புதுக்கோட்டை டு பாரீஸ் – 1

உண்மையை கருவாய் கொண்டு கற்பனை கலந்து எழுதியது இது.

டுஸ்ஸல்டார்ஃப் ரயில் நிலையம். மாலை ஏழு மணி இருக்கும். ஜெர்மனியில் இருக்கும் பெரிய நகரங்களில் ஒன்று டுஸ்ஸல்டார்ஃப். சில நிமிடப்பயணங்களில் தென்மேற்கில் பெல்ஜியத்தையும் வடமேற்கில் நெதர்லாந்தையும் அடைந்துவிடலாம்.

அடுத்த ரயிலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. தோள்களை இறுக்கிக்கொண்டிருந்த மடிக்கணிணிப்பையை கட்டை விரல் இடுக்கினுள் நுழைத்ததும் சற்றே இலகுவானது. சட்டைப்பையில் வைத்திருந்த நாணயங்களை எடுத்துக்கொண்டு தானியங்கி புகைசுருட்டு இயந்திரத்தை நோக்கி நடந்தேன்.

நான்கு ஒரு யூரோ நாணயங்களை இயந்திரத்தின் உண்டியல் ஓட்டையில் விட்டு எட்டாம் எண்ணை அழுத்தியதும் புதுப்பொலிவுடன் மார்ல்பரோ லைட்ஸ் வந்து விழுந்தது. புகை அனுமதிக்கும் இடத்திற்கு நடந்து வந்து வெண்குழல் சுருட்டைப் பற்றவைத்தேன். சுருட்டின் முதல் இழுப்பு சுண்டியிழுக்கும். சொல்லப்போனால் முதல் ஒன்றிரண்டு இழுப்புக்கள் மட்டுமே சுகம் தரும்.

ரயில் நிலையத்தின் நுழைவாயில் கண்ணுக்கெட்டும் தூரம்தான். காவலர் வண்டி வந்து நிற்பது போல‌ தெரிந்தது. முன் இருக்கையில் இருந்து இரண்டு காவலர்கள் இறங்கி பின்கதவை திறந்து விட்டனர். உள்ளிருந்து தென்னிந்திய தோற்றம் கொண்ட ஒருவர் இறங்கினார். காவலாளிகள் விரல்களை நீட்டி அவரிடன் ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தனர். இந்தியருக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. தலையை மட்டும் ஆட்டிக்கொண்டே இருந்தார். கைவிலங்கு அவிழ்க்கப்பட்டது. காவலாளிகள் வண்டியின் கதவில் சாய்ந்து நின்று கொண்டனர்.

இந்தியர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். மக்கள் கூட்டமாய் நின்று அவரை பார்த்தார்கள். அவசரமாய் ஓடியவர்கள் கூட பத்து வினாடிகளாவது நின்றே சென்றனர். சுருட்டின் முனை சுட்டது. இரண்டு இழுப்பிற்குப்பின் மறந்து விட்டிருந்தேன்.

இந்தியர் கையில் மஞ்சள் பையுடன் பயணச்சீட்டு தரும் இடத்திற்குள் நுழைந்து வரிசையில் நின்றார். கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தது. அவர் முறை வந்ததும் கையில் இருந்த பணத்தையும் பயணப்படிவத்தையும் நீட்டினார். உள்ளிருந்த பெண் இரண்டையும் திருப்பிக்கொடுத்து விட்டு ஏதோ சைகை காட்டினார். ஓரமாக வந்து நின்றவர் மீண்டும் யாரையோ தேடிக்கொண்டிருந்தார். அந்த யாரோவிற்கு முகம் கிடையாதென்பது அப்போதுதான் புரிந்தது. எவராவது உதவி செய்வார்களா என்றே பார்த்துக்கொண்டிருந்தார்.

பண உதவி தவிர வேறு ஏதாவதென்றால் முயற்சி செய்யலாம் என்றது மனம். அவரை நோக்கி நடந்தேன். என்னைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

“நீங்கள் தமிழரே?”

மற்றுமொரு இலங்கைத் தமிழர். புலம் பெயர்ந்த மக்கள் பல நாடுகளில் பல நூறு வண்ணங்களில் வாழ்ந்து வருகின்றனர். பணக்காரர்களாய், ஏழைகளாய், ஏவல் அடிமைகளாய், நாதியற்றவர்களாய், இன்னும் எத்தனையோ முகங்கள் உண்டு. இவர் முகம் தெரிந்து கொள்ள ஆர்வமானது.

