்கையும் சூழ்ந்த விநாயகர் கோவில் இருந்தது. அதை ஒட்டி கம்யூனிஸ்ட் அலுவலகம் ஒன்றும் இருந்தது. இரண்டிற்கும் சென்றிருக்கிறேன்.

கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரண்டு அறைகள் உண்டு. ஒன்று சிறியது. கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், மாவோ படங்கள் இருக்கும். மற்றொன்று சற்றே பெரியது. எப்படியும் முப்பது பேருக்கு மேல் அமர அலுவலகத்தில் இடமிருக்காது.

அப்போது எனக்கு தெரிந்து, கம்யூனிஸ்டுகள் என்பவர்கள், மே மாதம் முதல் தேதி “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று கோஷமிட்டுக்கொண்டு எல்லா கொடிக்கம்பங்களுக்கும் சென்று கொடியேற்றுவார்கள். குழந்தைகளுக்கான சைக்கிள் ரேஸ், ஓட்டப்பந்தயம், பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, சாக்குப்போட்டி, சட்டி உடைத்தல் என பலவித விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிப்பார்கள்.

அவர்கள் செய்த மற்ற காரியங்கள் அப்போது என்னை அவ்வளவாக கவரவில்லை. திருப்பூரில் கம்யூனிஸ்டுகளுக்கு என்றுமே குறைவில்லை. நிறைவும் இல்லை.

கோவில் திறந்தவெளியில் அமைந்திருந்தது. பின்புறத்தில் காடு. ஆடு, மாடு எல்லாம் காட்டில் மேய்ந்து பசியாறிவிட்டு கோவிலுக்கு வந்த ரெஸ்ட் எடுக்கும்.

ஒருமுறை வயதில் மூத்த ஒரு நண்பன் பீர் பாட்டில் எடுத்து வர அவன் தந்தை எதிரே வந்துவிட்டார். பயந்துபோய் கோவிலுக்குள் ஓடி பிள்ளையார் சிலைக்கு அருகில் பாட்டிலை வைத்துவிட்டான். நண்பனின் தந்தை அருகில் வர, நல்ல பிள்ளைகள் போல் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தோம். எத்தனை பக்தி இருந்தாலும் கர்பகிரகத்திற்குள் செல்லக்கூடாது என அறிவுரை கூறி வெளியே வரச்சொன்னார். நாங்கள் வெளியே வந்துவிட பிள்ளையார் சரக்குடன் அரை நாள் இருந்தார். துந்திக்கைக்கு எட்டியது தொந்திக்கு எட்டவில்லையே என்றெண்ணியிருப்பார். பேச்சிலர் என்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஊரில் திடீரென வரிசையாக சில துர்மரணங்கள் நிகழ, பெரிய மனிதர்கள் (அதாவது “பணம் படைத்தவர்கள்”) ஒன்று கூடினர். கோவில் சரியாகப் பராமிக்கப்படாததே காரணம் என்று முடிவெடுத்தனர். வசூல் என்றிறங்கி சுமார் பதினைந்து லட்சம் தேர்த்தினர். அப்போதைய பதினைந்து லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. இரண்டு வருடத்தில் புதுப்பொலிவுடன் கோவில் உருவானது.

சோழனும் பாண்டியனும் வானுயர கோவில் கட்டி அதில் விளம்பரம் செய்யாமல் விட்டதற்கு அவர்கள் அறிவுக்குறைவே காரணம். அதை மனதில் கொண்டு, கோவிலுக்கு நிதியுதவி செய்த எல்லா நல்ல உள்ளங்களின் பெயர்களும் கல்வெட்டாய் பொறிக்கப்பட்டு உள்ளேயே வைக்கப்பட்டது. ட்யூப்லைட் முதல் கோபுரகலசம் வரை உபயம்: செல்லமுத்து கவுண்டர் என்று எழுதப்பட்டது.

***

சமீபத்தில், நண்பன் சம்பத்தின் அழைப்பை ஏற்று கம்யூஸ்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப்பின் அங்கே செல்கிறேன். அதே சின்ன அறை, சற்றே பெரிய சின்ன அறை. அதே கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், மாவோ படங்கள். உண்மையில் நம்நாட்டில் எத்தனை கம்யூனிஸ்டுகளுக்கு ஏங்கல்ஸை பற்றி தெரியும்? கலையறிவு கொண்ட தமிழ் தலைவன் கிடைக்காதவரை கம்யூனிஸம் வளர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

தவிர, எல்லாவற்றையும் மிக சீரியஸாகவே அணுகுகிறார்கள் என்றும் தோன்றுகிறது. கம்யூனிஸ்டுகளுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு. அவர்களின் நகைச்சுவை, முதலாளிகளை முதலைகள் என்று சித்தரிப்பதாகவும் அரசியல் எதிரிகளை பற்றியதாகவும் மட்டுமே இருக்கிறது. வேறு ஏதாவது ஜோக் அடித்தால் நாட்டில் இத்தனை பிரச்சனை இருக்கிறது, உனக்கென்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது என்பது போன்ற பிரம்மையை நமக்கு ஏற்படுத்துகிறார்கள்.

