பொக்கிஷம் – 1

பனிரெண்டு வருடங்கள் ஆண்கள் மட்டுமே பயின்ற பள்ளியில் இருந்து முதன்முறை ஆண்-பெண் பயிலும் பொறியியற் கல்லூரிக்குள் நுழைகையில்  பெரிதும் தடுமாறிப்போனேன். கேரளாவிற்கு அருகில் கல்லூரி இருந்தமையால் நிறைய கேரளப் பெண்களும் இருந்தனர். வாழ்வில் இதை விட இன்பம் இருக்கவே முடியாதென்றிருந்த தருணம் அது. இருப்பினும் கல்லூரி முதலாமாண்டில் முத்திப்போன பழமாகவே இருந்தேன். இரண்டாமாண்டில் தான் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து உலகத்தை ‘தெரிந்து’ கொள்ள ஆரம்பித்தேன்! மூன்றாமாண்டு நான்காமாண்டில் வாழ்க்கையே முடிந்து விடுவது போல வாழ ஆரம்பித்திருந்தேன். கல்லூரி வாழ்க்கை முடிக்கையில் ஏப்ரல் 2002.

என் வாழ்க்கையின் இருண்ட காலம் என்பது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நான் முழித்திருந்த காலம் தான். சில மாதங்களுக்கு முன்னரே செப்டம்பர் 11 சம்பவம் முடிந்திருந்ததால் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பென உணர்ந்துகொண்டேன். வீட்டில் ஒரு மாதத்திற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை. மேலும் சில பிரச்சனைகளுக்குப் பிறகு நான் ஜெர்மன் சென்று மேலே படிப்பது என்று முடிவெடுத்திருந்தேன். அதற்கு ஜெர்மன் மொழி படிப்பது நல்லது என்று சென்னைக்குக் கிளம்பினேன். அதற்குள்ளாகவே அந்த “மேலும் சில பிரச்சனைகள்” என்னை முழுவதுமாக வாட்டி வதைத்திருந்தது. சென்னைக்கு வந்து நானும் என் நண்பனும் அவன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். அவனுக்கு எல் அண்ட் டி-யில் வேலை கிடைத்திருந்தது. அவன் தினமும் காலை வேலைக்குப் போய்விட எனக்கு அவன் உறவினர் வீட்டில் இருந்தது மிகவும் சங்கோஜமாயிருந்தது.

ஜெர்மன் மொழி கற்றுத்தரும் பள்ளி நுங்கம்பாக்கத்தில் இருந்தது. அங்கே சென்று அடுத்த வகுப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று விசாரித்தேன். இன்னும் இருபது நாட்களுக்குப் பிறகே அடுத்த வகுப்பிற்கு ஆளெடுக்கப்படும் என்று சொல்லியிருந்தார்கள். ஊருக்கு செல்ல மனமில்லை. ஒரு சில நாட்களுக்கு மேல், சும்மா என்பது வார்த்தையல்ல. வலி.

ஜெர்மன் கனவு வேர்விட்டிருந்தது. எந்த அளவு ஜெர்மன் மொழி படிக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லதென்று என் நண்பன் மதன் சொல்லியிருந்தான். ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஜெர்மனிக்குப் போகும் வரை ஜெர்மன் மொழி படிக்கப்போகிறேன்.

நுங்கம்பாக்கத்தில் தனியறை தேட ஆரம்பித்தேன். தினம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் கால்நடையாக சுற்றியலைந்தேன். எனக்கு அப்போது திருவெல்லிக்கேணியைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. மாதம் ஆயிரத்திற்குள் தனியறை கிடைப்பதென்பது நுங்கம்பாக்கத்தில் சாத்தியமில்லாதது போலிருந்தது. மே மாத வெயிலில் தனியறை ஒன்றைத் தேடி எரிச்சலாகிப் போனேன். சில சமயம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்குத் திரும்பிப் போய்விடலாம் என்றும் தோன்றியது. இதற்குள் நான் தங்கியிருந்த நண்பனின் வீட்டிற்கு வேறு ஒரு உறவினர் சென்னை வந்து தங்க நேர்ந்தது. இரண்டு நாளில் வேறு வீடு பார்த்துச் சென்று விடுவதாகச் சொல்லி விட்டு மீண்டும் நுங்கம்பாக்கம் வந்தடைந்தேன்.

