இலவசப் பயணம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு தாமதாய் வந்துகொண்டிருந்தேன். அதென்னமோ, இரவு பத்து மணிக்கு படுத்தாலும் மூன்று மணிக்கு படுத்தாலும், காலை எட்டரை மணிக்குத்தான் என்னால் எழ முடிகிறது.

கிண்டியில் இருந்து வேளச்சேரிக்கு பிரியும் சந்தி்ன் சாலை ஓரத்தில் ஒருவர் என்னை நோக்கி உயிரே போய்விடுவது போல் இரண்டு கைகளையும் ஆட்டி அழைத்தார். கையில் மஞ்சள் பையுடன் முழுக்க மொட்டை அடித்து பட்டை இட்டிருந்தார். ஆஜானுபாகுவான உடல்வாகு. உயர் சாதி ரௌடி என்று நினைக்கிறேன்.

குழப்பத்துடனும் சற்று பயத்துடனும் ஓரக்கண்ணால் பார்த்தபடியே வண்டியை வேகத்தைக் குறைத்தேன். வேகம் குறைந்ததும் வண்டியின் முன் வந்து வழிமறித்து நின்றார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வந்து விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும் என்றவர் வண்டியின் பின் இருப்பில் அமர்ந்து விட்டார்.

ஷேர் ஆட்டோ மாதிரி இதை ஷேர் பைக் என்று நினைத்துக் கொண்டாரா?

“இறங்குய்யா” என்று கத்திவிடலாமா?

ஆள் வேறு அடியாள் மாதிரி இருக்கிறாரே! ஒருவேளை ஏதாவது அவசர வேலையாய் இருக்குமோ?

அவர் உட்கார்ந்ததும் வண்டியின் பின்புறம் அரையடி இறங்கியது. எங்கே போனதென்றுதான் தெரியவில்லை. அவர் தன் வலது கையை எடுத்து என் தோள் பட்டையின் மீது போட்டுக் கொண்டு போகலாம் என்றார்.

ஒரு வேளை அப்படியிருக்குமோ என்று யோசித்தேன். இருக்கலாம் என்று மனம் நம்பியதால் என் தோள் பட்டையை லேசாக ஆட்டி அவர் கையை இறக்கினேன். அவர் மீண்டும் கையை என் தோள்பட்டை மீது போட்டுக் கொண்டு இறுக்கமாக அழுத்தினார்.

வேறு வழியில்லை என்றெண்ணி வண்டியை மெல்ல நகர்த்தினேன். குறைந்தது நூற்றியிருபது கிலோ இருந்திருப்பார். குவார்ட்டர் அடித்த குரங்கைப் போல் என் வண்டி வடக்கும் தெற்குமாக தள்ளாடியது. ஹேண்டில்பாரை ஸ்டெடி செய்வதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன்.

“ம்ம்.. ம்ம்.. மெதுவா” என்று அதட்டினார்.

“டேய் குண்டா, இறங்குடா கீழ” என்று சொல்லத் தோன்றியது. இருந்தாலும், அவர் சைஸிற்கு மரியாதை கொடுத்து அமைதியாக வந்தேன்.

“ஓரமா.. ஓரமா போ. லெஃப்டலயே போ, ரைட்ல எல்லாம் ஏறிட்டு வருவானுக” என்றார்.

அமைதி.

“இன்னும் நல்லா லெஃப்ட்ல வா” என்றவர் தோள்பட்டையை நன்றாக அழுத்தினார். வண்டி இடதுபுறம் நகர்த்தப்பட்டது.

இருநூறு மீட்டர் தொலைவு சென்றிருந்தபோது, வலது பக்கம் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இடதுபுறம் இண்டிகேட்டரை போட்டுக் கொண்டு மெதுவாக திரும்பியது.

நான் வண்டியை வேகத்தை இன்னும் தளர்த்தி காருக்கு வழி கொடுத்து பின் வலதுபுறமாய் சென்றேன்.

மெதுவாக நிறுத்த முற்பட்டுக் கொண்டிருந்த அந்த காரை முந்திச் செல்கையில் பின்னாலிருந்தவர் ஓட்டுனரை பார்த்து கையை நீட்டி, “போறான் பாரு பன்னாடை. லெஃப்ட்ல நிக்கப்போறவன் முதல்லயே ஸ்லோ பண்ண மாட்டான். எல்லாம் அவனவன் இஷ்டத்துக்கு வண்டி ஓட்றானுக” என்றார்.

