பொக்கிஷம் – 2

முதலில் மதன் சொல்லியதை நம்ப முடியவில்லை. ஜெர்மனியர்கள் ஏன் நமக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்? அப்படியிருந்தால், ஜெர்மனிக்கு படிக்கச் செல்பவர்கள் தானே அதிகமாக இருக்க வேண்டும், ஏன் அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் ஆளாய்ப் பறக்கிறார்கள்?

அமெரிக்கா ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் எல்லாம் பத்து லட்சம் பதினைந்து லட்சம் என்று பணம் வசூலிப்பார்கள். பணம் மட்டும் இருந்தால் அங்கெல்லாம் எந்த பல்கலைக்கழகத்திலாவது அனுமதி பெறுவது சுலபம். நம் மக்கள் அங்கே போய் பகுதி நேர வேலை செய்து படிப்பிற்கான பணத்தை புரட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஜெர்மனி அப்படியல்ல. நாட்டின் வருமானத்தில் எண்பது சதவிகிதத்திற்கும் மேல் ஆராய்ச்சிக்கு செலவிடுபவர்கள். கல்வியை இலவசமாக வழங்குவது அவர்கள் பாரம்பரியம். அதே சமயம், அங்கே அனுமதி கிடைப்பது சற்று சிரமம். வேலை கிடைப்பது மொழியறிவின்றி மிக மிகச் சிரமம்.

இந்த அக்டோபருக்குள் ஜெர்மன் போக இயலாது. அடுத்த மார்ச்சுக்குத்தான் போக முடியும். ஆனால் மார்ச் செமஸ்டரில் மிகக் குறைந்த கல்லூரிகள் மட்டுமே அனுமதி கொடுக்கின்றன. சீக்கிரம் போக வேண்டும்.

கண் முழித்திருந்த ஒவ்வொரு நிமிடமும் இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நினைவு தெரிந்த கனவுகளிலும் அப்படியே. வேட்கை வேர் விட்டு படரத் தொடங்கியிருந்தது.

நாளை ஜெர்மன் மொழிப் பள்ளியில் பதிவு தொடங்குகிறது. காலை நேரத்திலேயே சென்று விடவேண்டும். எட்டு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். அன்றிரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்றேன். காலை நான்கு மணிக்கு கண் விழித்தேன். அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. வராது.

ஐந்து மணிக்கெல்லாம் தயாராகிவிட்டேன். ச்சே, இந்நேரத்துக்கெல்லாம் போய் நின்றால் அநாகரிகமாக இருக்கும். முன்னர் வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனை மீண்டும் புரட்டினேன். ஊரிலிருக்கும் கணிப்பொறியை அனுப்பி வைக்குமாறு சம்பத்திடம் சொல்ல வேண்டும். வைப்பதற்க்குத்தான் இடமில்லை. பார்த்துக்கொள்ளலாம்.

நீண்ட நேரத்திற்குப் பின் மணி ஆறானது. வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன். ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படும் பள்ளியின் வீதியை அடைந்தேன்.

பள்ளிக்கு வெளியே ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எட்டு மணிக்குத்தானே வரச்சொல்லியிருந்தார்கள். மணியைப் பார்த்தேன். ஆறு பத்து. இப்போதே ஏன் இவ்வளவு கூட்டம்? ஒட்டமும் நடையுமாக வாசற்கதவை அடைந்தேன். நாற்பது பேருக்கும் மேல் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். காத்திருந்தவர்களில் பலர் நான்கு மணிக்கே வந்து விட்டதாய் சொன்னார்கள். கூட்டம் அதிகம் வரும் என்று முன்னரே தெரிந்து வைத்திருக்கின்றனர்.

எனக்குத் தெரிந்திருந்தால் முந்தின இரவே வந்து நின்றிருப்பேனே? ஜெர்மன் மொழி படிக்கவே இவ்வளவு கூட்டம் என்றால் ஜெர்மனிக்கு செல்ல எத்தனை போட்டி இருக்கும்? அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது? சத்தியமாக ஊருக்குப் போக முடியாது.

ஆறரை மணிக்கு பள்ளியின் உள்ளிருந்து ஐம்பது வயதுடைய பெண் ஒருவர் வெளியே வந்தார். பள்ளியின் மேலாளராக இருக்க வேண்டும். “முப்பத்தைந்து பேரைத்தான் வகுப்பிற்கு எடுப்போம். முதல் முப்பத்தைந்து பேர் மட்டும் வாருங்கள், மற்றவர்கள் தயவு செய்து சென்று விடுங்கள். அடுத்த வகுப்பு இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கும்” என்றார்.

மூன்று மாதமா? வாய்ப்பே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும்.

முப்பத்தைந்து பேர் அனுமதிக்கப்பட்டு மற்றவர்களுடன் வாய்ச்சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் பலர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். வெறுமையுடன் வீற்றிருந்தேன். ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிலர் திரும்பிச் சென்றனர். சிலர் அங்கேயே காத்துக் கொண்டிருந்தனர்.

