நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்

‘காடாளும் வம்சம் இனி நாடாளும்’, ‘நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்’ என்னும் இலச்சினைகளைக் கொண்ட சாதிக் கட்சியின் தொடக்க‌ விழா. பதினாயிர‌ம் தோரணம் கட்டி, ஆயிரமாயிரம் சதுர அடி பரப்பளவில், பல லட்ச‌ம் மக்களைக் கொண்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும்பாலானோர் முகத்தில் எதையோ சாதித்து விட்ட‌ மகிழ்ச்சி. என்னவென்று தெரியவில்லை.

இம்மாதிரி சம்பவங்க‌ள் பெரும்பாலும் திறந்தவெளி டாஸ்மாக் ஆகி விடுவதால் முன்னரே மாவட்ட அதிகாரிகளை சந்தித்து விழா நாளன்று டாஸ்மாக்கை மூடிவிடுமாறு கட்சி மேலிடம் மனு கொடுத்திருந்தது. அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஆர்வக்கோளாறினால் நடக்கும் தவறுகளுக்கு கட்சி பொறுப்பேற்க முடியாதென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தது. மனு நிலுவைக்கெல்லாம் செல்லாமல் உடனடியாக அமலுக்கு வந்தது. காந்தி ஜெயந்திக்கு பிறகு முதன் முறையாக கட்சி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதாவது, மாலை ஆறு மணி வரை. எனினும் மாவட்டமும் மாநாடும் சற்று ஸ்தம்பித்துத்தான் போனது.

மேடையின் முன் காட்டையே கண்டிராத, கணிணி முறையால் உருவாக்கப்பட்ட கடப்பாறை, கலப்பை மற்றும் இன்னபிற பொருட்கள் தங்க முலாம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. திருடு போய்விடக் கூடும் என்றெண்ணியோ எந்த நேரத்திலும் அவை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையினாலோ இரண்டு போலீஸார்கள் அவற்றை காவல் காத்துக் கொண்டிருந்தனர். மேடையின் வலப்பக்கம் திறக்கப்படவிருந்த சிலை. யாரென்று தெரியவில்லை.

விழா மேடையில் அமர்ந்திருந்த‌ தலைவர், உபதலைவர், பொருளாளர் மற்றும் பலர் பட்டு சட்டைக்கு பார்க்க‌ர் பேனாவும் பர்ஃபுயூமும் அடித்து வந்திருந்தனர். மேடையின் இடப்பக்கம் பத்து மற்றும் பதினாறு வயதை ஒத்த சிறுவர்கள். அவர்களுக்கும் அதே போன்ற உடை. பத்து வயது சிறுவன் கூட்டத்திற்கு நேரே கையைக் கூப்பியபடி அமர்ந்திருந்தார். பதினாறு வயதுக்காரர் கலரிங் முடி கலாச்சார‌த்துடன் கம்பீரமாய் வீற்றிருந்தார். ஒன்றும் புரியாமல் அருகில் இருந்த மீசைக்காரரிடம் விசாரித்ததில் அவர்களிருவரும் தலைவரின் பிள்ளைகள் என்றும் கட்சியின் மாணவர் அணித் தலைவர்கள் என்றும் சொன்னர். இருவரும் ஊட்டியில் படித்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்தபடியே கட்சிப் பணிகளை பார்த்து்க் கொள்வார்கள் என்றும் பெருமையுடன் கூறினார். நன்று நன்று.

மேடையை விட்டு மக்களுடன் ஒன்றுபட்டதில் ஒவ்வொருவர் வசனத்திலும் தீப்பொறி பறப்பது புரிந்தது.

“மாப்ள‌, பவரை காமிச்சுட்டோம்டா…”

“தாயளி ஒரு பய இனி நம்மகிட்ட வாலாட்ட முடியாது. ஏழ பாழயெல்லாம் சாதிச்சங்கம் வச்சுகிட்டு ஆட்டம் போட்டுட்டு திரிஞ்ச‌ானுகல்லே. மொத வேலையா அவனுகள அடக்கணும்.”

“வக்காளி நம்ம சொன்னத மேல்சாதி நாயுக கேக்க மாட்டேங்குது, கீழ் சாதி நாயுக மதிக்க மாட்டேங்குது. ”

“பங்காளி, விசயம் கேட்டியா? வர்ற பாராளுமன்ற எலக்சன்ல நா.க.மு.க கட்சியோட கூட்டு சேர பேச்சுவார்த்தை நடக்குதாம். அஞ்சு சீட்டு குடுப்பாங்க போலிருக்கு.”

“டேய், நம்ம மெஜாரிட்டி தொகுதியே அஞ்சுக்கு மேல இருக்கும்.  மொத்தமா சேத்து இருவது சீட்டாவது வாங்கணும்.”

