புதுக்கோட்டை டு பாரீஸ் – 2

புதுக்கோட்டை டு பாரீஸ் – 1

இங்கிலாந்தின் போர்ட்லன்ட் துறைமுகம் வந்தடைந்ததும் எங்களை சிறை பிடித்திருந்த துரை யாருடனோ தொலைபேசியில் பேசினான். சற்று நேரத்தில் மேலும் பலர் வந்துவிட ஒன்று கூடி விவாதித்தனர். எங்களை அகதிகளாய் நாட்டிற்குள் அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. கூட்டமாய் இருந்தால் துரைகளுக்கு பிரச்சனை. அதனால் ஒவ்வொருவராய் கப்பலின் கீழ் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் எங்கே எவ்வாறு சென்றார்களென்று தெரியவில்லை.

என்னைப் பார்த்து ஒரு துரை கையசைத்து கூப்பிட்டான். அவன் சட்டையில் இருந்த பட்டயத்தை கூர்ந்து கவனித்தேன். ஆன்டர்சன் என்று எழுதியிருந்தது.

“What is your name?” என்றான்.

“கார்த்திகேயன்” என்றேன். அவனுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை.

“Follow me” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். நிலமட்டத்திற்குக்கீழ் இருந்த தளத்திற்கு கூட்டிச் சென்றான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த தளம் தெரிய வாய்ப்பில்லை. பெயரிடப்பட்டிருந்த அறைக்கதவு ஒன்றை கைகாட்டி உள்ளே செல்லுமாறு கூறி விட்டு ஆன்டர்சன் கதவருகே நின்றுகொண்டான்.

அறைக்குள் சென்றேன். பன்முகவாசல் இருந்தது. உள்ளிருந்த துரைக்கு நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும். மேலதிகரியாக இருக்க வேண்டும்.  தேங்காய்நார் போன்ற தலைமுடி. சிறிய கண்கள். கோவைப்பழச் சிவப்பில் மெலிதான‌ உதடுகள். கையில் இருந்த பேனாவை என் முகத்திற்கு நேரே நீட்டி பேச ஆரம்பித்தான்.

“See, you can’t go into my country. You do not have Visa, or even passport for that matter. And you cannot claim to be a refugee as we have clear evidence that you boarded into our ship illegally”

துரையின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். இவன் பார்வையும் பேச்சு தொனியும் சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. கையில் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து ஒருவழியாய் இங்கிலாந்தும் வந்தாகிவிட்டது. இவன் விடுவானா, நாம் பிழைப்போமா? கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. மனைவி மகளின் நினைவு வர இரு கைகளையும் கூப்பி நின்றேன். அதைப் பார்க்க விரும்பாமல் துரை விரலை சொடுக்கினான். வெளியே நின்றுகொண்டிருந்த ஆன்டர்சன் உள்ளே ஓடி வந்து என்னை வலுக்கட்டாயமாய் இழுத்துக்கொண்டு கப்பலுக்கு வெளியே சென்றான்.

அங்கே ஏராளமான கப்பல்கள் நின்று கொண்டிருந்தன. எல்லா கப்பல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தன, துரைகளை போலவே.

ஒரு சுருட்டைப்பற்ற வைத்துக்கொண்ட ஆன்டர்சன்,  “Do you want to go to Jail?” என்றான்.

ஜெயில் என்பது புரிந்தது. இல்லை என்பது போல‌ தலையை ஆட்டினேன்.

புறப்படத் தயாராய் நிற்கும் கப்பல் ஒன்றை நோக்கி கையை நீட்டி, “See there, its a ship to Netherlands. I can take you to the ship, and put in a container so that nobody will notice you. Either you shall board it or we’ll keep you in Jail for your lifetime. What do you want to do?” என்றான்.

கப்பலில் ஏறச்சொல்லுகிறான். இல்லையென்றால் ஜெயிலுக்குப் போக வேண்டும்.

“போட் வேர் கோயிங்?”

“Netherlands”

“நோ இண்டியா?”

“No, Not to India. To Netherlands.”

இந்தியா போகவில்லை. போகவும் கூடாது. பணம் இல்லாமல் நாட்டிற்கு திரும்பக்கூடாது. இங்கிலாந்தில் இருந்து ஜெயிலில் உழல்வதை விட இந்தக் கப்பலில் ஏறி வேறு நாடு சென்று பார்க்கலாம். சரி என்றேன்.