கார் ஓட்டுனர் எங்களை முறைத்தது கண்ணாடியில் தெரிந்தது. அய்யய்யோ, வேகமாக வந்து சண்டை போடுவானா? தெரியாத்தனமா இவனை ஏத்திட்டு சீரழியறனே!

நல்லவேளையாக ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டார். பின்னாலிருந்தவர் என்னிடம் ஏன் இந்தியாவில் போக்குவரத்து சரியில்லையென்று கொச்சையாக கட்டுரை பேசிக் கொண்டுவந்தார். அவ்வப்போது தோள்பட்டையை அழுத்தினார்.

“மெதுவா… மெதுவா… ” என்றும் “லெஃப்ட்… லெஃப்ட்…” என்றும் கிலோமீட்டருக்கு மூன்று முறை கூவினார்.

“இதற்கும் மேல் லெஃப்டில் போனால் வண்டி சுவறில் மோதிவிடும்” என்று சொல்ல நினைத்து பின் நிறுத்திக் கொண்டேன்.

ஒருவழியாக விஜயநகர் பேருந்து நிறுத்தம் வந்தது. வண்டியை நிறுத்தி திரும்பி அவரை பார்த்தேன். அவர் இறங்கியதும் காணாமல் போயிருந்த வண்டியின் அரையடி மீண்டும் வந்துவிட்டது.

எங்களுக்கு வலதுபுறம் இருசக்கர ஓட்டுனர் ஒருவர் அருகில் வந்திருந்த காரின் மீது மோதிவிடுவதைப் போல் வந்து சுதாரித்துக் கொண்டார்.

“ம்ம்.. ம்ம்.. பாரு, பாரு. நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்கடா” என்றவர் பேசிக்கொண்டே போனார். இருசக்கர ஓட்டுனர் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்விட்டார்.

இப்போது அவர் என்னை பார்த்தார். மரியாதை நிமித்தமாக சிரிக்கலாமா என்று யோசித்து பின் வேண்டாமென்று  முடிவு செய்தேன். “நன்றி” என்றொரு வார்த்தையை அவர் உதிர்த்துவிட்டால் அங்கிருந்து பறந்து விடவேண்டும்.

ஆனால் அவர் பார்த்த பார்வை, “என்னடா பாக்கறே? நாந்தான் பஸ்ஸுக்கு நிக்கறேன், நீ ஏன் லூசு மாதிரி இங்கேயே நிக்கறே?” என்பது போலிருந்தது.

எரிச்சலாகிப் போய் வேகமாக வண்டியை திருப்பி மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டு அலுவலகம் வந்தடைந்தேன்.

6 thoughts on “இலவசப் பயணம்

 1. Manivannan

  நீங்க ரொம்ப்ப….நல்லவரா இருக்கீங்க…. 😉

  Reply
 2. niranjanmuthu

  பாத்திரம் அறிந்து பிச்சை இடுங்குற மாதிரி ஆளைப் பார்த்து லிஃப்ட் கொடுக்கணும் போல. உனக்கு மட்டுமில்ல நம்மளை மாதிரி முக்கால்வாசிப் பேருக்கு எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை விடிவதென்னவோ ஏழரை எட்டு மணிக்குத்தான்.

  ஆனா ஒண்ணு . பெருத்த ஆள் ஒருவர் மொட்டை அடிச்சு பட்டை போட்டதற்காக ரவுடின்னு வகைப்படுத்தறது எந்த விதத்தில் சேர்த்தி தம்பி?

  Reply
 3. jaggybala Post author

  அண்ணா, எல்லாம் நம் சினிமா கற்றுக்கொடுத்த பாடம் என்றே தோன்றுகிறது 😉 ஒருவேளை, உருவத்தைக் கண்டு மிரண்டால், அவரை ரௌடி வகையறாவில் சேர்த்தி விடுகிறேனோ?

  Reply
 4. ponnakk

  some time it happens…

  we cannot judge people… but, generally better not encouraging strange people.. sometime we cannot avoid it…as u…

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s