“ஆமா, நீங்க?” என்றேன்

“நானும் தமிழ்தான். புதுக்கோட்டை பக்கத்தில உள்ளது எங்களட வீடு. நீங்க எந்த ஊர்?”

“திருப்பூர், கோயமுத்தூர் பக்கத்துல”

நீங்கள் சௌகரியம்தானே?”

“ம்ம்… உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேண்டுமா?”

“ஓமம். உதவி எதிர்பார்த்துத்தான் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறன் நான். பாரீஸுக்குப் போக வேணும். டிக்கட் வாங்கேக்க பணம் போதாதென்று அந்தம்மா சொல்லிட்டாங்க. காவல்காரர் எனக்கு இவ்வளவுதான் கொடுத்தார். எனக்கு ஜெர்மன் மொழி தெரியாது, எதுவும் விளங்க இல்ல”

“அவங்களுக்கு இங்லீஷ் தெரியும்னு நினைக்கிறேன்”

“எனக்கு ஆங்கிலமும் தெரியாது தம்பி. தமிழ் மட்டும் தான் தெரியும்”, புன்னகைத்தபடியே சொன்னார்.

தூக்கிவாரிப்போட்டது எனக்கு. தமிழ் மட்டும் தெரிந்து கொண்டு எப்படி இவர் ஐரோப்பா வந்தார்? ஆங்கிலம் தெரிந்தால் கூட தடுமாற வேண்டும் இங்கே.

அவர் கையில் முப்பது யூரோ இருந்தது. பணத்தை வாங்கிக்கொண்டு பயணச்சீட்டின் சேவை முகப்பிற்கு சென்றேன். புதிதாய் ஒரு பயணப்படிவத்தை எடுத்து பயணர் விவரம் பூர்த்தி செய்ய அவர் பெயர், விலாசம் கேட்டேன்.

“பெயர் கார்த்திகேயன். முகவரி ஏதுமில்ல தம்பி”

“ஜெர்மன் முகவரியில்ல. ஐரோப்பாவில் எந்த முகவரியாயினும் பரவாயில்லை”

“எனக்கு இங்க ஆரையுமே தெரியாது தம்பி”

கைநடுங்க என் விலாசத்தையே எழுதினேன். சட்டைப்பையிலிருந்து இருபது யூரோ தாளை எடுத்து மொத்தம் ஐம்பது யூரோவை நீட்டினேன். உள்ளிருந்த பெண், பாரீஸுக்கு அடுத்த ரயில் காலை மூன்று மணிக்குத்தான் என்றார். நான் சந்தேகத்துடன் அவரைப் பார்க்க, “பரவாயில்லை தம்பி. இங்கேயே தங்கி காலை போய்க்கிறேன்” என்றார்.

பயணச்சீட்டை அவரிடம் கொடுத்துவிட்டு தண்டவாளத்தின் முகப்பில் இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தோம். பலமுறை நன்றி கூறினார். மஞ்சள் பையை விரித்து சில காகிதங்களை சரி பார்த்துக்கொண்டார். பையினுள் சில காகிதங்களும் ரொட்டித்துண்டும் மட்டுமே இருந்தது.

நான் அவரையே பார்த்தேன். ஐந்தரை அடிக்கும் குறைவான உயரம், இளிச்சவாயன் என்று மெய்நிகராய் எழுதப்பட்ட பார்வை. பருத்திப்பஞ்சில் நெய்திருந்த ஆடை. சிவப்பு நிறத்தில் ஊட்டி குளிரைக் கூட தாங்க இயலாத ஒரு மேலங்கி.

ஜெர்மனியின் குளிர்காலத்தில் தோல் ஆடை என்பது பிராணவாயுவிற்குச் சமம். கையுறை கழுத்துறை எல்லாம் அன்னம் தண்ணீர். இவரிடம் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. எட்டு மணி வரைக்கும் எப்படியோ தாங்கிக் கொள்ளலாம், அதற்கு மேல் இயலாத காரியம். காது மூக்கு இரண்டையும் சிவக்கச்செய்துவிடும். ஷூ அணிந்த காலிற்குள் பெருவிரல் சுருங்கிக்கொள்ளும். அவரிடம் எடுத்துச் சொன்னேன். தங்குவதற்கு பணம் தருவதாய்ச் சொன்னேன். மறுத்து விட்டார். மீண்டும் ஏழெட்டு முறை நன்றி கூறினார்.