பின்தொடர்ந்து வருமாறு கூறி விட்டு ஆன்டர்சன் நடக்க ஆரம்பித்தான். அந்தக்கப்பலின் பின்புறம் சென்று மேலே நின்று கொண்டிருந்த மற்றொரு துரையிடம் சுருட்டைக் காண்பித்தான். அவன் கீழே இறங்கி வந்ததும் இருவரும் புகைக்க ஆரம்பித்தனர். பேசிக்கொண்டே ஆன்டர்சன் சட்டைப்பையிலிருந்து சில பணத்தாள்களை எடுத்து மற்றவனிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டு கப்பலில் ஏறியவன் மேலிருந்து கயிற்றேணியை தூக்கிவீசினான்.

ஆன்டர்சன் என்னை அதில் ஏறச்சொன்னான். மொத்தம் பத்து பனிரெண்டு படிகள்தான் இருந்திருக்கும். ஆனாலும் கயிற்றேணி நிலைகொள்ளவில்லை. தட்டுத்தடுமாறி ஏறி வந்ததில் கைகள் சிவந்திருந்தன. ஆன்டர்சன் சரசரவென்று ஏறினான். பதுங்கிப்பதுங்கி கொள்கலன்கள் (Containers)  இருக்குமிடத்திற்கு வந்தோம். இதுவும் திருட்டுப்பயணம் என்று அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. கொள்கலன்கள் அறையை தாண்டிச்செல்லும் வழியில் இடப்பக்கமாய் ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவிற்கு சந்து இருந்தது. அங்கே இருந்த காலி எண்ணை தகரங்களை ஓரமாக ஒதுக்கிவிட்டு என்னை அமரச்சொன்னான்.

ஒரு மூலையில் அமர்ந்ததும், வலதுகை பெருவிரலை உயர்த்திக்காட்டி கண்களை சிமிட்டிவிட்டு, ஆன்டர்சன் கிளம்பினான்.

இந்தப் பயணம் எத்தனை நாளோ? அது வரை பட்டினிதானா? நெதர்லாந்து என்றானே, அது எங்கேயிருக்கிறது? ஐரோப்பாவில் இல்லாவிட்டால் நாள் கணக்கு ஆகுமே!

நூற்றுக்கணக்கான கொள்கலன்களை ஆளரவமில்லாத அடித்தளத்தில் கொண்டிருந்த அந்தக்கப்பல் புறப்பட்டது. சில நிமிடங்களின் அனைத்து மின்சார‌ விளக்குகளும் அணைக்கப்பட்ட, நிலா வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. கலங்கரை விளக்கத்தின் ஒளி பட்டு கண்விழித்தேன். பெரிய ஒலியெழுப்பி துறைமுகத்தை நெருங்கிவிட்ட சேதியை கப்பல் சொன்னது. நேற்றிரவு ஆன்டர்சன் கொடுத்திருந்த ரொட்டித்துண்டை எடுத்து சாப்பிட்டேன். கப்பல் நின்றதும் மேல்தளத்தை நோக்கி நடந்தேன். தாமாக சரணடைந்து விடுவது உத்தமம் என்று தோன்றியது. இரக்கம், மனிதாபிமானம் இரண்டிற்கும் அர்த்தம் தெரிந்த துரையை சந்தித்தாலொழிய எதுவும் செய்ய முடியாது.

ஒரு கண்ணாடி அறையின் முன் வந்து நின்றேன். உள்ளிருந்த துரைகள் என்னை பார்த்ததும் வேக வேகமாய் வெளியே வந்து சுற்றிக்கொண்டனர். ஆன்டர்சனிடம் பணம் வாங்கியவனைக் காணவில்லை. இறங்கிப் போயிருப்பான். அவர்கள் பேசியதில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை. அல்லது எனக்குப் புரியவில்லை. சற்று நேரத்தில் கையில் விலங்கை மாட்டி ஒரு தனியறையில் அடைத்தனர். அறையின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். கடற்கரையில் மிகப்பெரிய தகவல் பலகை ஒன்றிருந்தது. உற்றுப் பார்த்து படித்தேன்.