ஏழரை மணியளவில் என் வயதை ஒத்த ஒருவன் வந்தான். பின்னாளில் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவனாய் ஆகப்போகிறவன் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

“ஹாய்”

“ஹாய்”

“அட்மிஷன் முடிஞ்சுருச்சுங்களா”

“ஆமாங்க. நிறைய பேர் நாலு மணிக்கே வந்து நின்னுருக்காங்க. நான் ஆறு மணிக்குத்தான் வந்தேன்”

“ஷிட்”

“உங்களுக்கும் தெரியாதுங்களா?”

“தெரியுங்க. போன தடவையே வந்தேன், இப்படித்தான் சொன்னாங்க. இன்னைக்காவது சீக்கிரம் வரலாம்னு பார்த்தா தூங்கிட்டேன்”.

தூங்கிட்டேன் என்பதை யாரோ செய்த தவறைப் போல் சொன்னான். எனக்கு ஓங்கி பளாரென்று அறைய வேண்டும் போலிருந்தது.

“உங்க பேர் என்ன?”

“சங்கர் கணேஷ். உங்க பேர்?”

“ஜெகதீஷ்”

“இப்ப என்னங்க பண்றது?”

“தெரியலங்க. வெய்ட் பண்ணி பார்ப்போம்”

கூட்டத்தில் சலசலப்பு கேட்டது. முன்னர் வந்த அதே பெண்மணி வெளியே வந்தார். தெளிவான ஆங்கிலத்தில் பேசினார். “எல்லோரும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு வகுப்பிற்கு முப்பது பேர் தான் இருக்கமுடியும். நாங்கள் இப்போதே முப்பத்தைந்து பேரை எடுத்து விட்டோம். இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் பெயரை வேண்டுமானால் பதிவு செய்யுங்கள். அடுத்த முறை இடம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்தனர். இதற்குள், உள்ளேயிருந்து ஒரு பெண் வெளியே வந்து மேலாளர் காதில் ஏதோ சொன்னார்.

மேலாளர் எங்களை நோக்கி, “உங்களில் யார் முன்னர் வந்தது என்று தெரியுமா? இன்னும் ஒரேயொரு இடம் காலியாக உள்ளது” என்றார்.

“மேடம் மேடம் மேடம்” என்று வரிசையாக ஏழெட்டு மேடம்கள் போட்டேன். அவர் திரும்பிப் பார்த்தார். அதற்குள் கூடியிருந்த கூட்டம் முண்டியடித்தது. தான் செய்தது பிழையென்று அவர் நினைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் என்று உள்ளே சென்றவர் வெளியே வந்து மன்னிக்கவும், முன்னர் சொன்னது தவறு, அனைத்து இடங்களும் முடிந்து விட்டது என்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஒவ்வொருவராக வெளியேறினர்.

சங்கர் என்னைப் பார்த்து, “வெய்ட் பண்ணி பாக்கலாங்க, கெஞ்சிக் கூத்தாடியாவது  இந்த மேடம்கிட்ட அட்மிஷன் வாங்கிரலாம்” என்றான்.

எனக்கும் அதுதான் சரியென பட்டது. ஆனால், இவனே நமக்கு போட்டியாக இருந்துவிட்டால் என்ன செய்வதென்றும் தோன்றியது. அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நானும் சங்கரும் வெளியே வந்து டீ குடித்து விட்டு மீண்டும் உள்ளே வந்து மர நிழலில் அமர்ந்தோம். எப்படியும் மேலாளர் இந்த வழியாக வருவார். பேசி அனுமதி வாங்கிவிட வேண்டும் என்று எண்ணம். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஏமாந்து விட்டோமோ என்பது போல பார்த்துக் கொண்டிருந்தோம்.

மணி பனிரெண்டை நெருங்கியதும் மேலாளர் வெளியே வந்தார். முகம் மலர்ந்து அவரைப் பார்த்தோம். எங்களைப் பார்த்து திடுக்கிட்டவராய், “நீங்கள் இன்னும் போகவில்லையா? தயவு செய்து சென்றுவிடுங்கள்” என்றார்.

“மேடம், கோயமுத்தூரில் இருந்து ஜெர்மன் மொழி படிப்பதற்கென்றே வந்திருக்கிறேன். என்னால் திரும்பிப் போக முடியாது. எப்படியாவது அனுமதி கொடுங்கள் மேடம்” என்றேன்.

“புரியுதுப்பா. ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு காரில் ஏறினார். வண்டி கிளம்பியது. நானும் சங்கரும் காரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5
Part – 6

*****

2 thoughts on “பொக்கிஷம் – 2

  1. jaggybala Post author

    Yuvaraj,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 🙂

    ஜெகதீசன்.

    Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s