ஓம் நமோ நாராயணாய

பெரும்பாலும் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பவன் நான். தவிர்க்க முடியாத காரணங்களால் ஈரோட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றுக்கு குடும்பத்துடன் செல்ல நேர்ந்தது. முன்பெல்லாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோபமும் கிண்டலும் பொத்துக்கொண்டு வரும். இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. கோபத்துடன் கூடிய கிண்டலை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அந்தக் கோபம் சரியானதாகவே இருந்தாலும் கூட.

திருப்பூரில் இருந்து ஒரு மணி நேரத்தில் கோவிலை வந்தடைந்தோம். காரை மரத்தடியில் நிறுத்தி காலணிகளை உள்ளே கழட்டி விட்டு கோவில் வாசலை நோக்கி சென்றோம். வாசலை சுற்றியும் வெளிப்புற சுவர்களின் ஓரத்திலும் எட்டி பார்த்தபடியே நடந்தேன். ஏழாம் உலகத்து உருப்படிகள் தென்படுகிறார்களா என்கிற ஆர்வம். அப்படி எவரும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் வயதான மூதாட்டி ஒருவரும் கிழவர்கள் இருவரும் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்திருந்தனர்.

கோவிலுக்குள் சென்று வலம் வர ஆரம்பித்தோம். திரும்பி என் அக்காவை பார்த்தேன். முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். ஏதோ மந்திரம். “உன் அக்கா எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்தந்த முறைப்படி வழிபடுவாள்”, மாமா பெருமையுடன் என்னிடம் சொன்னார். புன்னகைத்தேன். முறை என்றாலே முறைப்பவன் நான்.

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கோவில் என்று நினைக்கிறேன். மிகப் பெரிய பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. கூட்டம் இல்லை. சொல்லப்போனால் எங்களைத் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை. இப்போது புரிகிறது. உருப்படிகள் இங்கே எடுபடாது.

சுற்றி முடித்து கோவிலின் உள் வாசலுக்குள் சென்றோம். கரிய இருட்டு. எல்லோரும் ஆர்வமுடன் பெருமாளைத் தேடிக்கொண்டிருந்தனர். நான் உண்மையிலேயே பயந்து போயிருந்தேன். பெருமாளுக்கு ஒரு பெட்ரோமேக்ஸ் விளக்கு கூட கிடையாதா? லேசாக இருமி உள்ளிருந்த‌ மௌனத்தைக் கலைத்தேன். கர்பக்கிரகத்துக்குள் யாராவது இருந்தால் வெளியே வரவும் என்று அதற்கு அர்த்தம். இருமல் பலனளிக்கவில்லை. சற்று நேரத்தில் இருட்டு மெல்ல விலகி பெருமாள் தென்பட்டார். நாங்கள் கும்பிட ஆரம்பித்த போது கைபேசியை இடுப்புத் துணிக்குள் சொருகியவாறே பெருமாள் சேவகர் வாசலினுள் வந்தார். நேர் வகிடு எடுத்து தலை முடி சீவி நாமம் இட்டிருந்தார். நாமம் பட்டை எல்லாம் நாம் வகுத்துக் கொண்ட‌ நம்பர் ப்ளேட் அடையாளங்கள் என்று கமல்ஹாசன் சொன்னது நினைவிற்கு வந்தது.

நூற்கயிற்றை உருவியபடி சேவகர் நேரே கர்பக்கிரகத்துக்குள் சென்றார். அர்ச்சனைப் பெயர்கள் ஒவ்வொன்றாக என் அக்கா சொல்ல சேவகர் முணுமுணுக்க ஆரம்பித்தார். அவர் சொன்னது எங்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருந்த பெருமாளுக்கே கேட்டிருக்க வாய்ப்பில்லை. முப்பது வினாடிகளில் ஐந்து பூக்கள் அடங்கிய‌ தட்டுடன் வெளியே வந்தார். வழியில் அவரது கைபேசி தகவல் வந்த சத்தத்தை எழுப்பியது. இடது கையால் கைபேசியை எடுத்தபடியே வலது கையால் தட்டை எங்கள் முன் நீட்டினார். மந்திரம் சொல்லிக் கொண்டே எஸ்.எம்.எஸ் அனுப்பும் ஆட்களையும் பார்த்திருக்கிறேன். சிலர் கைப்பைகளில் பூஜை சாமான்க‌ளுடன் பான்பராக்கும் இருக்கும். அவர்களின் ரிங் டோன், ஹலோ ட்யூன் எல்லாம் எதுவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

மாமா தான் முதல் பூவை எடுத்தார். பின்னர் தன் சட்டைப் பையில் இருந்து இரண்டு நூறு ருபாய் தாள்களை எடுத்து போட சேவகர் முகம் அதிர்ச்சியில் மலர்ந்தது. தொழிலாளிகளைத் தவர அத்தனை பேருக்கும் அள்ளிக் கொடுக்கும் வழக்கம் பெரும்பாலான திருப்பூர் முதலாளிகளுக்கு உண்டு. எல்லோரும் பூவை எடுத்துக்கொண்டதும் வெடுவெடுவென மீண்டும் உள்ளே சென்று பெருமாள் காதருகே பலம் கொண்ட மட்டும் சத்தமாக மந்திரம் சொல்லலானார். இம்முறை தேங்காய், பழம், துளசி, இன்னும் சில சமாச்சாரங்கள் அடங்கிய தட்டுடன் வெளியே வந்தார். நான் துளசியை மட்டும் எடுத்துக் கொள்ள அக்கா தேங்காய் பழங்களை வாங்கிக் கொண்டு மேலும் ஒரு நூறு ருபாய் தாளை தட்டில் வைத்தாள்.