சம்பத் தீவிர கம்யூனிஸ்ட். தீவிரம் என்று எதைச்சொல்லலாம்? ஒரு விஷயம் கட்சிக்கு ஒத்துப்போகிறது என்றால் அது தன் மனதிற்கும் ஒத்துப்போகவேண்டும். அப்படி ஒத்துப்போகிறவர்களையே தீவிரமானவர்கள் என்று சொல்லலாம். இந்த தீவிரம் கலை, அரசியல், சித்தாந்தம் என எல்லா துறைகளுக்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும். இந்த விஷயத்தில் என்னை கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்று சொல்லலாம். சினிமா, தனிமனித வாழ்க்கை என இரண்டிலும்.

சம்பத் என் மனம் கவர் நண்பன். கம்யூனிச சித்தாந்தங்களை நேர்வழியில் உள்வாங்கியவன். தொண்டுள்ளம் கொண்டவன். பிற்காலத்தில் மிகச்சிறந்த போராளியாய் உருவெடுப்பான் என்று என் மனம் ஆழமாக நம்புகிறது. சமூகம் தன் வரைமுறையை மீறி சீண்டாதிருக்க வேண்டும்.

சற்றே பெரிய அறையில் இருந்த கும்பலாக சத்தம் வர உள்ளே சென்றேன். சம்பத் இரு சகாக்களுடன் குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தான். சில வாரங்களாய் தினமும் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பதாய் ஏற்கனவே சொல்லியிருந்தான். ஒரு நாற்காலியில் அமர்ந்து கவனித்தேன்.

ஆறிலிருந்து பதினைந்து வயதான குழந்தைகள். ஏழைக்குழந்தைகள். தமிழ்வழிக் கல்வி பயில்பவர்கள். மேல்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். நம்மால் செய்ய முடியாததை நம் ஆத்மநண்பர்கள் செய்யும்போது அளவிட முடியாத மகிழ்ச்சி உண்டாகிறது. நாமே செய்து விட்டது போன்ற உணர்வு மேலோங்குகிறது.

இத்தனையையும் மீறி ஒரு விஷயம் எங்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. அருகாமையில் இருக்கும் கோவிலில் இருந்து வரும் சத்தம். இரண்டு மணி நேரமாய் வீதியை நிரப்பிக் கொண்டிருந்தது அந்த சத்தம். ஒரு நாள் இரு நாள் அல்ல, தினமும் நடக்கும் கூத்து இது. மைக் வைத்து ஊருக்கே பாட்டு போட கோவில் என்ன ஆர்கெஸ்ட்ரா கம்பனியா? வருபவர்களுக்கு புன்னியஸ்தலமாய் இருக்கட்டும், அன்னியர்களுக்கு இடைஞ்சலாய் இருப்பதை அறிய மாட்டார்களா? எங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக பெரியார் பிரசங்கத்தையும் A.R.ரஹ்மான் பாடல்களையும் தினமும் நான்கு மணி நேரம் மைக் வைத்து ஊரெல்லாம் ஒலிக்கவிட்டால் நன்றாயிருக்குமா?

யோசித்துப்பாருங்கள், புத்தகம் படித்துக்கொண்டிருக்கையில்ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோநம …” என்று அருகில் மைக்கில் முழங்கிக்கொண்டிருந்தால் குழந்தைகள் எப்படி படிக்கமுடியும்?

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து கோவிலை எட்டிப்பார்த்தேன். பக்திப்பாடல்கள் நிறைவடைந்து பஜனையை மைக்கில் ஒலிக்கவிட்டிருந்தார்கள்.

தனம்தரும் கல்விதரும்
ஒருநாளும் தளர்வறியா மனம்தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும்
நல்லன எல்லாம்தரும்
அன்பர் என்பவர்க்கே கனம்தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


அபிராமி கடைக்கண் வைத்து மைக்கை அணைத்தால்தான் இப்போதைக்கு இதெல்லாம் தரமுடியும்.

*****

12 thoughts on “கம்யூனிஸமும் கந்தசஷ்டி கவசமும்

 1. Mukil

  \\கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்று சொல்லலாம். சினிமா, தனிமனித வாழ்க்கை என இரண்டிலும்.//

  டெல்லி: ‘ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்!’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

  http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/08/31-kamal-comments-on-marriage-system.html

  இது போன்று கேவலமான ஒரு பிறவிக்கு ரசிகனா நீங்கள்.. ஐயோ பாவம்.

  Reply
 2. jaggybala Post author

  நான்தான் உங்களைப்பார்த்து பரிதாபப்படுகிறேன். I pity you.

  திருமணம் அவரவரின் மனநிலையைப் பொறுத்தது. ஆன்மீக குருக்கள் வழிமொழிவதும் அதுதான். கமல்ஹாசன் சொன்னது கேவலமாக பட்ட உங்களுக்கு நம் கடவுள்களைக் கண்டால் எப்படி இருக்கிறது?