ஏழை, நடுத்தரம், பணக்காரர், பாமரர், எம்.பி.ஏ என பலதரப்பட்ட மக்களும் வந்திருந்தனர். பாரதியும் பிடிக்கும் சாதியும் வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயம் சார்ந்த பிரச்ச‌னைகளுக்கு பத்து பேர் வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்க வேன்டும். அது சரியோ தவறோ. நியாயமோ அநியாயமோ. சாதிக் கட்சி என்பது காப்புறுதி போலாகிவிட்டது. கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் வந்திருப்பதாகக் கேள்வி. அது சரி, அவர்களுடைய சித்தந்தங்களுக்கு அளிக்கப்படும் காப்புறுதித் தொகை மிகக் குறைவாகவே இருந்திருக்கக்கூடும்.

“ஹ‌லோ… ஹ‌லோ… டெஸ்டிங்… டெஸ்டிங்…” மேடையில் ஒருவர் மைக்கை ஒலிபெருக்கியுடன் இணைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். கூடி இருந்த கூட்டம் மேடையை நோக்கி ஆர்வத்துடன் திரும்பி உற்சாகமாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். எதற்கென்று புரியவில்லை. ஒருவழியாக மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக‌ பேச ஆரம்பித்தனர். ஒவ்வொருவர் பேச்சிற்கும் கூடியிருந்த கூட்டத்திற்கு மயிர்க் கூச்செறிந்தது. இறுதியாக தலைவரைப் பேச அழைத்தனர். என்ன பேசப்போகிறார் எப்படி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆர்வம் மேலிட்டது. தலைவர் மைக்கை ஆவலுடன் வாங்கி மூக்கருகே கொண்டு சென்று “புஸ்ஸ்ஸ்” என்று சீறி ஆரம்பிக்கிறார். “நாங்க என்ன இளிச்ச‌வாயனுகளா…”

நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்!

5 thoughts on “நாங்கள் செழித்தால் நாடு செழிக்கும்

 1. முத்துக்குமார்

  சில சொற்பிழைகள்: பதினாயிர(ற)ம், கோளாறி(ரி)னால். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாகவே இச்சாதிக் கட்சி தொடக்கத்தைக் கருதுகிறேன். இச்சமுதாயம் என்றுமே சாதி பார்த்து ஓட்டுப் போட்ட வழக்கமில்லை. ஆனால் இன்று ஒரு கட்சியே அவர்கள் தொடங்கி உள்ளனர் என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் – கடந்த 40 ஆண்டு கால திராவிடக்கழகங்களின் கொள்கைகளை/ வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட ஆட்சிகள், செல்வாக்குடன் அரசையே ஆட்டிப் பார்க்கும் மற்ற சாதிக் கட்சிகள் போன்றவை. இன்றைய நிலையில் தமிழகத்தில் சாதிக்கட்சிகள் ஆரம்பம் ஒரு தொடர்கதையே. தமிழகம் முழுதும் பயணித்தால் இதைத் தெளிவாக உணரலாம்.

  Reply
 2. jaggybala Post author

  அண்ணா,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் வணக்கம். பிழைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. கட்டுரை திருத்தப்பட்டுவிட்டது.

  இக்கட்டுரையில் உள்ள செய்திகள் பொதுவானவை. எந்த சாதிக் கட்சிக்கும் பொருந்துபவை. என்னுடைய எண்ணம் இப்படிப்பட்ட சாதிக் கட்சிகள் சமுதாயத்திற்கு மென்மேலும் ஊறு விளைவிக்குமே அன்றி தீர்வாக முடியாது என்பதே.

  குறிப்பிட்டுக் காட்டப்பட்ட சில வாக்கியங்கள் நான் பார்த்து, அனுபவித்து, கடந்து வந்தவை. முதலில் நான் மற்றும் என்னைச் சார்ந்தவற்றில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுதலே சரியான பாதையில் எடுத்துச் செல்லும் என்பது என் எண்ணம்.

  ஜெகதீசன்.

  Reply
 3. வெயிலான்

  சமீபத்தில் கோவையில் நடந்த சாதி சங்க மாநாடோடு ஒப்பிட்டு படித்தேன். பொருந்தியது 🙂

  எல்லாப்பதிவுகளும் நன்றாக இருக்கிறது ஜெகதீஷ். தமிழ்மணத்தில் இணைத்தால் இன்னும் அதிகமானோர் படிப்பார்கள்.

  Reply
 4. jaggybala Post author

  வெயிலான்,

  வருகைக்கும், மேலான‌ கருத்துக்கும் மிக்க நன்றி 🙂

  ஜெகதீசன்.

  Reply
 5. sampath

  முதலில் ஜெகதீஷ் உமது இந்த இடுகை குறித்து மறு மொழி கூறக் கூடாது என்றே இருந்தேன். ஆனால் கொங்கு சிங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாய் இப்பொழுது தேவைப்படுகிறது.