“ஏன் பாரீஸுக்கு போறீங்க” என்று ஆரம்பிக்க ஆள் கிடைத்த சந்தோசத்தில் அவர் கதையை சொன்னார். அந்த அதிர்ச்சியினின்றும் மீண்டு வர பல மணி நேரங்களானது. அகதிகள் எப்படியாயினும் வசிப்பதற்கும் வாழ்வதற்கும் எளிதில் அங்கீகாரம் வாங்கிவிடுகிறார்கள் என்பதே பலரின் எண்ணம். அன்றுவரை எனக்கும் அப்படித்தான். என் எண்ணத்தை சம்மட்டியால் அடித்தாற்போல் இருந்தது அவரது நிகழ்வுகள்.

இரண்டு வருடத்திற்கு முன் போரின் காரணமாய் மனைவி மற்றும் கைப்பெண்ணுடன் அகதியாய் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கிறார். வாழ வழி தேடி ஊர் ஊராய் அலைந்திருக்கிறார். கூலி வேலை செய்து மெல்ல ஒரு நிலைக்கு வரும் வேளையில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் தரகர் ஒருவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாய் அகதிகள் வசதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தாமே அவ்வாறு நூற்றுக்கணக்கானோரை அனுப்பியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அகதியாய் சென்று விட்டால் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் சிரமமேயில்லை. ஒரே வருடத்தில் பணப்பிரச்சனை பறந்துபோகும் என்றிருக்கிறார். சேமித்து வைத்திருந்த ஒரு லட்ச ருபாய் பணத்தையும் மொத்தமாய் அவரிடம் கொடுக்க, மறுநாளே தரகர் அவரை சரக்குக்கப்பலில் திருட்டுத்தனமாய் ஏற்றி விட்டார். அவ்வாறே பலர் சென்றதாகவும் ஐரோப்பாவிற்குள் சென்று விட்டால் யாரும் எதுவும் செய்ய முடியாதென்றும் நம்பிக்கை அளித்திருக்கிறார்.

நம்மவருக்கு விசா மட்டுமல்ல. பாஸ்போர்ட் கூட கிடையாது. கப்பலின் அடிவாரத்தின் சந்தொன்றில் யாருக்கும் தெரியாவண்ணம் நாள் முழுக்க இருந்திருக்கிறார். கப்பல் இந்தியப் பெருங்கடலில் வெகுதூரம் வந்தபின் வெளியே வந்திருக்கிறார். அவரைப்போலவே பத்து பதினைந்து தமிழ் முகங்கள் திருட்டுத்தனமாய் ஏறியிருந்தது அப்போதுதான் தெரிந்திருக்கிறது. ஒரு வெள்ளைக்காரத் துரை இவரையும் பிடித்து கூட்டத்தில் தள்ள ஒட்டு மொத்தமாய் எல்லோரும் கப்பலுக்குள்ளேயே சிறை பிடிக்கப்பட்டனர்.

ஏழு நாள் பயணத்திற்குப்பின் கப்பல் இங்கிலாந்தின் போர்ட்லன்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.

[தொடரும் …]

புதுக்கோட்டை டு பாரீஸ் – 2

5 thoughts on “புதுக்கோட்டை டு பாரீஸ் – 1

 1. Shan

  ரொம்ப interesting ஆக இருக்கிறது………….அடுத்த பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்…………வாழ்த்துக்கள்

  Reply
 2. blogpaandi

  நீங்கள் இலங்கை தமிழருக்கு உதவி இருக்கிறீர்கள். மிகவும் பாராட்டப்பட கூடிய விஷயம். நான் UK சென்று உணவிலும், குளிரிலும் கஷ்டப்பட்ட போது ஒரு இலங்கை தமிழ் குடும்பம் தான் எனக்கு உதவி செய்தது. அதை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

  காலத்தினார் செய்த உதவி சிறிதெ னினும்
  ஞாலத்தின் மானப் பெரிது
  -திருவள்ளுவர்

  Reply
 3. blogpaandi

  உங்களுடைய பதிவுகள் நன்றாகவும் கருத்தாழமிக்கவை ஆகவும் இருகின்றன. மேலும் பல நல்ல பதிவுகளை தர வாழ்த்துக்கள்.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s