  “எம்பெருமான் முருகன்” என்று யார் சொன்னாலும் “உம்பெருமான் முருகன் இரண்டு பொண்டாட்டிகள் கொண்டது அடுக்குமா?”, “வள்ளிக்கு இன்னொரு கணவன் இருந்தால் முருகன் அட்ஜஸ்ட் செய்து கொள்வாரா?” என்றே கேட்க தோன்றுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம் என்றால் தமிழ்க்கடவுள் முருகனே அதை மதிக்கவில்லையே? சிவனும் அப்படியே. சிவன் பாதி சக்தி பாதி என்றால், கங்கை என்ன மூலியா?

  பெண்கள் விஷயத்தில் ராமனை உத்தமனாக உருவகிப்பவர்கள் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணனை பித்தனாகவே கருதவேண்டும். கிருஷ்ணனுக்கு பாமா, ஜாம்பவதி என்று பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. பகவத் கீதையை கிருஷ்ணர் எழுதினார் என்று சொல்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் நான் அதை வழிமொழிவேன். பிரம்மனுக்கும் சரஸ்வதி மற்றும் காயத்ரி.

  ஏன் எந்த பெண் கடவுளுக்கும் இரண்டு கணவன்மார்கள் இல்லை? கிருஷ்ணனைப் போன்ற “லீலைகள்” புரியும் பெண் அவதார தெய்வங்கள் ஏனில்லை? ஒன்று, கலாச்சாரம் தவறானதாக இருக்க வேண்டும். அல்லது அதைக்காக்கும் கடவுள் பொய்யானதாக இருக்க வேண்டும்.

  கமல்ஹாசனிடம் ஒரு நிருபர், ஈழ தமிழர்களை பற்றி சினிமா எடுக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டதற்கு, “எண்ணம் இருக்கிறது ஆனால் தைரியம் இல்லை” என்றார். தைரியம் இல்லை என்று சொல்வதற்குக்கூட தைரியமும் அகங்காரவிலக்கமும் தேவைப்படுகிறது. “என் வீட்டில் நாய்கள் ஜாக்கிரதை என்று பலகை வைத்திருக்கிறேன். அதையும் மீறி என் படுக்கையறையை பார்க்க நினைப்பவர்கள் பார்த்துக்கொள்ளலாம்” என்று கமல் சொல்லியது பலருக்கு சாலப்பொருந்தும். கமல்ஹாசனின் கோட்பாடுகள் சரிவர புரியாமல் நீங்கள் ஒருவித மனஉளைச்சலுக்கு ஆட்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

  வேறு நியாயம் இருந்தால் சொல்லுங்கள், விவாதிக்கலாம்.

  Reply
 3. blogpaandi

  உங்கள் நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
  ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
  பின்ன ருள்ள தருமங்கள் யாவ
  பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
  அன்ன யாவினும் புண்ணியம் கோடி
  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
  — சுப்பிரமண்ய பாரதி

  Reply
 4. jaggybala Post author

  நன்றி பாண்டி. பின்னூட்டத்திற்கும், பாரதி கவிதைக்கும் 🙂

  ஜெகதீசன்.

  Reply
 5. ponnakk

  இதேகொடுமையை நானும் எங்க‌ள் அர‌சு குடியிரூப்பில் எட்டு வ‌ருட‌ங்க‌ளாக் அனுப‌வித்தேன்..த‌ட்டி கேக்க‌போய் நீங்க‌ என்ன‌ …..என்ற் அவ‌ம‌ரியாதை..பெண்க‌ளின் சாப‌ம் வேற‌…

  உங்களின் ஜெர்மன் செல்லும் பதிவு படித்தேன்.. திகில் படம் பார்க்கும் உணர்வு..

  Reply
 6. jaggybala Post author

  ponnakk,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களை போன்றவர்களின் ஊக்கமே என்னை மென்மேலும் எழுத வைக்கிறது. வலைப்பதிவின் வட்டத்திற்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ஜெகதீசன்.

  Reply
 7. Mahesh

  your writing gets better and better. The ability to switch between moods and an underlying humor is remarkable. kudos!!!

  Reply
 8. Subramanian

  ஹலோ சார்,

  வழக்கம் போலவே இந்த போஸ்ட்ம அருமை…

  எல்லா போஸ்டிலும் உங்களது மெல்லிய நையாண்டி comments ( abt religion..) என்னை ஈர்ப்பதுண்டு .

  /* The ability to switch between moods and an underlying humor is remarkable.*/
  I agreed with mahesh in the above line.

  Convey my wishes to sampath sir..

  Subramanian

  Reply
 9. ஓம் குமார்

  அக்கினி குஞ்சொன்று கண்டேன்,
  அதை அங்கே ஓர் பொந்திடை வைத்தேன்,
  வெந்து தணிந்தது காடு….

  நல்ல பதிவு..

  /* உபயம்: செல்லமுத்து கவுண்டர் */
  என்னை புன்னகைக்க வைத்தது…

  Reply
 10. jaggybala Post author

  நன்றி ஓம், வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன் 🙂

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s