இம்முறை ஒரு தனியறை கிடைத்தது. சென்னையில் மாதம் எண்ணூறு ருபாய்க்குத் தனியறை எப்படியிருக்கும் என்று சென்னை வாசிகளுக்குப் புரியும். அறைக்குள் நானும் கட்டிலும் மட்டுமே இருக்க முடியும். கட்டிலும் கூட இந்தப் பக்கம் கதவையும் அந்தப் பக்கம் சுவரையும் இடித்துக் கொண்டிருந்தது. அன்றிரவே நண்பன் வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் வந்துவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்து நான் தனியாகத தங்கிய முதல் இரவு அது. பெருந்துயரமாக இதை நான் கூறவில்லை. ஆனால் எனக்கு சற்றும் பழக்கமில்லாதது. தனியறை கிடைத்ததே பெரிய விஷயம் என்றெண்ணி ஜெர்மன் மொழிச் சேர்க்கைக்கு ஆளெடுக்கும் தினத்தை எதிர்பார்த்திருந்தேன். இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. தினமும் நாலரை மணி நேரம் வகுப்பு என சொல்லியிருந்தார்கள். நல்லது, சும்மா அவஸ்தை இருக்காது.

அன்றிரவு தூக்கம் வரவில்லை. மறு நாள் ஏதாவது புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும். கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பதினொன்று. அதிகப்படியான மனத்துயரத்திற்கு ஆளாகியிருந்தேன். ஏனென்று என்னாலேயே சரியாக சொல்லமுடியவில்லை. எப்படியாவது இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பது போலிருந்தது. எழுந்து வெளியே போய் ஜெர்மன் மொழி கற்றுத்தரும் பள்ளி வரை நடந்து சென்றேன். அறையிலிருந்து பள்ளி ஒரு கிலோமீட்டர் தான் இருக்கும், பிரச்சனையில்லை. அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திரும்பி வரும்போது ஒரு ஆட்டோக்காரர், “வண்டி வேணுமா சார்?” என்றார். “ஆமாம், ஜெர்மனி வரைக்கும் போகணும்” என்று நினைத்துக் கொண்டேன்.

அறைக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரண்டு. தூக்கம் வருவதாயில்லை. மதியம் அடித்திருந்த வெயிலைச் சாந்தப்படுத்த வெளியே லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கட்டிலின் முனையில் கையூன்றி எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சாலையில் நிறைய பழக்கடைகள் இருந்திருக்க வேண்டும். மழைத்துளியில் அழுகிய பழங்கள் கலந்து விட்டிருந்தன. சென்னையை எனக்குப் பிடிக்கவில்லை.

தூக்கம் வருவது போலிருந்தது. படுத்துப் போர்த்திக்கொண்டேன். வெளியே இடி இடித்துக் கொண்டிருந்தது. சற்று கண்ணயர்ந்து தூங்கியிருக்க வேண்டும். முனகல் சத்தம் லேசாகக் கேட்டு கண்விழித்தேன். இப்போது அந்த சத்தம் நன்றாகக் கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.