  இந்தியாவில் மொத்தம் 525 மாவட்டங்கள் உள்ளது. அவைகள் அனைத்திலும் விவசாயம் நலிவடைந்துள்ளது. வெறும் கொங்கு மண்டலம் மட்டும் நலிவடைந்து விடவில்லை. இந்த உண்மையை மறைத்து விட்டோ, அல்லது மறந்து விட்டோ (ம்ம்ம்… இந்தியாவில் மொத்தம் 325 மாவட்டங்கள் உள்ளது என்பதாவது இந்த அரசியல், கொள்கை சிங்கங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே). இவர்கள் பேசுவது வேதனைக்குறிய நகைச்சுவை.

  இவர்கள் கட்சி அமைப்பதும், கூட்டம் போடுவதும், மாநாடு நடத்துவதும் நமது நாட்டின் ஜனநாயக உரிமை. அதை யாரும் தடுக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் சாதி என்ன என கேட்பதற்கு கூசிய, அல்லது தனது சாதியை சொல்ல கூசிய ஒரு பகுதி மக்களை தற்பொழுது உரக்க கத்த வைத்த சாதனையை இவர்கள் செய்துள்ளனர். பெரியார் பட்ட அனத்து கஷ்டங்களையும் இவர்கள் 6 மாதத்தில் கெடுத்துவிட்டனர்.

  மேலும், இவர்களது கட்சியில், சாதாரண விவசாயி ஒருவரும் பெரிய பொறுப்பில் இல்லை. பெரும் முதலாளிகளும், நிலச் சுவாந்தர்களுமே கட்சியில் கோளேச்சுகிறார்கள். இந்த பெரிய மனிதர்கள் தங்களுக்கு ஒரு சமுதாய அங்கீகாரமும், தன்னை முன்நிறுத்திக் கொள்ள ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதற்கு சாதியின் பெயரைக் கூறி, சாதரண மக்களின் உணர்வுகளை தூண்டி அதில் குளிர் காய்கின்றனர். இதயேதான் பா.ஜ.க. மத ரீதியில் செய்தது. இதயேதான் ஹிட்லரும் செய்தான்.

  இவர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது, வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் என்பதாகும். இதில் இந்த ஜாதி வெறியர்களின் ஆதிக்க வெறியும் தெரிகிறது. வன் கொடுமை தடுப்பு சட்டம் ஏதோ இந்த ஒரு சாதிக்கு எதிரானதோ அல்லது மேதகு கொங்கு சிங்கங்களுக்கு எதிரானதோ அல்ல. காலம் காலமாய் மிருகத்தினும் கேவலமாய் அடக்கப்பட்டு, ஒடுக்ககப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டம் அது. இந்திய தேசம் முழுமைக்கும் பொதுவான சட்டம் அது.

  அட வெள்ளாள சிங்கங்களே அந்த சட்டத்துல திறுத்தம் கொண்டுவரனும்னா 3ல் 2 பங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு வேணும். நீங்கள் 11 பேறும் வெற்றி பெற்றாலும் முடியாதுங்க. மேலும், இந்த சட்டத்திலும் மேல் சாதிக் கூட்டத்தினரின் வழக்குகளே அதிகம் பதிவாகி உள்ளது.

  இதில் ஒரு நகைசுவை, இந்த இன மான கொங்கு சிங்கள் நீலகிரி தனித் தொகுதியில் ஒரு அருந்ததியரை நிருத்தியுள்ளனர். நீங்கள்தான் கொள்கை சிங்கங்கள் ஆயிற்றே, பிறகு எதற்க்காக இது.

  மேலும், இந்த சிங்கங்கள் கொங்கு ரத்தம் எனும் புது ரத்த வகையை கண்டுபிடிதுள்ளனர். இனி மருத்துவமனைகளில்
  இவர்கள் வேறு ரத்த வகை தேடி செல்ல மாட்டார்கள். மாமன், மச்சான்களுக்குள்ளேயே கொங்கு ரத்தத்தையே உபயோகப் படுதிக்கொள்வார்கள். ம்ம்ம் கலக்குங்க.

  உங்களுக்கு சிகை திருத்த ஓர் கீழ் சாதிக்காரன் வேண்டும். துணிகள் வெளுக்க, பிணம் தூக்க, உங்கள் மலம் அள்ள, சாணிப்பால் குடிக்க ஓர் கீழ் சாதிக்காரன் வேண்டும். ஆனல் அவனை அங்கீகரிக்கவோ அல்லது அவன் இந்த சமுதாயத்தில் முன்னேறவோ கூடாது என்பது உங்கள் வெறி.

  முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு பகுதி மக்களை மீண்டும் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்ற பெருமை உங்களையே சாறும் . இவர்களும் ஹிட்லர் போலவும், பா.ஜா.க போலவும் வெகு சீக்கிரம் காணாம போவார்கள்.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s