Rotterdam, Netherlands.

அரைமணிக்குப்பின் ஆன்டர்சனைப் போலவே ஒரு துரை வந்தான். இப்போது அவர்களுடன் பேசுவதில் எனக்கு பயம் குறைந்திருந்தது.

“வாட் இஸ் யுவர் நேம்” என்றேன்.

அவன் எதுவும் பேசவில்லை. மறுபடியும் கேட்கலாம் என்றெண்ணி விட்டுவிட்டேன். இங்கிலாந்து துரைகளுக்கும் இவர்களுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள். அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தனர். இவர்கள் வாயே திறப்பதில்லை.

ஒரு விலையுயர்ந்த காரில் அமர்த்தி என்னை அழைத்துச் சென்றனர். எல்லா வீதிகளின் நடுவிலும் வாய்க்கால் போன்ற சிறுநதி ஓடிக்கொண்டிருந்தது. இருபக்கங்களும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒவ்வொரு கிலோமீட்டர் தொலைவிலும் நதியைக் கடந்து அக்கரை செல்ல பாலம் இருந்தது. அநேகமாய் எல்லா வீடுகளிலும் ஓடு மேய்ந்திருந்தார்கள். மரத்தால் ஆன வேலைப்பாடுகளே அதிகம் இருந்தன. அவ்வப்போது நிலம் அதிர்வதைப் போல உணர்ந்தேன்.

அழைத்துச் செல்லும் இடம் ஜெயிலாக இருக்குமோ என்றெண்ணி பயந்தேன். ஆனால், கார் ரயில் நிலையம் வந்து நின்றது. தூரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறிக்கொள்ளுமாறு கைகாட்டி சில பணத்தாள்களையும் பயணச்சீட்டையும் நீட்டினர். என்னை கைதியாய் வைத்துக்கொள்ளக்கூட இவர்கள் விரும்பவில்லை என்று தோன்றியது. எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டு நடந்தேன்.

நம் ஊர் ரயிலுக்கும் அங்கு நின்று கொண்டிருந்த ரயிலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. சொல்லப்போனால் நீளம் ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே வித்தியாசம்தான். அங்கே ரயில் வெள்ளை நிறத்தில் கூம்பு வடிவ மூக்குடன் இருந்தது. கதவின் பொத்தானில் கை வைத்ததும் தாமாக திறந்துகொண்டது. உள்ளே சென்று அமர்ந்துகொண்டேன். இயந்திர கார்களின் சத்தத்திற்கு சற்றும் அதிகம் இல்லாமல் ரயில் கிளம்பியது. புறப்பட்ட பத்து வினாடிகளில் அதன் உச்ச வேகத்தை அடைந்திருந்தது. குறைந்தது மணிக்கு இருநூறு கிலோமீட்டர் வேகம் இருக்கும்.  ரயிலின் மேற்பரப்பில் இருந்த மின்திரையைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

“ஃப்ராங்ஃபர்ட், ஜெர்மனி – இன்னும் நானூறு கிலோமீட்டர் ” என்கிற தகவல் உருண்டோடிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேரத்தில் ஜெர்மனி வந்தடைந்தது. ரயிலை விட்டு இறங்கியதும் சொல்லி வைத்தாற்போல் ஜெர்மன் போலீஸ் என்னை சூழ்ந்து கொண்டனர். நானே என்னை காட்டிக் கொடுத்துவிடுவதாக தோன்றியது. பாஸ்போர்ட் வீசா என்றார்கள்.

இம்முறை நேரே சிறைக்கு அழைத்துச்சென்றனர். சாயங்காலம் நீதிமன்றத்திற்கு. ஒரு வருட சிறை தண்டனை, அது முடிந்ததும் ஆவணங்களை சரிபார்த்து சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் அல்லது அகதியாய் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதற்குமேல் ஓடவும் நான் விரும்பவில்லை. எதிர்காலத்தை இயற்கையின் கையில் கொடுத்துவிட்டிருந்தேன்.

பெயருக்குத்தான் சிறையே ஒழிய என் வாழ்க்கையில் சர்வசௌகரியமாய் இருந்தது அங்கேதான். உணவு, உடை, தங்க இடம் என்று அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆனாலும், ஆறாம் அறிவுக்கு அத்தியாவசியமான சுதந்திரம் மட்டும் இல்லாமல் போனது. அவ்வப்போது தொலைபேசியில் மனைவி மற்றும் குழந்தையுடன் பேசினேன். சிறையில் இருப்பதை அவர்களிடம் சொல்லவில்லை.

