ஸுஸ்ஸூ

இன்று மதியம் சுமார் மூன்று மணியளவில் அலுவலக கழிவறைக்குள் நுழைந்தேன். எப்போது எந்த கழிவறைக்குள் சென்றாலும் முதலில் கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியைக் கோதிக் கொள்வேன். முடித்து திரும்பி வரும் போது இன்னொரு முறை. ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும் முன்பும் கூட தலைமுடி சீவுதல் என் பழக்கம். ஏனென்று கேட்காதீர்கள், தெரியவில்லை.

நிற்க. தலைமுடியைக் கோதிக்கொண்டே எதேச்சையாக இடது பக்கம் திரும்பினேன். என் மேலாளர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். என்னை விட பதினைந்து வயதிற்கும் மேல் மூத்தவர். தொழில் நெறி சம்பந்த உறவுகளில் மட்டும் எங்களுக்குள் நல்ல தொடர்புண்டு. தனிப்பட்ட முறையில் மிகக் குறைவான பழக்கம் மட்டுமே. இரண்டிலுமே, அவரிடம் நான் கொஞ்சம் பம்முகிற வகை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இடது பக்கம் திரும்பி அவர் முதுகைப் பார்த்தவுடன் கூச்சமாக இருந்தது. அப்படியே திரும்பி ஓடிவிடலாமா என்று பார்த்தேன். ச்சே… ச்சே… அது நாகரிகமாக இருக்காது. மேலும், இதென்ன செய்யக் கூடாத காரியமா, எதற்கு கூச்சம் என்றெண்ணி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஏதோ தவறு நடக்கப் போகிறதென்று மட்டும் மனம் அடித்துக் கொண்டது.

உள்ளிருந்த நான்கு இயந்திரத்தில் இரண்டை பசை நாடாவிட்டு மூடியிருந்தார்கள். சதிகாரர்கள். அவர் பக்கத்தில் மட்டுமே இடம் காலியாக இருந்தது. அருகில் சென்று நின்று கொண்டு மிகவும் மெலிதான ஒலியெழுப்பி இறுமினேன். ஒன்றும் செய்யாமல் இருந்தால் கண்டு கொள்ளவில்லை என்று நினைத்துக் கொள்வாரோ என்கிற எண்ணம்.

அவர் திரும்பிப் பார்த்து, ‘ஹாய் ஜெகதீஷ்’ என்றார்.

ஈ காண்பித்தேன்.

‘ஹௌ ஆர் யூ’, படு சாதரணமாக கேட்டார்.

நான் தான் சங்கோஜத்தில் நெளிந்து கொண்டிருந்தேன். ‘மீ? ஓ.. ஃபைன்.. ஃபைன்’ என்றேன்.

கால்சட்டையின் இறுக்கத்தை மெதுவாக கழட்டி தயாரானேன். ஆனால், ‘அது’ வருகிற மாதிரி அறிகுறியே இல்லை.

சரியாக மூன்று விநாடிகள் கழித்து, ‘ஸோ, ஹௌ ஆர் திங்ஸ்?’ என்றார்.

நான் குழம்பிப் போய் கீழே பார்த்தபடி, “ஐ கெஸ் தே ஆர் ஃபைன்’ என்றேன். அவர் தெரியாமல் கேட்டு விட்டாரா, இல்லை நான் தவறாக குனிந்து விட்டேனா என்று புரியவில்லை.

அவர் முடிக்கும் தறுவாய்க்கு வந்து விட்டார். எனக்குத்தான் வருகிற மாதிரியே தெரியவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தேன். ம்ஹும். பேசாமல் திரும்பி ஓடிப் போயிருக்கலாமோ? சரி பரவாயில்லை, இன்னும் சற்று நேரத்தில் அவர் போய்த்தானே ஆக வேண்டும் என்றெண்ணி சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவரோ வேலையை முடித்து விட்டு எனக்காக‌ காத்திருக்க ஆரம்பித்து விட்டார். நொந்து போய்விட்டேன்.

‘ஹௌ இஸ் பிஸ்னஸ் இன் திருப்பூர் ஜெகதீஷ்? ஐ ஹெர்ட் தட் இட் இஸ் ஏஸ் வொர்ஸ்ட் ஏஸ் ஐ.டி.’ என்றார்.

எனக்கு நன்றாக வியர்த்து விட்டது. ‘யா.. தட்ஸ் ட்ரூ’ என்றேன்.

இன்னும் ஒரு சொட்டு கூட வந்த பாடில்லை. என் பாழாய்ப்போன புத்திக்கு அப்போது தான் உரைத்தது. நான் வந்தது சிறுநீர் கழிக்க அல்ல, அதை விட பெரிய சமாச்சாரத்திற்கு! கண்ணாடியின் வலது பக்கம் திரும்புவதற்கு பதில் மறந்து போய் இடது பக்கம் திரும்பிவிட்டேன்.

இப்போது எல்லாம் முடிந்து விட்டது போல பாவ்லா காட்டவும் முடியாது. நான் நின்று கொண்டிருந்தது ஒரு தானியங்கி இயந்திரத்தின் முன்பு. கொஞ்சமாவது ‘முடித்து’ விட்டு நகர்ந்தால் தான் அது நீரிட்டு சுத்தப்படுத்தும்.

இதற்கு ஒரே வழிதான். அவர் செல்லும் வரை எங்கும் நகர்வதில்லை என்று முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் ஆகி விட்டது. பெரிய சமாச்சாரம் வேறு காத்துக் கொண்டிருந்தது. எங்கும் அசையாமல், எதுவும் நடக்காமல் நின்று கொண்டிருந்தேன். இப்போது அவர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன்.

சற்று நேரத்தில் அவரே, ‘ஹேய், ஆர் யூ ஓ.கே?’ என்றார்.

நான், ‘யா.. யா.. வுட் யூ ப்ளீஸ் கேரி ஆன். ஐ வில் ஜாய்ன் யூ லேட்டர்’ என்றேன்.

‘ஷ்யூர்’ என்றபடி வெளியே சென்று விட்டார்.

கதவு மூடும் ஒலி கேட்ட மறு விநாடி பாய்ந்து போய் வேறொரு அறைக்குள் சென்று தாழிட்டேன். வந்த வேலை பத்து நிமிடத்தில் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்தேன். கண்ணாடியில் முகம் கழுவி, பின் துடைத்து தலை முடி சீவினேன். மேல் சட்டையை கால் சட்டைக்குள் திணித்து ஒழுங்கு படுத்தி விட்டு வெளிக்கதவின் திருகாணிக் கைப்பிடியை இழுத்துத் திறந்தேன்.

‘ஷல் வீ  கோ நௌ …’ என்று மேலாளர் என்னைப் பார்த்து பொறுமையாகக் கேட்டபடி நின்றிருந்தார்!

6 thoughts on “ஸுஸ்ஸூ

 1. jaggybala Post author

  yaathirigan,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙂

  ஜெகதீசன்.

  Reply
 2. jaggybala Post author

  Joe,

  எழுதியிருக்கலாம் தான். ஆனால் பெரும்பாலான யதார்த்த கதை கட்டுரைகளில் இவ்வாறே இருப்பதை நீங்கள் காணலாம். ஒருவித ஈர்ப்பும் எழுத்துநடையும் இருப்பதாகவே கருதுகிறேன்.

  ஜெகதீசன்.

  Reply
 3. jaggybala Post author

  Arul,

  உண்மை. சம்பவம் முடிந்த பின்னரே அதன் நகைச்சுவை சாராம்சம் நமக்கு தெரிய வருகிறது. 🙂

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ஜெகதீசன்.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s