உள் வாசலை விட்டு வெளியே வந்து ஒரு தூணின் கீழ் அமர்ந்தோம். வீட்டை விட்டு எங்கே வெளியே சென்றாலும் கூட்டாஞ்சோறு எடுத்துக் கொண்டு போய் சாப்பிட வேண்டும் என்பது என் மாமாவின் வழக்கம். கோவிலில் கூட்டம் இல்லாததால் அங்கேயே சாப்பிட ஆரம்பித்தோம். பயணத்திற்கு இடையே தேங்காய் சாதம், புளி சாதம், தயிர் சாப்பிடுவதில் ஒரு அலாதி இன்பம் தான். சாப்பிட்ட பின் அருகில் இருந்த நீர்க் குழாயில் கைகளை கழுவி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்தமர்ந்தேன்.

பக்கத்தில் கிணறு ஒன்று இருந்தது. ஆர்வத்துடன் சென்று உள்ளே எட்டிப் பார்த்தேன். பத்து அடி தொலைவிலேயே தண்ணீர் இருந்தது. நிறைய மீன்கள் நீரின் மேற்பரப்பிலேயே தென்பட்டன. வாயைத் திறந்து மூடி சுவாசித்துக் கொண்டிருந்தன. அவற்றின் மேல் உதடு மட்டும் அவ்வப்போது தண்ணீருக்கு மேல் வந்து போனது. ஏராளமான மீன்கள் அவ்வண்ணமே செய்தமையால் அவை உருவாக்கிய நீர்க்குமிழிகளின் சத்தம் நன்றாக கேட்டது. அக்கா, மாமா, மகேஷ் என்று எல்லோரும் கிணறை எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.

பெருமாள் சேவகர் மீன் உணவை எடுத்து வந்து கிணற்றினுள் தெளித்தார். மீன்கள் ஆரவாரித்தும் குப்பி போன்ற இதழ்களை திறந்தபடியும் உணவுப் பருக்கைகளை சாப்பிட்டன. சற்று நேரத்தில் எல்லா மீன்களும் பசி அடங்கி இயல்பு நிலைக்கு திரும்பின.

“நிறைய மீன் இருக்குதுங்க…”, அறிவாளித்தனமாய் சேவகரிடம் பேச்சைத் துவங்கினேன். மகேஷ், “பார்க்க ரொம்ப அழகா இருக்கு” என்றார்.

மீன் உணவை ஓரமாக வைத்துவிட்டு சேவகர் எங்களை நோக்கி பாட ஆரம்பித்தார்.

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய் பிறக்கும் விதியுடையவன் ஆவேனோ

“திருவேங்கடக் குளத்தில் மீனாய் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காதா என்று குலசேகர ஆழ்வார் பாடுகிறார்”, சேவகர் சொன்னதும் ஆர்வத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இவ்ளோ பெரிய கோவில்ல நீங்க மட்டும் தான் இருக்கீங்களா”, மாமா நடைமுறை பேச்சிற்குத் தாவினார்.

“ஆமாங்க. வெறுத்துப் போகுது”. அந்த பதிலை நானும் மகேஷும் எதிர்பார்க்கவில்லை.

“நீங்க திருப்பூரா?” சேவகர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

“ம்” என்றேன்.

“இப்ப தொழில் ஒன்னும் சரி இல்லைங்களே. உங்களுக்கு எப்படிப் போகுது?”

நான் மாமாவைப் பார்க்க, அவர் “மந்தமாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆய்டும்னு நினைக்கிறோம்” என்றார்.

“அதெல்லாம் இப்போதைக்கு ஆகாதுங்க. ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்க சித்தப்பா பையன் பொட்டி நிறைய பணத்தோட வந்து திருப்பூர்ல பனியன் கம்பனி வைக்கப் போறேன்னான். வேணாம்னு சொன்னேன். கேக்கல. கொஞ்ச நாள் முன்னாடி எல்லாம் நட்டமாகிட்டுது, என்ன பண்றதுன்னான்னு மறுபடியும் வந்து நின்னான்.”

…..

“எக்ஸ்போர்ட்ஸ் பண்ணாதடா, லோக்கல் மட்டும் செய்னு சொல்லி அனுப்பினேன். இப்போ பரவால்ல.”

“நாராயணா …”, மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

மகேஷ், “வெறுத்துப் போகுதுன்னு ஏன் சொன்னீங்க” என்றார்.

சேவகர் மகேஷிடம் திரும்பி “எல்லாம் தனிமை தான் தம்பி. ஆள கொல்லுதுங்க.”

மகேஷுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். “கடவுளுக்கு சேவை செய்றவர் நீங்க, இப்படி பேசலாமா?”

“தம்பி… உங்களுக்கு தெரியாது. இந்த அத்துவான காட்டுக்குள்ள எந்த ஆளும் வரமாட்டேன்னுட்டான். என்னோட போறாத காலம். இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.  கருணாநிதி ஜெயலலிதா இவங்களை எல்லாம் நாம ஈசியா பேசிடறோம். ஆனா அவங்கவங்க நிலையில் இருந்தாத்தான் அந்த கஷ்டம் புரியும்”.

அந்த பதிலைக் கேட்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஏதாவது பேசினால் இன்னும் ஏடாகூடமாக உளறுவார் என்றெண்ணி அமைதியாக இருந்தேன். மகேஷால் முடியவில்லை. “இது சரியான பதில் இல்லீங்களே. கடவுளுக்கு சேவைங்கிறது எவ்ளோ புனிதமான விஷயம். நேரா சொர்கத்துக்கு போறதுன்னா சும்மாங்களா?”

சேவகர் டென்ஷனாகிவிட்டார். “சொர்க்கம் என்ன தம்பி சொர்க்கம். பன்னெண்டு ருபாய்க்கு சல்ஃபேட் வாங்கி சாப்பிட்டா நேரா சொர்க்கம்தான்.”

பதிலைக் கேட்டு எல்லோரும் வாய் விட்டு சிரித்து விட்டோம். பெருமாளுக்கு இடப்பக்கம் நானும் மகேஷும் வலப்பக்கம் சேவகரும் நின்று கொண்டிருந்தோம். நான் பெருமாளை எட்டிப் பார்த்து அவருக்கு பொறுமை அதிகம் என்று நினைத்துக் கொண்டேன். நாத்திகர்கள் கூட ஊருக்கு பொதுவான இடம் என்றும் ஆத்திகர்களின் நம்பிக்கைக்கு வழிபாட்டுத்தலம் என்றும் கோவிலில் அமைதி காப்பர். சல்ஃபேட் குடித்து சொர்கத்துக்கு போக நினைக்கும் சேவகரை என்னவென்று சொல்லுவது.

அமைதியாக வெளியே வந்து பிச்சைக்காரர்களை பார்த்தேன். அவர்களில் ஒருவர் மட்டும் தெருவை வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். சேவகர் பெருமாளைப் பார்ப்பது போல இருந்தது.

Advertisements

13 thoughts on “ஓம் நமோ நாராயணாய

 1. jaggybala Post author

  தமிழ்குறிஞ்சி,

  மிக்க நன்றி 🙂

  ஜெகதீசன்.

  Reply
 2. sangeetha enian

  நானும் கிட்டதட்ட உங்களை போலதான்.அபிசேகங்கள் அர்ச்சனைகள் ஆராத்னைகள் …….ஒன்றும் ஒட்டாது.அர்ச்சகர்களுக்கு பயந்தே கடவுள் காலியாம்.உங்க்ள் எழுத்து ரசனைக்குரியது

  Reply
 3. malar

  ///தொழிலாளிகளைத் தவர அத்தனை பேருக்கும் அள்ளிக் கொடுக்கும் வழக்கம் பெரும்பாலான திருப்பூர் முதலாளிகளுக்கு உண்டு. //

  /இது எல்லா பணம் படைத்தவர்களும் செய்யும் தவறுதான் 100 ருபாயேய் உண்டியலில் போடுவாங்க வீட்டில் வேலை பார்பவர்களுக்கு 50 ரூபாய் கொடுக்கமாட்டார்கள்

  Reply
 4. பொடியன்

  நான் உங்களை ரொம்ப பாராட்டுகிறேன். கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ, மற்ற மனிதர்களின் மனம் நோகாமல் நடந்து கொண்டதற்கு.

  Reply
 5. arivhedeivam

  வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்……..

  Reply
 6. arivhedeivam

  பாவம் ,பெருமாள் சேவகர் மனிதர்தானே.
  அரசியல் ஒரு தொழில்தான், அதுபோல் இதுவும்

  Reply
 7. jaggybala Post author

  sangeetha enian, malar, பொடியன், arivhedeivam, மற்றும் BALA GANESAN:

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. வலைப்பதிவின் வட்டதிதிற்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙂

  ஜெகதீசன்.

  Reply
 8. BaijuBalakrishnan.Coimbatore

  என்னமோ போங்க உலகில் இதுபோல் நிறைய விசயங்கள் நடக்கின்றது…..
  சிலர் அதோடு மறந்துவிடுவார்கள்…
  நீங்கள் அருமையான பதிவாக‌ தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி…..

  Reply
 9. jaggybala Post author

  பாலகிருஷ்ணன்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 🙂

  ஜெகதீசன்.

  Reply
  1. jaggybala Post author

   இது ஒரு நிகழ்வு, அவ்வளவுதான். எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையாதலால், நகைச்சுவையாய்ப் பட்டது. உங்களுக்கு எப்படி என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

   Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s