ஆறுமாத சிறைவாசத்திற்குப் பின் நெதர்லாந்து போலீசைப்போலவே இவர்களும் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து பணம் கொடுத்தனர். “இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானால் செல், ஆனால் ஜெர்மனிக்குள் வந்துவிடாதே” என்றனர்.

“சிறையில் என்போன்ற தமிழர்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றனர். இந்நாட்டவர்கள் எங்களை அகதிகளாய் அங்கீகரிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. சிறையில் ஒரு தமிழர் பாரீஸில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முகவரியைத் தந்தார். அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன். பாரீஸ் போலீசிடம் சிக்காமல் இந்த முகவரிக்குச் சென்று விட்டால் எனக்கு வழி பிறக்குமென்று நம்புகிறேன். இருந்த பணத்தையெல்லாம் தரகருக்கு கொடுத்தாகிவிட்டது, இனி என்ன நடந்தாலும் பணம் சம்பாதிக்காமல் ஊர் திரும்புவதில்லை.”

கார்த்திகேயன் சொல்லி முடிக்கையில் அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. எனக்கும்.

என்னிடம் இருந்த இன்னொரு இருபது யூரோ தாளை வலுக்கட்டாயமாய் அவர் சட்டைப்பையில் திணித்து விட்டு நான் செல்ல வேண்டிய ரயிலில் ஏறிக்கொண்டேன். அன்றைய பயணம் முழுக்க அவர் எண்ணமே என்னை ஆக்கிரமித்திருந்தது. இன்றும் கூட அவ்வப்போது நிகழும்.

[முற்றும்]

4 thoughts on “புதுக்கோட்டை டு பாரீஸ் – 2

 1. ponnakk

  // அன்றைய பயணம் முழுக்க அவர் எண்ணமே என்னை ஆக்கிரமித்திருந்தது. இன்றும் கூட அவ்வப்போது நிகழும்….

  மனதை பிழிகிறது… நாம் தினம் தினம் எத்தனையோ மனிதரை பார்க்க நேரிடத்தான் செய்கிறது..என்ன செய்ய.. புரியவில்லை இந்த இயற்கையின் வினோதம்..ஒருபுறம் மனிதர்கள் மதம் மதம் என்ற்…இன்னொரு பக்கம் அனாதையாய் மனிதர்கள்…எது உண்மை…

  இரண்டாவதே உண்மை… மனிதனே சக மனிதனை நேசி… எல்லாமே அதில் அடக்கம்… அதை விட்டு விட்டு தெரியாதஒன்றிற்காக சக மனிதனை ஏன் நிராகரிக்கிறாய்

  Reply
 2. ரவி

  ponnakk குறிப்பிட்டு உங்கள் வலைப்பதிவைக் கண்டேன். நெகிழச் செய்யும் அனுபவம். ஐரோப்பிய வாழ்க்கையில் நானும் நிறைய ஈழத் தமிழர்களோடு பழகி இருக்கிறேன். ஐரோப்பா முழுதும் நடந்தே கடந்த கதைகளும் உண்டு !

  Reply
 3. jaggybala Post author

  ரவி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நடந்தே வந்த ஒருவரை பெர்லினில் சந்தித்தேன். வாழ்க்கை விசித்திரமானதுதான்.

  ஜெகதீசன்.

  Reply
 4. ஓம் குமார்

  இனி என்ன நடந்தாலும் பணம் சம்பாதிக்காமல் ஊர் திரும்புவதில்லை.”

  கார்த்திகேயனின் தன்னம்பிக்கையை எப்படி விவரிப்பது.

  “பண உதவி தவிர வேறு ஏதாவதென்றால் முயற்சி செய்யலாம்”
  இயல்பை பிரதிபலிக்கிறது.

  இந்த பதிவு இன்னும் பல நாட்களிக்கு என் நினைவை விட்டு அகலாது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

  இந்த பதிவை இன்னும் பலருக்கு தெரியப்படுத்த முனைகிறேன்.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s