மழைச் சாலையின் ஓரத்தில் ஒரு பெண் கிழிந்த ஆடைகளுடன் முனகிக் கொண்டிருந்தது மின்னல் ஒளியில் தெரிந்தது. தலைவிரி கோலமாய் இருந்தாள். பைத்தியம் போல தெரியவில்லை. எந்தப் பைத்தியமும் மழையில் அழுகாது. கைகளை சாலையில் ஊன்றியிருந்தாள். பின்னாலிருந்து ஒரு கை அவளது கலைந்த தலைமுடியைப் பற்றியிழுத்தது. அவள் கணவனாக இருக்க வேண்டும். கணவனுக்கும் மட்டுமே அந்த உரிமையை நம் மனைவிகள் கொடுத்திருக்கின்றனர். நான் தூக்கம் கலைந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்னடி, திருட்டு முண்டே? எங்கே ஓடறே” என்றபடியே கொத்தாக தலைமுடியை பிடித்திழுத்துக் கொண்டு நடந்தான். வழியில் கொட்டியிருந்த முடியை மழைத்துளி அடித்துச் சென்றது.

அவள் வலி தாங்காமல் கதறினாள். முழங்கால் சாலையில் சிராய்ந்து ரத்தம் வந்தது.

“காசு கேட்டா, என்ன தேவிடியாப் பையன்னா சொன்னே? நீ குடுக்கலைன்னா, எனக்கு கிடைக்காதா? வீட்டுக்குள்ள போய்ப் பாருடி, இரண்டு ஃபுல்லு வாங்கி வச்சிருக்கேன்”

“ஐயோ.. ஐயோ…” என்று அவள் கதறினாள். தெரு வெறிச்சோடிக் கிடந்தது.

சாலையில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து அவளை ஒரு கடை வாசலின் முன் போட்டான். கடை இரும்பு ஷட்டர் போட்டு மூடியிருந்தது. அவள் கழுத்துப் பகுதியைப் பிடித்து மேலே எழுப்பினான். அவள் சத்தம் போட முடியாமல் அவன் பிடிக்குள் அடங்கியவாறு மேலெழுந்தாள். கழுத்தைப் பிடித்தபடியே அவள் தலையை ஷட்டரின் மேல் மீண்டும் மீண்டும் அடித்தான். இடியைத் தாண்டி அந்த சத்தம் என் காதில் விழுந்தது. இந்த ஊரில் மனிதர்களே இல்லையா?

அவன் கையைத் தட்டி விட்டு தெருவில் ஓடினாள். “கொலைகாரப் பாவி. என் வாழ்க்கை இப்படி சீரழிஞ்சு போச்சே” என்றாள். வழியில் இருமுறை தவறி விழுந்தாள். அவனும் துரத்திக் கொண்டே சென்றான். நூறு மீட்டர் தொலைவில் அவர்கள் தூரத்துப் புள்ளியாய் போய்க்கொண்டிருந்தார்கள். இதற்கு முன் சினிமாவில் மட்டுமே இத்தகைய காட்சியைக் கண்டிருக்கிறேன். ஜெர்மனியிலும் இப்படித்தான் இருக்குமா என்று நினைத்துக் கொண்டேன். எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை. எழுந்திருந்த போது சாலை வழக்கமான மும்முரத்தில் இருந்தது.

சீக்கிரம் ஜெர்மன் பள்ளியில் நண்பர்கள் தேடிக்கொள்ள வேண்டும்.

[தொடரும் …]

Part – 1
Part – 2
Part – 3
Part – 4
Part – 5
Part – 6

*****

6 thoughts on “பொக்கிஷம் – 1

 1. jaggybala Post author

  அப்துல்லா, மிக்க நன்றி 🙂

  தமிழ் ஈழ தமிழரே, விரைவில் சொல்கிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

  Reply
 2. jaggybala Post author

  சதீஷ்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 🙂 விரைவில் சேர்க்கிறேன்.

  ஜெகதீசன்.

  Reply
 3. Parthasarathi Subramanian

  உங்க பதிவை படிக்க படிக்க மிக ஆர்வமாக இருக்கிறது. உங்கள் எழுத்து நடை சிறப்பாகவும் ஜனரஞ்சகமாகவும் இருக்கிறது.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s